12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

எழுந்து நில்! துணிந்து நில்!! பிறக்கட்டும் புதுயுகம்!!! : தோழர் உபாலி கூரே

தோழர் உபாலி கூரே அவர்கள் தன்னுடைய பெறாமகனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தின் தமிழாக்கம் புகலியில் வெளிவந்திருந்ததும், அது பரந்தளவிலான கவனத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விரிவான பார்வையில் இரண்டாவது கடிதத்தை யூலை மாதம் 14ம் திகதி எழுதி இருந்தார். இரண்டாவது கடிதமே இறுதிக் கடிதமாகிப்போன ஒரு சமயத்தில் இந்தக் கடிதத்தை தமிழாக்கம் செய்திருக்கிறோம் என்பது கவலைக்குரியது.

அத்துடன் தனது இரண்டாவது கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டுவிட்டதா என்பது குறித்து அறிவதற்கு ஆவலாக இருந்திருக்கின்றார் என்று அறிகிறோம். தோழர் உபாலி எங்களை விட்டுப் பிரிவதற்கு 3 நாட்களிற்கு முன்னதாக பிரான்சில் வசிக்கின்ற அவரது நண்பரும் தோழருமான வில்ஃபிரெட்டிடம் இது குறித்து விசாரித்ததாக அறிய முடிந்தது.

இப்போது இந்தக் கடிதத்தை அவருக்கான இறுதி அஞ்சலியாக வெளியிட நேர்ந்த துர்ப்பாக்கியத்தையிட்டு மனம் வருந்துகிறோம்.

- புகலி -


 

அன்புள்ள பெறாமகனுக்கு,

1. நான் என்னுடைய முதல் கடிதத்தை உனக்கு எழுதியபொழுது நான் கடும் சுகயீனமாக இருந்தேன். என்னுடைய முழங்காலில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து ஒரு அபூர்வமான கிருமி பரவியது. அதனால் என்னுடைய முழங்கால் சரியாக வீங்கியும் வேதனையாகவும் இருந்தது. என்னுடைய உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கவில்லை. என்னால் கம்பியூட்டருக்குப் பக்கத்தில் சென்று அமரவோ, கம்பியூட்டர் இருந்த இடம்வரை நடக்கவோ முடிந்திருக்கவில்லை. என்னுடைய நீண்ட பொழுதுகள் கட்டிலிலேயே கழிந்தன. உனக்கு நான் எழுதிய அந்தக் கடிதத்தை நான் வாசிக்க, சமந்தா எனக்காக கனிவுடன் ரைப் பண்ணித் தந்தா. அதில் நிறைய விடயங்கள் விடுபட்டுப்போயிற்று. நான் பிரச்சினையாகக் கிளப்பிய விடயங்களில் சிலவற்றைப்பற்றி, ஒரு வலுவான அறிவுறுத்தும் விதத்தில் நான் அதில் விவாதித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் நான் சொல்ல நினைத்தவற்றில் முக்கியமானவைகள்பற்றி அதில் பேச முடிந்திருப்பதாக நான் நம்புகிறேன்.

என்னுடைய கடிதமும் அதற்கான உன் பதிலும் பரவலாக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதன் உள்ளீடுகள் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்திருந்தன. நீ ஒரு பொறுப்புள்ள, அறிவுக்கூர்மையுள்ள, கருணையுள்ள இளைஞன் என்பதை உன்னுடைய பதில் எடுத்துக்காட்டியது. அத்துடன் உன்னைப்போல் ஒரு பெறாமகன் எனக்கு இருப்பதையிட்டு நான் பெருமை கொள்கிறேன் என்பதை நான் கட்டாயம் உனக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு இணையத்தளத்தில் மட்டுமே என்னுடைய கடிதத்திற்கு கிட்டத்தட்ட 138 பதில்கள் வந்திருந்தன. அவற்றில் அநேகமான விமர்சனங்கள் சாதகமானவை. ஆனால் சில கடலைக்கொட்டை மண்டைகள் நான் ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்று குற்றம் சுமத்தினார்கள். ஜனநாயகம், பன்மைத்துவம், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான என் இடைவிடாத அர்ப்பணிப்பு, இராணுவமயப்படுத்தல் மற்றும் குழந்தைப் போராளிகளை இராணுவத்தில் சேர்த்தலும் அவர்களைப் போருக்கு அனுப்புவதும் குறித்த என்னுடைய காட்டமான எதிர்ப்பு, இவைகள் குறித்து உனக்குத் தெரியும். விடுதலைப்புலிகள் பற்றிய என்னுடைய நிலைப்பாடுபற்றி உனக்குத் தெரியும் என்றபடியால், இப்படியான முட்டாள்களுக்கு நான் பதிலளிப்பது பிரயோசனமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் என்னுடைய முதல் கடிதத்தில் வேறு விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கு விரும்பினேன். அதன் விளைவுதான் இந்த இரண்டாவது கடிதம்.

விடயதானங்களின் போதாமை

2. இன்று இலங்கையில் இருக்கின்ற பெரும்பாலான இளம் சமுதாயத்தினருக்கு எங்களுடைய வரலாறு குறித்தும் கலாச்சாரம் குறித்தும் வாசிப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் விமர்சனப்பாங்கிலான விடயதானங்கள் மிகக் குறைந்தளவிலேயே உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. இதனுடைய இறுதி விளைவு என்னவாக இருக்கின்றதென்றால், நிறையத் தவறான தகவல்கள் ஊடகத்தினால் சில்லறை விடயங்களாக்கப்படுகின்றன. தீவிரத் தேசியவாதிகள் - தமிழ், சிங்களம் இரண்டும் - இந்தத் தவறான தகவல்கள், நம்பிக்கைகள் மற்றும் புனைவுகளால் ஊட்டப்படுகிறார்கள். இந்தக் கருத்துருவாக்கங்கள் வெகு அரிதாகவே ஆட்சேபத்துக்குள்ளாகின்றன.

உதாரணத்திற்கு, இனம்பற்றிய பொதுவான கருத்தை எடுத்துக்கொள். தமிழர்களும் சிங்களவர்களும் இரு வேறு இனங்கள் என்று இலங்கையில் உள்ள மக்கள் அநேகமாக நம்புகிறார்கள். நான் என்னுடைய முதல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நாள் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. விண்ணப்பப்படிவத்தின் ஒரு இடத்தில் ஒருவர் என்ன இனம் என்று குறிப்பிடவேண்டி இருந்தது. நான் ஒரு சிங்களவனா அல்லது தமிழனா என்பதை உறுதிப்படுத்தும் அந்தக் கேள்வியின் நோக்கத்தை நான் ஊகித்துக்கொண்டபோதும், இதில் தமிழனோ சிங்களவனோ முற்றிலும் வேறுபட்ட இனரீதியான ஒரு குழுவல்ல என்று எனக்குத் தெரியும். எனவே நான் அந்த இடத்தில் ‘மானிடன்’ என்று நிரப்பினேன். என்னிடம் இருந்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தை எடுத்துச் சென்ற குமர்ஸ்தா துள்ளிக் குதித்தார். அவருக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் என்னைப் பாரத்துக் கூச்சலிட்டார். ‘மானிடன்’ என்று நீர் எதைக் கருதுகிறீர் எனக் கேட்டார். நீர் சிங்களவனா? தமிழனா? என்றார். சிங்களவரும் தமிழரும் பிரித்துப் பார்க்கக்கூடிய இருவேறு இனங்கள் இல்லை என்று அவருக்கு நான் விளங்கப்படுத்துவதற்கான எத்தனங்கள் செய்தபோதும் அவை செவிட்டுக் காதுகளில்தான் விழுந்தன. அவர் விண்ணப்பப் பத்திரத்தை எடுத்து ‘மானிடன்’ என்பதை அழித்துவிட்டு ‘சிங்களவன்’ என்று எழுதினார். இப்படியான ஆய்வுரீதியான, விமர்சனரீதியான பார்வைகளின் போதாமை எங்களுடைய சமூகத்தின் சகல விடயங்களிலும் பொசிந்து கிடக்கின்றது.

