01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" (பகுதி 5)

'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு குழு அறிவித்துள்ளது.  இங்கு அவர்கள் 'புலி அனுதாபிகள்' என்று கூறுபவர்களை, புலிகளாக, பாசிட்டுகளாக பார்த்தால் மன்னிக்க முடியாத  வரட்டுத்தனமாம்.

இப்படி கூறி ஈழத்து கம்யூனிஸ்டுகளை புலியுடன் சென்று, வென்று எடுப்பது தான், சரியான அரசியல் யுத்ததந்திரம் என்கின்றனர். இதை அவர்கள் நடத்த, நாங்கள் அம்பலப்படுத்த, அதை வறட்டுவாதம் என்று முத்திரை குத்தியுள்ளனர்.     

  

மற்றொரு நாட்டு கம்யூனிச இயக்கத்தின் அரசியல் வழிமுறைக்கு எதிரான போராட்டத்தை,  "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" என்று வினவு, திடீரென வினவு குழுவாக மாறி அறிவித்திருக்கின்றது. இந்த அரசியல் வழிமுறை சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது. ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய (நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளல்ல என்றால் அதைச் சொல்லுங்கள்)  நாங்கள், பாசிசத்தை எந்த அரசியல் வழி ஊடாக, யாரைச் சார்ந்து எப்படி போராட வேண்டும் என்ற பிரச்சாரத்தை, கிளர்ச்சியையும் கடந்த 30 வருடமாக பலரை இழந்தபடி தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். இதைத்தான், இதற்கெதிரான இந்தப் போராட்டத்தைத்தான், இன்று திடீரென வினவு குழு வரட்டுவாதம் என்கின்றது. அரசுக்கு எதிராக "புலி அனுதாபிகளுடன்" சேர்ந்து நிற்கத் தவறுவது, வறட்டுவாதம் என்கின்றனர். இந்த "வறட்டுவாதம் மார்க்சியத்தைக் கொல்லும்" என்கின்றனர். இப்படி புலி அனுதாபிகளுடன் சேர்ந்து, அவர்களை பாதுகாத்தபடி, ஈழத்து மார்க்சியத்தை காப்பாற்ற புறப்பட்டுள்ளனர். வாழ்த்துக்கள் தோழர்களே. 

 

ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய நாம், புலிப் பாசிசத்தின் மறைமுகமான இந்த சுற்றிவளைப்பை இப்படியும் எதிர்கொள்ள வேண்டிய துயரம். இந்த வருட ஆரம்பத்தில் புலிகள் வெளிப்படையாக தமிழ்மக்களை கொன்றும், பலிகொடுத்தும், அரசைக் கொண்டு பலியெடுத்தும் கொண்டிருந்த போது, நாம் அதை அரசியல் ரீதியாக எதிர்கொண்டோம். இதன் போது வினவு குழு எமது வரட்டுவாதத்தை இனம் கண்டிருக்கலாம். மக்களை புலிகள் கொன்றும், கொல்ல உதவிய போதும், "புலி அனுதாபிகளுடன்" சேர்ந்து நின்று எம் வரட்டுவாதத்தை எதிர்த்துப் போராடி இருக்கலாம்.  

 

இப்ப திடீரென "புலி அனுதாபிகளுடன்" சேர்ந்து வரலாற்றை திரிக்கவும், இதற்கு உடன்பட மறுப்பதாலும் நாம் வரட்டுவாதியாகிப் போனோம். வரலாற்றை திரிப்பதில், எங்கே புலியிசமும்  பாசிசமும் இருக்கின்றது என்று கேள்வி கேட்கின்றனர். இப்படி திரிப்பது, அவர்களின் அப்பாவித்தனம் என்கின்றனர். அது புலியிசமோ, பாசிசமோ அல்ல என்கின்றனர். இதை அம்பலப்படுத்தி விவாதம் செய்ததால் நாம் வரட்டுவாதியாகிப் போக காரணமாகியது. அவர்கள் புலி அனுதாபிகளுடன் சேர்ந்து செய்த பொய்யான புரட்டுத்தனமான அரசியல் பிரச்சாரத்தை, கேள்வி கேட்டதால் நாம் வரட்டுவாதியாகிப் போனோம். 

