ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது.

 

கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவரது அகதித் தஞ்ச மொழிபெயர்ப்பு அனுபவத்தில் அவர் நூற்றுக்கணக்கான பெடியன்களையும் ஐம்பது அறுபது பெட்டைகளையும் கண்டுவிட்டதால் இந்தப் பெடியனை மட்டும் தனியத்தெரிந்திருக்க ஒரு நியாயப்பாடும் இல்லைத்தான். இருந்தாலும் இவனுக்கும் ஏதாவது ஸ்பெசல் கதைகள் இருந்து அது தனக்கு நினைவிருந்தால் ஆளை அடையாளம் காணுவதொன்றும் கஸ்ரமான காரியமில்லை என்று அவர் நினைத்தார்.

 

குமாரசூரியருக்குத் தெரியவருகிற ஸ்பெசல் கதைகளில் சில அவரை அடுத்த வார்த்தை பேச முடியாமல் குரலடைக்கச் செய்திருக்கின்றன. சில பல்லைக்காட்டாமல் உள்ளுக்குள் சிரிக்கவும் வைத்திருக்கின்றன. திருகோணமலையில் ஐந்து பள்ளிக்கூடப் பெடியங்களை ஆமி சுட்டதில் செத்தவனுடைய தம்பிக்காரனின் தஞ்ச வழக்கு விசாரணைக்கு குமாரசூரியர்தான் மொழிபெயர்த்தார். அன்றைக்குத் தம்பிக்காரன் அழுது முடித்து கண்ணைத் துடைத்தபிறகும் குமாரசூரியர் தழுதழுத்துக்கொண்டிருந்தார். விசாரிக்கிறவன் எப்பவும்போல விறைச்ச தலையனாக முகத்தை வைச்சுக் கொண்டிருந்தாலும் குமாரசூரியர் சொல்லச் சொல்ல ரைப் அடிக்கிற வெள்ளைக்கார மனிசி பேயறைஞ்சவள் போலத்தான் இருந்தாள். பக்கத்தில இருந்த கரித்தாஸ் பெட்டையும் அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

இரண்டு மூன்று வருசத்துக்கு முதல் ஒரு பெடியனின் முதலாவது விசாரணையில் அவன் தன்னை சிங்கள ஆமி இரும்புச் சங்கிலியால் கட்டி அடித்தது என்றான். சொன்ன எல்லாத்தையும் ரைப் அடிச்சு கையெழுத்து வாங்கி அனுப்பியவனை ஒன்றரை வருசத்துக்குப் பிறகு இரண்டாவது விசாரணைக்கு கூப்பிட்டபோதும் குமாரசூரியர்தான் மொழிபெயர்க்க அழைக்கப்பட்டார். இதுவொரு தெய்வச்செயல் என்றே குமாரசூரியர் மனிசிக்குச் சொன்னார். ஏனென்றால் இம்முறை விசாரணையில் அந்தப்பெடியனை சிங்கள ஆமி கயிற்றால் கட்டி அடித்திருந்தது. இதை அப்படியே மொழிபெயர்த்துச் சொன்னால் என்ன நடக்குமென்று குமாரசூரியருக்கு நல்லாவே தெரியும். வழக்கு நிராகரிக்கப்பட்ட கத்தைத் தாள்களில் ஏதாவது ஒரு பக்கத்தில் இலக்கமிட்டு முதலாவது விசாரணையில் தன்னை இரும்புச் சங்கிலியால் கட்டியதாக கூறிய தஞ்சக் கோரிக்கையாளர் இரண்டாவது விசாரணையில் கயிற்றால் கட்டியதாக கூறியிருப்பதனால் அது உண்மைத்தன்மை இல்லாததாகிறது. ஆகவே இவரது அகதித் தஞ்ச வழக்குக் கோரிக்கையை ஏற்க முடியாது. நபர் முப்பது நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். நல்லவேளையாக பெடியன் தன்னைக் கட்டி அடித்தது சங்கிலியாலா கயிற்றாலா என குழம்பிப்போயிருந்தாலும் குமாரசூரியர் தெளிவாக இருந்தார். அவர் கயிற்றை சங்கிலி ஆக்கினார். அவனது கேஸ் அக்செப்ற் ஆனதா றிஜெக்ட் ஆனதா என குமாரசூரியருக்குத் தெரியாது. றிஜெக்ட் ஆகியிருந்தால் ஒரு காரணம் மட்டும் குறைந்திருக்கும் எனத் தெரியும்.

