10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்தது செல்லும்: ஐகோர்ட்

சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது சரியே என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் நிர்வாகம் ஆண்டாண்டு காலமாக தீட்சிதர்கள் வசம் இருந்து வந்தது. இந்நிலையில் கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமனம் செய்து இந்து அறநிலையத்துறை 31.7.1987 அன்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்து அறநிலையத்துறை ஆணையாளரிடம் முறையீடு செய்யாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறு என்று கூறி தீட்சிதர்களின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்கிடையே இந்த உத்தரவை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டதால், வழக்கை உச்சநீதிமன்றம் பைசல் செய்தது.

இந்த நிலையில் கடந்த 2006 ம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்று கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை பொது தீட்சிதர்கள் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயல் அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை பிறப்பித்தது.


இந்த தடையை நீக்கக்கோரி, சிதம்பரம் ஆறுமுகசாமி, தமிழ் வழிபாட்டு பயிற்சி மைய இயக்குனர் சத்தியவேல்முருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.பானுமதி விசாரித்து நடராஜர் கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.


இதனை எதிர்த்து தீட்சிதர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் மேல் முறையீட்டு மனுக்களை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தனர். இவற்றை நீதிபதிகள் கே.ரவி ராஜபாண்டியன், டி. ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் தீர்ப்பை அந்த நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


இந்நிலையில் இன்று நடராஜர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீட்சிதர்கள் மற்றும் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, இந்து அறநிலையத்துறை ஆணையர், செயல் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டார்.


அறநிலையத்துறை சட்டம் பிரிவு 45 (1) ன் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தால் நிர்வாகத்தை ஏற்பதற்கு செயல் அதிகாரியை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கில் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லும். 

இது தொடர்பான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தன.
 
****
 

FLASH NEWS: தில்லைக்கோயிலை அரசு மேற்கொண்டது செல்லும்! தீட்சிதர் மனு தள்ளுபடி!

இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய இடையறாத போராட்டத்தின் விளைவாக தில்லை நடராசர் கோயிலை தமழக அரசு மேற்கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் பெற்றிருந்த தடையாணையை நீதிபதி பானுமதி ரத்து செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோயிலை அரசு மேற்கொண்டது. உடனே இதற்கெதிராக தீட்சிதர்களும் சுப்ரமணியசுவாமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். பிறகு முட்டையடி, வக்கீல்கள் மீது தடியடி….ஆகியவை நீங்கள் அறிந்ததே. தற்போது நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்சின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க ஆகியோரது தரப்பை பிரிதிநிதித்துவம் செய்யும் வகையில் சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் தில்லைக் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எம்.எஸ் ஆகிய இருவர் பெயரில் தலையீட்டு மனுக்கள் (impleading petitions) தாக்கல் செய்யப்பட்டன. மூத்த வழக்குரைஞர் காந்தி, வழக்குரைஞர் சகாதேவன் ஆகியோர் இவர்கள் சார்பாக வாதிட்டனர். தீட்சிதர்களின் சொத்து அல்ல தில்லைக்கோயில் என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியதுடன் கோயில் சொத்துக்களான நிலங்களை திருட்டுத்தனமாக தீட்சிதர்கள் விற்பனை செய்திருப்பதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். தீட்சித்தர்களோ “இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மையத்துக்கு தொடர்பில்லை என்றும் ஆத்திகர் பிரச்சினையில் நாத்திகர்களான இவர்கள் தலையிட்டு குழப்புவதாகவும் வாதாடினர். வழக்கிலிருந்து ம.க.இ.கவினரை எப்படியாவது விலக்கி விட்டால் அரசாங்கத்தை சமாளித்துக்கொள்ளலாம் என்பது அவாளின் திட்டம். அந்த திட்டமும் தவிடுபொடியானது. இந்த வழக்கில் ஆறுமுகசாமி, வி.எம்.எஸ் ஆகியோர் தலையிடுவதற்கான உரிமை உண்டு என்பதையும் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல லட்சம் ரூபாய் உண்டியல் வசூலாகியிருப்பதையும், இதற்கு முன்னர் தீட்சிதர்கள் காட்டிய வசூல் கண்க்கு மிகக் குறைவாக இருப்பதையும் அரசு தரப்பு எடுத்துக் காட்டியது. இந்தக் கிடுக்கிப் படியில் தப்ப முடியாமல் தீட்சிதர்கள் தோற்றுவிட்டனர். ஆனால் அவர்கள விடமாட்டார்கள். தற்போதைய தீர்ப்பு சு.சுவாமியின் தலையீட்டு மனுவையும் அங்கீகரித்திருப்பதால் நாளையே அவர்கள் டில்லிக்கு போவார்கள். அடுத்த சுற்று சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில்….

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்