  

இந்த விவாதத்தை அடுத்து ரதி தன் வரலாற்றுபுரட்டை எழுதுவதை நிறுத்துமாறு நாம் கோரியது என்று கூறுவது அபத்தம். நாங்கள் எந்த கட்டத்திலும் இதை கூறவுமில்லை, கேட்கவுமில்லை.   நிறுத்தியது அவரின் தெரிவுக்கும், வினவு தளத்தின் முடிவுக்கும் உட்பட்டது. நாங்கள் எந்த விதத்திலும் அதை நிறுத்தக் கோரவில்லை. நாங்கள் இந்த அரசியல் போக்கின் மேல் விமர்சனத்தைச் செய்தோம். இது எங்கள் அரசியல் உரிமை.

 

ரதியின் வரலாற்று திரிபு கருத்துகள் தொடர்ந்து வினவு தளத்தில் வராததையிட்டு, எமது அபிப்பிராயங்கள் மிகத் தெளிவானது.

 

1.அவர் புலி சொன்னதைத் தாண்டி, புதிதாக எதையும் சொல்லவில்லை. புலி எதை சொன்னதோ, அதையே மீளச் சொன்னவர். இதனால் சமூகத்துக்கு எந்த நட்டமும் ஏற்படவில்லை. அவர் தனது இந்த புலிக் கருத்தை, புலிகளின் எந்தத் தளத்திலும் சுதந்திரமாக சொல்ல முடியும்;.    

  

2.அவர் தன் சொந்த தனிப்பட்ட அனுபவத்தை சொல்லமுடியுமா? ஆம் நிச்சயமாக சொல்ல முடியும். அதை அவர் சொன்னால், எம் தளத்தில் கூட அதை நாம் பிரசுரிப்போம்;. ஆனால் அவர் சொன்னது அதுவல்ல. பொதுவான மக்களின் வரலாற்றை, புலிக்கு ஏற்ப திரித்ததைத்தான் தன் வரலாறாக புரட்டியவர். அவர் தன் சொந்த அனுபவமாக சொன்னது பல்கலைக்கழகம் கிடைத்தது, இந்தியா சென்றது, ஆண்களுக்கு வாழ்வு அளிப்பதுபற்றி.. போன்றன. இதற்கு வெளியில், தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பை அவர் எங்கும் பேசவில்லை. இனித்தான் கூற இருந்தார் என்றால், அவர் மூன்று கட்டுரைகளிலும் பேசியது என்ன? வரலாற்று திரிபை அடிப்படையாக கொண்ட புலிப் பாசிசம்.      

 

ஈழத்து எல்லா மக்களுக்கும் தனிப்பட்ட ரீதியில், இதை அனுபவித்த ஒரு அவல வாழ்வின் கதைகள் பலவுண்டு. இதையே ரதியும் சொல்லியிருந்தால் தவறல்ல. மாறாக அதன் பெயரில் வரலாற்றை திரிப்பதும், அதை மற்றொன்றாக இட்டுக் கட்டுவதும் எந்த விதத்திலும் அவரின் தனிப்பட்ட ஒரு வாழ்க்கையல்ல. ஒரு சமூகத்தின் வாழ்க்கை. அதை அவர் திரித்துப் புரட்ட, கம்யூனிஸ்டுகள் கைகட்டி இருக்கக் கோலும் சர்வதேசியம். இதன் மேல் தான் எங்கள் கோபம். வினவின் பொறுப்பற்றதனத்தின் மீது எமது எதிர்வினை.

 

மனித குலத்தின் வரலாற்றை சொல்லும் விதத்தில் தான், பாசிசம் தெளிவாக தன்னை கட்டமைக்கின்றது, நியாயப்படுத்துகின்றது. பேரினவாத ஓடுக்குமுறை என்பது எம் அனைவர் முன்னும் பொதுவான தளத்தில் இருக்கின்றது. அதை சொல்லும் விதம்தான், அதற்கு எதிரான போராட்டத்தை மூடிமறைக்கும் விதத்தின் மூலம்தான், பாசிசத்தை நெறிப்படுத்துகின்றது, வழிகாட்டுகின்றது.

