Language Selection

ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தின் கந்தாரிமண்டல் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக ஓங்கி நிற்கிறது, அந்தப்புளியமரம். அக்கிராம மக்கள் அந்த மரத்தை வெறுக்கிறார்கள். பலர் அந்த மரத்தின் அருகில் செல்லவே அஞ்சுகிறார்கள்.

 அக்கிராமத்தைச் சேர்ந்த ராதா என்ற கர்ப்பிணிப் பெண் தினமும் அந்த மரத்தின் அருகே சென்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். அந்த மரத்தில்தான் 25 வயதான இளைஞரும் ராதாவின் கணவருமான கோவர்த்தன நேனாவத், கடந்தஆகஸ்ட் 6ஆம் நாளன்று தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 

லம்பாடி பழங்குடியினத்தைச் சேர்ந்த கோவர்த்தன், கந்துவட்டிக்குக் கடன் வாங்கி மழையை நம்பி பயிர் வைத்தார். ஆனால், இம்முறை தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போய் வறட்சி தாக்கி, நீரின்றி நிலங்கள் வெடித்து, பயிர்கள் கருகிப் போயின. ஏற்கெனவே அவரது பெற்றோர் வாங்கிய கடன் ஒருபுறமிருக்க, தற்போதைய கடனும் சேர்ந்து ரூ. 2 இலட்சத்துக்கும் மேலாகி, அதைத் திருப்பிச் செலுத்த வழி தெரியாததாலும், கந்து வட்டிக்காரர்களின் உருட்டல் மிரட்டல்களாலும் விரக்தியடைந்த கோவர்த்தன் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார்.

 

கோவர்த்தன் மட்டுமா? பருவமழை பொய்த்துப் போய் வறட்சி தாக்கியதாலும், வாங்கிய கடனை அடைக்க வழிதெரியாததாலும் கடந்த ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மட்டும், ஆந்திராவில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயுள்ளனர். வழக்கமாக இத்தகைய விவசாயிகளின் தற்கொலைகளை மூடி மறைத்து வரும் ஆந்திர அரசு, வேறு வழியில்லாமல் 21 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மட்டும் ஒப்புக் கொண்டுள்ளது.

 

காடும் கழனியும் வயலும் வரப்பும் ஏரியும் குளங்களும் வறட்சியால் பாளம்பாளமாக வெடித்துக் கிடக்கும் நிலையில், 10 மாநிலங்களின் 246 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாக அரசே அறிவித்துள்ள நிலையில், "விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் பேச்சுக்கே இடமில்லை'' என்று கண்டிப்புடன் கூறுகிறார், மைய அரசின் நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி.

 

ஆந்திர விவசாயிகளைப் போலவே, மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பிராந்தியத்தின் யாவத்மல் மாவட்ட விவசாயிகள் வறட்சியால் தத்தளிக்கிறார்கள். நீரில்லை; மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடப்பதால் கால்நடைகளுக்குப் போதிய தீவனம் இல்லை. பெருமுதலாளித்துவக் கம்பெனிகள் தீவனங்களின் விலையை, வறட்சியைச் சாக்காக வைத்துப் பல மடங்கு உயர்த்தி விட்டன. அநியாய விலைக்குத் தீவனம் வாங்கி மாடுகளைப் பராமரிக்கவும் விவசாயிகளுக்கு வசதியில்லை. தீவனத்தைக் குறைத்தால் மாடுகள் கறக்கும் பாலும் குறைகிறது. ஏற்கெனவே விவசாய நெருக்கடியாலும் கடன் சுமையாலும் திக்குமுக்காடும் விவசாயிகள் இப்போது கறவை மாடுகளையே மனதைக் கல்லாக்கிக் கொண்டு அடிமாட்டு விலைக்கு விற்கின்றனர். ரூ. 15,000க்கு விலைபோகக் கூடிய ஜெர்சி கறவை மாடு, இப்போதுரூ. 8,000க்கு விற்கப்படுகிறது. இதேபோல,காளை மாடுகள் ரூ. 4,000க்கும் குறைவாக விற்கப்படுகின்றன. யாவத்மல் மாவட்டம் மட்டுமின்றி, விதர்பா பிராந்தியம் முழுவதும் இந்த அவலம் நீடிக்கிறது.