மரபணு ரூபக்குறிப்புகள்

3. அண்மையில் இங்கிலாந்தில், தாங்கள் தூய ஆங்கிலேயர் அல்லது கோர்காசியன் மூலத்தைச் சேந்தவர்கள் என்று நம்புபவர்களில் கணிசமானவர்களை ஒரு ஆராய்ச்சியாளர் பேட்டி எடுத்தார். அதன் பின்பு அவர்களில் மரபணுப் பரிசோதனை செய்தார். அவர்களில் பலர், தாங்கள் ஒரு நல்ல புராதன ஆங்கிலேயர் (கிபி600களில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர்கள்) அல்லது நோர்மன் (1066ம் ஆண்டில் பிரான்சின் வடபகுதியில் இருந்து பலாத்காரமாக இங்கிலாந்துக்குள் நுழைந்து இங்கிலாந்தை ஆண்டவர்கள்) அல்லது குறைந்த பட்சம் வடஐரோப்பிய புராதனத்தைக் கொண்டவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சரியப்படத்தக்க விதத்தில், பெரும்பாலானவர்களுடைய மரபணுப் பரிசோதனை அவர்கள் வடஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று காட்டியது. அவர்கள் மங்கோலிய, மொராக்கோ, துருக்கிய மரபணுக்களைக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் தாங்கள் தூய சிங்களவர் என்று முழுநம்பிக்கைகொண்ட ஆதிக்கவாதிகளில் பெரும்பாலானவர்களிடம் அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தார்கள் அல்லது உலகின் வேறெந்தப் பகுதியில் இருந்து வந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு மரபணுப் பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டால், அவனுடையதோ அவளுடையதோ மூலத்தை அறிய விழைந்தால், அதன் முடிவுகள் இப்படித்தான் இருக்கும்.

இலங்கையில் உள்ளவர்கள் நிறையக் கலப்புகளையுடையவர்கள். உதாரணத்திற்கு ‘கரவா’ சாதியை எடுத்துப் பார்த்தால், அவர்கள் தென்னிந்திய மறவர் குலத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் இலங்கையை ஆண்ட அரசர்களினால் எங்கள் கரைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள்;. பின்னர் நாளடைவில் அவர்கள் மேற்குக் கரையோரங்களில் தங்கிவிட்டார்கள்;. இதுவே ‘சலகம’, ‘துரவா’ ஆகியோர்களுக்கும் பொருந்தும். அவர்கள் எல்லோருடைய பூர்வீகமும் தென்னிந்தியாதான். ‘கண்டியர்’களைத் தூய சிங்களவர்கள் என்று நீ நினைத்தாயானால் அது ஏமாற்றம் தருவதாகத்தான் இருக்கும். எங்களுடைய நாட்டில் பிற்காலத்தில் இருந்த அரசர்களும் அரசிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான். ஒரு அரசனுக்கு உத்தியோகபூர்வமான மனைவி (அரசி) இருந்தபோதிலும், ஒரு அரசன் தன்னைக் கவருகின்ற எந்த ஒரு பெண்ணுடனும் பள்ளி கொள்ள முடிந்தது. இதில் அரசனுக்குச் சிறப்புச் சலுகை இருந்தது. அந்த நேரத்தில் எந்தவிதமான பிறப்புக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. அரசனின் சட்டத்திற்குப் புறம்பான பிள்ளைகள் ‘பண்டார’ என்று அழைக்கப்பட்டார்கள். எக்கச்சக்கமான ‘பண்டார’க்கள் சுற்றிலும் இருந்தார்கள்.

பிரிட்டிஷார் காலத்தில் தென்னாபிரிக்காவில் இருந்து கபீர் படையணி கொண்டு வரப்பட்டது. அவர்கள் படிப்படியாக உள்ளுரில் குடியேறினார்கள். அங்கேயே திருமணம் செய்தார்கள். படிப்படியாக அவர்களும் மக்கள் தொகையின் ஓர் அங்கமாக ஆனார்கள். பிற்காலத்தில், மலேயாவில் (தற்போது மலேசியா) இருந்து மலேயர்கள் இங்கு வந்து குடியேறினார்கள். அதைவிட, கேரளாவில் இருந்து கள்ளிறக்குபவர்களாக வந்த மலையாளிகள் குடியேறினார்கள். இவர்கள்உள்ளுர்க்காரர்களைத் திருமணம் செய்தார்கள்.

மேலும் நாங்கள், போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஸார்..... இப்படியானவர்களுடனும் கலந்திருக்கிறோம். தமிழர்களுக்கும் இவை பொருந்தும். அவர்களில் ‘கோவியர்’ என்னும் ஒரு சாதி இருக்கின்றது. இவர்கள் நாளடைவில் வடக்கில் உள்ள சமூகப் பிரிவினருடன் இணைந்துவிட்டார்கள். மேலும் 1848ம் ஆண்டுக் கலகத்தின் அடக்குமுறை மிகவும் குரூரமானது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்த பலரைக் கொன்றது. இந்த அடக்குமுறையில் இருந்து தப்பியவர்களில் ஆயிரக் கணக்கானவர்கள் வன்னிக்கு ஓடிச் சென்று குடியேறினார்கள். இவ்வாறு வன்னியில் பிற்காலங்களில் சென்று குடியேறியவர்கள், அநேகமாக 1848இன் அடக்குமுறைக்குத் தப்பியோடிய சிங்களவர்களின் வழிவந்தவர்களாக இருக்கலாம்.

புத்தகோஷா ஒரு தமிழர்

4. வடக்கிலும் கிழக்கிலும் காணப்படுகின்ற தொல்பொருள் ஆராய்ச்சியின் சாட்சியங்கள் அதேயளவு முட்டாள்தனமானவை. அதாவது, அந்த இடங்களில் சிங்களவர்கள்தான் எப்போதும் இருந்திருக்கின்றார்கள் என்று சொல்வது. எங்களுடைய வரலாற்றில், முன்னைய காலத்தில் பெளத்தமதமானது சிங்களவர்களின் மதமாக மட்டும் இருக்கவில்லை. அது தமிழர்களின் மதமாகவும் இருந்தது. உதாரணத்துக்கு பெளத்தமத தத்துவவாதிகளில் ஒருவராக புத்தகோஷா இருந்திருக்கின்றார். இவர் ஒரு தமிழர்.

 5. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் தெட்டத்தெளிவான மொழி வேறுபாடும் கலாச்சார வேறுபாடும் இருக்கின்றது. ஆனால், இங்கும்கூட நாங்கள் அதை மிகைப்படுத்தத் தேவையில்லை. இரண்டு மொழிகளிலும் நிறையப் பொதுவான சொற்கள் இருக்கின்றன. யதார்த்தத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைவிட பொதுவான விடயங்கள் நிறைய இருக்கின்றன. இரண்டு பக்கமும் இருக்கின்ற தீவிரத் தேசியவாதிகள் இந்த வித்தியாசங்களை மிகைபடக் காட்டி இரு சாராரையும் பிரித்து வைக்க விரும்பகின்றனர். இவர்கள் இதனைத் தங்கள் உள்ளார்ந்த நோக்கங்களுக்காககச் செய்கின்றனர். இதனால்தான், “எல்லாத் தமிழர்களும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் அங்கு திரும்பிச் செல்லவேண்டும்” என்று குறிப்பிட்டுச் சொல்வது மிகமோசமான மடைத்தனமானது. இப்படித் தங்களை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்பவர்கள் புத்தபெருமானை எப்படி நடத்துவார்கள் என்று நினைத்துப்பார். அவர் ஒரு சிங்களவராக இருக்கவில்லை. அவர் வடஇந்தியாவின் வாரணாசியில் இருந்து வந்தவர்.

‘சிங்கள பெளத்தம்’ என்பது அதன் பெயரிலேயே முரணைக் கொண்டுள்ளது

6. அதேபோல, ‘சிங்கள பெளத்தம்’ என்னும் கருத்துருவாக்கம் அதன் பெயரிலேயே முரணைக் கொண்டுள்ளது. பெளத்தம் ஒரு உலகளாவிய தத்துவம். அது ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுமத்திற்குள் சுருக்கப்பட முடியாதது. புத்தர் ஒரு ‘தெரிவுசெய்யப்பட்ட இனத்தை’ அல்லது ஒரு ‘தெரிவுசெய்யப்பட்ட இனக்குழுமத்தை’ அடையாளம் காணவில்லை. ஒருவர் அதனைச் ‘சிங்கள மயம்’ ஆக்கும்போது பெளத்தம் தனது நியாயத்தன்மையையும் அதன் மூலகாரணத்தையும் இழக்கின்றது.

இப்படியான ஒரு குழுவாத கருத்தியல் பெளத்தத்துடன் எந்தப் பொதுமையையும் கொண்டதல்ல. பெளத்த மதத்தைத் திரிபுபடுத்துதல் என்பது இத்தோடு மட்டும் நிற்கவில்லை. அது மேலும் சாதிப் பிரிப்புகளை உருவாக்கியது. இப்படித்தான் ‘கொய்கம’ மக்களுக்கு ‘சியாம் நிக்கயா’வும், ‘சலகம’ மக்களுக்கு ‘ராம்நாய நிக்கயா’வும், ‘கரவா’ மக்களுக்கு ‘அமாபுரா நிக்கயா’வும் வந்தது. இப்படியான பிரதேசவாதங்களும் குழுவாதங்களும், இந்த உன்னத தத்துவத்தின் கொள்கைகளுடன் எந்தப் பொதுமைப்பாட்டையும் கொண்டில்லை. பிரித்தானியாவில், கிறிஸ்தவம் ‘அங்லிக்கன்’ தேவாலயத்தின் வடிவத்தில் ஆட்சியாளர்களின் ஒரு கருவியாக மாறியது.  இவ்வாறே பெளத்தமும் ‘சிங்கள பெளத்தம்’ ஆக மாசுபடுத்தப்பட்டுவிட்டது.  அது ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு செய்வதன்மூலம் பெளத்தத்தின் மைய விழுமியங்களைத் திருடிக்கொண்டது.

