07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!

வினவு சொன்ன விதத்திலும், விவாதத்தின் மையப்புள்ளியை விவாதிக்காமலும், விவாதத்தின் பெயரில் எழுந்த குறுகிய போக்குகளுடன் சமரசம் செய்தபடி வைத்த கருத்து மற்றும் நடைமுறையில் எமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் விமர்சனங்கள் உண்டு. இதை உள்ளடக்கிய சிறு குறிப்புடன் இந்த கட்டுரையை வெளியிட எழுதியிருந்தோம்.

நாம் தோழர்களுடன் நடத்திய உரையாடலின் பின், நாம் எழுதிய பகுதியின்றி இதை மட்டும் வெளியிடுகின்றோம். அதை அமைப்புக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அமைப்புடன் நாம் தொடர்ந்த விவாதத்தில் இருப்பதால், தொடர்ந்து அமைப்புடன் பேசுவதே சரியானது என்றும் கருதுகின்றோம்.

அமைப்புடன் கொள்கை ரீதியான முரண்பாடாக இல்லாமல், அணுகுமுறை தொடர்பான முரண்பாடாக பெரும்பாலும் இது இருக்கின்றது. ஈழம் - தமிழகம் என்ற சூழல் வேறுபாடும், ஈழத்தவர்கள் ஊடாக அவர்கள் அணுகும் போக்கே, இதில் முக்கிய முரண்பாடாக பங்களிக்கின்றது. அவர்கள் இதைக்  கவனத்தில் எடுக்கத் தவறிய போதும், நாம் அதைக் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. 

 

அதே நேரம் அனைத்தையும் விமர்சனம் சுயவிமர்சனமுறைக்கு ஊடாக மீள் பரீசிலனைக்கு உள்ளாக்குவதில் எந்தத் தவறுமில்லை. அதை நாமும் செய்தாக வேண்டும். ஒரு புரட்சிக்கு எது உகந்ததோ, அது முதன்மையானது.

 

அவர்களுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் உள்ளதா என்பதை, அவர்களின் அமைப்பு வெளியீடாக வெளிவந்த நான்கு நூல்கள் ஊடாக அணுகுவது சிறப்பானதும், சரியானதுமாகும். நூல் கிடைக்காமையாலும், அதை இணையத்தில் உங்கள் பார்வைக்கு தர சம்பந்தப்பட்டவர்கள் அதை அனுப்பி வைக்காமையாலும், அதை உங்கள் முன் முன்வைக்க முடியவில்லை. அதை விரைவில் உங்கள் பார்வைக்கு தர முனைகின்றோம்.

பி.இரயா
05.09.2009
  

 

தி பற்றியும், ரதியின் தொடரை வினவு வெளியிட்டது பற்றியும் விமர்சித்து தோழர் இரயாகரன் தனது தளத்தில் ஆறு பகுதிகளாக தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக வினவு தளத்தில் இது குறித்த விவாதம் நடந்து வந்தது.

இந்தப் பிரச்சினையில் இரு வேறு அம்சங்கள் உள்ளதாக கருதுகிறோம்.

ரதி அகதியின் நினைவுகளை எழுதுகின்றாரா அல்லது அத்தகையதொரு போர்வையில் புலிகள் கூறும் வரலாற்றை பிரச்சாரம் செய்கின்றாரா என்பதை வினவு தளத்திலேயோ, அல்லது தனது தளத்திலேயோ தோழர் இரயாகரன் விமரிசனம் செய்வது ஒரு அம்சம். ஒரு புலி அனுதாபி ஈழத்தின் நினைவுகளை எழுத வினவு தளம் இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி இரண்டாவது அம்சம்.

தோழர் இரயாகரன் இவ்விரண்டையும் ஒன்றாக்கி தன்னுடைய தொடரில் விமரிசித்திருக்கிறார். வினவின் நிலைப்பாடு, புலிகள் குறித்து புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருப்பதாகவும் அவர் சித்தரித்ததை எமது சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

ரதியின் பதிவு வெளியிடப்பட்டதை ஒட்டித்தான் தோழர் இரயாகரனுக்கும் எமக்கும் இடையிலான கருத்து வேறுபாடு துவங்கி இருப்பதாக இந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேறுபாடு இப்போது துவங்கியதல்ல என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டியும் அதன் பின்னர் இனப்படுகொலையின் இறுதி நாட்களில் ம.க.இ.க தமிழகத்தில் மேற்கொண்ட போராட்டங்கள் பற்றியும் தனது விமரிசனத்தை  தோழர் இரயா பதிவு செய்துள்ளார். அவசியம் கருதி அவற்றில் இருந்து சில வரிகளை மட்டும் இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.

“புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ,அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுதான் வழிகாட்டியுள்ளது”

“இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்பதில் இருந்து எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்.”

“புலிப்பாசிசம் மீதான, அதன் மக்கள் விரோத கூறுகள் மீது உங்கள் போராட்டம் நடக்கவில்லை”

“வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது.”

“உணர்ச்சின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.”

1.2.2009 (வினவின் பின்னூட்டத்தில் தோழர் இரயாகரன்)

“ஈழத்து விவகாரம் மீண்டும் தமிழக அரசியலான போது, புரட்சிகரப் பிரிவுகள் புலிப்பாசிசம் மற்றும் அரசு பாசிசத்துக்கு எதிராக எம்முடன் ஒரே நிலைப்பாட்டில் நிற்க கூடிய வகையில் ஒரு தொடர் பிரச்சாரத்தை அவர்கள் செய்திருக்கவில்லை. அவர்கள் புலிப்பாசிசம் மீதுமென்மையான போக்கை அல்லது கண்டும் காணாமல் அணுகும் போக்கினை கையாண்டனர்.”

“புரட்சிகர பிரிவுகள் புலிப் பாசிசத்தை, பாசிசமாக வரையறுத்த போதும், அதை சமகால அரசியல் பிரச்சாரத்தில் தெளிவாக முன்னிலைப்படுத்தவில்லை. இதுவே எமக்கும் அவர்களுக்கும்; இடையிலான முரண்பாட்டின் மையமான தோற்றுவாயாகமாறிவருகின்றது.”

“ஈழத்து புரட்சிகர பிரிவுகள் சிறிய ஒரு பிரிவாக இருந்த போதும், இது வேறுபட்ட சரியானகோசத்தை முன் வைத்தது. இதை தமிழக புரட்சிகரப் பிரிவு தன் கோசமாக முன்னெடுக்கத் தவறியது.”

“தமிழக புரட்சிகரப்பிரிவுகள் புலியை பாசிசமாக வரையறுத்து அதன் அடிப்படையில் இயங்கிய போதும், சமகாலத்தில் வெளிப்படுத்திய கோசங்களில் கருத்துகளில் அது தெளிவாகப் பிரதிபலிக்கவில்லை.

“தமிழினவாதிகளுடன் இணங்கிச் சென்று, அவர்களை புரட்சிகர பக்கத்திற்கு வென்று எடுக்க முனைந்தனர். இந்திய அரசுக்கு எதிரான கோசத்தை மையப்படுத்தி அதை முன்வைத்தனர். புலிப் பாசிசத்தை அம்பலப்படுத்தி, ஒரு மாற்றுப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை.”

“இந்த போக்கு பாசிசத்துக்கு எதிரான எமது போராட்டத்துக்கு மறைமுகமாக நிர்ப்பந்தம் தருகின்றது.”

“இன்று திரும்பிப் பார்க்கும் போது புலிப்பாசிசம் மறுதலித்த மனிதவுரிமை மீறல்களை தங்கள் கோசத்தின் உள்ளடக்கியிருந்தால், அரசியல் ரீதியாக தமிழினவாதிகளில் இருந்த புரட்சிகரப் பிரிவை இலகுவாக வென்று எடுத்திருக்க முடியும். அது போல் இலங்கை அரசுக்கு சார்பான பிரிவில் இருந்த, புலிப்பாசிசத்துடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த பெரும்பான்மையான சமூகப் பிரிவை, புரட்சிகர கோசத்தின் கீழ் அவர்களின் கருத்தை கொண்டுவந்திருக்க முடியும்.”

“மாறாக தமிழினவாதிகளை மையப்படுத்தி, அவர்களை புரட்சிகரமான பகுதிக்கு வென்றெடுத்தல் குறிப்பாக மையப்பட்டது.”

22.7.2009 (தமிழரங்கத்தின் பதிவொன்றில் தோழர் இரயாகரன்)

.க.இ.க வின் மீது தோழர் இரயாகரன் வைத்துள்ள மேற்கூறிய விமரிசனங்களும், தற்போது ரதிக்கு வினவு தளம் இடம் கொடுத்திருப்பது தொடர்பான விமரிசனங்களும் தொடர்பற்றவை அல்ல.

மேற்கூறிய கட்டுரைகள் தமிழரங்கத்தில் வெளிவந்த போது ‘நெடுமாறன், வைகோ ஆகியோரின் பட்டியலில் வினவையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்ற Tsri இன் பின்னூட்டமும் தமிழரங்கத்தில் வெளிவந்தது. இரயாவின் அணுகுமுறை ‘ஒரு வறண்ட பார்வை’ என லவ்வர் பாய் என்ற தோழர் தமிழரங்கத்தில் விமரிசித்திருந்தார். தோழர் சூப்பர்லிங்சும் வினவில் இது குறித்து விளக்கியிருந்தார்.

இரயாவின் நிலைப்பாட்டை விமரிசித்தும் ம.க.இ.க வின் நிலைப்பாட்டை விளக்கியும் ‘மூடக்கிழவன்’ என்ற தோழர் ஒரு நீண்ட கட்டுரையை எமக்கும் இரயாவுக்கும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். வினவில் பிரசுரிப்பதற்காக அவர் அனுப்பியிருந்த அக்கட்டுரையை நாம் பிரசுரிக்கவில்லை. காரணம், ம.க.இ.க வின் மீதான விமரிசனத்தை இரயாகரன் பொதுத்தளத்தில் எழுதியிருந்த போதிலும் இந்தக் கருத்துவேறுபாட்டை பொதுத்தளத்தில் விவாதிப்பது பொருத்தமானதாகவோ பொறுப்பானதாகவோ இராது என்று நாங்கள் கருதியதுதான்.

