01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

பிரபாகரனை பலிகொடுத்த அரசியல் எது?

மக்களை நேசிக்கும் எவரும், அந்த மக்களுக்காக தம் கடந்தகாலத் தவறுகளை திருத்தியாக வேண்டும். எதிர்காலத்தில் தவறான வழியைக் கையாளாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தான் நாம் இன்று செயல்படுகின்றோம் என்பதை, நாம் திரும்பி பார்க்கவும், எம்மை நாம் கேட்டுப்பார்க்கவும் வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கும் தம்மைச் சுற்றிய தன் இனத்துக்கும் நடக்கும்  இனவொடுக்குமுறையை, சுயமாக எதிர் கொள்ளும் அனைத்து சுய சமூக ஆளுமையையும் இழந்து நிற்கின்றனர். கடந்த காலத்தில் அவர்களைச் சுற்றி பல்வேறு நிகழ்வுகள், அவர்களின் சுயாதீனமான கூறுகளை அழித்து இருந்தது.

 

இதனால் சமூகமோ வாழா வெட்டி நிலைக்குள், இன்று சிதைந்து கொண்டிருக்கின்றது. இதை நாம் எம் சொந்த தவறுகள் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தான், எதிர்காலத்திலாவது நாம் சரியாக எதிர்வினையாற்ற முடியும்.

 

இனவொடுக்குமுறையோ இன்று என்றுமில்லாத வடிவில், தட்டிக்கேட்பாரின்றி மக்கள் மேல் ஒரு ஒடுக்குமுறையாகவே ஏவப்படுகின்றது. ஆள் நடமாட முடியாத சூனியப் பிரதேசத்தில், ஆளையே போட்டுத் தள்ளும் சூழலில் தான், தமிழினவழிப்பு தொடருகின்றது. இந்த இனவழிப்புத் தகவல்களைப் கூட, பெறமுடியாத வண்ணம் சமூகம் மூச்சிழந்து நிற்கின்றது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு ஏற்றாக வேண்டும். அதை நாங்கள் உணர்வுபூர்வமாக செய்யவில்லை என்பதை, நிச்சயமாக ஏற்றேயாக வேண்டும். இதில் இருந்துதான் மாற்றத்தை உருவாக்க முடியும். 

 

இன்று இனவழிப்பை செய்யும் உத்தி மிக நுட்பமானது. விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகள் என்ற பெயரிலும், அனைத்து சமூக செயல்பாட்டு செயல் சார்ந்த சமூகக் கூறுகளை முன்னெடுக்கும் நபர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடையமாக மாறி நிற்கின்றது. சமூக உணர்வுள்ள மனிதர்களை நாம் இழக்கின்றோம். இது புலியா அல்லது இல்லையா என்பது அல்ல எம் பிரச்சனை, சமூகத்தின் முன்னோடிகளை சமூகம் இழக்கின்றது. இதற்கு எதிரான அனைவரையும் ஒன்றிணைக்காமல், இதை எதிர்த்து நாம் போராடவும் வெல்லவும் முடியாது. இதற்கு எம் தவறுகளை இனம் கண்டு, எம்மை ஒன்றுபடுத்த, எம் குறுகிய வாதங்கள் தர்க்கங்கள் காரணமாக உள்ளது. மக்களுக்காக சிந்திப்பவர்கள் மட்டும் தான், இதைச் சுயமாக  தாமாக முன்வந்து களைய முடியும்.      

   

எம்மினத்தின் பண்பாடு, கலாச்சாரம் வரை பேரினவாதத்தின் நுகத்தடியில் அழிகின்றது. மனித உறவுகளின் சிதைவுகள் முதல் சொந்த தனிப்பட்ட நிலத்தை இழத்தல் வரை, மண்ணில் வாழும் தமிழ் மக்களின் "இயல்பு வாழ்வாகி" நிற்கின்றது. தமிழினம் பேரினவாதத்தின் இருப்புப் பிடியில் சிக்கி, இப்படி சிதைவுறுகின்றது. இதற்கேற்ப கூலிக் குழுக்கள் முதல் முதுகெலும்பில்லாத அரசியல் தலைமைகளையே, தமிழ் தரப்பின் பிரதிநிதிகளாக அரசு உயிர் வாழ அனுமதித்துள்ளது. இந்த நிலையை உருவாக்கியவர்கள் நாங்கள் தான் என்ற பொறுப்புணர்வுடன், நாம் எத்தனை பேர் சுயவிமர்சனத்துடன் சிந்திக்கின்றோம். இதை நாங்கள் எப்படி உருவாக்கினோம் என்பதை நாங்களாகத் திரும்பிப் பார்த்தால் தான், எதிர்காலத்திலாவது மாற்றத்தை சரியாக நகர்த்த முடியும்.

       

இன்று மண்ணில் வாழும் தமிழ் மக்கள், தம்மைத்தாம் ஒருங்கிணைக்கவோ, தமக்கான ஒரு தலைமையை உருவாக்கவோ முடியாத வண்ணம், அரச பாசிசம் அவர்கள் மேல் ஏவப்பட்டுள்ளது.

 

இந்த உண்மையைச் சுற்றியே புலத்தின் அரசியல் கட்டமைக்கப்படுகின்றது. ஆனால் நாம் எதையும், திரும்பிப் பார்க்கவில்லை. புலிகளின் தவறுகள் ஒருபுறம். குற்றத்தை அவர்கள் மேல் மட்டும் நாம் சொல்லமுடியாது. இதன் பின் கண்ணை மூடிக்கொண்டு நின்ற எம் தவறுகள், எமக்கு முன் முதன்மையானது. இதை நாம் திருத்தியுள்ளோமா!? குறைந்தது இதை நாம் திரும்பிப் பார்த்திருக்கின்றோமா!? இல்லை. இந்த நிலையில் எப்படி மீளவும் எம்மால், சரியாக இதை வழிநடத்த முடியும். மண்ணில் புலிகள் செயல்பாடு முற்றாக இல்லாது அழிந்து போன நிலையில், புலத்தில் புலிகளின் செயல்பாடு இதைச் சுற்றி இயங்குகின்றது. இது தன்னைத்தான் மீளாய்வு செய்தா!? 