இந்த விடயங்களைப்பற்றித் தொடர்ந்து நீட்டிக்கொண்டே போவது தேவையற்றது. ஏனெனில் அங்குள்ள ஒட்டுண்ணிகள் மீதான என்னுடைய இயல்பான எதிர்ப்புக்கு நீ மறுதலையான கருத்துக்கொண்டவன். அப்படி இருந்தும், நாங்கள் எப்படி நடக்க வேண்டும், எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன்.

தமிழர்களின் மனக்குறைகளை நிராகரித்தல்

7. இந்த இனம்பற்றியதும் மதம்பற்றியதுமான பிழையான, சந்தேகத்திற்கிடமற்ற தர்க்கப் பொருத்தமற்ற கருத்துருவாக்கங்களின் பின்னால் ஒளித்துக்கொண்டு, ‘சிங்கள’ தீவிர தேசியவாதிகள், இலங்கையில் உள்ள தமிழர்களை வேற்றுக் கிரகத்தவர் என்றும் அண்மைக் காலத்திலேயே இலங்கைக்குக் குடிவந்தவர்கள் என்றும் அவர்களுடைய மனக்குறைகள் கற்பனையானவை என்றும் தங்களுடைய முன்னுரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் புனையப்பட்ட முறைப்பாடுகள் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள்.

யூதர்கள் மீதான இனவழிப்பை மறுப்பவர்கள் போன்று, 1977ம், 1981ம், 1983ம் ஆண்டுகளில் நடந்த இனப்படுகொலையின் தாக்கத்தையும், 1978ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பரவலாகத் தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதைகள், கொலைகள் பற்றியும் மற்றும் அவர்கள் தொலைந்து போனமை போன்றவற்றையும், அவர்களில் சிலர் அடக்குமுறையையும் பாரபட்சங்களையும் நாளாந்தம் அனுபவித்ததையும் குறைத்து மதிப்பிட முயல்கிறார்கள். 

தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற ஒன்றாகத் தமிழர்கள் உணர்ந்துகொண்ட, ‘சிங்களம் மட்டும்’ என்கிற கொள்கையினால் ஏற்பட்ட தாக்கத்தைப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

தமிழ்த் தேசியவாதிகளும் யதார்த்தத்தைக் கண்டுகொள்ளத் தவறுகிறார்கள்

8. மறுபுறம் பார்த்தால், தமிழ்த் தேசியவாதிகள், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள் மட்டும்தான் அடக்குமுறை, பாரபட்சம், ஓரங்கட்டப்படுதல் என்பவற்றை அனுபவித்தவர்கள் என்று தவறாகக் கருதுகின்றார்கள். இலங்கையின் கிராமப்புறத்தில் வசிக்கின்ற வறுமையான மக்கள் எத்தனையோ ஆண்டுகாலமாக அடக்குமுறை அனுபவிப்பதையும் சுரண்டப்படுவதையும் இவர்கள் அசட்டை செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு, முக்கியமாக, பிரேமதாச அரசாங்கம் இருந்தபோது 1988 - 1989 காலப்பகுதியில் சிங்கள இளைஞர்களில் 60000 (அறுபதினாயிரம்) பேருக்கும் மேலாக ‘காணாமல் போனார்கள்’. (இதில் முரண்நகை என்னவென்றால், அந்த அரசாங்கத்தின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்போது ‘மனித உரிமைகளின் பாதுகாவலர்கள்’ நிலையில் இருந்து கூச்சலிடுகின்றவர்களில் ஒருவராக இருக்கின்றார். என்னதான் இருந்தாலும் இன்று வரையும், அவருடைய அரசாங்கம் அந்தக் காலப்பகுதியில் இழைத்த வெட்கக்கேடான, கேவலமான சட்டவிரோதச் செயல்களுக்காக மன்னிப்புக்கோரவோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்ளவோ இல்லை).

இலங்கையின் சிங்களப்பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான கிராமத்தவர்கள் கொடிய வறுமையில் இன்றுவரை வாழ்கிறார்கள் என்பதையும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வாழ்கின்ற பெரும்பான்மையான தமிழர்களை விடவும் மட்டுப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தமிழ்த் தேசியவாதிகள் அங்கீகரிக்கத் தவறுகிறார்கள்.

மலையகத்தில் வாழுகின்ற தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் சகித்துக் கொள்கின்ற எண்ணற்ற பிரச்சினைகளையும் தமிழ்த்தேசியவாதிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர்களும், கிராமப்புறத்து ஏழைகளும் (சிங்கள, தமிழ், முஸ்லிம்), பெண்களும்தான் என்று கூறுவது மிகைப்படுத்தல் அல்ல. அவர்கள் எப்போதும் தீர்வு கிடைக்காத பேரங்களையே கொண்டிருந்தார்கள்.

 1958இல் நான் கரந்தெனிய மத்திய பாடசாலைக்கு ஆசிரியராகச் சென்றேன். அங்குள்ள சிறுவர்கள் (‘தாழ்ந்த சாதி’ என்றழைக்கப்பட்ட) கல்வி கற்கக்கூடாது என்று அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களில் பலர் உணர்ந்ததைக் கண்டு நான் திடுக்கிட்டுப் போனேன். அச்சிறுவர்கள் கல்வி கற்பதனால் சிறிது இறுமாப்புக் கொண்டவர்களாக வந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். இன்றுகூட, கிராமப்புறங்களில் இந்த நிலைமை பெருமளவில் மாற்றம் கண்டதாகத் தெரியவில்லை.   புசல்லாவையில் உள்ள சிங்கள, தமிழ்ச் சிறுவர்கள் இன்றும் பாடசாலைக்குப் போக இயலாமல் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு சோடி சப்பாத்து வாங்க வழி இல்லை.

தற்போது நான் பணிபுரிகின்ற ஒரு அமைப்பில் இருந்து அண்மையில் புசல்லாவ உள்ளுர் நலன்புரி அமைப்பு ஒன்றுக்கு பணம் அனுப்பப்பட்டது. அங்குள்ள சில பிள்ளைகளுக்கு சப்பாத்துகளும் பாடசாலை உபகரணங்களும் வாங்குவதற்காக இப்பணம் கொடுக்கப்பட்டது. நாங்கள் செய்த இந்த உதவியானது பெருஞ் சமுத்திரத்துக்குள் ஒரு துளிதான். பல்லாயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் சிறுவர்கள் போதியளவு உணவின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு இருவேளை உணவு கிடைப்பதே புண்ணியம்.

இவ்வளவும் மட்டுமல்ல, கிராமப்புறத்தில் இருக்கின்ற மக்களுக்கு இன்னும் நிறையப் பிரச்சினைகள்  இருக்கின்றன. உதாரணத்திற்கு, காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ அவர்களுக்கு நியாயம் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் பிறப்புச் சாட்சிப் பத்திரம் இல்லாது இருக்கிறார்கள் அல்லது தவறான தகவல்களைக் கொண்ட பிறப்புச் சாட்சிப் பத்திரத்துடன் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளமுடியாது. அடையாள அட்டை இல்லாது அவர்கள் திரியும்போது கைது செய்யப்பட்டால் அவர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள்.

எங்கள் சமூகத்தில் உள்ள பல பெண்கள் ஒடுக்குமுறை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைகளால் துன்பம் அனுபவிக்கிறார்கள். தனியாக ஒரு பெண் அம்பாந்தோட்டையில் இருந்து பருத்தித்துறைவரை தொந்தரவின்றி நடந்து சென்ற நாட்கள் என்றைக்கும் வராமலே போய்விட்டது.

அடையாளமும் கலாச்சாரமும்

9. தமிழ், சிங்கள தீவிர தேசியவாதிகள் யதார்த்தம் குறித்த ஒரு காமாளைப் பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப யதார்த்தத்தைத் திரிபுபடுத்துகிறார்கள். தங்களுக்கு வசதியான வழிகளில் உண்மைநிலைகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். இவர்கள் இவ்வாறு செய்வதன்மூலம், மக்கள் கூட்டத்தின் பல பிரிவினர் சுரண்டலையும் அடக்குமுறையையும் பாரபட்சத்தையும் அனுபவிக்கிறார்கள் என்பதைக் காணத் தவறுகிறார்கள். சகலதையும் ‘இனவரைபு’ என்ற கூம்பினூடாகப் (புனலினூடாக) பார்க்கும்படி எங்களை அவர்கள்  நிர்ப்பந்திக்கிறார்கள்.