 

இதேபோல, வறட்சியில் சிக்கியுள்ள ஆந்திராவின் அனந்தபூர், கர்னூல், நலகொண்டா,மகபூப் நகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் மாடுகளை வைத்துப் பராமரிக்க முடியாமல் அவற்றை விற்று வருகின்றனர். இதனால், தனது பிழைப்பே போய்விட்டதாகக் கண்ணீர் வடிக்கிறார், கர்னூல் மாவட்ட ஹரேகல் கிராமத்தைச் சேர்ந்த திக்காசாமி என்ற மாடுமேய்ப்பவர். இவர் இக்கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள மாடுகளை அன்றாடம் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று பின்னர் அவற்றைக் குளிப்பாட்டி, மாலையில் உரிமையாளரிடம் ஒப்படைப்பார். 4,5 பேரை வேலைக்கு வைத்துக் கொண்டு, ஒரு மாட்டுக்கு ரூ. 60 வீதம் 250 மாடுகளை மேய்ப்பதன் மூலம் மாதம் ரூ. 15,000 வரை சம்பாதித்து வந்த அவர், இன்று அதில் பாதியளவு கூட சம்பாதிக்க முடியவில்லை. "வறட்சியின் காரணமாக தீவனங்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டதால், செலவைக் குறைக்க பல விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதில்லை.இன்னும் சிலர் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் பாதிவிலைக்கு விற்று வருகின்றனர்.இதனால் என் பிழைப்பு போய் விட்டது. கிராமங்கள் களையிழந்து விட்டன'' என்று வேதனைப்படுகிறார், திக்காசாமி.

 

வறட்சியால் கால்நடைச் செல்வங்களை இழந்து விவசாயிகள் தவித்த போதிலும்,இப்பேரழிவைத் தடுக்கவோ நிவாரண உதவிகள் செய்யவோ மைய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, வறட்சியை சாக்காக வைத்து, உள்நாட்டு வெளிநாட்டு விவசாயப் பெருந்தொழில் நிறுவனங்கள் மேலும் கொள்ளையடிப்பதற்கும், விவசாயத்தை விட்டே விவசாயிகளை வெளியேற்றுவதற்குமான வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

 

கடந்த ஜூனில் "இன்னும் 30 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன'' என்று அறிவித்தார் மைய அரசின் உணவு அமைச்சரான சரத்பவார். வறட்சி தீவிரமாகியதும், "இன்னும் 13 மாதங்களுக்கான உணவு தானியங்கள்தான் கையிருப்பில் உள்ளன. அவசியமானால் வெளிநாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வோம்'' என்று ஜூலையில் அறிவிக்கிறார். ஒரே மாதத்தில் உணவு தானியங்களின் கையிருப்பு திடீரெனக் குறைந்ததன் மர்மம் என்ன? வறட்சியைக் காரணம் காட்டி, உணவு தானியங்களை இறக்குமதி செய்வதன் மூலம், விவசாயப் பெருந்தொழில் நிறுவனங்கள் கொழுத்த ஆதாயமடைய வேண்டும் என்பதைத் தவிர இதில் எந்த மர்மமும் இல்லை.

 

உலகெங்கும் உணவு தானிய உற்பத்தி பெருகிய போதிலும், கடந்த 2,3 ஆண்டுகளாக உணவு தானியப் பற்றாக்குறையும் விலையேற்றமும் நீடிக்கிறது. கடந்த ஆண்டில் 2 கோடியே 30 லட்சம் டன் அளவுக்கு அபரிமிதமாக உற்பத்தி செய்ததற்காக உணவு அமைச்சர் சரத்பவார் இந்திய விவசாயிகளைப் பாராட்டியுள்ளார். உற்பத்தி பெருகியிருந்தாலும், இந்தியாவில் விலைவாசி குறையவில்லை; உணவு தானியப் பற்றாக்குறையும் நீடிக்கிறது. இதற்குக் காரணம், உணவு தானியங்களைப் பதுக்கி வைத்து இலாப வேட்டையாடும் ஆன்லைன் வர்த்தகம் எனப்படும் முன்பேர வர்த்தகம் தான். நாளொன்றுக்குப் பல்லாயிரம் கோடி மதிப்பில் நடக்கும் இத்தீவட்டிக் கொள்ளையைத் தடை செய்ய மறுக்கின்றனர், இந்திய ஆட்சியாளர்கள்.