இன்னொரு அகதித்தஞ்சக் கேஸ் ஒரு கொலைக்கேஸ் ஆகாமல் தடுத்த கதையை அவரால் மறக்கவே முடியாது. அவனுக்கொரு முப்பது முப்பத்தொரு வயதிருக்கும். விசாரணை முழுதும் ஒருமாதிரியான மன அழுத்தத்தோடுதான் இருந்தான். நிறையக்கேள்விகளுக்கு எரிச்சலோடுதான் பதில் சொன்னான். அவற்றை மிகத்தன்மையான முறையில் குமாரசூரியர் மொழிபெயர்த்தார். மூன்று மணிநேரமாக அவனது கதையும் குறுக்கு விசாரணையும் போய்க்கொண்டிருந்தது. அவன் ஒரு இடத்தில் தான் இஞ்சை வந்து மூண்டு மாசம்தான் ஆகுதென்றும் ஊரில மனிசி மூன்று மாசம் பிள்ளைத்தாச்சியா இருக்கிறதா தகவல் வந்திருக்கென்றும் தன்ரை முதல் பிள்ளை பிறக்கும்போது தான் மனிசிக்கு பக்கத்தில இல்லை என்றதை நினைக்க அந்தராமாயும் விரக்தியாயும் வேதனையாயும் இருக்கென்று சொன்னான். அடுத்ததா விசாரணை அதிகாரி கேட்ட கேள்வியில் குமாரசூரியரே திக்குமுக்காடிப்போனார். முன்னால் க்ளாசில் இருந்த தண்ணியைக் குடிச்சிட்டு குரலைச் செருமி அவர் அதை மொழிபெயர்த்தார்.
” நல்லது. நீர் வந்து மூன்று மாசம் என்றும் அவா இப்ப மூன்று மாச கர்ப்பம் என்றும் சொல்லியிருக்கிறீர். அது உம்மடை பிள்ளையா இருக்க சான்ஸ் இருக்கிற அதேநேரம் அது உம்மடை பிள்ளை இல்லாமல் இருக்கவும் சான்ஸ் இருக்கல்லவா. எப்பிடி நீர் அது உம்மடை பிள்ளைதான் என்று உறுதியாச் சொல்லுவீர்.. அது இன்னொராளின்ர…” குமாரசூரியர் மெதுவாக முடிக்கவில்லை. அதுக்குடனை அவன் சடார் என்று எழும்பி கதிரையைத்தூக்கி தலைக்குமேல் ஓங்கி ஒரு வித்தியாசமான குரல் எழுப்பிக் கத்தினான். தன்ரை தலைதான் சிதறப்போகுது என்று தலையைப்பொத்திய குமாரசூரியர் லூர்த்ஸ் மாதாவே காப்பாற்றும் என்று கத்தினார். கரித்தாஸ் பெட்டையும் கீச்சிட்ட குரலில் கத்துவது கேட்டது. பெடியன் தூக்கின கதிரையோடு விசாரணை அதிகாரியை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைக்கவும்தான் குமாரசூரியன் டக்கென்று எழும்பி அவனைப் பின்வளத்தால் கட்டிப்பிடிச்சு ” தம்பி சொன்னாக் கேளும். பிறகு எல்லாம் பிழைச்சுப்போடும். டக்கெண்டு கதிரையைப்போட்டுட்டு என்ன ஏதென்று தெரியாமல் கீழை விழும்.” என்றார். அவனும் என்ன நினைச்சானோ கீழை விழுந்து காலிரண்டையும் நீட்டி மேலை பார்த்து அழத்தொடங்கினான். “எங்கடை கலாசாரத்தில இதுமாதிரியான கேள்விகளை ஒருவனை அவமானப்படுத்திக் கோபப்படுத்தத்தான் கேட்கிறது. ” என்று குமாரசூரியர் விசாரணைக்காரனுக்கு விளங்கப்படுத்தினார். அவன் தோளைக்குலுக்கி உதட்டைக்குவித்து ஊப்ஸ் என்றான். அத்தோடு அந்த கேஸ் இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டது.

