இன யுத்தத்தை பேரினவாதத்தின் வெற்றியாக்க, உலகமயமாக்கல் முரண்பாட்டுக்குள் இலங்கை தன்னை வலிந்து நுழைத்துக் கொண்டது. உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடைபெறும் முரண்பாடுகளும், மோதல்களும் இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. செல்வாக்கு மண்டலங்கள், இராணுவ மண்டலங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் உலகளாவிய போட்டியில், இலங்கை தன்னை வலிந்து உட்படுத்திக் கொண்டது.

சீனா - இந்தியா –பாகிஸ்தான் என்ற பிராந்திய முரண்பாட்டுக்குள், மேற்கு – சீனா என்ற உலகளாவிய முரண்பாட்டுக்குள், இலங்கை தனது அனைத்துவிதமான பாசிசக் கட்டமைப்பையும் புகுத்தியுள்ளது. இதன் மூலம் தன் வரைமுறையற்ற பாசிச குடும்ப ஆட்சியை நிறுவியது. நாட்டு வளத்தை விற்றது. இனப்படுகொலையைச் செய்தது. இதை இன்றும் தொடருகின்றது. இதற்குள் ஏகாதிபத்திய முரண்பாடு கூர்மையடைந்து வருகின்றது. 

 

பேரினவாத பாசிசமோ தன்னையும், தன் நாட்டையும் வெளியார் யாரும் கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ முடியாது என்கின்றது. இதுவே இந்த பாசிச குடும்பத்தின் அரசியல் நிலையாகும். இந்த வகையில் ஊடகவியலாளர் முதல் மேற்கு ராஜதந்திரிகள் வரையும், அது தன் பாசிச மொழியில் ஒடுக்கியும் நாட்டை விட்டு வெளியேற்றியும் வருகின்றது.

 

புலிகளைக் காட்டி தொடர்ந்து கட்டமைத்து வரும் சர்வாதிகார பாசிச ஆட்சியமைப்பு, மக்கள்  நெருக்கடியின்றி நீடிக்கின்றது. எதிர்க்கட்சிகளின் துணையுடன், அவசரகாலச் சட்டத்தை கொண்டு, பாசிச நடத்தையை சட்டப்படியான ஒன்றாக மொத்த சமூகம் மீதும் ஏவுகின்றது. இதில் பாதிக்கப்படும் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், இந்த அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதில்லை. தங்கள் பாராளுமன்ற வருமானம், 5 வருடத்தின் பின்னான ஓய்வுகால ஊதியம் என்று சுயநல அரசியல் மூலம், அவசரகாலச் சட்டமூலத்தை நாட்டின் பாசிச சட்டமாக வைத்திருக்க உதவுகின்றனர். இப்படி பாசிசம் நாட்டின் ஆட்சியாக இருக்க, அதற்கு உதவும் அவசரகால சட்டத்தை அனைவரினதும் துணையுடன் மக்கள் மேல் ஏவுகின்றனர்.

 

எதிர்க் கட்சிகளோ மண்ணில் இல்லாத புலியைக்காட்டி, அவசரகால சட்டத்தை நாட்டின் உயிர் நாடியாக காட்டி, அது நீடிக்க உதவுகின்றனர். இப்படி இவர்கள் இதற்கு விளக்கம் கொடுக்க, 3 இலட்சம் மக்களை திறந்தவெளிச் சிறையில் பலாத்காரமாக சிறையில் வைத்திருக்கின்றது இந்த அரசு. எந்த சட்டத்தின் அடிப்படையிலும் இதைச் செய்ய முடியாத போதும், வன்னி நிலத்தை அன்னிய மூலதனத்துக்கு தாரை வார்க்கும் திட்டத்துடன், இது அந்த மக்கள் மேலான திணிப்பாகின்றது. இதற்கேற்ப கண்ணிவெடி முதல் புலிகள் களையெடுப்பு வரையான காரணத்தைக் கூறி, பாசிசம் சுயவிளக்கமளிக்கின்றது.

 

மக்கள் அந்த நிலத்தில் இருந்து அன்னியப்படுத்தும் வண்ணம், வாழ்வியல் நெருக்கடிகளையும், வன்னியில் குடியேறி வாழ்ந்த மக்களை மீளவும் பழைய இடத்துக்கு ஓடவைக்கும் முயற்சியையும் திட்டமிட்டு இந்த அரசு செய்கின்றது. வன்னி மண் (அன்னிய) மூலதனத்துக்கே, என்பதுதான், இந்த பாசிச ஆட்சியாளர்களின் திட்டமிட்ட அரசியல்  செயல்பாடாகும்.