தற்போது ரதியின் கட்டுரை தொடர்பான பிரச்சினையிலும் தமது தளத்தில் ரதியின் கட்டுரையை கடுமையாக விமரிசித்து எழுதப் போவதாகத்தான் இரயா எமக்கு தெரிவித்தார்.. ஆனால் அவரது விமரிசனம் வினவு தளத்தின் மீதானதாகவும் இருந்தது. எனவே தவிர்க்கவியலாமல் நாங்கள் எமது தரப்பை விளக்க நேர்ந்தது. அவரது கடிதமும் எமது பதிலும் (முந்தைய) பதிவில் காண்க.

இரயா அடுத்தடுத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அது தொடர்பாக வினவில் விவாதமும் எழத் துவங்கியவுடன் ரதி, ‘தான் எழுதுவதை நிறுத்திக் கொள்வதாக’ அறிவித்தார். இந்த அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, ‘தோழமை உறவை பேணும் பொருட்டு’ எமது நிலையை விளக்காமல் இருந்திருக்க முடியுமா? அவ்வாறு சில தோழர்கள் கருதுகிறார்கள் போலும்.

ஆனால் அது யோக்கியமான, அறிவு நாணயமுள்ள செயலாக இருக்காது என்பதனால்தான் நாங்கள் மீண்டும் பேச நேர்ந்தது.

இது தொடர்பாக பின்னூட்டமிட்ட தோழர்களில் சிலர் ‘உருவாகியுள்ள இந்த நிலைமைக்கு வினவு தளமும் காரணம்’ என்று விமரிசித்துள்ளனர். சிலர் ஆளுமைகளுக்கிடையிலான மோதல் என்ற தோரணையில் எம்மை சிறுமைப்படுத்துகின்றனர். நடந்தவற்றை விளக்கி விட்டோம். இனி சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

ரதி கட்டுரை தொடர்பாக இரயா விமரிசனம் வைத்தவுடன் ‘உங்களுக்கு ம.க.இ.க வின் மீதே விமரிசனம் இருப்பதால் அமைப்புடன் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறி விவாதத்தை மடையடைக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் ரதியின் கட்டுரையை மறுத்தோ, விமரிசித்தோ அவர் எழுதுவதில் எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இருக்கவில்லை. அந்த விவாதத்தில் பங்கேற்பதன் ஊடாகவே எமது கண்ணோட்டத்தை ரயாவுக்கும் பிறருக்கும் தெளிவுபடுத்தலாம் என்றே கருதியிருந்தோம். இந்த அணுகுமுறை தவறா என்பதையும் வினவை விமரிசனம் செய்பவர்கள் குறிப்பாகப் பேச வேண்டும்.

ஆனால் ‘வினவு தளம் பாசிசத்துக்கு மேடை அமைத்துக் கொடுப்பதாக’ பொதுத்தளத்தில் தோழர் இரயாகரன் விமரிசிக்கும் போது அதற்கு பதிலளிக்காமல் இருக்க வேண்டும் என்று தோழர்கள் கருதுகின்றார்களா? ‘நட்பு முரண்பாடு பகை முரண்பாடாகிறது; தோழமை உறவு கெட்டுப் போகின்றது’ என்றெல்லாம் பல தோழர்கள் மனம் வருந்துகின்றனர். ‘தோழர் ரயாவைத் தாக்குவதற்கு வினவு மேடை அமைத்துக் கொடுப்பதாக’ கூட சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இத்தோழர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விவாதத்தை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்தவர் தோழர் இரயாகரன். இது அவர் அறியாமல் விட்ட பிழையோ, உணர்ச்சி வயப்பட்டு எடுத்த முடிவோ அல்ல. இந்த விவாதத்தை பொதுத்தளத்தில் நடத்த வேண்டும் என்பது அவரது உணர்வுப்பூர்வமான முடிவு. இதனை ஒரு விமரிசனமாக நாங்கள் கூறவில்லை. நடந்த உண்மை இதுதான் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவே கூறுகிறோம்.

ஏற்கெனவே தமிழரங்கத்தில் ம.க.இ.க பற்றி அவர் எழுதியுள்ள விமரிசனங்களும் இந்தக் கண்ணோட்டத்தில் அமைந்தவை என்றே வினவு புரிந்து கொள்கிறது. இதை வேறுவிதமாக பார்க்க வேண்டும் எனத் தோழர்கள் யாராவது எங்களுக்கு விளங்கச் செய்ய விரும்பினால் விளங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

தமிழரங்கத்தில் ம.க.இ.க வின் மீதான விமரிசனங்களை தோழர் இரயா ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறார் என்பதை இதற்கு முன்னர் வாசகர்கள் அறிந்திராவிட்டாலும், இந்த விவாதம் தொடங்கிய பிறகாவது அங்கே சென்று படித்திருக்க வேண்டும். அவ்விமரிசனங்கள் சரிதானா என்பதை சொந்த முறையில் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் இருதரப்பிலும் வாதிடும் பல தோழர்களது விவாதத்தில் அப்படி படித்ததற்கான சுவடே தெரியவில்லை என்பதுதான் துயரம். இதை சென்ற பதிவின் விவாதத்தில் தோழர் மா.சேவும் குறிப்பிட்டிருந்தார்.

தோழர் இரயா அமைப்பின் மீது வைத்துள்ள விமரிசனங்கள் குறித்து பதிலளிப்பதற்கு வினவு, அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி அல்ல. எனவே அவை குறித்து நாங்கள் இரயாவுடன் விவாதிப்பதற்கில்லை.

ஆனால் ”தமிழினவாதிகளுடன் இணங்கிச் செல்வது, வைகோவுடன் இணைந்து செல்வது, எழுச்சிக்கு பின்னால் வால் பிடிப்பது, பாசிசத்துக்கு தளம் அமைத்துக் கொடுப்பது, பாசிஸ்டு ரதியும் வினவும் இணையும் புள்ளி .. இன்ன பிற இன்ன பிற. ” என்றெல்லாம் விமரிசிக்கப்பட்ட பிறகும், அவரது பார்வையின் தன்மையை அதன் அரசியலை சுட்டிக்காட்டி விமரிசிக்கவில்லை என்றால் அது அரசியல் நேர்மையின்மை ஆகும் என்று கருதுகிறோம்.

இரயா ஒரு வறட்டுவாதி என்று நாங்கள் தீர்ப்பளிக்கவில்லை. அவரை மதிப்பீடு செய்வது எங்களது வேலையும் அல்ல. இப்பிரச்சினையில் அவரிடம் வெளிப்படும் கண்ணோட்டம் வறட்டுவாதம் என்றே விமரிசிக்கிறோம்.

அண்டை நாட்டு கம்யூனிஸ்டுகளை இவ்வாறு விமரிசிப்பது சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகளையும்,கடந்த 30 வருடமாக தாங்கள் நடத்தி வரும் போராட்டத்தையும் நிராகரிப்பதாகும் என்றும் தோழர் இரயா குறிப்பிடுகிறார். இலங்கைப் புரட்சிக்கு வழிகாட்டும் பொறுப்பில் எங்களை நாங்களே நியமித்துக் கொள்ளும் தலைக்கனம் எமக்கு இல்லை.

அதே நேரத்தில் பாசிசத்திற்கு ஆதரவாகவும் சர்வதேசியத்திற்கு எதிராகவும் செல்கிறீர்கள் என்று கூறப்படும் விமரிசனத்தை மவுனமாக ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் எமக்கு இல்லை.

இது கவுரவப் பிரச்சினையோ தோழர்களுக்கிடையிலான உறவு / முறிவு குறித்த சென்டிமெண்ட் விவகாரமோ அல்ல.

எத்தகைய தியாகம், பங்களிப்பு செய்த தோழர்களாக இருந்தாலும் அவர்கள் முன்வைக்கும் கருத்தை அது தோற்றுவிக்கின்ற சமூக விளைவில் இருந்துதான் பரிசீலிக்க முடியுமேயன்றி அவர்கள் மீதான நமது மரியாதை, அபிமானத்தில் இருந்து அல்ல. இதனைப் புரிந்து கொள்ள அதிகம் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறோம்.

தற்போது இந்தப் பதிவையும் கூட ‘இரயாவுடனான விவாதம்’ என்ற கோணத்தில் நாங்கள் இடவில்லை. எனவே இரயாவின் தொடருக்கு வரிக்கு வரி எமது பதிலை எதிர்பார்க்க வேண்டாம். அவரது வரிகளை ஆளுகின்ற கண்ணோட்டத்தின் மீது நாங்கள் முன்வைத்த விமரிசனத்துக்கான விளக்கமே இப்பதிவு.

ரலாற்று பொருள்முதல் ஆய்வுக்கான மார்க்சிய ஆய்வு முறையியலை கற்றுத்தரும் நூல்களில் முக்கியமானது காரல் மார்க்சின் லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர். புரட்சிப் பாரம்பரியம் கொண்ட முதலாளி வர்க்கத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் பெற்றிருந்த பிரான்சின் அரசை, போனபார்ட் தலைமையிலான ஒரு போக்கிரிகளின் கும்பல் எப்படி கைப்பற்ற முடிந்தது என்பதை விளக்குகிறார் மார்க்சு.

அதே காலத்தைச் சேர்ந்த விக்டர் ஹியூகோ எழுதிய ‘சின்ன நெப்போலியன்’ என்ற நூலில் போனபார்ட்டின் வன்முறையை விமர்சித்து அவர் ‘வசைமாரி பொழிந்த போதிலும்’ பிரெஞ்சு அரசை போனபார்ட் கைப்பற்றிய சம்பவத்தை ‘திடீரென்று வானத்திலிருந்து இறங்கிய இடியேறு போல’ சித்தரித்ததனால்,  போனபார்ட் வில்லனாவதற்கு பதில் திறமை வாய்ந்த நாயகனாக்கப்படுகிறான்.  இதே விசயம் பற்றி புரூதோன் எழுதிய ‘திடீர் புரட்சி’ எனும் நூலில் அவர் போனபார்ட்டின் வெற்றியை ‘வரலாற்றுரீதியான வளர்ச்சியின் விளைவு’ என்று சித்தரிக்கிறார். இதுவும் இன்னொரு வகையில் போனபார்ட்டுக்கு ஆதரவான எழுத்தாக மாறி விடுகின்றது.