‘இனம்’ என்கின்ற மூலத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு நாங்கள் விடயங்களை  நோக்கினால், எங்களுக்குப் பல அடையாளங்களும் பாத்தியதைகளும் உண்டு. நாங்கள் வெறுமனே ‘தமிழ் பேசும்’ அல்லது ‘சிங்களம் பேசும்’ மக்கள் அல்ல. நாங்கள் விஞ்ஞானிகள், அல்லது பொருளியலாளர்கள், அல்லது சட்டநிபுணர்கள், அல்லது மாணவர்கள், அல்லது ஆலைத் தொழிலாளிகள், அல்லது இசைக் கலைஞர்கள், அல்லது கிரிக்கெட் அல்லது உதைபந்து விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள், அல்லது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்படி எல்லாமும்கூட. நோபல் பரிசுபெற்ற இந்திய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தன்னுடைய ‘அடையாளமும் வன்முறையும்’ என்ற நுhலில், ‘நாங்கள் பலவாறான அடையாளங்களைக் கொண்டவர்கள். நாங்கள் இனம் அல்லது மதம் என்ற ஒடுங்கிய வரப்பினூடாக மட்டும் உலகத்தைப் பார்ப்பதில்லை.” என்று சரியாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கடந்தகாலத்தில் வாழ்தல்

10. மேலும் சொன்னால், சிங்கள, தமிழ்த் தேசியவாதிகள் எங்கோ தொலைவில் உள்ள கடந்த காலத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் புராதன அல்லது மத்தியகால சரித்திர காலத்தின் கற்பனையான பொற்காலத்தை உற்றுக் கேட்கிறார்கள். கடந்துபோன காலங்களின் இல்லாத ஒரு பொற்காலத்தை இலட்சிய நெறியாக்குவதற்குத் தேடுகின்றார்கள். இந்தக் காரணத்துக்காகவே, அவர்களுடைய கருத்தியல் பிற்போக்கானதும் பின்னோக்கியதானதுமாகும். இவர்கள் கிணற்றுத் தவளைகளைப் போன்றவர்கள். இவர்கள் உலகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற விஞ்ஞானரீதியான, தொழில்நுட்பரீதியான பாரிய முன்னேற்றம் குறித்து குறைந்தளவு புரிதலே கொண்டவர்கள்.

இன்று நாங்கள் அனுபவிக்கின்ற வரையறுக்கப்பட்ட உரிமைகளையாவது பெறுவதற்காக, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மேற்கொண்ட மாபெரும் போராட்டங்களை இவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். இன்று நிலப்பிரபுக்களின் காணிகளுடன் தங்களைப் பிணைத்திருக்க வேண்டிய தேவை மக்களுக்கில்லை. அல்லது ஒரு நாளைக்கு 14 அல்லது 16 மணித்தியாலங்கள் வேலை செய்யவேண்டிய தேவையில்லை. தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டங்களினூடாக இப்படியான  விலங்குகளில் சிலவற்றை உடைத்திருக்கிறார்கள்.

தீவிர தேசியவாதிகளின் இந்தக் கருத்தியல்தான் இன்றைக்கு 30 வருட கால சாவையும் அழிவையும் விளைவாகத் தந்திருக்கின்றது. சிங்கள ஆதிக்கவாதிகள் இன்று தாங்கள் ஈட்டிய வெற்றிக் களிப்பில் தெருக்கள்தோறும் ஆட்டம் போடுகின்றபோதிலும் அவர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அதாவது, ஆட்சியிலுள்ள எங்களுடைய இந்தப் பிரமுகர்களினால் ஒரு இலங்கை தேசத்தைக் கட்டுவதற்கு முடியாமற்போன இயலாமையின் விளைவுதான் பிரிவினைவாதத்தின் எழுச்சி என்பதை இவர்கள் இன்னமும் கண்டு கொள்ளத் தவறுகிறார்கள்.

1989ம் ஆண்டு ஈபிஆர்எல்எப் இன் பாராளுமன்ற உறுப்பினர் யோகசங்கரி அவர்களின் மரணச் சடங்கிற்குத் தலைமை தாங்குவதற்காக என்னை அழைத்திருந்தார்கள். யோகசங்கரி அவர்கள் விடுதலைப்புலிகளால் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டார்.(2). அந்த நேரத்தில் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் இங்கிலாந்தில் வசித்ததால் யோகசங்கரி அவர்களின் மரணச் சடங்கு இலண்டனில் நடைபெற்றது. அந்த மரணச் சடங்கில் பேசுவதற்காக ஒரு முக்கியமான அரசியல் தலைவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பின்னாளில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர். யோகசங்கரி அவர்களின் மனைவிக்கு கருணையுடன் தனது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு அவர் பேசினார்: “அம்மா, உங்களுடைய மக்களும் என்னுடைய மக்களும் தீவிரவாதத்தின்  வன்முறையினால் துன்பப்பட்டிருக்கிறோம்” என்று. இதில் என்ன விடயமென்றால், பேசிய அரசியல் தலைவரும் திருமதி யோகசங்கரியும் இலங்கையர்களாக இருந்தபோதும் அந்த இடத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பிரிப்பைக் காட்டுவது தேவையென்று அந்த நேரத்தில் அவர் உணர்ந்தார். ஆனால் அந்த இடத்தில் அது முற்றிலும் பொருத்தமற்றதும் தேவையற்றதுமாகும்.

மறுபுறம், எங்களுடைய அயல்நாடான இந்தியாவில், ஆளும் வர்க்கத்தின் பிரமுகர்கள் வெற்றிகரமாக ஒரு இந்திய தேசத்தைக் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். 300க்கும் மேற்பட்ட மொழிகளும் பேச்சு வழக்குகளும் மற்றும் பல இனங்களையும் கொண்ட ஒரு நாட்டில் இது ஒரு ஒப்பற்ற சாதனையாகும். இந்தியாவில் வசிப்பவர்கள், அவர்கள் கேரளாவில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது வங்காளம் அல்லது பாஞ்சாப் அல்லது மகாராஸ்டிரா இப்படி இவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும் சரி, அவர்கள் தங்களை எப்போதும் முதலில் இந்தியர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். மலையாளிகள் என்றோ, சீக்கியர்கள் என்றோ, வங்காளிகள் என்றோ அல்லது மராட்டியர்கள் என்றோ அழைப்பதில்லை.

அண்மைக்காலம் வரைக்கும் இந்தியாவின் ஜனாதிபதி ஒரு முஸ்லிமாக இருந்தார். இன்று இந்தியாவின் பிரதம மந்திரி ஒரு சீக்கியர். உள்நாட்டு அமைச்சர் ஒரு திராவிடர். நாடாளுமன்றத் தலைவர் ஒரு ஹரிஜன். ஆளும் கட்சியின் தலைவர் ஒரு இத்தாலியர். அவர்கள் மாறுபாடுகளில் ஒரு ஒருமைப்பாட்டை அடைந்தார்கள். அதைப்பற்றி நாங்கள் கனவுதான் காணமுடியும். எங்களுடைய ஆளும் பிரமுகர்களின் குறுகிய பிரதேசவாத கண்ணோட்டங்களினால் நாங்கள் அதில் தோற்றுவிட்டோம்.

11. இந்தத் தீவிர தேசியவாதிகள், அவற்றினுடைய பயன்பாடுகளை இழந்துவிட்ட சம்பிரதாயங்களில் எங்களை வாழும்படி வேண்டுகிறார்கள். எங்களை 21ம் நுhற்றாண்டின் மாற்றங்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். தீவிர தேசியவாத ‘சிங்கள’ கட்சியொன்றின் யாப்பில், பெண்களின் கட்டுப்பாட்டில் அலுவலகங்கள்  இருப்பதைத் தடைசெய்கிறார்கள். 

இலங்கைப் பெண்கள் அவர்களுடைய ஆண் நகல்களுக்கு ஈடாகவோ அல்லது அவர்களை விடத் திறமாகவோ தங்களுடைய கல்வித் தராதரத்தை நிறுவியிருக்கின்றபோதிலும் இன்றும் பெண்கள் பிள்ளைகளைச் சுமப்பதற்கும் வீட்டுப் பணிகளைச் செய்வதற்கும் மட்டுமே ஏற்றவள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பெரும்பாலான தீவிர தேசியவாதிகள் உண்மையில் வேஷம் போடுபவர்கள்தான்.

தங்களுடைய நாட்டு மக்களுக்கு ‘சிங்களம் மட்டும்’ என்று போதிப்பவர்களில் பலர் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வி கற்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்களுடைய உண்மையான குறிக்கோள் தங்களுடைய பிரமுகர் அந்தஸ்தைக் காப்பாற்றுவதுதான்.

