01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

மகிந்தாவின் பேரினவாத பாசிசம், ஊடகவியலை குதறுகின்றது

இனவொடுக்குமுறையும் இனவழிப்பும் பேரினவாத பாசிசமாக, அதுவே குடும்ப ஆட்சியாக மாறி வருகின்றது. அது தன்னை விமர்சிக்கின்ற, தன்னை எதிர்க்கின்ற அனைத்தையும், ஈவிரக்கமின்றி அரச இயந்திரங்கள் மூலம் ஓடுக்குகின்றது அல்லது போட்டுத் தள்ளுகின்றது. ஒரு கூலிப்படையும், சலாம் போட்டு நக்கும் கூட்டமும் தான் அரசாக உள்ளது. இந்தக் கும்பல் போடும் பாசிசக் கூத்தைத்தான், சட்டத்தின் ஆட்சி என்றும், ஜனநாயகத்தின் சிம்மாசனம் என்று கூச்சல் போடுகின்றது.

தன் சொந்த பாசிச ஆட்சியை தக்கவைக்க, தமிழ் சிங்களம் என்று எந்த வேறுபாட்டையும் அது காட்டவில்லை. ஆனால் தமிழ்மக்களை ஓடுக்கும் அதிகாரத்தையும், இனவழிப்பு செய்யும்  உரிமையையும், பயங்கரவாதமாக சித்தரித்துக் கொண்டு பாசிசத்தை இலங்கை முழுக்க நிறுவிவருகின்றது. தமிழர்களை ஓடுக்குவது சிங்களவர்களின் நியாயமான உரிமை என்று கூறி, சிங்கள மேலாதிக்கம் சார்ந்த ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு, பாசிச ஆட்டம் போடுகின்றது. புலிப்பாசிசம் கட்டவிழ்த்துவிட்ட மனிதவிரோத செயல்களைக் காட்டி, தமிழரின் உரிமைக்கு "பயங்கரவாதம்" என்று பட்டம் சூட்டி, தமிழனின் உரிமைகளை பலியெடுக்கின்றது. கேட்பவனை சிறையில் தள்ளுகின்றது, கொல்லுகின்றது.

 

இதனடிப்படையின் ஊடாக உரிமைகளை மறுத்து, 20 வருட கடூழிய சிறைத் தண்டனையை திசநாயகத்துக்கு பேரினவாதம் பரிசளித்துள்ளது. இதற்கு அது சுமத்திய குற்றச்சாட்டு ஆபாசமானது. இந்த ஆபாசமோ இதுதான்.

 

1. கிழக்கு மாகாணத்தில் அரச படைகள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக கட்டுரையை எழுதியது, அதனை வெளியிட்டது.


 
2. இதன் மூலம் அரசபடைகளுக்கு அவதூறு ஏற்படுத்தியது.


 
3. இனங்களுக்கிடையே பகைமையை வளர்க்கத் திட்டமிட்டது.

 

இப்படி ஒரு பத்திரிகையாளன் மீது, தமிழன் மீது, பேரினவாதத்தின் இனவாதச் சட்டம் பாய்ந்துள்ளது. இப்படி இன்று பேரினவாதம் தமிழனைக் கொல் அல்லது சிறையில் அடை என்கின்றது. 3 இலட்சம் அப்பாவி மக்களை ஒரு திறந்தவெளிச் சிறையில் அடைத்து வதைக்கும் சட்டவிரோதமான ஒரு ஆட்சி தான், இந்த 20 ஆண்டு சிறை வாழ்வை திசநாயகத்துக்கு வழங்கியுள்ளது.

 

3 இலட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு ஏற்ற பாசிச விளக்கங்களை வழங்கும் சிங்கள-தமிழ் "ஜனநாயகக்" கும்பல்கள்; தான், திசநாயகத்தின் தண்டனைகளையும் நியாயப்படுத்துகின்றது. நக்கும் எலும்பு கிடைத்தால், வாலாட்டி நக்கும் விளக்கங்கள்.   

 

தமிழ்மக்களின் உரிமைகளை மறுத்தும், பறித்தும், இன்றைய மனித அவலத்துக்கு காரணமான எந்த பேரினவாதியையும் இலங்கைச் சட்டம் என்றும் தண்டித்தது கிடையாது. கடந்த மூன்று சகாப்தமாக குறைந்தபட்சம் ஒரு இலட்சம் மக்களை கொன்று குவித்த பேரினவாதத்தை எந்த சட்டமும் தண்டித்தது கிடையாது. இப்படிப்பட்ட மனிதவிரோதிகளின் ஆட்சியில், சிங்கள இனவாதத்துடன் தான் சட்டங்கள் இயங்குகின்றன.   

 

இப்படி சட்டங்கள் தமிழருக்கு எதிராகவே இயங்குகின்றது. புலிகள் முதல் தமிழ் பத்திரிகையாளர்கள் வரை, தமிழன் என்ற ஓரே காரணத்தினால் சட்டத்தின் பெயரில் தமிழனுக்கு எதிராக அது இயங்குகின்றது. மனிதனுக்கு எதிரான இன விரோதக் குற்றங்களை தமிழர்கள் மட்டும் செய்யவில்லை. சிங்களவர்களும் அதைச் செய்தனர். இதில் தமிழர்களை விட சிங்களவர்களே அதிகம். ஆனால் சட்டம் தமிழர்களை மட்டும் குறிவைத்து செயல்படுகின்றது. மறுபக்கத்தில் அரசின் குற்றத்தை கேள்விக்கு உள்ளாக்குபவர்களை,  குற்றவாளியாக்கி சட்டத்தின் பெயரால் சிறையில் தள்ளுகின்றனர். இப்படி குற்றவாளிகள் சட்டத்தை தம் கையில் வைத்துக் கொண்டு, தம்மைப் பாதுகாக்கின்றனர்.

 

இந்த பேரினவாத அரசு

 

1. கிழக்கில் இனப்படுகொலை நடத்தவில்லையா!, இனப்பகையை கட்டவிழ்த்து விடவில்லையா.

 

பேரினவாத சிங்களக் படைகள் பாலியல் பலாத்காரங்கள் முதல் தமிழன் என்ற காரணத்தினால் இனப் படுகொலையை செய்யவில்லையா? இதை இலங்கையின் எந்த நீதிமன்றம் விசாரணை செய்துள்ளது. புலிகளின் குற்றங்களைப் பற்றி மட்டும் பேசுவதும், படைகளின் குற்றங்களை மூடிமறைத்து பாதுகாப்பதிலும், பாசிச அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. இந்த நிழலின் கீழ் தான், நீதிமன்றங்கள் இயங்குகின்றன. போர்க்குற்றத்திலும், இனவழிப்பு குற்றத்திலும்; ஈடுபட்டவர்கள் அரசாகவும், சட்டத்தின் காவலராக இருந்து தமிழனுக்கு எதிராகவும் பாய்கின்றனர். இதன் மூலம் இலங்கை முழுவதிலும் வாழும் அனைத்து இன மக்கள் மேலும் பாசிசத்தின் ஆட்சியைத் திணித்து வருகின்றனர்.

 

பி.இரயாகரன்
04.09.2009    

 


பி.இரயாகரன் - சமர்