”இதற்கு மாறான வகையில் நான் பிரான்சில் வர்க்கப்போராட்டம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உறவுகளும் ஒரு கோமாளித்தனமான சாதாரண நபர் ஒரு மாவீரனின் பாத்திரத்தை வகிப்பதை எப்படி சாத்தியமாக்கின என்பதை விளக்கி இருக்கிறேன்’ என்கிறார் மார்க்சு. இதுதான் அந்த ஆய்வின் முக்கியத்துவம். பிரான்சின் முதலாளி வர்க்கம், தனது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காக போனபார்ட்டை ஆதரித்ததையும் மற்ற பிற வர்க்கங்கள் தமது நலன் என்று கருதியவற்றுக்காக போனபார்ட்டுக்கு ஆதரவு கொடுத்ததையும் மார்க்சு விளக்குகிறார்.

புலிப்பாசிசமாக இருக்கட்டும்; வேறு வகைப் பாசிசங்களாக இருக்கட்டும், அவை எந்த சூழ்நிலையில் பிறப்பெடுத்தன என்பதையும், எந்த வர்க்கங்களின் ஆதரவை என்ன காரணங்களினால் பெற முடிந்தது என்பதையும் விளங்கிக் கொள்ளாத வரை அவற்றை வீழ்த்துவது சாத்தியமற்றது.

இலங்கையைப் பொறுத்தவரை பிரான்சோடு ஒப்பிடத்தக்க புரட்சிகர மரபு அதற்கு கிடையாது. இந்தியாவோடு ஒப்பிடத்தக்க அளவிற்கு கூட காலனியாதிக்க எதிர்ப்பு போராட்ட மரபு இலங்கைக்கு இல்லை என்பது ஒருபுறமிருக்க, ஈழத்து தமிழ் தேசியமும் தன் பிறப்பிலேயே தரகுத் தன்மையையும் நிலப்பிரபுத்துவப் பின்புலத்தையும் தான் கொண்டிருந்தது. தமிழகத்தின் திராவிட இயக்கத்துடன் ஒப்பிடும் வகையிலான பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற முற்போக்கான கூறுகள் எதுவும் அங்கே ஒரு சமூக இயக்கம் என்ற அளவில் இருந்ததாகத் தெரியவில்லை.

இத்தகையதொரு பின்தங்கிய, பிற்போக்கு ஆளுமை செலுத்திய சமூகத்தின் தலையில் காலனியாதிக்கவாதிகளால் செருகப்பட்ட கோமாளிக் குல்லாயாகவே ஜனநாயகம் இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் காலனி நாடுகளின் ‘பின்னாள் ஜனநாயகத்தின் யோக்கியதை’ இவ்வாறுதான் இருந்தது. இத்தகைய சமூக அடித்தளத்தின் மீதுதான் பல்வேறு நாடுகளிலும் பாசிசமோ, ராணுவ சர்வாதிகாரமோ எளிதில் தலைதூக்க முடிந்தது.

தேசிய இனம் அவற்றின் உரிமைகள் என்று நாம் பேசினாலும், இலங்கையிலாகட்டும் இந்தியாவிலாகட்டும் தேசிய இன உருவாக்கம் என்பது இன்னமும் நிறைவுபெறாத ஒரு நிகழ்ச்சிப் போக்காகத்தான் இருக்கிறது. சாதி, வட்டார உணர்வுகளை தகர்த்தெறிகின்ற ஜனநாயகப் புரட்சி ஒன்றின் ஊடாக நேர்மறையில் தேசியம் உருவாகாத நிலையில் ‘பேரினவாத எதிர்ப்பு தேசிய இன உணர்வு’ அல்லது ‘அண்டை இனத்தின் மீதான பகை உணர்ச்சியின் அடிப்படையிலான இன உணர்வு’ என்ற வகையில்தான் இன உணர்வு என்பதே கட்டமைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

இத்தகைய இடங்களில் ஒரு பாசிச இயக்கம் தோன்றாவிட்டாலும் கூட இந்த இன உணர்வின் உள்ளடக்கம் தன் இயல்பிலேயே ஜனநாயக விரோத கூறுகளைக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சமூக அடித்தளத்தின் மீது சிங்கள – பவுத்த பேரினவாதம் தனது ஒடுக்குமுறையை ஏவும்போது, அதனை எதிர்கொள்ள இயலாமல் ஓட்டாண்டியாகிப் போன தமிழ் தேசிய கனவான்களின் இடத்தை கல்வியறிவும் அரசியல் அறிவும் ஜனநாயகப் பண்பும் கைவரப் பெறாத வல்வெட்டித்துறை பொடியன்கள் கைப்பற்றிக் கொள்ளும்போது, தவறிக் கூட இந்த இயக்கங்களின் மீது ஜனநாயகத்தின் வாசனை பட்டுவிடக் கூடாது என்று இந்திய மேலாதிக்கம் அவர்களை பயிற்றுவித்து வளர்க்கும்போது, இந்திய மேலாதிக்கத்தின் பாதுகாப்புக் குடையை எதிர்பார்ப்பதாக ஈழத்தமிழ் சமூகத்திலேயே பொதுக்கருத்து நிலவும்போது- இத்தகையதொரு சமூகப் பின்புலம் பாசிச இயக்கங்களைப் பெற்றெடுப்பது வியப்புக்குரியதல்ல.

இது பாசிசம் தோன்றியதன் தவிர்க்கவியலாமைக்குத் தரப்படும் விளக்கமல்ல. மாறாக புலிகளின் பாசிசத்தை அம்பலப்படுத்தும் முறையில் அதனை அதன் சமூக அடித்தளத்திலிருந்து மென்மேலும் விலக்கிச் சித்தரிப்பதன் மூலம் ஹியூகோ செய்த தவறையே தமிழரங்கம் செய்வதாக எமக்குப் படுகிறது.

‘மாபெரும் ஜனநாயப் பாரம்பரியம்’ கொண்ட ஈழத்தமிழ் சமூகத்தை பாசிசப் படுகுழியில் இழுத்து வீழ்த்திய ‘வில்லன்களாக’  புலிகளை சித்தரிக்கும்போது அவர்கள் சாதனையாளர்களாக்கப்பட்டு விடுகிறார்கள்.

னது கட்டுரையில் ரதியின் நினைவுகளில் இடம்பெறாத புலிகளின் பாசிச நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் காட்டுகிறார் இரயாகரன். இந்த உண்மைகள் தெரியாத காரணத்தினால்தான் ஈழத் தமிழ் மக்கள் பலர் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று இதைப் புரிந்து கொள்ளலாமா?

‘அவ்வாறு இல்லை’ என்பதை தோழர் இரயா தன்னுடைய முந்தைய கட்டுரைகளில் உறுதி செய்கிறார்.

“இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், அரசு மற்றும் புலி ஊடாக, இரண்டுபாசிசத்தையும் நன்று புரிந்து அனுபவித்தவர்கள். இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவனாக நடிப்பவன் பாசிட் தான். அனைவருக்கும் அனைத்தும் இன்று தெரியும். சொந்தங்கள், பந்தங்கள், உறவுகள் இதை அனுபவிக்காத, அதை இன்று அறிந்திராத “அப்பாவி” மனிதம் இன்று எம் சூழலில் கிடையாது.”

19.7.2009 (தமிழரங்கம் பதிவொன்றில் தோழர் இரயா)

புலிகள் இயக்கத்திற்கும் ஈழத்தமிழ் மக்களுக்குமான உறவு எப்படி இருந்தது என்பதை மே 18 அன்று புலித்தலைமை கொல்லப்பட்டதை ஒட்டி இரயா கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“ஆனால் தமிழ் சமூகம் இந்த மரணத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலை தான் எமது நிலையும் கூட. ஏன்?

“தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையும், அதைத் தொடர்ந்து வந்த போராட்டத்தில் புலிகள் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் வலதுசாரிய அரசியல் அடிப்படையில்,தனிமனித சர்வாதிகார அமைப்பை நிறுவியதுடன், அதை முழு சமூகம் மீதும் திணித்தது…”.

“இந்த அடிப்படையில் தான், தமிழ் சமூகத்தை புலியின் பின் நிற்கவைத்தது. இயக்க அழிப்பின் பின், இதற்கு மாற்றாக மக்களை அணிதிரட்டக் கூடிய எந்த மாற்று சக்தியும்,மக்களை அரசியலை முன்வைத்து மக்களுடன் நிற்கவில்லை. மாறாக அவை இலங்கை இந்தியக் கூலிக் குழுக்களாக மாறி, தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கியது.”

“தமிழ் மக்களோ தம் மீதான புலிகளின் ஒடுக்குமுறையை விடவும், அரசுடன் சேர்ந்து நின்று ஒடுக்கியவர்களை வெறுத்தனர். எதிரியுடன் நின்றவர்களை, ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எதிரி பற்றி மக்கள் மதிப்பீடும், புலிகள் மேலான நம்பிக்கையீனங்கள் புலிகளை தனிமைப்படுத்திவிடவில்லை.”

“இதற்கு வெளியில் மாற்று என்று கூறிக்கொண்டவர்கள், எந்த மக்கள் அரசியலையும் முன் வைக்கவில்லை. மாறாக அரசியலற்ற இலக்கியம், மாற்று அரசியல் இன்மை என்று,தனிநபர்களின் சீரழிவுடன் கூடிய கொசிப்பு கோஸ்டியாக மாரடித்தது. உதிரியான தனிநபர்களின் எல்லைக்குள், மக்கள் அரசியல் எஞ்சிக் கிடந்தது.”

“இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் புலிக்கூடாகவே தேசியத்தைப் பார்த்தனர். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைப் பார்த்தனர்…”

“ஒருபுறம் போராடும் புலி, மறுபக்கம் ஒடுக்கும் புலி. இதற்கு ஊடாகவே மக்கள் மத்தியில் புலி பற்றிய நம்பிக்கைகள், பிரமைகள், விரக்திகள், வெறுப்புகள், கோபங்கள் என்று எல்லாமனித உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்பட்டது.”

“புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தாங்களே என்று சொன்னார்கள். இதைவிட வேறு எதுவுமில்லாததால், தமிழ் மக்கள் இவர்கள் ஊடாகவே கடந்த 25 வருடமாக நன்மை தீமை என்று, அனைத்தையும் பார்த்தார்கள்.”