குமாரசூரியர் ஒரு வழக்கறிஞர் அல்ல. ஒரு கேஸ் எழுதுபவரும் அல்ல. அவர் வெறும் மொழிபெயர்ப்பாளர். அவரால் வழக்கு விசாரணையில் எதையும் பெரிதாக மாற்றி விட முடியாது. ஆனால் நிறையப்பேர் “ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். எப்பிடியாவது சரியா வர ஏதாவது செய்யுங்கோ” என்று கேட்பார்கள். அவரால் செய்ய முடிந்ததெல்லாம் கயிற்றைச் சங்கிலியாக்கிற வேலைகளும் பின்வளத்தால் கட்டிப்பிடிப்பதும்தான். இதைவிட கொஞ்சம் கூடச் செய்ய முடிவதொன்றிருக்கிறது. யாராவது தங்களது வாக்குமூலத்தில் தொன்னூற்றுமூன்றாம் ஆண்டு யாழ்ப்பாணத்தில இருந்து ஐந்து லட்சம் சனங்களும் வெளியேறின போது என்று சொன்னால் தொன்னூற்று மூன்றை சொல்லாமற் கொள்ளாமல் தொன்னூற்று ஐந்து ஆக்கி விடுவார். விசாரணைக் கேள்விகளை டொச்சில் இருந்து தமிழில் சொல்லும்போது சாட்டோடு சாட்டா முகத்தைச் சரியான கவலையா வைத்திரும் என்றோ நாட்டுக்கு அனுப்பினா நான் கண்டிப்பாகக் கொலைசெய்யப்படுவேன் என்று சொல்லும் என்றோ சொல்லுவார். குமாரசூரியருக்குத் தெரியும். இவை ஒரு மொழிபெயர்ப்பாளன் செய்யக்கூடாத வேலைகள். ஆனால் இருபத்தைஞ்சு முப்பது வருசத்துக்கு முதல் அவரும் அகதித் தஞ்சம் கேட்டு வந்தவர் என்றதால் அவர் இப்படி இரக்கமாயிருந்தார். அப்போதெல்லாம் இன்றைய விசாரணைகளைப்போல நிறையக் கேள்விளும் நிறையப்பதில்களும் நிறையப் பொயின்ற்சுகளும் தேவைப்பட்டிருக்கவில்லை. குமாரசூரியரிடம் இருந்தது ஒரேயொரு பொயின்ற் தான். அல்பிரட் துரையப்பாவைத் துளைத்த குண்டு பாய்ஞ்சு வந்த கோணத்தை வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கட்டையான மனிதனால் சுடப்பட்ட குண்டென்றும் அதனால ஊரில இருக்கிற கட்டையர்களையெல்லாம் பிடிச்சுக் கொண்டு போய் கொல்லுகிறார்கள் என்றும் தான் ஒரு கட்டையனாக இருப்பதால் தன்னையும் கொல்லுவார்கள் என்றும் குமாரசூரியர் சொன்னார். விசாரணை அதிகாரியும் ஒரு கட்டையனாக இருந்ததாலேயோ என்னவோ கேஸ் அக்செப்ட் ஆனது. அந்த வருடம் நூற்றி எண்பது கட்டையர்களுக்கு கேஸ் அக்செப்ட் ஆனது.


