ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவுதான் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும்,பொய்யான நம்பிக்கைகளை ஊட்டினாலும் தீவிரமாகிவிட்ட கோஷ்டிச் சண்டைகளால் அக்கட்சி பலவீனமடைவதைத் தடுக்கவே முடியாது என்கிற நிலைமை நெருங்கிவிட்டது.
பா.ஜ.க.வின் தேர்தல் தோல்விக்குப் பழிபோடப்பட்டு உத்தர்கண்ட் முதல்வர் கந்தூரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அருண் ஜேட்லிக்கு நாடாளுமன்ற மேலவையின் பா.ஜ.க. தலைவர் பதவியும், சுஷ்மா சுவராஜுக்கு நாடாளுமன்ற பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியும் தரக்கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா,அருண் ஷோரி, ஐஸ்வந்த் சிங் முதலான பழம் பெருச்சாளிகளின் அதிருப்தி கோஷ்ட ிகலகக்கொடி தூக்கியது. அதன் பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு வசுந்தராராஜே சிந்தியாவுக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதை ஏற்கமறுத்து வசுந்தரா கோஷ்டி வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தேசத் தந்தையாகச் சித்தரிக்கப்படும் முகமது அலிஜின்னாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதை வைத்து, பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் அதிரடியாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகிய இதர மூத்ததலைவர்கள் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதற்கிடையே, 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் ஆப்கானிஸ்தானிலுள்ள கந்தகாருக்குக் கடத்தப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்ட விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பதை அத்வானி மறைக்கிறார் என்று வாஜ்பாயியின் வலதுகரமான முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா பேட்டியளித்தார். முதலில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராகக் கிளம்பிய அதிருப்தியாளர்களின் கலகம், இப்போது அத்வானிக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அத்வானி ஒரு புளுகுணி என்று வெளிப்படையாகக் கேலி செய்தும், அவர் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்ததால் தான் உட்கட்சிப் பூசல் பெருகியதாகவும் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் தோல்வியால் சோர்வடைந்துள்ள கட்சி அணிகளிடம் புது நம்பிக்கையூட்ட செப்டம்பரில் நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தப் போவதாக அறிவித்த அத்வானி, தீவிரமாகிவிட்ட உட்கட்சிப் பூசலால் அத்திட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.
இந்துவெறி பாசிச பயங்கரவாதத் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ். வேறு; அரசியல் கட்சியான பா.ஜ.க.வேறு என்று ஆடிய நாடகமெல்லாம் முடிவுக்கு வந்து, இப்போது ஆர்.எஸ்.எஸ்.வெளிப்படையாகவே பா.ஜ.க. கோஷ்டிச் சண்டையில் தலையிட்டு சமரசப்படுத்தக் கிளம்பியுள்ளது. பா.ஜ.க.வின் உயிர்நாடியே ஆர்.எஸ்.எஸ்.இடம் இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நடத்திய கட்டப்பஞ்சாயத்தின்படி, அத்வானி எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள, அப்பொறுப்பில் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்படுவார் என்றும்; இவ்வாண்டின் இறுதியில் பா.ஜ.க. தலைவர் பதவிக் காலம் முடிந்து ராஜ்நாத் சிங் விலகியபின், அருண்ஜேட்லி அப்பொறுப்பை ஏற்பார் என்றும் செய்திகள் வந்துள்ளன. இச்சமரசத் தீர்வை இந்துவெறிபாசிசத் தலைமையகத்தின் முடிவை ஏற்று கட்டுப்பாட்டுடன் நடப்பதாக பா.ஜ.க.தலைவர்கள் பசப்பலாம்; ஆனால், பதவிக்கும் அதிகாரத்துக்குமான கோஷ்டிச்சண்டை அக்கட்சிக்குள் ஓயப்போவதில்லை. அத்வானியின் பிரதமர் நாற்காலிக் கனவும் நனவாகப் போவதில்லை.
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விகளாலும், உட்கட்சிப் பூசல்களாலும் பலவீனப்பட்டுக் கிடக்கும் நிலையில், அக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்தே விரட்டியடிக்க இதுவே சரியான, பொருத்தமான தருணம். இந்துவெறி பாசிசத்தை சித்தாந்தமாகக் கொண்டுள்ள அக்கட்சியின் நாட்டுவிரோத மக்கள்விரோத பொய்கள், சதிகள்,கொலைகள், துரோகங்கள் மற்றும் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்தவும், பார்ப்பன இந்துவெறி பாசிசம் காலூன்றவே முடியாதபடிமுடமாக்கி அழிக்கவும் இதுவே சரியான தருணம்.