08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்களின் எதிரி யார்? இதை மறுப்பது ஒரு திசைவிலகளாகும்

தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியின் ஆரம்பம் முதலே உருவான மக்கள் விரோத நடவடிக்கைகள், அப்போராட்டத்தையும் , போராடிய சக்திகளையும் பல பரிணாமங் கொண்ட சிந்தனைக்குள்ளும், அதன் தொடர்ச்சியில் இன்று புலிகள் மட்டும் போராடும் சக்தியாக அவர்களே ஏற்படுத்திய நிலையில், சில குழுக்கள் துரோகம் இழைத்த பின்னர் பலர் உதிரிகளாகவும், சிறு குழுக்களாகவும் விரவிச் சிதறிச் சென்றனர்.

இவர்களுள் பலரும் பல்வேறு அனுபவவாத அடிப்படையில் பல்வேறுபட்ட முடிபுகளையும் போக்குகளையும் பிரதிபலித்தனர். இதில் புலி பற்றிய மதிப்பீட்டிலும் , தேசிய விடுதலை பற்றிய மதிப்பீட்டிலும் உள்ள கோளாறை ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கம். இத் தவறான பல போக்குகளும் சந்திரிக்கா அரசு வந்த பின்னர் உக்கிரம் அடைந்ததும், புதிதாகப் பலர் தம் கையாலாகத் தனத்துடன் சிதைவை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர். புலி ஆதரவாளர்கள் தவிர்ந்த புலி பற்றிய மதிப்பீடுகளின் வகை பிரிதலைப் பார்ப்போம் ஆயின்.

 

 புலி மக்கள் விரோத அமைப்பு. இதற்குப் பின் தேசிய விடுதலைப் போராட்டம் எதுவும் கிடையாது.


 புலி பகுதியளவுக்கு மக்கள் விரோத இயக்கமாகும். இதற்குப் பின் தேசிய விடுதலைப் போராட்டம் பகுதியளவு உண்டு


 புலி மக்கள் விரோத இயக்கம். இதற்குப் பின் முழுமையாக தேசிய விடுதலைப்; போராட்டம்  உண்டு

 

இவ்வாறு பல உட்பிரிவுகளையும் உள்ளடக்கிய புலி பற்றிய பல முடிவுகளுக்கு இவர்கள் பல்வேறுபட்ட சொந்த அனுபவம், மற்றும் நண்பர்கள், உறவினர்கள் பாதிக்கபட்ட தன்மை என்று பலவற்றிலிருந்தே வந்தடைகின்றனர். இதிலிருந்து புலிகளை எதிர்கொள்ள

 

 எதிரியுடன் கூட்டு சேர தயாரானவர்கள்


 எதிரி புலி மீது தாக்கும் போது மௌனமாக இருந்து ஆதரித்தல்.


 எதிரி புலி மீது தாக்கும் போது மௌனமாக இருந்து ஆதரித்தல்.


 நேரடியாக எதிரியாகத் தெரியாத பல்வேறு ஏகாதிபத்திய பிரிவுகள் உடன் சேர்ந்திருத்தல் அல்லது


 மறைமுகமாகச் செயற்படல்

 
 மௌனமாக இருத்தல் மூலம் மறைமுகமாக எதிரியை அங்கீகரித்தல்


 மக்களை பகுதியளவு சார்ந்திருக்க முயல்தல்.


 மக்கள் முழுமையாக சார்ந்திருத்தல்

 

எனப் பல்வேறு போக்குகள் பிரதிபலித்து பல்வேறு பிரிவுகளாக எங்கும் சிதறியுள்ளதுடன் பலத்த கருத்து முரண்பாடுகளையும், மோதல்களையும், நடைமுறைகளையும், பின்னடைவையும் அவரவர் போக்குக்கு இணங்கச் செயற்படுத்தப்படுகின்றது. நாம் சமூகம் மீது ஆழ்ந்த ஈடுபாடும், அம்மக்களின் விடுதலையின் மீது அக்கறை கொண்டும் இருக்கும் வரை எமது சொந்த மனப் பாதிப்புக்கள் மற்றும் விருப்பு வெறுப்புக்களில் இருந்தும் முடிபுகளை கண்டு அறிவதை ஒழித்துக்  கட்ட வேண்டும். நாம் எப்பொழுது மாக்சிய அடிப்படையில் இல்லாத பட்சத்தில் மக்களின் அடிப்படையில் எப்பொழுதும் அரசியலை முதன்மைப்படுத்தி அதிலிருந்து முடிபுகளுக்கு வரவேண்டும். ஆனால் துரதிஷ்டமாக பலரும் அரசியலை விட தமது விருப்பு வெபுப்பகளை தமது கடந்த கால துயரத்தில் இருந்து வருவது என்பது ஒரு கசற்பன அரசியல் போக்குள் இட்டுச் செல்கின்றது.