0 0 0

“பெயர் சொல்லுங்கோ”
“பிரதீபன்”
“வேறு பெயர்கள் உண்டா?”
பிரதீபன் கொஞ்ச நேரம் முழித்தான். பள்ளிக்கூடத்தில் அவனுக்கு முழியன் என்றொரு பட்டப்பெயர் இருந்தது. அதைச்சொல்லலாமா விடலாமா என்று அவன் யோசித்தான்.
“அதாவது ஏதாவது இயக்கங்களிலோ அமைப்புக்களிலோ இருந்தால் அல்லது வேற ஏதாவது பெயரில நீங்கள் செயற்பட்டிருந்தால் அந்தப் பெயர்களைச் சொல்லவும்” என மொழிபெயர்க்கப்பட்டபோது பிரதீபன் தலையைப் பலமாக ஆட்டி இல்லை என்றான்.
“நீங்கள் வாயாலை சொன்னால்த்தான் அது ஒரு ஆவணமாகும்”
“இல்லை. வீட்டில தீபன் என்று கூப்பிடுவினம். அதை விட வேற பெயர் ஒன்றும் இல்லை”

வந்து சேர்ந்த இடம், வந்த வழி, யார் கூட்டிவந்தது, எவ்வளவு காலம் எடுத்தது, பாஸ்போட் எங்கே, அதற்கு என்ன நடந்தது, வேறேதாவது நாடுகளில் இதற்கு முதல் அகதிதஞ்சம் கோரியிருக்கிறீர்களா, அது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் நேரே சூரிச், ஆபிரிக்காவில இருந்து இத்தாலி இத்தாலியிலிருந்து சூரிச், கூட்டிவந்தது யாரென்று எனக்குத் தெரியாது, ஆபிரிக்காவில் ஒன்றரை வருசமும் இத்தாலியில இரண்டு நாளும் இத்தாலியிலிருந்து சூரிச் வர நாலு மணித்தியாலமும், பாஸ்போட் என்னட்டை இல்லை, அதைக் கூட்டிவந்தவர் வாங்கிட்டார், வேறு எந்த நாட்டிலும் அகதித் தஞ்சம் கோரவில்லை, கோராதபடியால் நிராகரிக்கவும் இல்லையென்று பிரதீபன் வரிசையாகச் சொல்லி முடித்தான்.

நிமிர்ந்து உட்கார்ந்த விசாரணை அதிகாரி பிரதீபனை கண்ணும் கண்ணுமாகப் பார்த்தார். பிரதீபன் சொண்டுகளையொருக்கா ஈரப்படுத்திக் கொண்டான். அவை டக் டக்கென்று உலர்வதுபோலப்பட்டது. அதிகாரி பேசத்தொடங்கினான். “சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியுமாதலால் நீங்கள் உங்களுக்கு அங்கே உயிர்வாழ முடியாத அளவிற்கு என்ன நடந்ததென்பதை மட்டும் சொல்லுங்கள்” என்ற முன்னறிவிப்போது அவன் ஆரம்பித்தான். “நீங்கள் இங்கே அகதித்தஞ்சம் கேட்பதற்கான காரணங்கள் என்ன..?”