“நாம் இந்த எதார்த்தத்தை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இந்த எதார்த்தத்தின் பின்னால், வால்பிடித்து அங்கீகரித்து செல்ல முடியாதுள்ளது. ஏன்?

18.5.2009 (தமிழரங்கம் பதிவொன்றில் தோழர் இரயா)

வால் பிடித்துச் செல்வது இருக்கட்டும். எது எதார்த்தம் ? 19.07.2009-ஆம் தேதியன்று அவர் எழுதியுள்ள பதிவின்படியும் தற்போது அவர் எழுதி வரும் கட்டுரைகளின் படியும் புலி அபிமானிகள் அனைவரும், புலி பாசிஸ்டுகள்தான் என்பதே அவர் வரையறை.

ஆனால் முல்லைத் தீவு படுகொலை நடைபெற்ற மே 18ஆம் தேதி அன்று “நன்மை, தீமை அனைத்தையும் மக்கள் புலியினூடாகத்தான் பார்த்தார்கள், இதுதான் எதார்த்தம்” என்று எழுதுகிறார் இரயா. மே-18ஆம் தேதி அவர் எழுதியது உண்மை என்றால் இன்று அவர் எழுதி வருவது வறட்டுவாதம். அல்லது இன்று பேசுவதுதான் உண்மை என்றால் மே – 18 அன்று வெளிப்படுத்திய கருத்து கேள்விக்குரியதாகி விடுகிறது.

நன்மை, தீமை அனைத்தையும் புலியின் ஊடாகவே மக்கள் பார்த்தார்கள் என்பதற்கு இரயா கூறும் காரணங்களுடன் வேறு பல காரணங்களும் உண்டு. புலிகள் இந்திய மேலாதிக்கத்துடன் இணங்கிப் போனார்கள், ஒரு எல்லை கடந்த போது அமைதிப்படையை எதிர்க்கவும் செய்தார்கள். இரயா பட்டியலிட்டுக்காட்டும் வகையில் நியாயப்படுத்த முடியாத படுகொலைகளைச் செய்தார்கள். நியாயம் என்று மக்கள் அங்கீகரிக்கும் வகையில் துரோகிகளையும் தண்டித்தார்கள். தங்களது ஒற்றை அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக சிங்கள அரசுடன் சமரசம் செய்து கொண்டார்கள். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புகளை சமரசமின்றி எதிர்க்கவும் செய்தார்கள்.

இது ஒரு முரண்நிலை. படுகொலைகளைப் பட்டியலிட்டுக்காட்டி பாசிசம் என்று நிரூபணம் செய்வதனால் மட்டுமே மக்களை ஏற்கச் செய்ய முடியாத முரண்நிலை.

ஒரு ஈழத்து தோழர் சொன்னார் ”நாங்கள் புலிகளோட பாசிசத்த பத்தி கதைக்கிறோம். சமீபத்தில் வன்னியிலிருந்து அகதியாக வந்த ஒருத்தர் என்ன இருந்தாலும் புலிகள் இருந்த போது இரவு இரண்டு மணிக்கு கூட ஒரு பெண் நடமாட முடியும் என்று சிலாகித்துக் கொள்கிறார். இந்த மக்களுக்கு பாசிசத்தை எப்படி புரிய வைப்பது” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

“ரயில்கள் நேரத்துக்கு வந்தன, அரசு ஊழியர்கள் பயந்து கொண்டு பத்து மணிக்கு வேலைக்கு வந்தார்கள்” என்பன போன்ற காரணங்களைச் சொல்லியே இந்திராவின் அவசர நிலை பாசிசத்தை இங்கே ஆதரித்தவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா?

ஜனநாயகத்தின் வாசனையைக் கூட அனுபவித்திராத பெரும்பான்மையான மக்கள் பாசிசத்தை பற்றி கவலைப்படுவதில்லை. கொலைப்பட்டியல்களால் அவர்களது கருத்தை அசைக்கவும் முடிவதில்லை.

பாபர்மசூதி இடிப்பையொட்டி ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் நடத்திய படுகொலைகளுக்கு பின்னர்தான் டெல்லி அதிகாரத்தை பாரதிய ஜனதாவுக்கு வழங்கினார்கள் பெரும்பான்மை இந்துக்கள். குஜராத் இனப்படுகொலையின் இரத்தம் காயும் முன்னரே கூடுதல் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் மோடி. சிங்களப் பாசிசத்தின் படுகொலை குறித்தும் சிங்கள மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இங்கெல்லாம் பாசிசத்துக்கு வாக்களித்த மக்கள் தெரிந்துதான்வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் தெரியாமல் செய்த அப்பாவிகள் அல்ல. இரயாவின் வரையறைப்படி இந்த மக்கள் அனைவரும் பாசிஸ்டுகளே.

வரையறுப்பதும், பெயர் சூட்டுவதும் பிரச்சினையை தீர்த்து விடுவதில்லை. அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு விடை காணாதவரை அவர்களை பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்கவும் முடியாது.

மனித குலம் காணாத இனப்படுகொலையை நடத்திய ஹிட்லரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த ஜெர்மானிய மக்கள் நேரடியாக அக்குற்றங்களில் பங்கேற்கவில்லை என்றாலும் அக்குற்றங்களை அனுமதித்ததற்கான மூலம் தார்மீக பொறுப்பு ஜெர்மானிய மக்களுக்கு உண்டு என இடித்துரைக்கிறது சிக்மன்ட் பிரீஸ்ட் எழுதிய “நிரபராதிகளின் காலம்” எனும் நாடகம்.

நிரபராதிகள் என்று தம்மை கருதிக் கொண்டிருக்கும் தொழிலாளி, விவசாயி, பேராசிரியர் போன்ற பல்வேறு வர்க்கத் தட்டினரும் தமது தனிப்பட்ட நலன் அல்லது வர்க்க நலனுக்காக சர்வாதிகார ஆட்சிக்கும் அநீதிக்கும் எங்ஙனம் இணங்கிப் போனார்கள் என்பதை இந்த நாடகத்தின் மூலம் விளக்குகிறார் பிரீஸ்ட். ஒருவேளை ‘பாசிச சர்வாதிகாரத்தை தெரிந்தே ஆதரித்தனால் அவர்கள் அனைவரும் பாசிஸ்டுகளே’ என்பது அவரது முடிவாக இருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நாடகத்தை பிரீஸ்ட் எழுதியிருக்கவே முடியாது.

போனபார்ட் ஒரு போக்கிரி என்று தெரிந்திருந்தும் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் அதிகாரத்தை ஏன் அவன் கையில் ஒப்படைத்தது? பாரம்பரியம் மிக்க பிரெஞ்சு மக்கள் ஒரு போக்கிரியால் ஆளப்படுவதற்கு தெரிந்தே தம்மை ஏன் ஒப்படைத்துக் கொண்டார்கள் என்ற கேள்விக்குத்தான் மார்க்ஸ் விடை தேடுகிறார்.

“நான் கவனமில்லாத நேரத்தில் அந்த சாகசக்காரன் என்னை கற்பழித்து விட்டான் என்று சொல்கிற பெண்ணையோ, தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுக்களைக் கொண்டு இந்த புதிரைத் தீர்க்க முடியாது” என்கிறார் மார்க்ஸ். ஒருவேளை “போனபார்ட்டை ஆதரித்தவர்கள் அனைவரும் போனபார்ட்டிஸ்டுகளே” என்று அவர் முடிவு செய்திருந்தால் இந்த புதிருக்கு விடை கிடைத்திருக்குமோ? தெரியவில்லை. ஆனால் வரலாற்று பொருள்முதவாத ஆய்வு முறையை கற்பிக்கும் மார்க்சின் இந்த நூல் நிச்சயம் நமக்கு கிடைத்திருக்காது.

புலி அனுதாபி என்று தன்னை அறிவித்துக் கொண்ட ரதியை பேசவிட்டிருந்தால் அத்தகைய அனுதாபிகளின் அனுதாபங்கள் எந்த அடித்தளத்திலிருந்து பிறந்து வருகின்றன என்பதை ஒருவேளை நாம் புரிந்து கொண்டிருக்க இயலும். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஜனநாயகத்தின் இன்றியமையாமையை இத்தகைய அனுதாபிகளுக்கு எப்படி புரியவைப்பது என்பதையும் ஒரு விவாதத்தினூடாக நாம் கற்றுக் கொண்டிருக்கவும் கூடும். புலிகளின் மீது இத்தகையோர் அனுதாபம் கொள்ள காரணமாக இருப்பது எது, அவர்களது வீரமா, இராணுவத் திறனா, அர்ப்பணிப்பா, அவர்களைத் தவிர யாருமில்லை என்ற ‘எதார்த்தமா’ அல்லது அவர்களது ஒழுக்கம் கட்டுப்பாடு குறித்த பிரமிப்பா, இவற்றுக்கு அப்பாற்பட்ட வேறு காரணங்களா என்பதை அறிந்து கொண்டிருக்க முடியும்.

இதைத்தான் “நீங்கள் புலிகளுடன் போய் அவர்களைத் திருத்த முனைகிறீர்கள், நான் அதை எதிர்த்து முறியடிக்க முயல்கிறேன்” என்று கூறி விமரிசிக்கிறார் இரயாகரன்.

எந்த ஒரு பிரச்சினையிலும் நிலைப்பாடு மாறாமல் இருக்கும் போதே அந்த நிலைப்பாட்டை கொண்டு செல்கிற அணுகுமுறை மாறக்கூடும்; காலம், இடம், சூழல், போன்ற பல காரணிகள் இந்த அணுகுமுறை மாற்றத்தை அவசியமாக்குகின்றன. பார்ப்பன பாசிசத்திற்கெதிராக நாம் தமிழகத்தில் பேசுகின்ற மொழியை, தொனியை குஜராத்தில் பயன்படுத்த முடியாது. பெரும்பான்மையான மக்கள் இந்து பாசிசத்திற்கு ஆட்பட்டிருக்கும் அந்த சூழலை கணக்கில் கொண்டு அதற்கு தகவமையத்தான் பேசவேண்டியிருக்கும்.