12. நாங்கள் இந்தப் பிற்போக்கான காலம் கடந்த கருத்தியல்களுக்கு எதிராகப் போராட வேண்டும். நாங்கள் எதிர்காலத்தை நோக்கி செயற்பட வேண்டுமேயன்றி கடந்த காலத்தை நோக்கியல்ல. இன்று பொருளாதார பலமானது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பெரியளவில் நகர்ந்திருப்பதற்கான சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியின் புதிய பலம் வாய்ந்த நாடுகளாக இந்தியாவும் சீனாவும் வந்துவிட்டன. இன்னும் 10 அல்லது 15 வருடங்களிற்குள் இந்தியாவும் சீனாவும் உலகின் இரண்டு செல்வம் மிகுந்த நாடுகளாக இருக்கும். தற்போது பொருளாதார நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் யப்பானை இன்னும் சில வருடங்களில் சீனா பிரதியீடு செய்யும். 2020ம் ஆண்டளவில் அது அமெரிக்காவையும் விஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவும் இதனை அண்மித்தபடி தொடருகின்றது. இன்று இந்தியாவின் சில கம்பெனிகள் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவனவாக உள்ளன. இந்தியாவில் நாட்டுப்புறக் கடன்களை இல்லாமற் செய்யவும், நாட்டுப்புறத் தொழிலாளர்களுக்கு வருடத்தில் குறைந்தது 100 நாட்கள் வேலை கொடுப்பதற்குமான உறுதியான வழிவகைகளை இந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த நடைமுறையைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி 7% அல்லது அதைவிட அதிகமாக உயர்ந்துள்ளது.

13. ஒன்றில், இந்தக் ‘கீழைத்தேய பொருளாதாரத்தின் அதிசயத்தில்’ இருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் எங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம் அல்லது உள்ளார்ந்த இனரீதியான முரண்பாடுகளிலும், வன்முறைகளிலும் எங்களை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டு கடந்த ‘பொற்காலம்’ பற்றிக் கனவுகள் கண்டுகொண்டு பின்தங்கி இருக்கலாம். ஒருவகையில் பார்த்தால், நவீனமயப்படுத்தவும், ஒரு மேன்நிலை அபிவிருத்தியை அடைவதற்கும்,  எங்கள் அயலவர்களைவிடவும் நாங்கள் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம். ஏனெனில் எங்களுடைய கல்வியறிவு வீதம் அவர்களுடையதைவிட அதிகளவு உயர்ந்தது.

இலங்கையின் கல்வியறிவு வீதம் 95% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் இந்த வீதம் 55 ஆகவும், இந்தியாவில் 66 வீதமாகவும் உள்ளது. (3). எங்களுடைய பெரும் செல்வம் மனித மூலதனம். எங்களுடைய எழுத்தறிவுள்ள, கல்வி கற்ற இளைஞர்களின் அதியுயர் பயனை இன்னும் நாங்கள் பாவிக்கவில்லை. இன்று சுதந்திரம் பெற்று 62 வருடங்களிற்குப் பின்னும், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுபவர்களில் 10% மானவர்களிற்குக்கூட பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதற்கு முடியாதவர்களாக இருக்கிறோம்.(4). இவர்களில் சிலர் பல்கலைக்கழக நுழைவைப் பெறாவிட்டாலும் அவர்களை கணக்குப் பரிசோதகர்கள் அல்லது வேறு உத்தியோக சம்பந்தமான கல்விக்கோ இணைத்துக் கொள்ளலாம்.

இருந்தபோதிலும், உயர்கல்வியைத் தொடர்வதற்கான வல்லமை கொண்ட பல மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காமல் இருக்கின்றது. இப்படியானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இது எங்கள் மனித மூலவளத்தின் மீதான சட்டவிரோதமான அநியாயமாகும்.


எங்கள் அயலவர்களின் பின்னால் மெதுவாக ஊர்ந்து செல்லுதல்

 14. இந்தியாவும் சீனாவும் விரைவாக வளர்ச்சியடைந்து செல்லும்போது நாங்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அநேகமான உத்தியோகங்கள் - அதாவது, சட்டநிபுணர்கள், வைத்திய நிபுணர்கள், ஆசிரியர்கள் இப்படியானவை - 21ம் நுhற்றாண்டின் போட்டிகளை எதிர்கொள்வதற்கு இணையாக நவீனமயப் படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு, இன்று இலங்கையில் உள்ள சட்டரீதியான கட்டுமான அமைப்பானது, ஒரு நவீன ஜனநாயகத்திற்குப் பொருத்தமான கட்டுமான அமைப்பை விடவும். சார்ள்ஸ் டிக்கன்ஸ் தன்னுடைய ‘இருண்டமாளிகை’ நாவலில் விபரிக்கின்ற (ஜார்ண்டிஸ்க்கு எதிராக ஜார்ண்டிஸ்) அரச விவகாரங்களுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கின்றது, 

ஆறுமாதம் அல்லது ஒரு வருட காலத்தில் தீர்க்கப்படக்கூடிய சட்டரீதியான பிணக்குகள் ஆண்டுக்கணக்காக அல்லது பல பத்தாண்டுகளாக இழுபடுகின்றன. இந்தக் கட்டுமான அமைப்பில் நன்மையடைபவர்கள் அப்புக்காத்துகள்  மட்டுமே. அநேகமான டாக்டர்கள் நோயாளிகளின் நலனை உறுதிப்படுத்துவதைவிடவும் தங்கள் பணப்பையை நிரப்புவதில் மட்டும்தான் அக்கறை காட்டுகிறார்கள். பெரும்தொகையான முற்பணத்தைச் செலுத்திய பின்பும் நோயாளிகள் சத்திரசிகிச்சை நிலையங்களுக்கு வெளியே மந்தைகளைப்போல் நீண்ட மணித்தியாலங்கள் காத்திருப்பதற்கு இந்த டாக்டர்களினால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்த உத்தியோகங்களை ஒழுங்குபடுத்திச் செய்வதற்கான ஒரு காத்திரமான கட்டுமான அமைப்பு அங்கு இல்லை. இவர்களுடைய நடத்தையை மேற்பார்வையிடுவதற்கு ஒரு நிலையான அமைப்பு இல்லை. ஆசிரியர்கள் காலத்திற்கேற்ப தங்களுடைய அறிவைச் சீராக்கிக் கொள்வதில்லை. இந்தப் பொதுச் சேவைகளைச் சரிசெய்வதற்கான அவசரத்தேவை இருக்கின்றது. இந்தப் பொதுச்சேவைகள் அவைகளை வழங்குபவர்களுக்கு மட்டும் சேவையளிப்பதாக இல்லாமல், அவற்றின் திறமையைக் கூட்டவும், அவை பொதுமக்களின் நலன்களுக்குச் சேவையாற்றுவதை உறுதிப்படுத்தவும் வேண்டிய தேவை இருக்கின்றது.

கியூபாவைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் வைத்திய சேவைகள் எப்படிப் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள முடியும். அப்போது இந்த வித்தியாசத்தை நாங்கள் கண்டுகொள்ளமுடியும். 11மில்லியன் மக்களைக் கொண்ட கியூபாவில், ஆண்டுதோறும் 5000 மருத்துவக்கலை மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் (5). மலேரியா, தொண்டைக்கரப்பான், அம்மை, சின்னம்மை, கக்குவான் இருமல், டெங்குக் காய்ச்சல் போன்ற நோய்களை கியூபா இல்லாமல் ஆக்கியிருக்கின்றது.

இலங்கையில் தனியார் வைத்தியசாலைகள், கிளினிக்குகள் - பணமீட்டும் நிறுவனங்கள் - என்பவற்றின் பெருக்கத்தினால் அரச வைத்தியசாலைகளில் உள்ள மருத்துவரீதியான கவனிப்பு கணிசமானளவு சீர்கெட்டுப் போயுள்ளது. எங்களுடைய போக்குவரத்து சேவையின் கட்டுமான அமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும். ஒரு சிநேகபூர்வமான சூழலை அந்தச் சேவையில் ஏற்படுத்த வேண்டும். பரந்து வியாபித்திருக்கின்ற ‘ரியூசன்’ கொள்ளையை சட்டபூர்வமற்றதாக ஆக்கவேண்டும். தாங்கள் கற்பிக்கின்ற பாடசாலைகளில் உள்ள அதே வகுப்பு மாணவர்களுக்கு தனிப்பட்டமுறையில் ரியூசன் கொடுத்து பணம் சம்பாதிக்கின்ற ஆசிரியர்கள் தடைசெய்யப்படவேண்டும். ஒவ்வொருவரும் அவரவருடைய தொழிலைச் செய்வதற்கு - சட்ட நிபுணர்கள், ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள் இப்படியாக - அதற்கான உத்தரவுப் பத்திரம் வழங்கப்படவேண்டும் என்பதை நாங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். தொடர்ந்த கல்விபெறும் திட்டத்தினால்  காலத்திற்கேற்றபடி தங்கள் அறிவைச் சரிசெய்துகொள்ள வேண்டியதற்கான நடைமுறைக்கு அவர்கள் தயாராக இருக்கவேண்டியது அவசியமாகிறது.