தஞ்சம் கோருவதற்கான காரணம் ஒன்று

பிரதீபன் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தேன். ஏ/ எல் முடித்துவிட்டு கம்பசுக்கு ரிசல்ட் காணாதபடியால் இன்னொரு தரம் சோதனை எடுக்கலாம் என்றிருந்தேன். அப்போது இலங்கையில் சமாதானம் வந்தது. புலிகளும் யாழ்ப்பாணம் வந்தார்கள். ஆமியும் புலிகளும் றோட்டுகளில் கை குலுக்கிக் கதைத்தபடியால் நாங்களும் புலிகளோடு கதைத்தோம். எங்கள் ஊர் ஆமிக்காம்புக்கு முன்னால ஒருநாள் விடிய பிரபாகரனின் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்தும் ஆமிக்காரர் சிரிச்சுக் கொண்டு போனதால புலிகளோடு தொடர்பு வைக்கிறது பிரச்சனை இல்லையென்று நான் நம்பினேன். ஏனென்றால் புலிகள் தங்களது நிர்வாக மற்றும் வங்கிப் பிரிவுகளுக்கு உயர்தரம் படித்து முடித்த ஆட்களை வேலைக்குக் கேட்டிருந்தார்கள். வன்னிக்குள்ளை கடைசி நேரங்களில நடந்த சண்டையால அங்கை ஏ/எல் செய்த ஆட்கள் குறைவாயிருந்தார்கள். எனக்கு கிளிநொச்சியில அவையின்ர வங்கிப் பிரிவில வேலை கிடைத்தது. நான் கிழமைக்கொருக்காவோ ரண்டு கிழமைக்கொருக்காவோ யாழ்ப்பாணம் போவேன். முகமாலை ஆமிக்கும் நான் கிளிநொச்சியில வேலை செய்யிறது தெரியும். இப்பிடியாயிருக்கேக்கை திடீரென்று புலிகளின்ரை அரசியல்த்துறைக்காரர் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போயிட்டினம். அதுக்குப்பிறகும் கொஞ்சக்காலம் நான் கிளிநொச்சியில் வேலை செய்தேன். இரண்டாயிரத்து ஐஞ்சாம் ஆண்டு டிசம்பர் மாசக்கடைசியில நான் வேலையை விட்டுட்டு யாழ்ப்பாணம் வந்தேன். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு ஒக்டோபர் மாசம் என்னை ஆமிக்காரர் வீட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டு போனார்கள். புலிகளோடு தொடர்பு, புலிகளின் பணத்தை யாழ்ப்பாணத்துக்குக் கடத்தினது, ஊரில் பிரபாகரனுக்கு கட்அவுட் வைச்சது என்று சொல்லி ஒரு கிழமையாக என்னை சித்திரவதை செய்தார்கள். சித்திரைவதையின்போது ஒருவன் சமாதான காலத்தில் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தாலும் கண்கள் திறந்துதான் இருந்தன என்றான். அவர்கள் பேசியதிலிருந்து என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று நான் யூகித்துக் கொண்டேன். இதற்கிடையில் தெய்வாதீனமாக ஆமிக்குப் பெருந்தொகைப்பணத்தைக் கொடுத்து என்னை என்ர மாமா விடுவித்தார். காசை வாங்கிக்கொண்டு விட்டதால் என்ரை கைதை உறுதிப்படுத்துகிற ஆவணங்களை என்னால் பெறமுடியவில்லை.