தீண்டாமையை நாம் கடுமையாக சாடுகிறோம், எனினும் ஒரு சாதிக்கலவரச் சூழலில் ஆதிக்கசாதி பெரும்பான்மையினர் தலித் மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் கிராமத்தில் ஆதிக்கச் சாதியினரின் சாதிவெறியை கண்டிக்கும் போது கொஞ்சம் கவனமாகத்தான் பேச வேண்டியிருக்கும். இரயாவின் மொழியில் கூறுவதானால் இதனை ‘உடன் சென்று திருத்துவது’ என்று கூட மொழிபெயர்க்கலாம்.

தலித் விடுதலை பற்றி சவடாலாக எழுதும் தலித் அறிவுஜீவிகள் சிறு பத்திரிகைகளில் பொறி பறக்கத்தான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு போதும் களத்திற்கு செல்வதில்லை. அணுகுமுறையில் தேவைப்படும் இந்த நெளிவுசுளிவுகளை மக்களைத் திரட்டும் நடைமுறையிலுள்ள தோழர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

கொள்கையை கைவிட்டு விட்டதாக இதைத்தான் சொல்கிறார் தோழர் இரயாகரன்.

முத்துக்குமார் தீக்குளிப்பு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். தீக்குளிப்பு என்பது தமிழக அரசியலில் நெடுங்காலமாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. ஆனால் புலி ஆதரவாளராக இருப்பதால்தான் புலியிசத்தின் மக்களைச் சாராத சுய அழிவுப் பாதையை முத்துக் குமார் தேர்ந்தெடுத்தார் என இதனை வியாக்கியானம் செய்கிறார் இரயாகரன் எல்லாவற்றையும் புலிக்கூடாகத்தான் அவரால் பார்க்க முடிகிறது.

தற்கொலை ஒரு போராட்ட முறை அல்ல எனினும் கேட்பாரற்று இன அழிப்பு போரை சிங்கள அரசு நட்தி வந்த சூழலில், அதற்கு இந்திய அரசு வெளிப்படையாக துணை நின்ற போதிலும் தமிழகத்தில் போராட்டங்கள் அடங்கி மௌனம் கவிந்திருந்த சூழலில் நடக்கிறது முத்துக்குமாரின் தீக்குளிப்பு. இந்த மௌனத்தை கலைக்கவும், மக்கள் எழுச்சியை உருவாக்கவும் தனது மரணத்தை பயன்படுத்துமாறு கூறுகிறார் முத்துக்குமார். எனவேதான் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்பதை மையப்படுத்தி இதில் நாம் பங்குபெற்றோம். இதனை “தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஓடுவது, வைகோவுடன் சேர்ந்து நடப்பது போல பாசாங்கு செய்வது” என விமரிசிக்கிறார் இராயகரன்.

வேடிக்கைதான்!

“நீங்கள்தான் புலி எதிர்ப்பாளர்களாயிற்றே உங்களுக்கு முத்துக்குமார் ஊர்வலத்தில் என்ன வேலை தமிழின வேடம் போட்டு ஆள்பிடிக்க வருகிறீர்களா” என்று குமுறினார்கள் தமிழகத்தின் இனவாதிகள்.வலப்புறத்தில் நின்று அவர்கள் எழுப்பிய அதே கேள்வியைத்தான் இடப்புறத்தில் நின்று எழுப்புகிறார் இரயா.

ஏன் வந்தாய் என்று கேட்கிறார்கள் இனவாதிகள். என் போனாய் என்று கேட்கிறார் இரயா.

போனதுதான் போனீர்கள், முத்துக்குமார் கடிதத்தை பற்றிய உங்கள் விமரிசனம் என்ன, ஏன் புலிப்பாசிசத்திற்கெதிராக அங்கே குரல் கொடுக்கவில்லை என்று கேள்விகளை அடுக்குகிறார்.

முத்துக்குமாரின் மரணம் தெரிவித்த செய்திகள் மூன்று. இன அழிப்பு போரை நிறுத்துவது, இந்திய மேலாதிக்க தலையீட்டை தடுப்பது, இதன் பொருட்டு மக்கள் எழுச்சியை உருவாக்குவது. இந்த செய்திகள்தான் தன்னெழுச்சியான பல போராட்டங்களை தமிழகமெங்கும் உருவாக்கின. உயிரோடு இருந்த போது முத்துக்குமார் எழுதித் தயாரித்த கடித்த்தில் காணப்பட்ட குழப்பங்களும் அரசியல் பிரமைகளும் அவரது தீக்குளிப்பில் எரிந்து விட்டன. வழங்க வேண்டிய செய்தியை அவரது மரணம் வழங்கியது. இதுதான் அந்த கிளர்ச்சிகரமான சூழலின் அரசியல் எதார்த்தம்.

ணாதிக்க கொடுங்கோன்மையின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்தேனே, உன் அடி உதைகளை சகித்துக் கொண்டேனே, சொன்னபடி சீர் செனத்திகளை கொண்டு வந்தேனே, அதற்குப் பிறகுமா இந்த கொடுமை” என்று கடிதம் எழுதி வைத்து சாகக்கூடும். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை ஆராய்வதா அல்லது அந்த மரணத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதா, எது முதன்மையானது? ஒரு வேளை அக்கடித்த்தின் பிற்போக்குத்தனங்களை கண்டிக்கத் தவறினால் அதுவும் கொள்கை பிறழ்வுதானோ?

மறுகாலனியக் கொள்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்படும் ஒரு விவசாயி தன் துன்பத்தை சனிப்பெயர்ச்சியின் விளைவு என்று கூட புரிந்து கொண்டிருக்கலாம். குஜராத் படுகொலையில் தன் பிள்ளையை இழந்த முஸ்லீம் தாய் ‘பக்கத்து வீட்டு இந்து அடைக்கலம் தந்திருந்தால் இந்த வெறியிலிருந்து தப்பியிருக்கலாம்’ என்றும் கருதிக் கொள்ளலாம். சமூக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இயலாத மக்களுக்கு அவற்றை விளங்கச் செய்வதுதான் நம் பணியே அன்றி, அவர்களுடைய புரிதலை சோதனைக்கு உட்படுத்தி ‘சான்றிதழ்’ வழங்குவதல்ல

இன அழிப்பு போரின் இறுதிக் காலங்களில் நடத்திய போராட்டங்களின் போது ‘புலிப் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி ஒரு மாற்றுப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் ம.க.இ.க, தமிழினவாதிகளுடன் இணங்கிச் சென்று அவர்களை வென்றெடுக்க முயன்றது.” என்பது ரயாவின் விமரிசனம். தமிழினவாதிகளுடன் நாம் இணங்கிச் சென்றோமாம். இப்படி ஒரு கௌரவம் நமக்கு வழங்கப்படுவதை கேள்விப்பட்டால் தமிழகத்தின் இனவாதிகள் அனலில் இட்ட புழுவாய் துடித்து விடுவார்கள். அது ஒரு புறமிருக்கட்டும்.

இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிப்பாசிசத்தையும் விமரிசித்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்பது சரியா?

மிழினவாதிகளை வென்றெடுக்கும் நோக்கத்தை மனதிற் கொண்டிருந்ததனால்தான் நாம் புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்தவில்லை என்று இதற்கொரு காரணத்தை அவரே கற்பித்துக் கொள்கிறார்.

சிங்களப் பாசிச அரசு நடத்திய இன அழிப்புப் போர், அதனுடன் கைகோர்த்து களத்தில் நின்ற இந்திய மேலாதிக்கம், ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே நமது போராட்டங்கள் அமைந்திருந்தன. ‘புலிகளை அம்பலப்படுத்தியும் நாம் போராடவில்லை’ என்பது உண்மைதான். தமிழினவாதிகளை வென்றெடுக்கும் நோக்கத்தில்தான் நாம் அவ்வாறு நடந்து கொண்டோம் என்று இதனை விளங்கிக் கொள்வது எம்மைக் கொச்சைப்படுத்துவதாகும்.

அந்த இன அழிப்புப் போரை திட்டமிட்டுக் கொடுத்து உடன் நின்று நடத்திக் கொண்டிருந்தது இந்திய மேலாதிக்க அரசு. ஆக்கிரமிப்பு நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் அதனை எதிர்த்துப் போராடுவதுதான் எம்முதற் கடமையாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் புலிகளும், புலி ஆதரவாளர்களும் இந்திய மேலாதிக்கத்தை தாஜா செய்ய முனைந்த போதெல்லாம் (அன்னை சோனியாவின் கருணைக்கும், கலைஞரின் கருணைக்கும் நெடுமாறன் வேண்டுகோள் விடுத்த கிளிநொச்சி தாக்குதலின் காலம் முதல் ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்ட முல்லைத்தீவு இறுதிப்போர் காலம் வரை) அதனை கடுமையாக அம்பலப்படுத்தி இந்திய மேலாதிக்கப் போர்வெறியை ஈழப் போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தவர்கள் நாங்கள்தான்.

“எப்படியாவது போரை மட்டும் நிறுத்தினால் போதும்” என்ற உடனடிக் கோரிக்கையை மனதிற்கொண்டு நெடுமாறன் போன்றோர் ” மனிதாபிமானம், அப்பாவி மக்கள் ” என்ற அரசியலற்ற முழக்கங்களை முன்நிறுத்திய போது சுய நிர்ணய உரிமை முழக்கத்தை முன்னிறுத்தி அவற்றை அம்பலப்படுத்தினோம்.

எனினும் இவையெதுவும் புலிகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளாக தோழர் இரயாகரனுக்கு தோன்றவில்லை. மாறாக சிங்களப் பாசிசத்தை எதிர்த்ததைப் போலவே புலிப்பாசிசத்தையும் அதன் மனித உரிமை மீறல்களையும் ஏன் எதிர்க்கவில்லை என்பதே இரயாவின் கேள்வி. அவ்வாறு செய்ய முடியாது, செய்யக்கூடாது என்பதால்தான் செய்யவில்லை என்பதே இதற்கு நாம் அளிக்கும் பதில்.

டந்து கொண்டிருந்த போரை எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதில்தான் இந்த கருத்து முரண்பாட்டின் சாரம் அடங்கியிருக்கிறது. புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையிலான போரின் துணை விளைவாக தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது ஒரு இனப்படுகொலையின் அங்கமாக புலிகளின் மீதான இந்த இறுதிப் போர் நடத்தப்பட்டதா? இரண்டில் எது இந்த இறுதிப்போரின் சாரம்?