 

எம் நாட்டில் நடைபெறும் போராட்டம் என்பது என்ன? அதன் போக்கு என்ன? அதில் மக்களின் நிலை என்ன? அதன் விளைவுகள் என்ன? என பலநூறு கேள்விகளை உள்ளடக்கிய இப்பிரச்சனையில் நாம் ஒரு சரியான நிலையை அடைய வேண்டுமெனில் மக்களின் நலன் எமது சொந்த விருப்பு வெறுப்புகளை விட முதன்மையானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையின் தேசிய இனமுரண்பாடு பிரதான முரண்பாடாக இன்றுள்ளது என்பதை யாரும் மற்றைய பல முரண்பாடுகளும் இதற்கு உட்பட்டே செயற்படுகிறது என்பதையும் நாம் எந்த முரண்பாடின்றியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

 

ஒரு முரண்பாட்டின் தன்மை அதன் செயற்தளம் பற்றிய சரியான புரிதல் மிக அவசியமானது. எந்தப் பகுதி முரண்பாடும் பிரதான முரண்பாட்டுடன் தான் இணைந்து தீர்வை வந்தடைய முடியும். ஆனால் இப்பிரதான முரண்பாட்டுடன் 2,3 முரண்பாடுகள் இணைந்தும் முரண்பட்டும் செயற்படும் என்பதை அதை எப்படி கையாள்வது என்பது எம்முன்னுள்ள சரியான அரசியல் பாதையைத் தெளிவாக்கும். நாம் பிரச்சனையின் அடிப்படையை ஆராயும் போது அதன் அனைத்தும் தழுவிய முழுமையை கவனத்தில் எடுக்க வேண்டும். மாவோ முரண்பாடுகள் பற்றிய புத்தகத்தில் கூறுவதை இங்கு முன்வைப்பது மேலும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியும்.

 
“ஒரு பிரச்சனையை ஆராயும் போது அக நிலைப்போக்கு ; ஒரு தலைப்பட்சப்போக்கு,  மேலோட்டமான போக்கு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அகநிலைப் போக்கு என்னது பிரச்சினைகளைப் புறநிலையில் பார்க்கத் தவறுவதாகும். மேலோட்டமான போக்கு என்பது முரண்பாட்டின் முமுமையான பண்புகளைளோ அல்லது முரண்பாட்டின் ஒவ்வொரு கூறுக்குரிய பண்புகளையோ ஆராயத் தவறுவதாகும். ஒரு பொருளை ஆழமாகத் துருவிப் பார்த்து அதிலுள்ள முரண்பாட்டின் தன்மைகளை நுணுக்கமாக ஆராயும் தேவையை மறப்பதும், இதற்கு மாறாக அதைத் தொலைவில் இருந்து நோக்கி, முரண்பாட்டின் மேலோட்டமான தோற்றத்தை ஓரளவு பார்த்துவிட்டு அதற்கு உடனடியான தீர்வுக்காண முயல்வதாகும்.”

 

என அழகாகவே எம்மவர்களின் வரட்டுத் தனத்தை தோலுரித்து காட்டியள்ளார். தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கும் மண்ணில் இருந்து அந்நியப்பட்ட நிலையில், மக்கள் துன்ப துயரத்தில் இருந்து பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாத நிலையில் நின்ற படி, கற்பனையான தமது அகவிருப்பத்தின் சொந்த முடிவுகளை மொத்த மக்கள் மீது உள்ள முரண்பாடாக காண முயல்வது காண முடிகிறது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு இன்றைய பிரதான எதிரி சிங்கள இனவாத அரசு என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கௌ;ள வேண்டும். அதே நேரம் புலிகள் தமிழ் பேசும் மக்களின் இரண்டாவது எதிரியாகவுள்ளனர். இவ்விரண்டு எதிரிகளை சமப்படுத்துவதோ, அல்லது புலியை முதலாவது எதிரியாக காண முயலும் போக்கும் என்பது சொந்த அகவிருப்பம்  சார்ந்த முழுமையை புரியாத குருட்டுத் தனமாகும். இதை மாவோ

 

“எந்தவொரு வளர்ச்சிப் போக்கிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமேயானால், அவற்றின் ஒரு தலைமைப் பண்பை, நிர்ணயம் செய்யும் பங்கை வகிக்கும் முதன்மை முரண்பாடாகவே இருக்கம்.