தஞ்சம் கோருவதற்கான காரணம் இரண்டு

யாழ்ப்பாணத்தில் எனக்கு உயிராபத்து இருக்கிறது என்பதால் நான் கொழும்புக்கு போக வெளிக்கிட்டேன். கொழும்பில் சென்று சீமா படிப்பதுவும் எனது நோக்கமாயிருந்தது. கொழும்புக்கு வந்த கொஞ்ச நாளில் ஒருநாள் வெள்ளவத்தையில் வைத்து என்னைப் பிடித்துப் போனார்கள். அவர்கள் தங்களை ஈபிடிபி என்று சொன்னார்கள். நான் கிளிநொச்சியில் வேலை செய்தது என்னை ஆமி பிடித்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் கதைத்துக்கொண்டிருந்த போதே என்னைக் கன்னத்தில் அடித்தார்கள். அவர்கள் ஆளாளுக்கு விளையாட்டுத்தனமாக அடித்தார்கள். அடிக்கும்போது சிரித்துச் சிரித்து அடித்தார்கள். அப்பிடி அடிக்கிற நேரம் அவர்களில் ஒருவன் “நீ சிங்களவனுக்கு மட்டும்தான் காசு குடுப்பியா.. எங்களுக்குத் தரமாட்டியோ” என்று கேட்டான். அவன் கேட்டதொகை ஆமிக்குக் குடுத்த அதே தொகையாயிருந்தது. ஆமிதான் செற்றப் செய்து அவைக்குச் சொல்லிக்குடுக்குது என்று நான் நினைக்கிறன். இந்த முறையும் மாமாதான் காசு தந்தவர். பன்ரண்டாவது நாள் அவையளே என்னைக் கூட்டிக்கொண்டு போய் வீட்டை விட்டவை. விடும்போது ஒருவன் சொன்னான். “இவனொரு பொன் முட்டை இடுகிற வாத்து. வாத்தை உடனை அறுக்கக் கூடாது” என்று. அதுக்குப் பக்கத்திலிருந்தவன் பிலத்துச் சிரித்தான். அறுக்கிறது என்பது கொலை செய்யிறதுதான். உங்களுக்கு பொன் முட்டை இடும் வாத்துக் கதை தெரியாவிட்டால் அதையும் நான் சொல்கிறேன். ஒரு ஊரில ஒரு குடியானவனிடம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து இருந்தது……………………………

தஞ்சம் கோருவதற்கான காரணம் மூன்று

யாழ்ப்பாணத்தில் எனக்கு ஆமியால கொலை அச்சுறுத்தல் கொழும்பில எனக்கு ஈபிடிபியால கொலை அச்சுறுத்தல் இவை காரணமாக நான் இலங்கையில் இருக்கமுடியாமல் போனது. இலங்கைக்கு வெளியே எங்காவது போனால்த்தான் எனது உயிரை நான் காப்பாற்றிக் கொள்ளமுடியுமென்பதால் மாமா அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதுவரையும் நான் எங்காவது பாதுகாப்பாகத் தங்கவேண்டியிருந்தது. மட்டக்களப்பில் கருணா குழு.. மலையகத்தில் தங்க வசதியில்லை என்ற காரணங்களால நான் வவுனியாக்கு போனேன். அங்கும் புளொட் பிரச்சனை இருந்ததுதான். மாமா ஏற்பாடுகளைச் செய்யும்வரை ஓரிடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக நான் வவுனியாவிற்கே போனேன். அங்கு இரண்டுமாதங்கள் வரை பிரச்சனையேதும் எனக்கு இருக்கவில்லை. மாமா பாஸ்போட் எடுக்க கொழும்புக்கு உடனடியாக வரும்படி சொன்னார். அதற்கடுத்த நாள் கூமாங்குளத்தில் வைச்சு என்னை ஒரு ஆட்டோவில் வைச்சுத் தூக்கி நாலுபேர் அடியடி எண்டு அடித்தார்கள். அவர்கள் பொல்லுகள் வைத்திருந்தார்கள். முகத்தை மூடிக்கட்டியிருந்தார்கள். அவர்கள் ஏன் அடிக்கிறோம் என்ற காரணத்தையும் சொல்லவில்லை. அவர்கள் யாரென்பதையும் சொல்லவில்லை. அவர்கள் புளட்டாக இருக்கலாம். ஆமி இன்ரலிஜென்ற் ஆக இருக்கலாம். எனக்கு சரியாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆனால் அவர்கள் கொலை வெறியோடு அடித்தார்கள். கடவுள் கிருபையில் அந்த காட்டு வழியால் சனங்கள் அப்போது வந்தார்கள். அவர்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.