 

இதன் பின்னணியில்
 
1. இனவழிப்பும், இனவொடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகின்றது


2. ஒரு இனம் வாழ்ந்த பிரதேசத்தை, அபிவிருத்தியின் பெயரால் அன்னிய மூலதனத்துக்கு தாரை வார்க்கின்றனர்.

 

இவ்விரண்டு அம்சங்கள் பின்னிப்பிணைந்தே, ஒரு இனம் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றது. தங்கள் பாசிசத்தை நிலைநாட்டவும், நிலத்தின் வளத்தைச் சுரண்டவும், இனவழிப்புக்கு உதவிய நண்பர்களுக்கு வன்னி நிலத்தை தாரைவார்க்க முனைகின்றனர். இதன் மூலம் பிராந்திய மேலாதிக்க நலனுக்கு ஏற்ப இதைக் கையாள்வதன் மூலம், தங்கள் குடும்ப சர்வாதிகாரத்தை இலங்கையில் தக்கவைக்க முனைகின்றனர். 

 

இங்குதான் மேற்கு ஏகாதிபத்திய முரண்பாடுகள் முனைப்பு பெறுகின்றது. இனவழிப்பு, யுத்தக் குற்றங்கள், பொருளாதார தடை, உதவிகள் நிறுத்தம் போன்ற பல்வேறு அரசியல் மற்றும் பொதுநெருக்கடியை இலங்கை மீது திணித்து வருகின்றது. இதற்கு தமிழ்மக்களின் திறந்தவெளி சிறைவாழ்க்கை முதல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வரை பேசும் பொருளாகியுள்ளது. இவை அனைத்தும் தமிழ் மக்களின் நலனில் இருந்தல்ல, தங்கள் குறுகிய ஏகாதிபத்திய நலனில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் நலனை, ஏகாதிபத்திய நலனாக மாற்ற முனைகின்றனர்.

 

தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு உதவி அதை ஆதரித்து நிற்பதும், அதை எதிர்த்து நிற்பதுமான ஒரு முரண்பாடு கூர்மையாகியுள்ளது. இப்படி ஏகாதிபத்திய முரணபாடுகள், இதில் முரண்பட்ட அணுகுமுறை ஊடாக தங்கள் நலனுக்கு உட்பட்டவாறு கையாளுகின்றனர்.

 

இதன் பின் பாசிச குடும்ப சர்வாதிகாரம் தன்னைப் பலப்படுத்தி வருகின்றது. ஒன்றைச் சார்ந்து நிற்பதன் மூலம், ஏகாதிபத்திய முரண்பாட்டை, இலங்கைக்குள்ளான மோதலாக மாற்றி வருகின்றது. இது பாசிசத்தின் கொடூரமான, கொடுமையான பக்கங்களை இலங்கை சந்திக்கும் புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகின்றது.

 

தமிழ் மக்களோ மண்ணில் அனாதையாக்கப்பட்டுள்ளனர். பொறுக்கிகளும், பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும். மக்களிள் தலைவிதியை தங்கள் பேரத்துக்குரிய  பொருளாக்கியுள்ளனர். புலத்து தமிழ்மக்கள் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்கு பின்னால் செல்லுமாறு புலத்துப் புலிகள் வழிகாட்ட முனைகின்றனர். மக்களைச் சார்ந்து நின்று, சொந்த வழியில் இந்த பிரச்சனையை தீர்க்க முனையாது, ஏகாதிபத்திய முரண்பாட்டுக்கு பின் செல்லுமாறு வழிகாட்ட முனைகின்றனர். இப்படி இலங்கை ஏகாதிபத்திய முரண்பாட்டின் ஆடுகளமாக மாறிவருகின்றது. மக்களை ஏகாதிபத்திய நலனுக்குள் மோத வைக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள் நடைபெறுகின்றது. இதை முறியடிக்காமல், இதை எதிர் கொள்ளாமல், இலங்கையில் வாழும் எந்த மக்களுக்கும் இனி விடிவில்லை.  

  

பி.இரயாகரன்
13.09.2009