 

இப்படி எம்மக்களின் வரலாற்றை பாசிசம் திரித்து புரட்டி வினவு தளத்தில் பிரச்சாரம் செய்யும் நிலையில் தான் வினவு கூறுகின்றார்

 

"ரதி எழுதத் துவங்கும் முன்னரே அவர் ஒரு பாசிஸ்ட் என்ற உண்மை தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் வாழ்த்து தெரிவிக்க அவசியம் என்ன? ஒரு வேளை அதன் பிறகுதான் இந்த உண்மையை அவர் கண்டுபிடித்தார் போலும். …. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய ஆதாரங்களுடன் இதை எங்களுக்கு அவர் தெரிவித்திருக்கலாம். ஆனால் அத்தகைய ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை." என்று குறிப்பிடுகின்றார். அவர் எமக்கு எழுதி அவரே வெளியிட்ட கடிதத்தில் "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை."

என்று குறிப்பிட்டார்.

 

இன்று வரை, அவர் பாசிசத்துக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்பது வினவின் நிலை. வரலாற்றை, திரிப்பது, புரட்டுவதும் பாசிசத்தின் கூறேயல்ல, என்பது வினவு அரசியல். இதற்கு வெளியில் ஆதாரம் கேட்கின்றார். ஈழத்தில் பாசிசமே தமிழ் அரசியலாக கோலோச்சி நிற்க, வரலாற்றை புரட்டுவதும் திரிப்பதும் கூட பாசிசத்தின் கூறுதான். ஈழத்து சூழலை வினவு தவறாக புரிந்து அல்லது தவறாக விளக்கி பாசிசத்துக்கு ஆதாரம் கேட்கின்றார்.

 

ஈழத்து வரலாற்றை திரிப்பதை, புரட்டுவதை பாசிசமாக இனம் காணத் தவறியதும், அதை தெரிந்து இருக்காத நிலையில், "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்று வினவு கூறிய நிலையில், கட்டுரை வெளியிடும் முறையை மாற்றினோம்.    

 

எழுதிய கட்டுரையை மாற்றி, பாசிசம் மறைத்து திரித்து சொல்லும் வரலாற்று ஆதாரங்கள் ஊடாக, இதை அம்பலப்படுத்த முனைந்தோம். குறிப்பாக Tecan மற்றும் கொழுவி இருவரும் திரிபின் பக்கத்தை தத்தம் அரசியல் நோக்கில் இருந்து சொன்ன போதும், தோழர்களுக்கு அதைச் சார்ந்து நின்று போராட முடியாது போனது. அந்த உண்மை வழமையான இணையக் கொசிப்பாக இருந்தது. எமக்கு இதுவே அரசியலாக இருந்தது.

 

எமக்கு பாசிசம் வரலாற்றை திரித்து பகுத்து புகுத்தும் போது, "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்று கூறிய போது, பாசிச பிரச்சாரம் பற்றிய அரசியல் புரிதல் மட்டமானதாக இருந்தது. அக்காலத்தைய பாசிசத்தின் பாசிசக் கூறுகளை ஆதாரப்படுத்தி வெளியிட்டோம். இதன் ஊடாக தோழர்களுக்கு இந்த பாசிசப் பிரச்சாரத்தையும், அதன் அடித்தளத்தையும் இன காட்டமுனைந்தோம். இதை புரிந்து கொள்ளுமளவுக்கு, பாசிசப் பிரச்சாரத்தின் அரசியல் வடிவத்தை தோழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கையில் கத்தியும், துப்பாக்கியும் கொண்டு இருப்பதை ஆதாரப்படுத்தினால் மட்டும் தான், பாசிசமோ!?  "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்று, எழுதி, இதில் எந்த பாசிசமுமில்லை என்று கூறுவதன் மூலம், இதுவே ஒரு அரசியல் தத்துவ விவாதமாகியுள்ளது.

 

அவர் பாசிசம் எதையும் கூறவில்லை என்கின்றனர். பாசிசம் கையில் கத்தி மட்டும் தூக்கிக் கொண்டு அலைவதில்லை. மனித வரலாறு முதல் அனைத்தையும், தன்; சிந்தனை முறையூடாகவே பாசிசம் பிரச்சாரம் செய்கின்றது. பாசிசத்தின் எல்லாத் தளத்திலும், இதைக் காணமுடியும். இதை ஈழக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், எங்கள் தோழர்களின் மேலான பாசிசப் படுகொலைகளை ஊடாகவே, இதைக் கற்று உணர்ந்தவர்கள். இந்தக் கல்வியை வரட்டுத்தனமாக கூறி, சேறடிப்பது சர்வதேசியத்திற்கு முரணான அற்பத்தனமாகும். 