இப்படியாக நாங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் எண்ணிலடங்காதவை. ஏனெனில், எங்களுடைய தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தகுதியற்றவர்களும் பற்றாக்குறை யுடையவர்களுமாவார்.

15. துரதிர்ஸ்டவசமாக, பழைய சந்ததிக்கு, எங்களுடைய அநேகமான அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக, போதியளவு தூரதிருஸ்டியும் தூரதரிசனமும் இல்லை. எங்களுடைய நாட்டை வளமுள்ளதாக ஆக்குவதற்கு அதை நவீனமயப்படுத்துவதன் மூலம்தான் முடியும் என்பதை இவர்கள் கண்டுகொள்ளத் தவறுகிறார்கள். அற்பமான ஊழல் நடைமுறைகளால் பெற்றுக் கொள்கின்ற துண்டங்களைக் காட்டிலும் இப்படியான நவீனமயப்படுத்தலினால் நுhறு மடங்கு பெற்றுக்கொள்ளமுடியும் என்பதைக கண்டு கொள்ளத் தவறுகிறார்கள். அவர்கள் எங்களுடைய நாட்டை நவீனமயப்படுத்துவதில் குறைந்தளவு அக்கறை அல்லது விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, பெரும்பாலான நடுத்தர வர்க்க இளைஞர்களும் யுவதிகளும் தங்களுடைய தொடர்பாடலுக்கு இணையத்தைப் (chat, blog, twitter) பாவிக்கின்றபொழுது, தங்களுடைய சேவைகளை செம்மையாக்குவதற்கு, அல்லது மேலான வாழ்க்கை நிலைமைகளை அளிப்பதற்கு அல்லது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு, எங்களுடைய சட்ட வல்லுநர்கள், ஆசிரியர்கள், பொதுச்சேவையில் உள்ளவர்கள் மற்றும் சட்டநிபுணர்கள் ஆகியோர் முற்றிலும் கணனி பற்றிய அறிவற்றவர்களாக இருக்கின்றார்கள்.

நவீனமும் செழுமையும் அபிவிருத்தியும்

16. எங்களுடைய எழுத்தறிவும் கல்வியறிவும் உள்ள சனத்தொகையுடன் நாங்கள் சகல தென்னாசிய நாடுகளை விடவும் ‘ஆசிய அதிசயத்தில்’ இருந்து நன்மைகளைப் பெறுவதற்கான பொருத்தமான ஒரு இடத்தில் இருக்கிறோம் என்பதில் சிறிது சந்தேகம் உள்ளது. எப்படி இருப்பினும், மிகச் சில்லறையான தலைவர்களும் காலாவதியான கருத்தியல்களும் எங்களைப் பின்தங்க வைத்துள்ளன. எங்களைப் பின்தங்க வைத்துள்ள சகல தடைகளையும் நாங்கள் துடைத்தெறிய வேண்டும். எங்களுடைய ஆளும் கட்டுமான அமைப்பு பழுதுபார்க்கப்பட வேண்டும். பழுதுபார்க்கப்பட்டு அது தெளிவாகத் தெரியும்படியானதும் பொறுப்பாகக் காரணம் காட்டவேண்டியதுமான ஒரு அமைப்பாக மாற்றப்பட வேண்டும்.

நிலப்பிரபுத்துவ மனோநிலைகளை, நடைமுறைகளைத் துடைத்தெறிய வேண்டும். உதாரணத்திற்கு, அமெரிக்க ஜனாதிபதியோ, பிரான் ஜனாதிபதியோ மற்றவர்களால் திரு. ஜனாதிபதி என்று விழிக்கப்படுகிறார்கள். ஆனால் இலங்கையின் ஜனாதிபதியை, இலங்கையில் அரசின் அமைச்சர்கள்கூட, ‘உயர்மதிப்புக்குரிய’ என்று அழைக்கிறார்கள். ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் மக்களின் சேவகர்கள். வரி கட்டுபவர்களால்தான் அவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள். நாங்கள் ஏன் இவர்களை அரைக்கடவுளர்கள்போல பூஜிக்கவேண்டும் அல்லது நடத்தவேண்டும் என்பதற்கு உலகளாவிய காரணம் எதுவும் இல்லை.

இப்படியான முக்துதி செய்யும் நடைமுறைகள் ஒரு நல்ல ஆட்சிக்கு விரோதமானது. ஏனெனில் அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் இப்படியான முக்துதிக்குப் பலியாகிவிடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் பொதுமக்களிடம் இருந்த தொடர்பை இழந்து விடுகிறார்கள்.

17. நல்ல அரசாட்சியும் துல்லியமாகத் தெரிதல் விலகி- தனியாக, எங்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்தையும் நவீனமயப்படுத்தவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சிறிய கடிதத்தில் எங்களுடைய சமூகத்தை நவீனமயப்படுத்துவதற்கு என்னென்ன விடயங்களை சுவீகரித்துக்கொள்ள வேண்டும் மற்றும் மக்களின் முழு பலத்தையும் பாவிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்களை விபரிக்க முடியாது. இந்த 21ம் நுhற்றாண்டின் தேவைகளைச் சந்திக்குமுகமாக நாங்கள் சுவீகரித்துக்கொள்ளக்கூடிய வழிகள் தொடர்பான உதாரணங்கள் சிலவற்றைத் தரலாம்.

உதாரணத்திற்கு, நீண்ட காலமாக எங்களுடைய கல்வித்திட்டம் நவீனமயப்படுத்தப்படாமல் இருக்கின்றது. உலகின் மிகத் திறமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறுகின்ற பட்டதாரிகளுடன் போட்டி போடக்கூடிய மாதிரியான தரத்திற்கு எங்களுடைய பல்கலைக்கழகங்களின் தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்பது கட்டாயமானது.

முதலில் சகல ஆசிரியர்களையும் கணனியில் பயிற்சி பெறுவதில் ஈடுபடுத்தவேண்டும். பாலர்பாடசாலையில் இருந்தே சகல மாணவர்களுக்கும் கணனி தொடர்பான திறமை ஏற்படுத்தப்படவேண்டும் (6). ஒவ்வொரு கிராமப்புறப் பாடசாலையிலும் கணனி மையங்கள் நிறுவப்படவேண்டும். உயர்கல்விநிறுவனங்கள் எல்லாவற்றிலும் கட்டாயபாடமாக கணனி மையப்பட்ட பாடமும் திறமைக்கான பயிற்சியும் இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஒவ்வொரு பல்கலைக்கழகப் பட்டதாரியும் ஏதாவதொரு அந்நிய மொழியிலாவது - ஆங்கிலம், சீனம், ஹிந்தி, ஸ்பானிய மொழி, ரஷ்ய மொழி - உயர்தர வல்லுநராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மூன்றாவதாக, வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், கணக்கியல் நிபுணர்கள், மொழி வல்லுநர்கள்  இவர்கள் அனைவருக்கும் விரைவில் பயிற்சியளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன்மூலம், நாங்கள் எதிர்காலத்தில் வீட்டுவேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பாமல் உயர்தொழில்களுக்காக அவர்களை அனுப்பலாம். கியூபாவைப் போன்ற ஒரு சிறிய நாடு வருடமொன்றிற்கு 5000 மருத்துவக்கலை நிபுணர்களை  உருவாக்கமுடியும் எனில், இலங்கையில் அதில் ஐந்திலொரு விகிதமானவர்களையாவது கற்பிக்கமுடியாது என்பது நினைத்துப் பார்ப்பதற்குக் கடினமாக இருக்கிறது.

 அதேபோன்று ஒரு சமூகம் அதனுடைய சட்டரீதியான கட்டுமானத்தை திருத்தியமைக்காது நவீனமயப்படுவதென்பது முடியாத காரியம். சட்டரீதியான போக்குகள் மாற்றப்பட வேண்டும். வழக்குகளை முடிவற்றுத் தள்ளிப் போடுவதைத் தடுப்பதற்கும், சட்டத்தரணிகள் வழக்கிற்கான திகதிகளை நினைத்தபடி மாற்றுவதும், அல்லது பொருத்தமற்ற சாட்சிகளின் நீண்ட குறுக்கு விசாரணைகளில் காலத்தை விரயமாக்குவதும், நீதிமன்றக் கட்டளைகள் துஸ்பிரயோகம் செய்தல் என்பன மாற்றப்படவேண்டும். குற்றவியல் வழக்குகளில் நடைமுறை விதிகள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.

