அறிவிப்பு: “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!

ரதியின் “ஈழத்தின் நினைவுகள்” தொடர் பற்றி தோழர் இரயாகரன் அவரது தளத்தில் வினவையும், ரதியையும் கடுமையாக விமரிசித்து ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். அதற்கான பதிலை வினவுஒரு இடுகையாக வெளியிட்டது. இதற்கு வந்த பின்னூட்டங்களிலும் இருதரப்பையும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ரதி எமக்கு அனுப்பிய மின் மடலை கீழே தருகிறோம்.

வினவு குழு,

 

என்னைப்பற்றி காரசாரமாக உங்கள் தளத்திலும், தமிழ் அரங்கத்திலும் பதிவுகளும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், எனக்குத்தான் ஏதோ தேவையில்லாத ஓர் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது போல் ஓர் உணர்வு. நான் எழுத தொடங்கும் போது எனக்கு நீங்கள் எந்தவொரு கட்டுப்பாடோ, விதிகளோ விதிக்கவில்லை. நன்றி. ஆனால்,இப்பொது வாசகர்களின் பதில்களைப் பார்த்தால் நான் பக்கச் சார்பாக எழுதுவதாகவும்,புலிகளின் பிரச்சாரம் செய்வதாகவும் என்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது அவர்களின் கருத்து சுதந்திரம். நான் என்னைப் பற்றி ஓர் விடயத்தை என்வரையில் தெளிவுபடுத்தவே விரும்புகிறேன். நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில் சாடுவதற்கு உங்கள்தளத்தை களமாக பயன்படுத்தவில்லை. அது தவிர, புலிகளைப்பற்றி பேசும் ஜனநாயகஉரிமை எனக்கும் உண்டு. அதை நான் உங்கள் தளத்தில் என் கட்டுரைகள் மூலம் ஏதோபுலிப்பிரச்சாரம் செய்வது போல் சிலர் தவறான அபிபிராயம் செய்கிறார்கள். நான் ஓர் பொதுப்பிரஜை, எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை. இதுவரை நான் என் கட்டுரைகளில் புலிகளைப்பற்றி எந்தவொரு விடயமும் எழுதியதாக நினைக்கவில்லை. இனிமேலும், நான் மக்கள் அவலம் பற்றி தான் எழுதினாலும், அது என்னை தேவையில்லாத விமர்சனங்களுக்குள்தான் தள்ளிவிடும். அதனால், நான் இத்தோடு உங்கள் தளத்தில் கட்டுரை எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன். தொந்தரவுகளுக்குமன்னிக்கவும். எப்படியென்றாலும், உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. தொடர்ந்தும் உங்கள் கொள்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். விடைபெறுகிறேன். நன்றி.

 நட்புடன், 
ரதி.

ரதியின் தொடர் இனி வெளிவராது. எங்கள் கோரிக்கையை ஏற்று இதுவரை எழுத முன்வந்ததற்கு அவருக்கு எம் நன்றி. இனி  நாங்கள் வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும் அவர் எழுத விரும்பவில்லை. அவர் எழுத்தை விமரிசிக்கும் விவாதச்சூழல் மாறி, வினவு தளம் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

‘புலிப்பாசிசத்தை பிரச்சாரம் செய்ய தளம் அமைத்துக் கொடுத்தோம்’ என்ற ‘வரலாற்றுப் பழி’யில் வீழ்வதிலிருந்து ரதி எங்களைக் காப்பாற்றிவிட்டார் என்றும் சொல்லலாம். இந்த அனுபவத்தை இரண்டு விதமாக தொகுத்துக் கூறலாம். “பாசிஸ்ட்டால் காப்பாற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள்” அல்லது “வறட்டுவாதத்தால் பாதுகாக்கப்பட்ட மார்க்சியம்!”

அறிவிப்பு: "ஈழத்தின் நினைவுகள்" இனி தொடராது! தொடரும்..... வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!