 

வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும், புரட்டுவதும், சோடிப்பதும் என  எதுவும் பாசிசமல்ல என்று கண்டுபிடிப்பு "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்று சொல்லுமளவுக்கு சென்று விடுகின்றது. அவர் எங்கே பாசிசத்துக்காக எழுதியுள்ளார் என்று கேட்டு, அதை நிறுவுங்கள் என்று கேட்டு, பாசிசத்தை வாழ்வாக சந்தித்த மக்களை கொச்சைப்படுத்துகின்றனர். இதைத்தான் புலி கூறுகின்றது.

 

மக்கள் புலிப் பாசிசத்தினால் சந்தித்த மனித அவலத்தையம் மனித துயரங்களையும் திடட்மிட்டு மூடிமறைத்து, அதை தன் வரலாறாக கூறுவது பாசிசம்தான். சாதாரண மக்களின் வாழ்வியல் துயரங்களை மூடிமறைத்து நிற்பது, முற்றிலும் பாசிச மயமானது. இங்கு நாம் சின்ன விடையத்தை, பாசிசமாக காட்டி மிகைப்படுத்திவிட்டோமா? இப்படி கருதும் கருதுகோள்கள், உண்மையில் மிகத் தவறானவை.

 

இது மிகைப்படுத்தப்பட்டதல்ல. எமது போராட்டத்தை சிதைத்து, எம் மக்களையே கொன்றுகுவித்தும், கொல்லவும் உதவிய, இனத்தின் அழிவு வரையான இன்றைய நிலையை உருவாக்கியதே  புலிப்பாசிசம். இதன் பின் நின்று கொண்டு, அதை ஆதரித்துக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்தும் கொண்டு, நாங்கள் அப்பாவிகள் அகதிகள் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூச்சல் போடுவது பாசிசம்தான். உன்னால், உன் கருத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி சிந்திக்காத வரை நீ பாசிட்டு தான். இதனால் தான் வரலாற்றை பாசிட்டுகள் திரிக்கின்றனர். சிங்கள பாசிட்டுகள் செய்ததெல்லாம் எல்லாம் தெரிந்த உனக்கு, புலிப்பாசிசம் செய்தது தெரியாது என்று கூறி போடும் அப்பாவி வேசம் மோசடித்தனமாகும். இதன் பின் உள்ள சித்தாந்தமோ கடைந்தெடுத்த பாசிசமாகும்.

 

இதை நாங்கள் அனுதினம், கடந்த 30 வருடமாக சந்தித்தவர்கள். சொந்த வீட்டில், சொந்தக் கிராமத்தில், சொந்த பிரதேசத்தில், சொந்த இனத்தை கொன்று குவித்தபடி, பேரினவாதம் நடத்திய பாசிச காட்டுமிராண்டிதனத்தை மட்டும் காட்டியவர்கள் பாசிட்டுகள். இப்படி மக்களை சமூகத்தை ஏமாற்றும் மோசடித்தனங்களை, அங்கீகரித்து நிற்க கம்யூனிஸ்ட்டுகளால் ஒருக்காலும் முடியாது. இந்தக் கேவலமான பாசிசத்தின் மோசடியை மறுத்து "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்று எமக்கு, பாசிசம் எங்கு இருக்கின்றது என்று கற்றுத்தர முனைகின்றனர்.