எனக்கு வடிவாகத்தெரியும். நான் இலங்கையில் இருந்தால் கொல்லப்படுவேன். அவர்கள் என்னை குறிவைத்து கொலைசெய்ய அலைகிறார்கள். எனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டால் இலங்கைக்குள் நுழைகையிலேயே நான் உயிரிழக்க நேரிடலாம். மனிதாபிமானம் மிக்க இந்த நாடு எனது உயிரைக்காக்க எனது கோரிக்கைக்கு சாதகமான பதிலைத்தரவேண்டும்.

0 0 0

இருபது தாள்களில் பிரதீபனின் வழக்கு டொச்சில் எழுதப்பட்டிருந்தது. “வேறு ஏதாவது சொல்ல இருக்கிறதா” என்றான் விசாரணை அதிகாரி. பிரதீபன் இல்லையெனத் தலையாட்டிவிட்டு “இல்லை” என்றும் சொன்னான். அதிகாரி கத்தைத்தாள்களை ஒன்றாக்கினான். “ஆகவே உமக்கு இலங்கையில் ஆயுததாரிகளான இலங்கை ராணுவம், ஈபிடிபி, கருணாகுழு, புளொட்டோ புலனாய்வுத்துறையோ என்றறிய முடியாத ஒரு குழு இவர்களால உயிராபத்து என்கிறீர். உமது வாக்கு மூலத்தின் அடிப்படையில் புலிகளால் உமக்கு உயிராபத்து இல்லை. நல்லது. இப்போது இந்த தாள்கள் ஒவ்வொன்றிலும் நீர் கையெழுத்து இடவேண்டும்” என நீட்டினான்.

பிரதீபன் நாக்கைக் கடித்து.. ஸ்ஸ் என்றொரு சத்தமிட்டு இரண்டு கைகளாலும் தலையைப்பிடித்துக்கொண்டு “எனக்கு இப்ப நினைவுக்கு வருகுது. வவுனியால என்னை கடத்திக்கொண்டுபோய் அடிச்சதெண்டு சொன்னனான் எல்லோ.. அது ஆரெண்டு விளங்கிட்டுது. அது புலிகள் தான். இதை என்ரை கேசில சேர்க்கவேணும். சேர்க்கலாமோ ” என்று கெஞ்சுமாப்போல கேட்டான். அதிகாரி நெற்றியைச் சுருக்கிக்கொண்டு “எப்பிடித் தெரியும்” என்றார்.
“ஓம்.. எனக்கு அடி மயக்கத்தில சரியா தெரியாட்டியும் அடிச்சுக் கொண்டிருக்கேக்கை அவர்களில் ஒருவருக்கு வோக்கி மெசேச் வந்தது. அவர் அதில கதைச்சு முடிய ஓவர் ஓவர் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றவர். இது எனக்கு கிளியராக் கேட்டது. நான் சுவர் பண்ணிச் சொல்லுவன் அவையள் புலிகள்தான். ”

அவன் கடைசியாச் சொன்னதெல்லாத்தையும் குமாரசூரியர் டொச்சில மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

0 0 0

ரிவியில இப்ப அந்தப்பெடியன் இன்னும் இன்னும் உச்ச ஸ்தாயியில கத்தினான். “ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ். ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..” ஒவ்வொருக்காவும் குதிக்கால்களை உயர்த்தி உயர்த்தி அவன் கத்தினான். கமராக்காரர் அவனை நிறையத்தரம் போகஸ் பண்ணியிருந்தார். ஒவ்வொரு முறையும் அவன் குறையாத வேகத்தோடை இருந்தான். ஆனால் எவ்வளவுதான் தலையைத் தேய்ச்சு யோசிச்சும் குமாரசூரியரால அவனை அடையாளம் காணமுடிய வில்லை.

அப்பவே சொன்னமாதிரி ஸ்பெசலான கதைகளின்றி வழமையான கதைகளையும் கதை மாந்தர்களையும் குமாரசூரியரால் நினைவு வைச்சுக் கொள்ள முடிகிறதில்லை.

http://sajeek.com/archives/447