 

ஒரு முரண்பாட்டின் இந்த திட்டவட்டமான பருண்மையான கூறுகளின் :  ஒரு முரண்பாட்டின் வளர்ச்சிப் போக்கில் உள்ள அதன் முதன்மை கூறு, மற்றும் முதன்மையற்ற கூறின் மாற்றங்கள் தான் :  பழைய பண்புகளை விளக்குவதில் , புதிய பண்புகளுக்கான சக்தியை உருவாக்குகின்றன. ஒரு புரட்சிகர அரசியற் கட்சியானது அரசியல் விவகாரம், இராணுவ விவகாரம் இரண்டிலும் தன்னுடைய போர் தந்திரம் மற்றும் செயல் தந்திர கொள்கைளைச் சரியாகத் தீர்மானிப்பதற்குப் பயன்படக் கூடிய ஒரு முக்கிய வழி முறையாக அமைவது எது? முரண்பாடுகளில் உள்ள சமமற்ற, ஏற்றத்தாழ்வான நிலைகளைப் பற்றியும் , முதன்மை முரண்பாடு மற்றும் முதன்மையற்ற முரண்பாட்டைப் பற்றியும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும் முதன்மையற்ற கூறையும்  பற்றிய ஆய்வே அவைகளைத் தீர்மானிப்பதற்குரிய வழிமுறையாகும்.

 

எம்மத்தியில் சுயநிர்ணயத்தை, கைவிடுபவர்களும் மற்றும் தேசிய விடுதலைப் போரை அங்கீகரிக்க மறுப்பவர்களும் முதன்மை முரண்பாட்டின் இயல்பை மறுக்கின்றனர். இதில் முதன்மையல்லாத இரண்டாம் முரண்பாட்டை முன் தள்ளி முதன்மை முரண்பாட்டை மறுதலிக்கும் அல்லது கவனியாதது போல் காட்ட முயலும் போக்கு மொத்த மக்களின் முதன்மை முரண்பாட்டை மறந்து இயக்கத்திற்கு இடையிலான முரண்பாட்டை முதன்மைப்படுத்தி மோதியது என்பதும், பின்னால் அதைப் புலிகள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் இன்றைய நிலையில் அதற்கு எந்த வித்தத்திலும் குறையாத வகையில் பல உதிரிகளும் புலியை முதன் முரண்பாடாக காட்ட முனைகின்றனர். இது புலிகளின் வழியில் செல்வதாகும்.

 

மக்கள் இலங்கை அரசை முதன் முரண்பாடாக அன்றாடம் வாழ் நிலையில் சந்திக்க, சிந்திக்கும் உதிரிகள் அதிலிருந்து விலகி, புலிகளை அன்றாடப் பிரச்சனையை பிரதான முரண்பாடாக இவர்கள் முன் நிற்பதால் அது பிரதான முரண்பாடாக மாறிவிடாது. எப்பொழுதும் எத்தளத்திலிருந்தும் மக்களின் முரண்பாடு எதுவோ அதுவே எமது பிரதான முரண்பாடாக இருக்க வேண்டும். இதை லெனின் வார்த்தையில் பார்ப்போமானால் :

 

“ஒரு பொருளை உண்மையாக அறிய வேண்டுமானால் : நாம் அப்பொருளின் அனைத்துப் பகுதியையும், எல்லாத் தொடர்புகளையும் , ‘ இடைத் தொடர்பு’ களையும் தழுவிய வகையில் ஆராய வேண்டும். இதை நாம் ஒரு போதும் முழுமையாக சாதிக்க இயலாது. ஆனால் எல்லாப் பகுதியையும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கை , தவறுகளுக்கு எதிரான பாதுகாப்பு வழங்குகிறது.

 

நாம் இலங்கையின் நிலையை முழுமையாக ஆராய வேண்டும். அதில் இருந்து பிரச்சனைகளை ஆராய வேண்டும். முரண்பாட்டை மறுப்பது என்பது மாவோ சுட்டுவதைப் போல்  முரண்பாட்டை மறுப்பது என்பது அனைத்தையும் மறுப்பதாகும். இது எல்லாக் காலத்திற்கும் , எல்லா நாட்டுக்குரிய , விதிவிலக்கற்ற பொதுமைத் தழுவிய உண்மையாகும். 