 

இந்தப் பாசிசத்தின் மூடுமந்திரத்தை அப்பாவித்தனமானதாக காட்டிவிட

"ரதி ஒரு புலி அபிமானி என்பது எங்களுக்கோ வினவின் வாசகர்களுக்கோ தெரியாதது அல்ல"

என்று கூறி வினவு பாசிசத்துக்கு சுயவிளக்கம் அளிக்கின்து. அந்தப் பாசிசப் புலியோ, புலி மீது "மதிப்பும் மரியாதையும்" உண்டு என்று கூறி புலிப் பாசிசத்துக்கு ஆரத்தி எடுக்கின்றார். அவரின் புலித்தனம் அம்பலமாகாமல் இருக்க, வினவு உதவியது. அதைத்தான் அவர் "வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்" என்று நன்றியுடன்  கூறுகின்றார். அவர் தன் பாசிச மொழியில் உறுமும் போது "தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். அதை சொல்ல துப்பில்லாத நீர், வறட்டுவாதம் பேசுபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர், …" என்கின்றது. இப்படித்தான் புலி, "இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” " என்று கூறி, ஆயிரம் ஆயிரம் பேரை போட்டுத்தள்ளியது. இப்படி வினவு மட்டும் எம்மை வரட்டுவாதி என்று கூறவில்லை, புலி ரதியும் தான் கூறுகின்றார். அரசியல் ரீதியாக ஒரு புள்ளியில் சந்திக்க முனைகின்றனர்.

 

"வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்" என்று ரதி கூறுவது உண்மை. எமது விமர்சனங்கள் மேல் உடனுக்குடன் பதிலளித்து அதை தடுத்து நிறுத்தியவர், ரதியின் பாசிச வரலாற்று திரிபுகள் மேல் அவ்வாறு எதிர்வினையாற்றவில்லை. எப்படி ஆற்றுவார். அதுதான் கூறுகின்றார் "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்று. 

    

வினவு கூறுகின்றார் "தோழர் இராயகரனுக்கு ரதி எழுதத் துவங்கும் முன்னரே அவர் ஒரு பாசிஸ்ட் என்ற உண்மை தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் வாழ்த்து தெரிவிக்க அவசியம் என்ன?" இப்படி வினவு, நாம் கூறியதை திரிக்கின்றார். ரதி எழுதிய பின் தான் இதைக் கூறுகின்றோம். மற்றொரு அதே கட்டுரையில் விவாதக் குறிப்பில், இன்னும் முழுமையாக எழுதட்டும் என்று கூறுகின்றோம். இங்கு எம் வாழ்த்து பற்றி திரிபு

1. ரதி எழுத முன் கூறியது என்பது
2. பக்கச் சார்பையும் சுட்டிக் காட்டியுள்ளோம்;. "ரதி எழுதத் துவங்கும் முன்னரே" எப்படி வாழ்த்தை தெரிவிக்க முடியும்;. எழுதிய பின்தான் வாழ்த்தை தெரிவிக்க முடியும். அதுபோல் பாசிட் என்றும் கூற முடியும்;. நாம் அன்று எழுதியது என்ன?  "ரதி, நீங்கள் உண்மைகளை பக்கச் சார்பின்றி எழுத வாழ்த்துகள். வாழ்வின் உண்மைகளுக்கு, யாரும் பொய்ப் பட்டம் கட்டமுடியாது. வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்." என்கின்றோம். அவர் இங்கு பக்க சார்பாக எழுதியதால், பக்கச் சார்பு பற்றி கூறுகின்றோம். இதனூடாக வாழ்த்துகின்றோம். எதனால் வாழ்த்துகின்றோம். தோழர்களின் தளத்தில் வருவதால், எச்சரிக்கையுடன் அதை வாழ்த்துகின்றோம்.

 

இதற்கு மா.சே (எமக்கு தெரிந்த, எமக்கு பின்னூட்டம் போட்ட புலியாகிப் போன முன்னாள் தோழர் மாசே என்ற கருதினோம். அதே பெயரில், அதே கருத்தில், ஒரு தோழர் உங்களுக்கு இருந்தது எமக்கு தெரியாது. இங்கு யார் அந்த மா.சே என்று நாம் சாத்திரம் பார்க்க முடியாது)    "தனது அனுபவங்களை ஒருவர் பகிரும் பொழுது அது அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும். படிப்பவருக்கும் அப்படித்தானே? இதில் யார் எந்தப்பக்கம் சார்ந்தவரோ அதன்வழியில் தானே ஒரு எழுத்து பிடிக்க, பிடிக்காமல் போகும். நடுநிலை என்று ஒன்று உண்டா?" என்று ரதியின் பாசிசத்தை பாதுகாக்க ஓடி வருகின்றார். பக்கச்சார்புடன் புலிக்காகத்தான் எழுதுவார், அதை யாரும் கண்டுக்க கூடாது என்பது மா.சேயின் நிலை என்றால், அதுவே வினவுவின் நிலையாகியது. பக்கச்சார்புடன் வரலாற்றை திரிக்காதே என்று விவாதிப்பது, மார்க்சிய விரோதமாம். இப்படி விவாதிப்பதே குற்றமாம். வினவு தன் நெற்றிக் கண்ணைத் திறந்து, எம்மை எதிர்கொள்ளத் தொடங்குகின்றார்.  