இந்த ‘துணை விளைவு’ கொள்கையைத்தான் சிங்கள அரசு, இந்திய அரசு, ஜெயலலிதா முதல் இந்துராம் முதலான இந்திய பத்திரிகையாளர்கள் வரை பிரச்சாரம் செய்தனர். இதனை ஏற்கும் பட்சத்தில் சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போரில் சிக்கிக் கொண்ட மூன்றாம் தரப்பாக ஈழத்தமிழ் மக்கள் மாறிவிடுகின்றனர். புலிகள் மக்களை அணிதிரட்டவில்லை, அவர்கள் கருத்துக்கு செவிமடுக்கவில்லை, அவர்களைக் கட்டாயப்படுத்தி கவசமாகப் பயன்படுத்தினார்கள் என்ற விமரிசனங்களை எல்லாம் அட்டியின்றி அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் இந்தப் போரின் சாரம் என்பது சிங்கப் பாசிச அரசின் இன அழிப்புப் போர்தான் என்ற உண்மை மாறிவிடுகிறதா? ஆம் என்றால் இன்று புலிகளின் தோல்விக்குப்பின் 3 இலட்சம் மக்கள வதை முகாமில் துன்புறுத்தப்படுவது ஏன்?

அந்த நாட்களில் புலிப்பாசிசத்தையும் விமரிசித்துப் போராடியிருந்தால் தமிழகத்தின் தமிழினவாதிகளில் முற்போக்கான பிரிவினரை மட்டுமின்றி, புலிப்பாசிசத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள சிங்கள் பெரும்பான்மையினரையும் வென்றெடுத்திருக்க முடியும் என்று கூறுகிறார் இரயாகரன்.

சிங்களப் பெரும்பான்மையின் மனோபாவம் பற்றிய இரயாவின் கருத்தும் தவறாகவே இருக்கிறது. குஜராத் இனப்படுகொலைகளுக்கும், இந்துபாசிசத்துக்கும் எதிராக இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்திலிருந்து எழுந்திருக்கும் எதிர்ப்புகளை ஒப்பிடும் அளவிற்காவது அங்கே ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். அல்லது இன்று புலிகளின் தோல்விக்குப் பின்னர் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களப்பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியிலிருந்து போராட்டம் எழுந்துள்ளனவா?

இரயா முன்வைத்த வழியில் நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் சிங்கள மக்களை வென்றெடுக்கிறோமா இல்லையோ, உத்திரவாதமாக தமிழக மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்போம்.

புலிப்பாசிசத்தை குறித்து நாம் கண்டும் காணாது போக்கை கடைபிடிக்கிறோம் என்ற அவரது விமரிசனம் எந்திர வகைப்பட்ட வறட்டுவாதமான பார்வையிலிருந்து வருவதாகவே கருதுகிறோம்.

புலிகளின் பாசிசத்தை தமிழகத்தில் முதன் முதலில் நாம்தான் விமரிசித்திருந்தோம். அவர்கள் மட்டுமின்றி பிற இயங்கங்களும் இந்திய மேலாதிக்கத்தின் தயவில் ‘விடுதலை’க்கு முயற்சிப்பதை விமரிசித்தோம். பிறகு அமைதிப்படையை புலிகள் எதிர்த்து நின்ற போது அவர்களை ஆதரித்தோம். ராஜீவ் கொலையின்போது தமிழகத்தின் புலி ஆதரவாளர்கள் பதுங்கிக் கொண்டார்கள். தனிநபர் கொலை என்பது ஒரு அரசியல் போராட்டம் அல்ல என்ற போதிலும், அந்த விமரிசனத்தை நாங்கள் முதன்மைப்படுத்தவில்லை. மாறாக ராஜிவ் கொலையின் நியாயத்தை தமிழகத்தில் பிரச்சாரம் செய்தோம். வழக்குகளையும், சிறைகளையும் எதிர்கொண்டோம்.

“பு.க, பு.ஜ நிருபர்கள்தான் இந்தக் கொலையை செய்திருப்பர்” என்று கிட்டு அறிக்கை விட்டார். அதனை சாக்கிட்டு அரசு எம்மீது மேலும் அடக்குமுறையை ஏவியது. எனினும் அதனைக் கண்டித்தோமேயன்றி கிட்டுவின் அறிக்கை தோற்றுவித்த ‘கோபம்’ எங்கள் கொள்கைகளை வழிநடத்தவில்லை.

சட்டவிரோதமாக இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு கிட்டு சயனைடு விழுங்கினார். பிறர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்திய மேலாதிக்கத்தை கண்டித்தோமேயன்றி புலிகளின் பாசிச போக்குகளை இணையாக விமரிசிக்கவில்லை. புலிகள் ஜனநாயக சக்திகளை கொன்றபோது அதனைக் கண்டித்தும், இ.பி.ஆர்.எல்.எஃப் போன்ற சதிகாரர்களையும், துரோகிகளையும் கொன்றபோது அதன் நியாயத்துக்குப் பரிந்து பேசினோம்.

யாழ் கோட்டை முற்றுகையை புலிகள் விலக்கிக்கொள்ளக்  கோரி இந்திய மேலாதிக்கத்தின் சார்பில் இங்குள்ள புலி ஆதரவாளர்கள் புரோக்கர் வேலை செய்தபோது இவர்களைத்தான் கண்டித்தோம். சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் மறுகாலனியாக்கத்துக்கு புலிகள் உடன்பட்டபோது அவர்களை விமரிசித்தோம். நீண்டகாலம் நீடித்த ஈழப்போரின் இழுபறி நிலைமை அரசியல் சூழல்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை விளக்கி புலிகளின் இராணுவாதப் பார்வையை விமரிசித்தோம். இலங்கை அரசின் வெறிகொண்ட பவுத்த சிங்கள வெறியை கண்டித்தோம்.

சிங்கள அரசையோ, இந்தியாவையோ எதிர்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளையும் விமரிசிக்க வேண்டும் என்ற பார்வை எந்திரத்தனமானது.

ம்.ஆர்.ராதா எங்கேயோ சொன்ன சம்பவமொன்று இங்கே நினைவுக்கு வருகிறது. மேடை நாடகம் ஒன்றில் கணவனாக நடித்தவர், மனைவியாக நடித்தவரின் முகத்தை மட்டுமே பார்த்துப் பேசிக்கொண்டிருந்ததும் “ரசிகர்கள் பக்கம் முகத்தையே திருப்பாமல் இப்படிப் பேசிக்கொண்டிருப்பது தவறு. மனைவியைப் பார்த்து ஒரு வரி பேசினால் ரசிகர்கள் பக்கம் திரும்பி இன்னொரு வரியைப் பேசு” என்று சொல்லிக் கொடுத்தாராம் ராதா. உபதேசத்தைக் கொச்சையாக பற்றிக் கொண்டார் அந்த நடிகர். அடுத்த நாடகத்தில் ராமனாக நடிக்கும் போது ஒரு அம்பை இராவணனை நோக்கியும், அடுத்த அம்பை ஆடியன்சை நோக்கியும் எய்தாராம்.வசனத்தின் எந்த இடத்தில் சக நடிகரைப் பார்க்க வேண்டும், எப்போது ரசிகர்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்பதைப் புரிந்திருப்பது ஒரு கலை. அனுபவம்தான் அதனை கிரகித்துக் கொள்வதற்கு ஒரு நடிகனைப் பயிற்றுவிக்கிறது.

‘நிலைப்பாடுகள்’ மார்க்சிய அறிவியலின் துணை கொண்டு எடுக்கப்படுகின்றன. அந்த நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அணுகுமுறையிலோ அறிவியலும் கலையும் கலந்து இருக்கின்றன. இதை நடைமுறைதான் கற்றுத்தருகிறது. எந்திரவியல் பார்வை மக்களிடமிருந்து நம்மை தனிமைப் படுத்துவது மட்டுமின்றி தவறான கோட்பாட்டு முடிவுகளை மேற்கொள்வதை நோக்கியும் நம்மை பிடித்துத் தள்ளுகிறது.

தி தொடர்பான விவாதத்தில் “இந்துக்களின் அவலத்தைச் சொல்லி பாசிசத்தை கடை விரிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் ஐயும் அனுமதிப்பீர்களா” என்று வினவு தளத்திற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் இராயகரன். ஆர்.எஸ்.எஸூம் பாசிசம், புலியும் பாசிசம், தாலிபானும் பாசிசம், ஹிட்லரும் பாசிசம், எனவே ‘புலிகள் = தாலிபான் = நாஜி’ என்பதுதான் அவரது புரிதல் என்றால் வருந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. வரலாறும் சமூக இயக்கமும் அதனை விளங்கிக் கொள்ளும் கருவியான பொருள்முதல்வாதமும் இத்தனை எளிய சூத்திரங்களால் ஆளப்படுபவையாக இருந்தால், மார்க்சியமும் ஒரு வாய்ப்பாடாகவே நமக்கு அறிமுகமாயிருக்கும். அவ்வாறு இல்லையே!

நாசிசமும், ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவமும் ஒப்பிட்டுக் கூறத்தக்க வகைமாதிரிகள். தாலிபான்களோ அமெரிக்காவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இந்நாளில் அதற்கெதிராக திரும்பிய ஒரு புதிய வகை. சிங்கள பாசிசம் என்பது பேரினவாத்த்தின் பாசிசம். புலிகளின் பாசிசம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்ப்பதனூடாக வளர்ந்த பாசிசம். இவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை புறந்தள்ளி ‘பாசிசம் என்றால் எல்லாமே பாசிசம்தான்’ என்ற அணுகுமுறைதான் இரயாவின் வாதங்களில் மேலோங்கியிருக்கிறது.

மராட்டியத்தின் பேஷ்வா ஆட்சியால் ஒடுக்கப்பட்ட மகர் சாதி மக்கள் (தலித்) பிரிட்டிஷ் படையில் சிப்பாய்களாயினர். பின்னாளில் பேஷ்வாக்கள் மீது பிரிட்டிஷார் போர் தொடுத்தபோது அதனை தம் சொந்தப் போராகவே கருதி வரலாற்று பழியை தீர்த்துக்கொண்டார்கள் மகர் சிப்பாய்கள். எட்டப்பனும் துரோகி , மகர்களும் துரோகிகள் என யாரேனும் வரையறுத்துவிட முடியுமா?