 

இதுதவிர, பன்னாட்டு உள்நாட்டு விவசாயப் பெருந்தொழில் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக, உணவு உற்பத்தியில் தற்சார்பை அழிக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் உலகவங்கி உலக வர்த்தகக் கழக உத்தரவுப்படி ஏழைநாடுகளில் திணிக்கப்பட்டு வருகின்றன. இதை விசுவாசமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்கள், உலக வங்கியின் ஆலோசனைப்படி மிக எளிய தீர்வாக, பற்றாக்குறையை ஈடுசெய்வது என்ற பெயரில் எல்லா உணவுதானியங்களையும் தாராள இறக்குமதி செய்து வருகின்றனர். இதனால் உணவுதானிய உற்பத்தி மேலும் குறைவதும், அதைக் காட்டி மீண்டும் இறக்குமதி தொடர்வதும் தற்சார்பு அழிவதும், விவசாயமும் விவசாயிகளும் போண்டியாவதும்தான் நடந்து வருகிறது.

 

1996இல் சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் உள்நாட்டு எண்ணெய் வித்துகள் உற்பத்தி குறைந்தது. எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யும் விவசாயத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்காத அரசு, உற்பத்திக் குறைவை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எண்ணெய் இறக்குமதிக்குத் தாராள அனுமதி கொடுத்தது. சமையல் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செய்து வரும் கார்கில், மாண்சான்டோ முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் இதன் மூலம் கொழுத்த ஆதாயமடைந்தன.

 

ஆண்டுகள் பலவாகியும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யும் விவசாயத்தை அரசு தொடர்ந்து புறக்கணித்ததால், நாடெங்கும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியாகும் விவசாய நிலப்பரப்பு குறைந்து கொண்டே போனது. சமையல் எண்ணெய் தட்டுப்பாடும் விலையேற்றமும் தொடர்ந்தது. இதைக் களையும் நடவடிக்கையாக, மீண்டும் இறக்குமதியைத் தாராளப்படுத்தியது அரசு. கடைசியில், இன்று இந்திய நாடு, உலக அளவில் அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதிசெய்யும் நாடாக மாறிவிட்டது. கடந்தஆண்டை விட பாமாயில் 32 சதவீதமும் சோயா எண்ணெய் 73சதவீதமும் அதிகமாக இறக்குமதி செய்வதென அரசு முடிவு செய்துள்ளதை, விவசாய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கோலாகலத்துடன் வரவேற்றுள்ளன.

 

எண்ணெய் வித்துகள் விவசாயத்துக்கு நேர்ந்த கதிதான் கரும்பு விவசாயத்துக்கும் ஏற்படப் போகிறது. கரும்புக்குக் கட்டுபடியாகும் விலையை அரசு கொடுக்க மறுப்பதாலும், உற்பத்திச் செலவுகள் அதிகரித்துவிட்டதாலும் விவசாயிகளில் பலர் கரும்பு விவசாயத்தையே கைவிட்டு விட்டனர். இதனால் நாடு தழுவிய அளவில் 200607இல் 51.5 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு பயிரிடும் நிலப்பரப்பு, 2008/ 09 இல் 44.08 லட்சம் ஹெக்டேராகக் குறைந்து விட்டது. தமிழகத்தில் 2006/07இல் 3.91 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு விவசாய நிலப்பரப்பு 2008/09இல் 3.23 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. 2006/07 நிதியாண்டில் 284 லட்சம் டன்களாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2008/09 இல் 147 லட்சம் டன்களாக நாடு தழுவிய அளவில் வீழ்ச்சியடைந்து விட்டது. ஆனால், தேவையோ 240லட்சம் டன்களாக உள்ளது.

 

பற்றாக்குறையை ஈடுகட்ட கரும்புக்கு கட்டுபடியாகும் விலை கொடுத்து கரும்பு விவசாயத்துக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்க முன்வராத அரசு, வெளிநாடுகளிலிருந்து அதிகவிலைக்கு 25 லட்சம் டன் கச்சா சர்க்கரையையும் 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையையும் இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது. கரும்பு உற்பத்தி குறைந்து விட்டதால்,சர்க்கரை ஆலைகள் பாதிக்கப்படாமலிருக்க, இறக்குமதியாகும் கச்சா சர்க்கரையைச் சுத்திகரித்து உள்நாட்டில் விற்பனை செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

 