 

"புலிகளின் அரசியல் தவறுகளை உணராத மக்கள்தான் புலத்தில் அதிகம் வாழ்கின்றனர்." என்று ஈழத்து கம்யூனிஸ்களாகிய எமக்கு "வரடடுவாதிகளாகிய" எமக்கு பதிலாளிக்கிறார். இதன் மூலம் புலிகளுடன் நிற்றல்தான், மக்களுடன் நிற்றல் என கூறுகின்றார். இங்கு புலிகளுடன்; என்பதை, அவர் புலி அனுதாபிகளுடன் என்று மூடிமறைத்து கூறுகின்றார்.

 

சரி புலிகள் ஏன் தோற்றனர்? "மக்கள் அவர்களுடன் இல்லாததுதான்" என்ற எளிய உண்மையை அன்று அவருக்கு நாம் சொல்லாத காரணம், தோழமைக்குள்ளான விவாதமாக மாறுவதை தவிர்க்கத் தான். "புலிகளின் அரசியல் தவறுகளை உணராத மக்கள்தான்" உள்ளனர் என்பதை, மே 17 முன் கூறியிருந்தால், "புலிக்கு பின் மக்கள் உள்ளனர் என்ற" புலியின் சொந்த தர்க்கமாகத் தன்னும் குறைந்தபட்சம் இருந்து, அதுவே வினவின் தர்க்கமாக இருந்திருக்கும். மே 17 பின் மாறிய நிலையைக் கூட கருத்தில் எடுக்காத வாதங்களும், குதர்க்கங்களும்.

 

வினவு கூறுகின்றார் "புலிகளது தவறுகளை தெரிந்தே மறைப்பதாக எண்ணுவது சரியல்ல." என்று கூறுவது, பாசிசத்துக்கு மார்க்சியம் மூலம் அரண் செய்வதாகும். பாசிட்டுகள் தெரிந்தே மறைப்பவர்கள். ரதி என்ற புலிப் பாசிட் தன்னைச் சுற்றிய நிகழ்வுகளை தெரிந்தே மறைப்பது போல் தான், இதுவும். மக்கள் புலிகளின் தவறை, தெரிந்து மறைப்பதில்லை. பாசிட்டுகள் மட்டும்தான், அதை தெரிந்தே மறைக்கின்றார்கள். மக்கள் பாசிசத்தின் பின் நிற்பதாக, அதற்கு தாமாகவே பலியாவதாக கூறுவது அரசியல் வக்கிரம். மக்கள் வேறு, புலிகள் வேறு. 

 

வினவு கூறகின்றார் "அகநிலையாக நாம் வைத்திருக்கும் கருத்தை புறத்தில் ஒருவர் ஏற்கவில்லை என்றால் உடனே அவருக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டுவது எந்த விதத்தில் சரி" இப்படி கூறும் நீங்கள்தான், இன்று வரட்டுவாதிகள் என்று எம்மை சொல்வதும் நன்றாகத்தான் இருக்கின்றது. புலிகள் மக்களை கொன்றனர், பாசிசத்தை ஏவினர் என்பது, எமது அகநிலைக் கருத்தா!? அதை நாம் மற்றவர் மீது திணிக்கின்றோம் என்றால், அவர்கள் பாசிசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தான்;. உண்மை என்பது பாசிசத்தினால், மக்கள் அணு அணுவாக அதை அனுபவித்தனர், பலர் கொல்லப்பட்டனர். இது எம் அகநிலை என்றால், மக்களின் அகநிலையும் இதுதான். பாசிட்டுகள் தான் மக்களின் புறத்தில் நின்று, தம்மை ஏற்கும்படி பாசிசத்தை அவர்கள் மேல் ஏவினர். இந்த எளிய உண்மையை, எமக்கு எதிராக புலி ரதிக்காக திருப்பிப் போடுவது எம்மால் சகிக்க முடியாதது.