புலிகளின் பாசிசம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து போராட்டத்தினூடாக வளர்ந்திருக்கும் பாசிசம். “ஒரு புறம் போராடும் புலி, இன்னொரு புறம் ஒடுக்கும் புலி” என்று இரயா கூறுகிறாரே அதுவேதான். மக்கள் மீது ஆதிக்கம் செய்யும் இந்தவகைப்பாசிச போக்குகள் மிகவும் சிக்கலானவை. தன் உயிரை மாய்த்துக் கொள்ள தயாராக இருப்பதன் காரணமாகவே, அடுத்தவன் உயிரைப் பறிக்கும் தார்மீக தைரியத்தைப் பெற்று விடுகிறது இந்த பாசிசத்தின் உளவியல். இதே காரணத்தினால் பெரும் மக்கள் பகுதியினரின் அங்கீகாரத்தையும் அனுதாபத்தையும் இது பெறமுடிகிறது. களத்தில் நிற்காதவர்களின் ‘குற்ற உணர்வு’ களத்தில் நிற்போரின் பாசிச மனோபாவத்திற்கு ஊட்டம் தருகிறது. ஏற்கனவே ஜனநாயக கலாச்சாரம் நிலவாத ஒரு சமூகத்தில் இது கூடுதல் வலிமை பெறுவதொன்றும் வியப்பிற்குரியதல்ல.

இன்றோ புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது புலிகளின் தோல்வியாக மட்டுமில்லை. ஈழத்தமிழினத்தின் தோல்வியாகவே மாறி மக்களை கூனிக்குறுகச் செய்திருக்கிறது. இதையே இரயாவின் மே 18 பதிவும் கூறுகிறது.

ஒரு காமவெறியனால் ஊரறிய வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, அந்த காமவெறியன் கம்பீரமாக உலா வருவதை காணமுடியாமல், கண்ணை மூடவும் முடியாமல் தவிக்கும் பெண் உள்ளத்துடன் சிங்கள பாசிசத்தால் நசுக்கப்படும் ஈழத்தமிழ் சமூகத்தின் இன்றைய மனநிலையை ஒப்பிடலாம் என எமக்குத் தோன்றுகிறது. சுய நிர்ணய உரிமை என்ற பேச்செல்லாம் பின்னுக்குச் சென்று, குறைந்தபட்ச மனித கௌரவத்தை பெறுவதற்கே உலகநாடுகளிடம் யாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக் கிறார்கள் வன்னி மக்கள்.

“விடுதலைப் போராட்டத்தை இத்தகைய படுபாதாளத்தில் தள்ளிய புலி பாசிசத்தை சித்தாந்த ரீதியாக கணக்கு தீர்த்தாலன்றி பேரினவாதத்திற்கெதிரான போராட்டம் ஒரு அடி கூட முன்னேற முடியாது” என்கிறார் இரயாகரன். ரதியின் பதிவுகளைப்படித்த உடனே கடந்த காலத்தை இரயாவின் கண்முன் விரித்துக்காட்டுகிறது அவரது இந்தக் கண்ணோட்டம். நிகழ்காலத்தை பார்வையிலிருந்து மறைக்கின்ற அளவுக்கான கோபாவேசத்தை அவருக்கு இது ஏற்படுத்துகிறது. இதன் விளைவுதான் வினவைப் பற்றிய அவரது தொடர்  கட்டுரைகள்.

“ஆயின், அடுத்த கட்டம் நோக்கி நகருவதற்கு இரயா முன்வைக்கும் பாதையும் தவறா?” என்று வாசகர்கள் கேட்கக்கூடும். ஈழத்தில் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதற்கான பொறுப்பில் எங்களை நாங்கள் நியமித்துக் கொள்ளவில்லை. அது அந்த நாட்டு மக்களும் தோழர்களும் தீர்மானிக்க வேண்டிய விசயம் என்று கூறி விலகி நிற்பதே பொறுப்புணர்ச்சி என்று நாங்கள் கருதுகிறோம்.

ழப்போராட்டத்திற்கும் தமிழக அரசியலுக்குமான உறவு, இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் ஆகியவற்றின் காரணமாகத்தான் நாங்கள் இதுவரை பேசியதை பேச நேர்ந்தது. ரதியின் நினைவுகளை வெளியிடுவது என்ற முடிவை மேற்கொண்டதற்கான காரணமும் இதுதான். ரதியைக் கோரியது போலவே   தெக்கானிடமும் (Tecan) நாங்கள் எழுதக் கோரினோம். வினவு புலிகளை விமரிசிக்கும் தளம் என்று தெரிந்திருந்த போதிலும், புலிகள் பிரச்சினை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவின் வாசகர்களுக்கும் ரதிக்கும் இடையில் விவாதங்கள் நடைபெற்றிருந்த போதிலும் ரதி எழுத முன்வந்தார். தெக்கான் எழுத முன்வரவில்லை. இன்று வினவை பாசிசத்தின் தளமென்று அவர்தான் தூற்றுகிறார்.

இணையம் என்பது புதிய ஊடகம். ஒரு அமைப்பின் பத்திரிகை, பொதுக்கூட்ட மேடை, அவ்வமைப்பின் ஆதரவாளர்கள் நடத்தும் இணையதளம் ஆகியவை தத்தம் வரம்பிலும் வீச்சிலும் விளைவிலும் சாத்தியங்களிலும் வேறுபட்டவை என்றே கருதுகிறோம். விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கின்ற இந்த மேடையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் தமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அதன்வழியே எதிர்காலத்தையும் புரிந்து கொள்வதற்கான புதிய வெளிச்சங்கள் கிடைக்குமென நம்பினோம். குறிப்பாக ரதியின் தொடர் சிங்கள பாசிசத்தைப் பற்றியும் ஈழ அகதிகளின் அவல வாழ்க்கை பற்றியும் உயிருள்ளதொரு சித்திரத்தை தமிழக வாசகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்த்தோம். புலி எதிர்ப்பாளர்களான வித்தகன், ஆர்.வி மற்றும் தோழர்களுடைய பின்னூட்டங்கள் எமது எதிர்பார்ப்பை மெய்ப்பித்தன.

ரதி ஒரு அகதிப்பெண். அவர் இர்ஃபான் ஹபீபோ, ரோமில்லா தாப்பரோ அல்ல. எனினும் அவர் வரலாற்றாசிரியர் ஆக்கப்பட்டுவிட்டார். “அகதிப்பெண்ணின் நினைவுகள் என்ற போர்வையில் வரலாற்றை திரிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பலாம். எதன் மூலமும் எதையும் செய்யலாம். ஆனால் அது அவ்வாறுதான் நடக்கிறதா, எழுத்தாளரின் நோக்கம் அதுதானா என்பதை எழுத்தின் முழுமையிலிருந்து பரிசீலீக்க வேண்டும். ஒருவேளை எழுத்துக்கு ‘வெளியே’ சம்பந்தப்பட்ட எழுத்தாளரே பல பேரின் தலையை தன் சொந்தக்கையால் அறுத்துக் கொன்ற பாசிஸ்ட் என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் தரப்பட்டிருந்தால் அதை நாங்கள் பரிசீலித்திருப்போம்.

மாறாக ஒரு பாசிஸ்ட்டுக்கு வினவு தளம் மேடை அமைத்துக் கொடுக்கிறது. உடனுக்குடன் மறுத்து எதிர்வினையாற்றாமல் பாசிசத்துக்கு துணை நிற்கிறது. இதன்மூலம் பாசிசத்துக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஒருபொதுவுடைமைத்தளமே ஊறு விளைவிக்கிறது – என்ற வகையிலான விமரிசனங்களையே இரயாவும் வேறு சில தோழர்களும் முன்வைத்தனர்.

ரதியின் தொடரில் எமக்கு அவசியம் என்றுபட்ட இடத்தில் தலையிட்டு கருத்துக் கூறினோம். வாசகர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு கண்காணிப்பாளனின் (ombudsman) பாத்திரத்தை வினவு ஆற்றவேண்டுமென்றோ நீதிபதியின் பாத்திரத்தை ஆற்றவேண்டுமென்றோ யாரேனும் எதிர்பார்த்தால் தயவு செய்து உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் புரிந்து கொண்ட அளவில் மார்க்சிய பார்வையைப் பிரயோகித்து நாங்கள் எழுதுகிறோம், விமரிசிக்கிறோம். மார்க்சியப் பார்வையின் அறுதித் தீர்ப்பாயமாக எம்மை நாங்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. வாசகர்கள் உருவாக்கிக் கொள்ளும் அபிப்ராயங்களை நிறைவு செய்யும் வகையிலான பதவிகளையும் நாங்கள் வகிக்க இயலாது.

நாங்கள் வாசகர்களை, அதாவது மக்களை நம்புகிறோம். பல்வேறு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்க ளினூடாக உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த ஊடகம் வழங்குவதால் அதன் சாத்தியத்தை பயன்படுத்த விழைகிறோம். இந்தக் கண்ணோட்டத்தில்தான் எமது கட்டுரைகள் சிலவற்றை சாதிவெறியர்கள், மதவெறியர்கள், அமெரிக்க அடிவருடிகள் உள்ளிட்ட பலரும் எழுதிய பின்னூட்டங்களுடன் சேர்த்து அப்படியே அச்சிட்டு நூலாகவும் கொண்டு வந்திருக்கிறோம். அந்த விவாதங்களைப் படித்து சொந்த மூளையைப் பயன்படுத்தி சிந்திக்கும் சமூக அக்கறையுள்ள வாசகர்கள் சரியான முடிவை வந்தடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தவறான முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும் “வாழ்க்கை என்பதை நாற்புறமும் வேலியிடப்பட்ட பாதுகாப்பிடமாக பராமரிக்க இயலாது” என்று நாங்கள்புரிந்து கொண்டிருக்கிறோம்.

