பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது.
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது.
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று.
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு.
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது.
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.

(20.04.2009 தங்கச்சி வேங்கனிக்கு)

-தீபச்செல்வன்

http://deebam.blogspot.com

நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு!

…………………………………

http://www.vinavu.com/2009/09/12/saturday-poems-4/