 

நாம் பக்கச்சார்பின்றி எழுதக் கோர, அதை மறுத்த மா.சேக்கான எமது பதில் "பகுத்தறிவுள்ள மனிதன் தன்னை சுற்றிய நிகழ்வுகளை பகுத்தறிவுடன் புரிந்தானா இல்லையா என்பதே இங்கு அடிப்படையான கேள்வி. இங்கு எழுத்தாளன் இதில் முட்டாளாக இருக்க முடியாது. இது நடுநிலையல்ல. மனிதர்களைப் பற்றிய உண்மைகளைப் பற்றி பேசுகின்றதா அல்லது அதை மூடிமறைக்கின்றதா என்பதே கேள்வி. மூடிமறைப்பதையும் ‘தனது அனுபவம்” என்று கூற முடியும்." என்ற வினாவை எழுப்பினோம். இது வினவுக்கு சங்கடமாகின்றது. "இந்த உலகில் பகுத்தறிவுடன் சிந்தித்து அதாவது வர்க்க கண்ணோட்டமின்றி பார்வை கொண்டவர் எவரும் இல்லை. பகுத்தறிவே குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்துதான் வெளிப்படும்" எனகின்றார்.  பகுத்தறிவுக்கு வர்க்கம் உண்டு என்று, எமக்கு விளக்கம் கொடுக்கின்றார். நாங்கள் பகுத்தறிவுக்கு முன்னால், வர்க்கப் பகுத்தறிவு என்று போடவில்லை என்று வரட்டுத்தனமாக இருக்கக் கோருகின்றார். 

 

இங்கு ரதி பகுத்தறிவற்ற பாசிட்டாக வரலாற்றை புரட்டுவதைக் கேள்விக்குள்ளாக்கினோம். அது அலுங்காமல் குலுங்காமல் இருக்க, தோழர் பகுத்தறிவுக்கு வர்க்கம் உண்டு தெரியாதா என்று கதையையே மாற்றுகின்றார். இதைத்தான் ரதி "வினவுக்குழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்" என்று, நன்றியுடன்  விசுவாசத்துடன் கூறுகின்றார். இப்படி பகுத்தறிவுக்கு வர்க்கம் உண்டு தோழர் என்று கதையே மாற்றிய பின்பு, எப்படித்தான் அங்கு நாம் தொடர்ந்து விவாதிப்பது.

 

நாங்கள் கம்யூனிஸ்டுகள். எமக்கு தெரியாத வர்க்கம் உண்டு என்று. எம் மக்களுக்கு நடந்ததை மூடிமறைத்து விதண்டாவாதம் செய்யும் பாசிட்டுகள் முன், பகுத்தறிவுடன் இரு என்று கோருவதற்கு முன் வர்க்கம் பற்றி பேசு என்று கூறுவது வரட்டுத்தனமாகும்.  ஈழத்தில் மனிதத் தன்மை கூட கொண்டிராத பாசிசத்தின் கூறுகளை நோக்கி, பகுத்தறிவை கோருவது என்பது மையமான மனிதத்தன்மை சார்ந்த விளக்கம் கொண்டது. இப்படி இருக்க புலி ரதியை இதில் குலுங்காமல் பாதுகாக்க, தோழர் பகுத்தறிவுக்கு வர்க்கம் உண்டு என்கின்றார்.

 

எம் எழுத்தை தடைசெய்ய வினவு "அவர் எழுதுவதற்கு முன்னரே அவரை குழப்புவது போன்ற அல்லது எனக்கு இதுதான் வேண்டுமென்று முன்னரே கட்டளையிடுவது" என்று கூறி, எம்மை மறைமுகமாக விவாதத்தில் இருந்து வெளியேறக் கோருகின்றார். வினவு கண்டுபித்த "அவரை குழப்புவது" என்றால், அவரின் பாசிச சிந்தனையையா!? 