புரட்சிக்கு முந்தைய ரசியாவின் சோவியத்துக்களைப்பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கக்கூடும். அப்போது சோவியத்துக்களில் சிறுபான்மையினராகத்தான் இருந்தனர் போல்ஷ்விக்குகள். தொழிலாளிகள் நிரம்பிய சோவியத் கூட்ட அரங்குகளில் மென்ஷ்விக்குகள், நரோத்னிக்குகள், சோசலிஸ்டு புரட்சியாளர்கள் போன்ற பல தரப்பு பிரதிநிதிகளுடன் மேடையில் நடந்த வாத பிரதிவாதங்களில் தமது தரப்பை நிலைநாட்டி தொழிலாளி வர்க்க்தை தம் பக்கம் வென்றெடுத்தார்கள் போல்ஷ்விக்குகள். எனினும் புரட்சி என்பது கருத்தை கருத்தால் வெல்லும் பட்டிமன்றம் அல்ல. ரசிய தொழிலாளர்களையும், விவசாயிகளையும் புரட்சி எனும் நடைமுறையில் ஈடுபடுத்தியதன்மூலம் போல்ஷ்விக் கருத்துக்களின் நியாயத்தை மக்கள் தம் சொந்த அனுபவத்தில் புரிந்து கொள்ளச் செய்தார் தோழர் லெனின். மக்களை அரசியல் படுத்தும் இந்த இயங்கியலை சரியாக புரிந்து கொண்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

ந்த விவாதம் பாசிசத்திற்கு எதிரான தமது போராட்டத்தை குதறுகிறது” என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார் சிறீ என்ற ஈழத்தமிழ் தோழர். இவ்விவாதம் பொது அரங்கில் நிகழ்த்தப்படுவது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை என்ற போதிலும் சில விளைவுகளை உத்தேசித்து தயக்கம் இருந்தது. எங்கள் விருப்பத்தை மீறித்தான் நாங்கள் பொது அரங்கிற்கு இழுத்து வரப்பட்டோம். வினவு தளத்தின் தகைமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டு நாங்களே கூண்டிலேற்றப்பட்டுள்ள நிலையில் பின்னூட்டங்களையோ விவாதங்களையோ மட்டறுப்பது எங்களது பாரபட்சமின்மையையும் கேள்விக்குள்ளாக்கி விடும் என நாங்கள் அஞ்சியதால் விலகி நின்றோம்.

வேதனையின் பிற பரிமாணங்களையும் தோழர் சிறீ புரிந்து கொள்ள வேண்டுமென கோருகிறோம். புலிகளின் பாசிசத்தை விமரிசிப்பது என்பது ஈழத்தமிழர்களுக்குதான் கடுமையான பணியென்றும் தமிழகத்தில் அது எளிது என்றும் அவர் எண்ணுவாராகில் அது தவறு. இவ்விசயத்தில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாகத்தான் தமிழகத்தில் நாங்கள் எதிர்நீச்சல் போடுகிறோம். இங்கே எந்த மார்க்சிய லெனினிய இயக்கமும்  கூட புலிகளை விமரிசிப்பதில்லை. இனவாதிகள் நிரம்பிய அரங்குகளின் மேடைகளில் எமது தோழர்கள் தூற்றப்பட்டிருக்கிறார்கள், பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்டிருக்கிறார்கள், பத்திரிகைகள் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன.

” களத்தில் நின்று உயிர் விடும் புலிகளையா விமரிசிக்கிறாய்?” என்பதுதான் இங்கிருக்கும் ஒரு சராசரி புலி அனுதாபியின் கோபம். அவரது மன உணர்வை நாங்கள் புரிந்து கொண்ட காரணத்தினால், அவரை ஒரு பாசிஸ்ட் என்று புரிந்து கொள்ளாத காரணத்தினால் பொறுமையாக போராடினோம், போராடுகிறோம், வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

மறுபுறம் இந்திய அரசுக்கெதிராக புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஆதரவாக நாங்கள் போராடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், ராஜத்துரோகம் முதலான கொடும் குற்ற வழக்குகளில் நூற்றுக்கணக்கான தோழர்கள் சிறை சென்றிருக்கின்றார்கள். இது துன்பங்கள் குறித்த ஒப்பீடல்ல. ஆனால் எமது போராட்டத்துக்கும் ஒரு வலி உண்டு; அது தோற்றுவிக்கும் உணர்ச்சியும் உண்டு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு விசயங்களில் ஒத்த நிலைப்பாடு கொண்டிருக்கும் தோழர்களிடையே (தோழர் ரயாகரன் – ம.க.இ.க ஆதரவாளர்களின் வினவு தளம்) இப்படி ஒரு கருத்து முரண்பாடு வரலாமா என்று சிலர் அங்கலாய்க்கின்றார்கள், வருந்துகிறார்கள் அல்லது ஆச்சர்யப்படுகிறார்கள். நடப்பது இரு ஆளுமைகளுக்கு (நபர்களுக்கு) இடையிலான முரண்பாடு என்று கூட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலைப்பாடுகளில் ஒற்றுமை என்பது ஒரு மேம்போக்கான ஒற்றுமை மட்டுமே. அந்த நிலைப்பாடுகளை வந்தடைவதற்கான ஆய்வுமுறைகளிலும் அது தோற்றுவிக்கும் புரிதலிலும் வேறுபாடு இருக்கிறது என்ற விசயம், குறிப்பிட்ட கோட்பாடுகளை நடைமுறைக்குப் பொருத்தும்போதுதான் தெரிய வருகிறது. ஆம் இது வேறுபாடுதான்; இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. எனவேதான் இந்தப் போராட்டம் தவிர்க்கவியலாததாகி இருக்கிறது.

“இரயாவிடம் வறட்டுவாதமென்றால் இந்த விமரிசனத்தை முன்னரே வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கலாமே” என்று சில தோழர்கள் கருத்துரைத்துள்ளனர். அது சாத்தியமற்றது மட்டுமல்ல வினவு தளத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டதும் கூட.

வினவு தளம் பற்றி தோழர் இரயா விமரிசித்தார். அவரது விமரிசனத்தை ஆளும் கண்ணோட்டம், ஏற்கனவே அவர் ம.க.இ.க மீது வைத்திருந்த விமரிசினத்திலும் வெளிப்படுவதைக் கண்டோம்.வினவு தளம் என்ற முறையிலும் ம.க.இ.கவின் ஆதரவாளர்கள் என்ற முறையிலும் இங்கே விளக்கமளித்திருக் கிறோம். அவ்வளவே.

மது முந்தைய பதிவில் ” தனியொருவனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்றும் நிலையில் நாங்கள் இல்லை” என்றும் ” உடனுக்குடன் ஒரு கட்டுரையை இறக்கும் நிலையில் இல்லை” என்றும் நாங்கள் குறிப்பிட்டிருந்தது நக்கலும் நையாண்டியுமென்றும், விவாத முறை இதுவல்ல என்றும் தோழர் இரயா விமரிசித்திருந்தார்.

நடந்த்து என்ன? இரயாவின் தொடர்கள் நாளுக்கொன்றாக வெளிவந்ததனால் வினவில் பின்னூட்டம் விவாதமென்று இது விரிந்து சென்றது. நாங்கள் உடனுக்குடன் பதில் எழுதாமைக்கு காரணம் நேரமின்மை மட்டுமல்ல, இவ்வாறு பொதுத்தளத்தில் விமரிசிக்கும் ஒரு தோழமை சக்தியை எப்படிக் கையாள்வது என்பதில் எமக்கு ஏற்பட்ட நெருக்கடி. தனியே முடிவு செய்து அமல்படுத்துவதில் எமக்கு இருந்த தயக்கம். இதையே அவ்வாறு குறிப்பிட்டோம்.

‘தனியொருவனாக நின்று’ என்ற தலைப்பில் தோழர் இரயா எழுதிய கட்டுரையின் உள்ளடக்கமும் அதில் அவர் வெளிப்படுத்தியிருந்த உணர்ச்சியும் தவறானவை என்று கருதினோம். அதனை மனதிற் கொண்டுதான் ஒரு மறைமுகமான விமரிசனமாக அந்த சொற்றொடரை பயன்படுத்தினோம். நக்கலோ, நையாண்டியோ எமது நோக்கமல்ல. எனினும் இது அவரை புண்படுத்தியிருப்பதினால் எமது வருத்தத்தை பதிவு செய்கிறோம்.

ந்த விவாதத்தில் எம்மைப் பற்றி ஏளனமாகவும், அவதூறாகவும், நோக்கம் கற்பித்தும் எழுதப்பட்ட பின்னூட்டங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கடுமையான வார்த்தைகளால் முறிக்கப்படும் அளவிற்கு எங்கள் முதுகெலும்பு பலவீனமாக இல்லை. ஆனால் விமரிசனங்கள் என்ற எல்லையைத் தாண்டி ரதிக்கு எதிராக எழுதப்பட்ட பல பின்னூட்டங்கள் பண்பாடற்றவை. அவற்றை இகழ்ச்சியுடன் ஒதுக்கித் தள்ளுகிறோம்.

ஆரோக்கியமான ஒரு விவாதம் அளித்திருக்கக்கூடிய புத்துணர்ச்சிக்குப் பதிலாக ஒரு வகையான கசப்புணர்ச்சியையே இவ்விவாதம் எம்மிடம் தோற்றுவித்திருக்கிறது என்பதை மறைக்க விரும்பவில்லை. எனினும் சோர்ந்து விட்டோம் என்பதல்ல இதன் பொருள்

“உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதனை மாற்றியமைப்பதுதான் நமதுபணி” என்ற பேராசான் மார்க்சின் சொற்களை நினைவில் வைத்திருக்கிறோம். “மாற்றப்பட வேண்டியவை பொருட்களாயினும், மனிதர்களாயினும் அவற்றின்/ அவர்களின் , சாத்தியமான எல்லா பரிமாணங்களையும் ஒரு மார்க்சியவாதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற தோழர் லெனினுடைய கூற்றை பற்றி நடக்கிறோம். மாற்று கருத்துக்களுடனான அர்த்தமுள்ள விவாதங்கள் உலகை மாற்றும் நடைமுறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவும் என்றே கருதுகிறோம்.

ரதி மீண்டும் எழுத முன்வந்திருக்கிறார். அவரது தொடர், தொடரும். இந்த விவாதம் எமது தரப்பிலிருந்து இனி தொடராது.

விடை பெறுகிறோம்.

http://www.vinavu.com/2009/09/04/raya3/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்