ரதியின் தொடர் குறித்த அறிவிப்பு வந்த உடனேயே “ஒரு பக்க சார்பு இல்லாமல் எழுதுமாறு” அறிவுறுத்தி வாழ்த்தும் தெரிவித்தார் தோழர் இரயாகரன். பின்னர் இது தொடர்பான விவாதத்தில் பின்னூட்டமிட்ட தோழர் மா.சேயை “ஒரு புலி பாசிஸ்ட்” என்று சாடினார். எமது தலையீட்டிற்குப் பின் தவறாக அவ்வாறு கருதிக்கொண்டதாக விளக்கமளித்தார். பிறகு ரதி எழுதிய தொடரில் மூன்று பகுதிகள் வெளிவந்த பின் ரதி ஒரு பாசிஸ்ட் என்றும் தனது தளத்தில் கடுமையாக விமரிசிக்கப் போவதாகவும் மின்னஞ்சல் அனுப்பினார். ( இதை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் )

புலித்தலைமை – புலி அணிகள், புலிகள் – புலி அனுதாபிகள் என்று பகுத்துப் பார்க்கும் புரிதலை கொண்டிருப்பதாக கூறும் தோழர் இராயகரனுக்கு ரதி எழுதத் துவங்கும் முன்னரே அவர் ஒரு பாசிஸ்ட் என்ற உண்மை தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் வாழ்த்து தெரிவிக்க அவசியம் என்ன? ஒரு வேளை அதன் பிறகுதான் இந்த உண்மையை அவர் கண்டுபிடித்தார் போலும். கட்டுரையாளர் ரதி ஒன்று புலி அனுதாபியாக இருக்கவேண்டும். (தற்போதைய கடிதத்தில் தன்னைப்பற்றி அவரே அவ்வாறுதான் கூறிக்கொள்கிறார்.) அல்லது அவர் தந்திரமாக மறைத்துக் கொண்டு வினவு தளத்தில் ஊடுருவிய ஒரு நரித்தனமான பாசிஸ்ட்டாக இருக்க வேண்டும். இதுதான் இரயாவின் கருத்து.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய ஆதாரங்களுடன் இதை எங்களுக்கு அவர் தெரிவித்திருக்கலாம். ஆனால் அத்தகைய ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை. மாறாக வினவு தளத்தின் மீதான விமரிசனமாக அவர் எழுதி வரும் தொடரில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

“நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின்துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு”.(பாகம்1)

“ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒருவர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது”. (பாகம்1)

“தமிழ் பாசிச வரலாற்றுக் கல்வியை இந்தியப் பொதுவுடமை இழந்து நிற்கின்றது”.(பாகம்-1)

“புலி பாசிச பிரச்சாரம் எது?, பொது மக்கள் கருத்து எது?, என்று பிரிக்கின்ற அந்த அரசியல் இடைவெளியை இன காணமுடியாதுள்ளனர்.” (பாகம்-2)

“கடந்த காலத்தில் புலிப் பாசிசம் ஆடிய பாசிச ஆட்டத்தை, புதிய ஜனநாயகம், புதியகலாச்சாரம் தெளிவாக அம்பலப்படுத்திப் போராடியது. நாம் நாட்டை விட்டு வெளியேறி செயலற்றுப் போன ஒரு இடைக்காலத்தில், எமக்கே அது துல்லியமாக வழிகாட்டியது. இப்படி தோழர்கள் வரலாறு இருக்க, இதையும் மீறி புலிப்பாசிசம் தோழர்களுக்கு தனது வரலாற்றை மட்டும் கற்றுக்கொடுக்க முனைகின்றது.” (பாகம்-3)

இவை அனைத்தும் மிகக் கடுமையான விமரிசனங்கள். “இது வினவு தளம் தெரிந்தே செய்யும் தவறு” என்று கூறுவது மட்டுமின்றி புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்தின் இதழ்கள் புலிகள் தொடர்பாக கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு எதிராக வினவு தளம் செயல்படுவதாகவும் இரயா குற்றம் சாட்டுகின்றார். ஆனால் ஒரு பாசிஸ்ட் பிரச்சாரம் செய்வதற்கு தெரிந்தே மேடை அமைத்துக் கொடுப்பதாக கூறும் இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எங்கே? அதை நான்காவது பகுதியில் அவர் வழங்குவாராம்.( “அவரை (ரதியை) நாம் பாசிட் என்று ஏன் அழைக்கின்றோம், என்பதை பகுதி 4 ல் வெளிக்கொண்டு வரவுள்ளோம்.”எம் முந்தைய இடுகைக்கு இரயா அனுப்பியபின்னூட்டம்)

முதலில் குற்றச்சாட்டு, தீர்ப்பு, அபிப்ராயத்தை உருவாக்குதல்- பிறகு ஆதாரங்களை சமர்ப்பித்தல்.! இதனை ஜனநாயக வழிமுறை என்று யாரேனும் அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம்.