ஆனால், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கச்சா சர்க்கரையைச் சுத்திகரிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பாதிக்கப்படும். கரும்பு உற்பத்தி குறைந்துள்ளதால், சர்க்கரை ஆலைகளில் பகாஸ் உற்பத்தி குறைந்து,அந்த ஆலைகள் பகாஸ் மூலம் தயாரிக்கும் மின்சார அளவும் குறைந்து விடும். தும்பை விட்டு வாலைப் பிடித்தவன் கதையாக, பகாஸ் குறைவை ஈடுகட்ட நிலக்கரியை வழங்க மையஅரசு உத்தரவிட்டுள்ளது. நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எந்த விலைக்கு வேண்டுமானாலும் வெளிச்சந்தையில் விற்றுக் கொள்ள அரசு தாராள அனுமதி அளித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் சர்க்கரை ஆலை முதலாளிகளைக் காப்பாற்றலாமே தவிர, கரும்பு விவசாயத்தைக் காப்பாற்ற முடியாது.

 

எண்ணெய் வித்துகள், கரும்பு எனத் தொடங்கி இன்று பருப்பு, அரிசி, கோதுமை என அனைத்துவகை உணவு தானியங்களும் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. ஐ.டி.சி. ம ண் ச ன் ட , கோத்ரெஜ், கார்கில்,நெஸ்லே, டாடா,ரிலையன்ஸ் முதலான விவசாயப் பெருந்தொழில் நிறுவனங்கள்தான் இதன் மூலம் கொழுத்த ஆதாயமடைந்துள்ளன. விவசாயிகளோ ஓட்டாண்டிகளாகி வருகிறார்கள்.

 

நொந்த மாட்டை காக்கைகள் கொத்துவதுபோல, வறட்சியால் துவண்டுபோயுள்ள விவசாயிகளைப் பார்த்து, தண்ணீரை வரைமுறையின்றி விவசாயத்துக்குப் பயன்படுத்தியதால்தான் மழை பொய்த்த நிலையில் வறட்சி தீவிரமாகி விட்டது என்று விவசாயிகள் மீதே பழிபோடுகிறது, அரசு. விவசாயத்துக்கு நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், நீர் அதிகம் தேவைப்படாத சூரியகாந்தி, கற்றாழை முதலான மாற்றுப் பயிர்களைப் பயிரிடுமாறும் உபதேசிக்கிறது. இதன்மூலம் மீண்டும் உணவு தானிய உற்பத்தியைக் கைவிடுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது. பெருமுதலாளிகள் ஏகாதிபத்தியவாதிகளின் நலனுக்காக பெருநகரங்களில் சாலைகள் மேம்பாலங்கள் முதலான அடிக்கட்டுமானத் திட்டங்களுக்குப் பல்லாயிரம் கோடிகளை வாரியிறைக்கும் அரசு, விவசாயத்துக்கான அடிக்கட்டுமானத் திட்டங்களை அறவே புறக்கணித்து வருகிறது. நீர் நிலைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் மீண்டும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, நீர் நிலைகளை அழிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

"உணவு உற்பத்தியைக் குறை! உணவு மானியங்களைக் குறை!'' என்று உத்தரவிடுகிறது உலக வங்கி. இதையே வேறுவார்த்தைகளில் "நெல், கோதுமைக்கான கொள்முதல் விலையை உயர்த்த முடியாது. பட்ஜெட் பற்றாக்குறையால் வறட்சி நிவாரணம் தர இயலாது. மேலும் இந்த நிவாரணங்கள் விவசாயிகளிடம் போய் சேராமல் ஊழல் அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் விழுங்கி வருகிறார்கள்'' என்று கூறுகின்றனர், ஆட்சியாளர்கள்.

 

தொடரும் இத்தகைய மறுகாலனியத் தாக்குதலாலும் விவசாயப் பெருந்தொழில் நிறுவனங்களின் சூறையாடலாலும் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டு வருகிறார்கள். வறட்சியானது இப்போக்கை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் ஆய்வுகளின்படி, நாட்டின் 40%க்கும் மேலான விவசாயிகள், பிழைக்க வேறுதொழில் கிடைத்தால் விவசாயத்தை விட்டு வெளியேறவே விரும்புகிறார்கள்.

 

விவசாய நாடான இந்தியா, உணவுக்காகக் கையேந்தி நிற்கும் அவலத்தையும் விவசாயப் பேரழிவையும் எதிர்கொள்ள அனுமதிக்கப் போகிறோமா? அல்லது மறுகாலனியத்தாக்குதலை முறியடிக்க அணிதிரளப் போகிறோமா? நாட்டின் மீதும் விவசாயிகள் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்வி இது.·

பாலன்