அதாவது, ஒருவர் குற்றச்சாட்டுக்கான சாட்சிகளை வைத்திருப்பாராயின் குற்றம் சாட்டப்பட்டவரின் தற்பாதுகாப்பின் தன்மையை தெளிவாகக் குறிப்பிடும்படி கட்டாயப்படுத்த வேண்டும். காவல் அதிகாரிகள் மூன்றாம்தரமான விசாரணை முறைகளில் தஞ்சம் புகுவதைவிடுத்து, அதாவது வன்முறையினால் குற்ற ஒப்புதல் செய்வித்தல், காவலில் இருக்கும் சந்தேக நபர்கள் இறந்தால் அவர்கள் காவலில் இருந்து தப்பிக்க முனைந்ததில் இறந்தார்கள் எனும் பொய்யான வாக்குமூலங்களை முன்னுக்குக் கொண்டு வருதல் போன்றன. இவர்கள்  விஞ்ஞானபூர்வமான புலனாய்வு வழிகளுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள பயிற்சியளிக்கப்பட வேண்டும். அதற்கான வளங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு புதிய இயக்கத்திற்கான தேவை

18. இவையெல்லாம் எதைக் குறிக்கின்றதென்றால், அழுகலான, பொருத்தமற்ற அரசியல் கட்டுமானங்களைத் துடைத்தெறிந்து ஒரு சிறப்பான இலங்கையையும் ஒரு சிறப்பான உலகத்தையும் உருவாக்குவதற்குப் பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு புதிய அமைப்பை உருவாக்குதலைத்தான். 

கடந்தகாலத் தலைவர்களும், எல்லா வகையான தேசியவாதிகளும் எங்களுடைய மக்களை நோக்கி இருக்கின்ற பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறி இருக்கிறார்கள். தீவிர தேசியவாதமும் விடுதலைப்புலிகளின் ஆயுதமயப்படுத்தலும் ஒரு நாசமாய்ப் போனதும் பெரும் விலை கொடுத்ததுமான சுற்றுவழியாக இருந்திருக்கின்றது. 

விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டமானது பல வழிகளில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு எதிரான ஒரு விளைவையே கொடுத்தது. இது பல கடுமையான சட்டங்களை உருவாக்கவும் மனித ஜனநாயக உரிமைகளின்மீது பாரிய கட்டுப்பாடுகளைச் சுமத்தவும் வழிவகுத்தது. விடுதலைப்புலிகளும் அவர்களைத் தூண்டியவர்களும் தாங்கள் எப்போதுமே வெல்லப்பட முடியாதவர்கள் என்று தவறாக நம்பினார்கள். அத்துடன் இலங்கை இராணுவம் ஒருபோதும் தங்களை வெல்லாது (7) என்றும் தவறாக நம்பினார்கள்.

விடுதலைப்புலிகளின் நாசகரமான பொறிமுறை தமிழர்களை அடையாள மற்றவர்களாக்கி, அவர்களை அரசியல்ரீதியாக நிராயுதபாணிகளாக்கியது மட்டுமல்லாமல், சிங்களவர்களிடையேயுள்ள ஆதிக்கவாதிகளையும் இவை குறித்து ஆழமான புரிதலற்றவர்களையும் பலப்படுத்தியது. இவர்கள் தங்களுடைய துப்பாக்கிகளை ஆளும் வர்க்கத்தின்மீது திருப்பாது சாதாரண தொழிலாள மக்கள்மீது திருப்பினார்கள். அதேபோன்று மறுபுறம், 30வருட காலமாக இனப்பிரச்சினைக்குள் வாழ்ந்த பின்பும் அதிகாரத்திலுள்ள பெரியவர்கள் தமிழர்களுடைய மனக்குறைகளுக்கு ஏதாவது தீர்க்கமான பொருத்தமான வழிகளைக் காண வேண்டிய தேவை இருக்கின்றதென்பதை இன்னும் அடையாளம் காணவில்லை.

இன்றும்கூட அதே தோற்றுப் போன கொள்கையைத்தான் அவர்களுக்குக் கொடுப்பதற்கு முன்வருகிறார்கள். அதாவது, தெற்கில் அதிகாரத்தில் இருக்கும் பெரியவர்களின் சுருதிக்கு ஏற்ப ஆடக்கூடிய சில கயிற்றுப்பொம்மைகளிடம் முழு நம்பிக்கை கொண்டு அவர்களிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு செயற்படுகிறார்கள். இது அவர்களுடைய ‘உள்வீட்டில் உருவாகிய தீர்வு’. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சூதுவாதற்ற மிதவாதிகளைப் பேய்க்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உண்மையான கண்துடைப்பு. நாங்கள் டி. எ;. செனநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இருந்து பார்த்துக்கொண்டு வருகின்ற வழக்கமான பொம்மலாட்டத்தைத் தவிர ராஜபக்ஸ ஆட்சி எப்போதும் எதற்காவது முயற்சி செய்திருக்கின்றது என்பது நடந்திருக்க முடியாத ஒன்று.

எங்களுக்கு ஒரு புதிய இயக்கம் தேவை

19. விடுதலைப்புலிகளினதும் ஆளும் பிரமுகர்களதும் தோற்றுப்போன கொள்கைகளை நாங்கள் தீர்மானமாக உடைக்க வேண்டும். பதிலாக, நாங்கள் ஒரு புதிய காத்திரமான இயக்கம் ஒன்றை, சுரண்டப்படுகின்ற, பாதிப்புக்குட்பட்ட, விளிம்புநிலையில் உள்ள அனைவரையும் இணைக்கக்கூடிய வகையில் உருவாக்க வேண்டும். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்கு முன்னணியில் இருந்த,  1930களில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய,  சூரிய மல் இயக்கத்தைப் போல அல்லது லங்கா சமசமாஜக் கட்சியைப்போல, இன்று ஒரு புதிய இயக்கம் தேவைப்படுகின்றது.

எங்களுடைய கடந்தகால இறைதூதர்கள் எங்களைக் கொண்டு போய்த் தள்ளிவிட்டுள்ள பொருளாதார, அரசியல் சகதிக்குள் இருந்து எங்களுடைய நாட்டை வெளியே இழுத்தெடுக்கவும் நாட்டை நவீனமயமாக்கவும் தேவையான ஒரு போராட்டத்தைத்  தலைமை வகிக்க ஒரு புதிய இயக்கம் வேண்டும். துரதிர்ஸ்டவசமாக, லங்கா சமசமாஜக்கட்சியானது லங்கா சுதந்திரக் கட்சியுடன் சந்தர்ப்பவாதக் கூட்டுச் சேரச் சென்றதன்மூலம் தனது பாரிய மூலத்தையும் மக்கள் மீதான அதன் ஆளுமையையும் இழந்துவிட்டது. இந்தத் தோல்வியில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

வறுமைக்கோட்டில் உள்ளவர்களும், ஒடுக்கப்படுபவர்களும், சுரண்டப்படுபவர்களும் தங்களுடைய அரசியல் சுதந்திரத்தையும், அமைப்பின் சுதந்திரத்தையும் எப்போதும் தக்க வைத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உலகின் எந்தவொரு பகுதியிலும் ஏழைகளும், ஒடுக்கப்படுபவர்களும், சுரண்டப்படுபவர்களும் ஆளும் பிரமுகர்களிடம் சரியான விடயத்தைச் செய்யும்படி பிச்சை கேட்டு, கெஞ்சி மன்றாடியதாக சரித்திரம் இல்லை என்பதை நாங்கள் நினைவில் இருத்த வேண்டும். ஆளும் வர்க்கத்திடம் போய் மக்களிற்குச் சேவை செய்யும்படி கேட்பதோ, பெரிய மனிசத் தன்மையாக நடந்துகொள்ளும்படி கெஞ்சுவதோ அல்லது அவர்களுடைய நல்லெண்ணத்துக்காக வேண்டுகோள் விடுப்பதோ வீணான செயலாகும். ஒடுக்கப்படுபவர்கள் அல்லது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாங்கள்  ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களிடம் போய் அவர்களின் நல்லெண்ணத்துக்காக வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்று சொல்பவர்கள் எப்படியானவர்கள் என்றால், பழைய காலத்து கிராமத்து பாதிரிமார்கள் பொதுமகளிர்மனை வைத்திருப்பவர்களுக்கு ஒழுக்கம்பற்றி போதனை செய்துவிட்டு, அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களை விட்டு ஒரு தெய்வீகமான வாழ்வை வாழவேண்டும் என்று மன்றாடுவதைப் போலத்தான் (8) இவர்கள். வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர் எல்லோரும் இணைந்து ஒரு உறுதியான ஐக்கிய இயக்கத்தைக் கட்ட முடிந்தால் மட்டும்தான், பழைய காலாவதியாகிப்போன அரசியல் வாதிகளுடன் பொருத முடியும்.