 

புலத்தின் புலிச் செயல்பாடு தனது முந்தைய அதிகாரம், பணப்பலம், அமைப்பு வடிவம் கொண்டு, மண்ணின் அரசியல் நிகழ்வுகள் மீது தம் எதிர்வினையை நடத்துகின்றனர். இன்றைய நிலையில், அவர்கள் மட்டும்தான், அதை செய்ய முடிகின்றது. ஆனால் இதை அவர்கள் தொடரமுடியாது. அவர்களின் அகக் காரணங்களில் மையமாக இருப்பது அவர்களிடம் பணமும், அதை சுற்றி இயங்கும் குறுகிய அரசியலும்தான். பினாமி சொத்தையும், பணத்தையும் தமிழ் மக்களின் பொது நிதியமாக மாற்றும்படி கூறினோம். அரசியல் நேர்மைக்கும், நோக்கத்துக்கும் இது அடிப்படையானது, அவசியமானது. பலருக்கு இஸ்ரேலியரைச் சொல்லி சொன்னால் பிடிக்கும் என்பதால், இப்படி பொது நிதியம் யூத சமூகம் சார்ந்து இருந்துள்ளது. நேர்மையான அனைத்து நோக்கத்துக்கும், இது அவசியமானது. இல்லாது போனால், பணத்துக்கான காட்டிக்கொடுப்பு ஒரு அரசியலாகிவிடும். பிரபாகரனின் மரணத்தில் கூட,  இந்தப் பணம் முக்கிய பங்காற்றியுள்ளது. 

 

இங்கு புறக் காரணமாக இருப்பது, தொடர்ந்து புலிகளாக இருப்பது. புலிகள் மக்களுக்கு இழைத்த தவறுகளை ஒத்துக் கொண்டு, மக்களுக்காக மக்களுடன் மீளவும் நிற்க மறுப்பதுதான். உண்மையில் இதை செய்யாத வரை, மக்களுக்கு நடக்கும் அநியாயத்துக்கு எதிரான போராட்டம் என்பது, கடந்தகால போராட்டத்தின் தோல்வியையே மீளவும் பரிசளிக்கும்.

 

இன்று புலத்து புலிச் செயல்பாட்டை, பேரினவாதத்தின் செயல்பாடுகள்தான் தக்க வைக்கின்றது. இதுவல்லாத புலத்து புலிகளின் சொந்த அரசியல்ல. புலத்து புலிகளிடம், மக்கள் நலன் சார்ந்த எந்த அரசியலும் அதனிடமில்லை. பேரினவாதம் தன் நடத்தையால், புலத்து புலிக்குரிய அரசியல் செயல்பாட்டை வழங்குகின்றது. புலித்து புலிக்கு மக்கள் சார்ந்த எந்த சொந்த அரசியலும் கிடையாது. இப்படி எழுந்தமானமான தன்னிச்சையான போராட்டம்.

 

மண்ணின் பேரினவாதம் மக்களை ஒடுக்குகின்றது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு, புலத்து புலிகள் தாம் அதற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றனர். முன்னைய அதிகார பலத்தைக் கொண்டது, இந்தப் போராட்டம். அது ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து, அதன் சொந்த முரண்பாட்டைச் சார்ந்து நின்று தீர்க்க முடியும் என்ற, நம்பிக்கையைத்தான் மீளவும் இதன் மூலம் ஊட்ட  முனைகின்றனர்.

 

இப்படித்தான் தங்கள் தலைவரையே, ஏகாதிபத்திய முரண்பாட்டை பயன்படுத்துவதாக கூறி  அவர்களின் துணையுடன் பலி கொடுத்தனர். ஏன் இப்படியேதான் முழு இயக்கமும் இப்படி அழிக்கப்பட்டது. தியாகங்கள் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் விலை பேசப்பட்டது. இதை எந்த விமர்சனம் சுயவிமர்சனமும் இன்றி, அதையே மீளவும் முன்வைக்கின்றனர்.

 

இதை ஏகாதிபத்தியம் தன் சொந்த முரண்பாட்டு நலனுக்குத் தான் பயன்படுத்தும். இது தமிழரின் நலனுக்காக ஒருக்காலும் செயல்படாது. உண்மையில் மண்ணின் மக்களின் நலனை  விரும்பும் எவரும், மக்களைச் சார்ந்து நின்று எப்படி செயல்பட முடியும் என்று சிந்திப்பதை தவிர, வேறு சரியான மாற்று அரசியல் வழி எதுவும் கிடையாது. புலத்து மக்களையும், மண்ணின் மக்களையும் சார்ந்து நின்று செயல்படும் அரசியல் வடிவங்களை நோக்கி, உங்கள் கவனத்தை திருப்புவது அவசியமானது. புலத்துப் புலிகளை இதைச் செய்யும்படி, நிர்ப்பந்தியுங்கள். இதுதான் நீங்கள் நேசிக்கும் மக்களுக்கு செய்யக் கூடிய, ஓரேயொரு சரியான அரசியல் வடிவமாகும்.

 

பி.இரயாகரன்
06.09.2009
      
 
 

      
   


பி.இரயாகரன் - சமர்