 

வினவின் தர்க்கம் ”இங்கே நாம் வலியுறுத்த விரும்புவது புலிகளின் பால் பற்று கொண்டிருக்கும் இதயங்களை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வோம். அப்போதுதான் புலிகளின் பெயரால் ஈழம் கண்ட பின்னடைவை நாம் அவர்களுக்கு எடுத்து சொல்ல முடியும். மாறாக இதுதான் எமது நிலைப்பாடு இதை ஏற்காதவர்கள் தவறானவர்கள் என்று நமக்கு நாமே பேசிக் கொள்வதில் பயனுண்டா? இந்த விமர்சனங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு அணுகுமுறையை புரிந்து கொள்வதற்காக சொல்கிறோம்.” என்றார். என்று கூறி புலிப் பிரச்சாரத்தை குழப்பாது இருக்கக் கோரி கடைவிரிக்கின்றார். புலிகள் என்ன சொன்னார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? தெரியாமல்தான் போராட்டம் நடத்துகின்றீர்களா? யாரை நோக்கி போராட்டத்தை நடத்த விரும்புகின்றீர்கள். 

 

எமக்கு எதிரான இந்த அரசியல் நிலையின் பின்தான் நாம் அறிவித்தோம் "இந்த வகையில் தொடர்ந்து இந்த விவாதத்தில் இருந்து நாம் விலகிக்கொள்வது நல்லதாகப் படுகின்றது. நீங்கள் புலியுடன் போய் புலியை திருத்த முனைகின்றீர்கள். நாங்கள் அதை எதிர்த்து அம்பலப்படுத்திதான் இதைச் செய்ய முடியும் என்று கருதுகின்றோம். உங்கள் வழி தமிழ் நாட்டுக்கு பொருந்தலாம். எமக்கு பொருந்தாது." என்று கூறி விவாதத்தில் இருந்து விலகினோம்.

 

இப்படி இது அரசியல் முரண்பாடாக மாறி வந்தது. "புலி, புலிபாசிட், பக்கச் சார்பின்றி, பகுத்தறிவு.." போன்ற சொற்களால் எழுதக் கூடாது என்றார் வினவு. ரதியை பாதுகாக்க  யாருக்கும் பதில் சொல்லாத வினவு, எமது விவாதத்தை தடுக்க ஓடியோடி வந்து பதிலளித்தார். இப்படி நாம் எழுதியதை வரட்டுவாதம் என்கின்றனர். இப்படி முத்திரை குத்துவது தவறு என்றவர்கள், எமக்கு முத்திரை குத்தினர். முன் கூட்டியே புலிப்பாசிட் என்று சொல்லிவிட்டதாக எமக்கு எதிராக கூறியவர்கள், முன் கூட்டியே வரட்டுவாதிகள் என்று அறிவித்துவிட்டனர். புலி ரதியும் அதையே வழிமொழிந்து, அதை அவரும் தன் புலி அரசியல் ஊடாக கூறுகின்றார்.

 

இப்படி எம்முடன்  முரணிலையில் நின்று அணுகும் வினவு கூறுகின்றார் "தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில்" தாங்கள் இல்லை என்ற இந்த நக்கல், நையாண்டித்தனம் தான் வரட்டுவாதத்தை தவிடுபொடியாக்கும் விவாதமாம். புலிப் பாசிசம் கம்யூனிஸ்டுகளை கொன்று போட்ட, பாசிச நிழலில் நின்று மட்டும் தான், "தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இல்லை" என்று சொல்லமுடியும்.

(தனி ஒரு மார்க்சிஸ்டைக் கூட விட்டுவைக்காத பாசிச சூழலில் இருந்து போராடிய எம்மைப் பார்த்து)

 

இதேபோல் "இரயாவைப் போல அடுத்தடுத்து அவருக்கான பதில் கட்டுரைகளை நாங்கள் இறக்க முடியாது." என்று கேலிசெய்வது, உழைப்பை, போராட்ட வாழ்வையும் எல்லாம் கேவலமாக்கி கொச்சைப்படுத்துவதாகும். எமக்கு எதிரான பரபரப்பு தலையங்கங்கள் மூலம், அரசியல் விவாதம் செய்யமுடியாது. இப்படியான அணுகுமுறை மூலம், ஆரோக்கியமான விவாதம் செய்யமுடியாது.

 

பி.இரயாகரன்
29.08.2009

தொடரும்
 

 


பி.இரயாகரன் - சமர்