எம் வரலாற்றுக்கு ஒரு இருண்ட பக்கம் உண்டு. எந்த இயக்கமும் அதைக் கண்டு கொள்வது கிடையாது, கண்டு கொள்ள விடுவதுமில்லை. அங்கு செய்யப்பட்ட தியாகமோ, எல்லாத் தியாகத்தையும் விட அதன் உணர்வில் உணர்ச்சியில் பல மடங்கு மேலானது. 

அவர்கள் மே 17 நிகழ்வு தவிர்க்க முடியாது என்று சொன்னவர்கள். அதை மாற்றியமைக்க முனைநத்தால் கொல்லப்பட்டனர். புலியெதிர்ப்பு அரசியல் புரட்டுப் போல், புலிகள் மட்டும் அவர்களைக் கொல்லவில்லை. அனைத்து பெரிய இயக்கமும், அவர்களை தேடி படுகொலை செய்தனர். ஏன் புலிகள் அல்லாத மற்றவர்களும் கொன்றனர். அவர்களோ புலிகளல்ல, அப்படியிருக்க ஏன் கொன்றனர்?  ஏன் இவர்களை கொன்றனர் என்பதை திரும்பிப் பார்ப்பதன் மூலம் தான், அடுத்தடுத்த எம் தோல்விகளையாவது தவிர்க்கமுடியும். உங்கள் அறிவுக்கு அவர்கள் கற்பித்தது போல், இவர்கள் இந்திய இலங்கை கைக்கூலிக் குழுக்களல்ல. மாறாக மக்களை அதிகளவில் நேசித்ததால், கொல்லப்பட்டனர். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை என்னவோ அதுதான். அதை சுயமாக நீ தெரிந்து கொள்ள முனைவதில் என்ன தவறு?

 

1980 களில் தொடங்கிய பத்தாண்டுகளில், போராட்டத்தின் எதிர்மறை அம்சங்களை எடுத்துக் கூறியவர்கள் யார்? போராட்டத்தின் தோல்வியை தவிர்க்க, அதை மாற்றியமைக்க முனைந்தவர்கள் யார்? இவர்களை புலிகள் முதல் அனைத்து இயக்கமும் ஏன் படுகொலை செய்தனர்? இதன் மூலம் சரியான ஒரு போராட்டத்தின் அடிப்படையான சமூகக் கூறுகளை இல்லாததாக்கினரே ஏன்? இந்த படுகொலைகள் மூலம், சமூகத்தை அச்சத்தில் பீதியில் உறைய வைத்தனரே ஏன்? இதற்கு விடை காண வேண்டியவர்கள் நீங்கள்.

 

மக்களை சார்ந்து நிற்கவும், மக்களின் வாழ்வியல் சார்ந்த அரசியல் நலன்களை உள்ளடக்கிய கோரிக்கைகளே, எம் தேசத்தின், தேசியத்தின் உயிர் நாடி என்றுரைத்த ஒரு புரட்சிகர பரம்பரை அழிக்கப்பட்டது ஏன்? சரி அவர்கள் யார்?

 

அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும், எதற்காக அதை அவர்கள் முன்வைத்தார்கள் என்பதையும், மே 17க்குப் பின்னாவது நாங்கள் திரும்பி பார்ப்பதன் மூலம் தான், இன்னுமொரு மே17 ஜத் தவிர்க்க முடியும். மே 17 நிகழ்ச்சிகளை, நாம் சுய பரிசோதனை செய்யமுடியும்.

 

தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை மே 17 அரசியல் மூலம் அனுபவிக்கின்றனர். இந்த நிலைமை ஏன் எமக்கு எற்பட்டது என்பதை, மீள திரும்பி பார்ப்பதன் மூலம் விடைகாண முடியும். எமது அறிவுக்கு தெரியாத பல உண்மைகள், வெளிச்சத்துக்கு வரும்.

 

மே 17 தொடர்ச்சியில் நாம் பயணிப்பது என்பதும், ஏன் அது தோற்றுப் போனது என்பதைக் கூட சுய பரிசோதனை செய்ய மறுக்கின்ற எம் நிலை, தவறுகளை நியாயப்படுத்துகின்ற அரசியலாகும். தோற்றுப் போன ஒன்றை மீளப் பின்பற்றுவது, சுயவிமர்சனம் செய்ய மறுப்பது, குருடர்களுக்கு பின்னால் மீளச் செல்வதாகும். நாங்கள் உண்மையில் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பின், தோற்றுப்போன இந்தப் போராட்டத்தின் எதிர்மறையில் மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையாவது தெரிந்து கொள்ள முனைவதில் என்ன தவறு உண்டு!? அதனால் என்ன நட்டம் வந்து விடும்?

 

என்.எல்;.எவ்.ரி, பி.எல்.எவ்.ரி, தீப்பொறி, பாசறை, தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை, உள்ளியக்க படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், முரண்பட்டவர்கள் என்ன சொன்னார்கள், என்ன சொல்ல முனைந்தார்கள், என்பதையாவது நாம் தெரிந்து கொள்ள முனைந்திருக்கின்றோமா?

 

"துரோகிகள்" என்ற வார்த்தைக்கு வெளியில், இவர்கள் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? இவர்கள் என்ன சொன்னார்கள், எதைச் செய்ய முனைந்தார்கள், என்பதை தெரிந்து கொள்ள பெரும்பான்மை முனையவில்லை என்பதே உண்மை. இதனால் தான் குருடர்கள், உங்களுக்கு வழிகாட்ட முனைகின்றனர்.

 

இதுவரை காலமும் புலிகள் சொன்னது சரியென்றும், அதுவே விடுதலைப் போராட்டம் என்றும் நம்பியது, மே 17 இல் பொய்யாகியுள்ளது. இதில் இருந்து நாம் விடுபட்டு, நாம் சுயமாக எம் வரலாற்றை கற்றுக்கொள்ள முனைகின்றோமா!?. தமிழ் மக்கள் மேல் அக்கறையுள்ள எவனும், எவளும், இது ஏன் தோற்றுப்போனது என்பதை எங்கள் சொந்த வரலாற்றில் இருந்து ஏன் கற்றுக்கொள்ள முனையக் கூடாது!

 

மக்களைச் சார்ந்து நின்று போராடக் கோரியவர்களை, புலிகள் முதல் அனைத்து இயக்கமும் ஏன் படுகொலை செய்தனர் என்ற கேள்விக்கு நீங்கள் சுயமாக விடை காண முனையவேண்டும். இதன் மூலம் தான், நாளையாவது தமிழ் மக்களுக்கான உண்மையான ஒரு பங்களிப்பை உங்களால் நேர்மையாக வழங்க முடியும்.

 

தேவை இன்று உண்மையான அரசியல் மீள் ஆய்வு. நடந்தது என்ன என்ற, சுய பரிசோதனையும், சுய சிந்தனையும்.

 

பி.இரயாகரன்
08.09.2009