அடுத்தது தோழமை உறவு பற்றியது. இரயா – பு.க, பு.ஜ – வினவுக்கு இடையிலான தோழமை உறவு பற்றி வாசகர்களுக்கு தெரியும். இதனை விளக்கத் தேவையில்லை. தோழர் இரயா தனது தளத்தில் ரதியின் தொடரை கடுமையாக விமரிசித்து எழுதப்போவதாக ஒரு அறிவிப்பைத்தான் கடிதம் மூலம் எங்களுக்கு வெளியிட்டார். அவர் விரும்பும் வகையில் ரதியின் தொடரை உடனுக்குடன் அம்பலப்படுத்தி வினவு எழுதியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு எழுதத் தவறியதால்தான் தான் எழுத நேர்ந்ததாகவும் இதற்கு விளக்கமும் கூறுகிறார். அவரது கடிதத்திற்கு வினவு அளித்த பதிலில் காணப்பட்ட தோழமை உணர்வை பலவீனம் என்றோ கொள்கைப் பிறழ்வை மறைப்பதற்கான மழுப்பல் என்றோ அவர் புரிந்திருக்கும் பட்சத்தில் – கொஞ்சம் கஷ்டம்தான்.

இரயாவைப் போல அடுத்தடுத்து அவருக்கான பதில் கட்டுரைகளை நாங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு இது ஒரு ‘இயலாமை’; தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லாததால் ஏற்படும் இயலாமை; கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் இயலாமை; தனது தனிப்பட்ட மன உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்பட விரும்பாதவர்களுக்கு ஏற்படும் இயலாமை. ஆனால் இரயாவுக்கும் எமக்குமான உரையாடல் தனிப்பட்ட விவகாரமாக இனிமேலும் இல்லை. பொதுவெளிக்குள் வந்துவிட்டது. வினவு வாசகர்களில் சிலரும் வினவின் நிலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் நாங்கள் அஞ்சவில்லை – ரதி வினவு தளத்தில் பாசிசப் பிரச்சாரத்தை செய்து விடக்கூடுமோ என்று அஞ்சாததைப் போலத்தான்.

ரதி எழுதக்கூடிய எழுத்துகளுக்கு வெளியே அவர் ஒரு பாசிஸ்ட் என்பதுதான் இரயாவின் நிலை. ரதி ஒரு புலி அபிமானி என்பது எங்களுக்கோ வினவின் வாசகர்களுக்கோ தெரியாதது அல்ல. இருந்தும் அவர் கூறவிரும்பும் அகதி வாழ்க்கையின் அனுபவங்களை கூறட்டும். அவர் கூறுகின்ற அல்லது கூறாமல் விட்ட அனுபவங்களை, வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கும் உண்மையை விவாதத்திற்கு உட்படுத்துவோம். அதுதான் ஈழத்தமிழ் மக்களுக்கும், இந்தியத்தமிழ் வாசகர்களுக்கும் இன்று தேவைப்படுவது என்பதே வினவு கூறிவரும் நிலைப்பாடு.

அந்த வாய்ப்பு மூடப்பட்டுவிட்டது. விவாதத்திற்கு உரியவர் ரதி அல்ல. அவருக்கு  வினவு மேடை அமைத்துக் கொடுத்தது சரியா தவறா என்பதே இப்போது விவாதப் பொருள். வறட்டுவாதமா, மார்க்சியமா என்பதே விவாதப்பொருள். இப்பிரச்சினையில் தோழர் இரயாவை முன்னுறுத்தி வறட்டுவாதம் குறித்த விவாதத்தை நடத்த நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதுதான். எனினும் இந்நிலையை நாங்கள் தோற்றுவிக்கவில்லை.

இப்பிரச்சினையில் எமது விமரிசனத்தை  சில நாட்கள் இடைவெளியில்  எழுதுகிறோம். பிற பணிகள் இருப்பதனால் சில நாட்கள் பொறுத்திருக்க கோருகிறோம். மார்க்சியவாதிகளை புலிகள் கொன்றொழித்தார்கள் என்பதை நாம் அறிவோம். வறட்டுவாதம் மார்க்சியத்தைக் கொல்லும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.