எம்மவர்கள் இலங்கையின் தேசிய இனமுரண்பாட்டை விட வர்க்க முரண்பாடே பிரதான முரண்பாடு கூறுவது அதிலிருந்து அனைத்தும் தழுவிய உண்மையை மறுப்பதும் நிகழ்கின்றது. பிரதான எதிரியை மறுப்பது இரண்டாவது எதிரியைப் பிரதான எதிரியாகக் காட்டுவது என்னும் ஒரு பொது உண்மையை மறுப்பதாகும். இதிலிருந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை மறுப்பதும், பெரும் தேசிய இனவெறித்தனத்தை மறுப்பதும் நிகழ்கின்றது. இது சொந்த மக்களில் இருந்து அன்னியப்படும் போக்கு மட்டுமன்றி பெரும் தேசிய இனவெறிக்கு துணைப் போவதும், சிங்க பாசிச அரசின் படுகொலைகளை மறுப்பதும் ஆகும். புலிகளின் மக்கள் விரோதத் தனத்தை முதன்மையாக்குவதும், சிங்கள  இனவெறி அரசின் இனவெறித்தாக்குதல், அதாவது சொந்த மக்கள் மீதான தாக்குதலை இரண்டாம் பட்சமாக்கி அதன் முதன்மைப் பாத்திரத்தை மறுப்பது மக்கள் விரோத நடவடிக்கையாக பரிணாமிக்கிறது.

 

இரண்டும் சமநிலைப்படுத்த முடியாது. பண்பு ரீதியில் பல அம்சங்கள் பொதுவாக இருந்தாலும் கூட, அரசு முதன்மைப் பாத்திரத்தை மறுதலிக்க முனைவது, சமநிலைப்படுத்துவதும் மக்களில் இருந்து அன்னியப்படுத்தும் நடவடிக்கை மட்டுமன்றி, சரியான மார்க்கத்தை எடுக்காது துரோகத்திற்கு  இட்டு செல்வதாகும். புலிகளின் அரசியலில் இருந்து புலிகளின் மக்கள் விரோதத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும். புலிகளின் அரசியலை புரியாத புலிகளின் மீதான விமர்சனம் அரசியலற்ற வெற்று சூத்திரங்களை மனப்புலம்பலாக கெட்டுச் சீரழிந்து போகும்.

 

புலிக்கும் அரசியலுக்கும் இடையிலுள்ள மக்கள் விரோதத்தத் தன்மையை ஆராயின் புலிகள் நீதி, மாற்றுக் கருத்துத் தளத்தில் மக்கள் விரோதத்தை அரசு ‘தமிழன்‘ என்பதற்காக எல்லா வித மக்கள் விரோதத்துடன் கூடியது அரசேயாகும் என்பது மிகத் தெளிவான உண்மையாகும். போராட்டமான முதன்மைப் போராட்டத்தைக் கையிலெடுக்காத எந்த போராட்டமும் இரண்டாவது முரண்பாடான வாக்கப் போராட்டத்தை தீர்க்காது மறுதலிக்கிறது.

 

மறுதலையாக வர்க்கப் போராட்டத்தை முதன்மைப் போராட்டமாக எடுக்கும் எப்போராட்டமும் தேசிய முரண்பாடு முதன்மை முரண்பாடாக இருக்கம் வரை ஓர் அடியைத் தானும் முன்னெடுக்க முடியாது. பெரும் தேசிய இனத்தில் பிரிவினைக்கு ஆதரவான கோசம் வெளிப்படாத வரை சிறுபான்மை இனத்தில் ஐக்கியம் என்ற கோசம் எழும்ப முடியாது என்ற வரலாற்று உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏற்காத ஐக்கியப் போராட்டம் வெறும் கற்பனையிலான கதைகளாகவே பரிணாமிக்கும். இன்று எம்மிடம்  உள்ள தேவை சுய நிர்ணயத்தையும், அதன் அடிப்படையிலான தேசிய விடுதலைப் போரை உயர்த்திப் பிடிப்பதாகும். இரண்டாவது எதிரியை நோக்கியதன் அரசியலை விமர்சித்த ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட எதிர்ப்பை வெளிக் கொண்டு வருவதுமே என்பது இன்றைய வரலாற்றுக் கடமை. அதே நேரம் பிரதான முரண்பாடாக தேசிய விடுதலையை  இரண்டாவது போராட்டமாக வர்க்கப் போரட்டத்தை அதனுடன் இணைத்தும் எமது இன்றைய வரலாற்றுக் கடமை. இதை மறுக்கும் அனைத்துப் போக்குகளும் திசை மாறிய பிரதான எதிரியுடன்  சமரசத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு வழியாக சீரழிந்து குட்டி சுவராகும் போக்குகளாகும். இவற்றில் இருந்து மீள்வதற்குரிய இன்றைய தேவை நிதானமான விமர்சனத்துடன் கூடிய மீளாய்வாகும்.

 


பி.இரயாகரன் - சமர்