ஆளும் அதிகார சக்தியின் பலத்தைக் கண்டு நாங்கள் அஞ்சவோ அல்லது திகைத்துப்போகவோ தேவையில்லை. உலகில் உள்ள மாபெரும் பலம்கொண்ட மனிதர்களும் அரசாங்கங்களும் மக்களின் ஐக்கியப்பட்ட ஒருமித்த நடவடிக்கையினால் பணிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். வறுமையானவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் பிரிந்திருப்பதுதான் ஆளும் அதிகார வர்க்கம் வெல்லப்பட முடியாதது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றது. ஆற்றல் பொருந்தியவர்களாகவும் வெல்லப்படமுடியாதவர்களாகவும் தோற்றமளித்த ஆட்சியாளர்கள் மக்களின் ஐக்கியத்தினால் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை காலமும் வரலாறும் நிரூபித்திருக்கிறது.

மக்களை ஐக்கியப்படுத்துவதென்பது நிச்சயமாக இலேசுப்பட்ட வேலையில்லை என்று எனக்குத் தெரியும். இந்த கடும் பொறுப்பு வாய்ந்த கடமையில் ஈடுபடுவதற்கு என்னுடன் சேர்ந்து வரும்படி உன்னை நான் நிர்ப்பந்திக்க முடியாது. பிற்போக்கான, பின்னடைவான கடந்த காலத்தின் கொள்கைகளை நொருக்க வேண்டியதற்கான தேவையை உணருகின்ற பல இளைஞர்களும் யுவதிகளும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சமத்துவம், நீதி, நவீனத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய சமூகத்தை கட்டுவதற்கான துணிவும் அதுபற்றிக் கனவு காணுவதற்கான துணிகரமும் இவர்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

உலகில் சமூகங்களின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின் வரலாறு என்பது வறுமையானவர்களினதும் இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களினதும் சமத்துவத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தின் வரலாறு என்பதாக உள்ளது. அதனால்தான் பொப் மார்லியுடன் ஒருமித்த குரலில்


நிமிர்ந்து நில்! துணிந்து நில்!

உன் உரிமைகளுக்காக எழுந்து நில்!

உன் போராட்டத்தைக் கை விடாதே!

உன் உரிமைகளுக்காக எழுந்து நில்!

 

அன்புடன்
பெரியப்பா
உபாலி கூரே
14 யூலை 2009

(1) பெண்கள் நெடுகலும் இரட்டிப்பு அல்லது மும்மடங்கு ஒடுக்குமுறைக்குள்ளாகிறார்கள். அவர்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றினால் துயரனுபவிக்கிறார்கள்.  பெரும்பாலான வீட்டுவேலைகளைத் தோளில் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். அத்துடன் பிள்ளை வளர்ப்பிலும் பெரும்பாலான பொறுப்பையோ அல்லது தனியே முழுப் பொறுப்பையுமோ சுமக்க வேண்டியவர்களாகிறார்கள். அதிலும் அவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்கும் பெண்களாக இருந்தால், அவர்களுடைய முழுநேர வேலையுடன் இந்தக் கடமைகளையும் நிறைவேற்றவேண்டும். இவ்வாறாக, இவர்கள் ஒரு பெண்ணாகவும் தொழிலாளியாகவும் இரட்டை ஒடுக்குமுறையினால் துயருறுகிறார்கள். அவள் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவளாக இருப்பின் மும்மடங்கு ஒடுக்குமுறையை அனுபவிக்கிறாள்.

(2) விடுதலைப்புலிகளினால் ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் பத்மநாபா உட்பட 13 அங்கத்தவர்கள் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

(3) 2007ம் ஆண்டில் இலங்கையில் உள்ள எழுத்தறிவு கொண்டவர்கள் 91.5மூ (ஆண்கள் 93.2, பெண்கள் 91.6), இந்தியாவில் 66% (ஆண்கள் 76.9, பெண்கள் 54.5) பாகிஸ்தானில் 54.9% (ஆண்கள் 68.7, பெண்கள் 40.2) பங்களாதேஸ்ல் 53.5% (ஆண்கள் 58.7, பெண்கள் 48) நேபாளத்தில் 56.5 (ஆண்கள் 70.3, பெண்கள் 43.6) - தகவல் மூலம் : MSN 2007. 2009ம் ஆண்டிற்கான எழுத்தறிவு வீதம் கார்டியன் (ஐ.இ.) பத்திரிகையினால் பின்வருமாறு தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை 90.5%, இநதியா 65.5%, பாகிஸ்தான் 54.2% பங்களாதேஸ் 52.5%, நேபாளம் 55.2%.

(4) 2006/2007ம் ஆண்டில் இலங்கையில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களுக்குமாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 10463 (பத்தாயிரத்து நானூற்றி அறுபத்திமூன்று). 2006ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோன்றி பல்கலைக்கழகத்துக்குச் செல்லக்கூடிய தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 119867 (ஒரு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து எண்ணூற்றிஅறுபத்திஏழு) ஆகும். இதைவிடவும் விஞ்ஞானக்கலை, மருத்துவக்கலை, பல்வைத்தியக்கலை ஆகியவற்றிற்கு அனுமதிக்கப்பட்டவர்கள், தேர்வுசெய்யப்பட்டவர்களில் மூன்றிலொரு பங்காவர். (தகவல் மூலம்: Statistical Abstract of the Sri Lankan government)

(5) இது பிடல் கா;ட்ரோ அவருடைய சரிதையை எழுதிய இக்னாசியோ றமொனேயின் கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் இருந்து. - பார்க்க: Fidel Castro - My Life

(6) பொதுவாக, இளம்பிள்ளைகள் பெரியவர்களை விடவும் இலகுவாக கணனிபற்றிக் கற்றுக்கொள்வதில் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு நிலைநாட்டப்பட்ட உண்மை.

(7)   விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறலைத்; தொடர்ந்து கண்டிக்காமல் இருந்து வந்தவர்களான ஜெஹான் பெரேரா மற்றும் குமார் ரூபசிங்க போன்ற ‘சமாதான மறுப்பாளர்கள்’ ஆல் இந்தப் புனைவு சில்லறை வியாபாரமாக்கப்பட்டது.

(8) இதை நான் லெனினிடம் இருந்து கடன்வாங்கி பொருத்தமான தழுவலாக பாவித்திருக்கிறேன்.

(9) இது பொப் மார்லியின் பாடல்களில் ஒன்று. இது சர்வதேச மன்னிப்புச் சபையின் கீதமாக சுவீகரித்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதோ அந்தப் பாடல்வரிகள்:

 

எழுந்து நில், துணிந்து நில், உன் உரிமைகளிற்காக எழுந்து நில்!

எழுந்து நில், துணிந்து நில், உன் உரிமைகளிற்காக எழுந்து நில்!

எழுந்து நில், துணிந்து நில், உன் உரிமைகளிற்காக எழுந்து நில்!

எழுந்து நில், துணிந்து நில், உன் போராட்டத்தை நிறுத்தாதே!

போதகனே எனக்குச் சொல்லாதே,

சொர்க்கம் பூமிக்குக் கீழ் உள்ளதென்று.

வாழக்கை எவ்வளவு பெறுமதியானதென்று

உனக்குத் தெரியாதென்று எனக்குத் தெரியும்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல்

பாதிக் கதைகள் எப்போதும் சொல்லப்படவில்லை;

அப்படி இப்போது உனக்கு ஒளி தெரிகிறது. ஏய்!

ஓடி வா! உன் உரிமைகளிற்காக எழுந்து நில்!

எழுந்து நில், துணிந்து நில், உன் உரிமைகளிற்காக எழுந்து நில்!

எழுந்து நில், துணிந்து நில், உன் உரிமைகளிற்காக எழுந்து நில்!

எழுந்து நில், துணிந்து நில், உன் உரிமைகளிற்காக எழுந்து நில்!

எழுந்து நில், துணிந்து நில், உன் போராட்டத்தை நிறுத்தாதே!

மகா கடவுள் வானத்தில் இருந்து இறங்கி வந்து

எல்லாத்தையும் அள்ளிக் கொண்டுபோய்

ஒவ்வொருத்தரையும் மேன்மையடைச் செய்வார் என்று

பலர் நம்புகிறார்கள்.

ஆனால் வாழ்க்கையின் பெறுமதி என்னவென்று உனக்குத் தெரிந்தால்

நீ உன்னுடையதைப் பூமியில் தேடுவாய்!

இப்போது உனக்கு ஒளி தெரிகிறது.

 

தமிழாக்கம் : புகலி

http://www.puhali.com/index/view?aid=296


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்