தோழர் வினவின் தளத்தில் கூறும் ஈழ அனுபவம் புரட்டுத்தனமானது

கடந்த வரலாற்றில் தமிழ்மக்கள் சந்தித்தது, புலிப் பாசிசம் கூறுவது போல் ஒரு அனுபவமல்ல. பேரினவாதம் முதல் இயக்கங்கள் வரை, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின. புலிகள் மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை வழங்கினால், தாம் அரசியல் அனாதையாகிவிடுவோம் என்று வெளிப்படையாக துண்டுப்பிரசுரம் போட்டு சொல்லுமளவும் புலிப் பாசிசம் கொட்டமடித்தது.

(பார்க்க : தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு)  தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மாணவர் சமூகம் முன்னிறுத்தி, புலிப் பாசிசத்துக்கு சவால் விட்டது. இது புலிகளை அரசியல் அனாதையாக்கி விடும் என்று புலிகள் பகிரங்கமாகவே கூறினர். இவை எல்லாம் அந்த மண்ணில் நடந்தது. இப்படிப் போராடியவர்களைத் தான், புலிகள் தேடி அழித்தனர். இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவன் விமேலேஸ்வரன், புலிகளால் படுகொலை செய்யப்பட்டான்;. பார்க்க பு.ஜ கட்டுரையை (புலிகளின் பாசிசம்);  இந்தப் பாசிசத்தை முகம் கொடுக்காத சமூக உறுப்பினர் எம் மண்ணில் யாரும் கிடையாது. இந்த வகையில் தான் இயக்கங்களுக்கும் அதன் அடிவருடித்தனத்துக்கும் எதிராக, 22 வருடத்துக்கு முந்தைய பல்வேறு துண்டுப் பிரசுரங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தோம். இன்னமும் கொண்டு வரவுள்ளோம்.    

 

எம்மண்ணில் இயக்கங்கள் பாசிசமயமாகிய போது, மாணவர் சமூகமும் இயக்கங்களில்  இருந்த புரட்சிகர பிரிவுகளும் இணைந்து தான் மக்களுக்கான ஒரு உண்மையான போராட்டத்தை முன்தள்ளினர். சமூகத்தின் உறுப்பினர்கள் பலர் இதை ஆதரிக்க, மாணவர் சமூகம் இதன் பின் திரண்டு வீதியில் இறங்க, அனைவருக்கும் தெரியும் வண்ணம் போராட்டங்கள் நடந்தன. இப்படி இருக்க, மாணவர் அனுபவம் பற்றி வினவு தளத்தில், திரித்துப்புரட்ட பாசிட்டுகள் முனைகின்றனர்.

 

இதே மாணவர் தலைமை தான், பேரினவாதத்துக்கு எதிராக பாரிய போராட்டத்தை நடத்தியது. இப்படி போராடிய மக்களை, பாசிசம் ஒடுக்கி தோற்கடித்த போராட்ட வரலாறு இருக்கின்றது. இதை மூடிமறைப்பது தான், பாசிட்டுகளின் அன்றும் இன்றும் மையமான அரசியல் நோக்கமாக இருக்கின்றது.    

 

இப்படி மக்களின் வாழ்வு சார்ந்த, அவர்கள் மேலான ஒடுக்குமுறை பற்றிய உண்மைகள் பலவாக இருக்கின்றது. காணாமல் போன குழந்தைகள், இழுத்து செல்லப்பட்டவர்கள், வீதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், சித்திரவதைகள் என்று, இவைகளை அன்று பேரினவாதம் மட்டும் செய்யவில்லை. இயக்கங்களும், புலிகளும் இதையே தங்கள் அரசியலாகவே செய்தனர்.      இப்படி இருக்க, அந்த காலத்தில் மண்ணில் வாழ்ந்ததாக கூறும் வினவு கட்டுரையாளர், 

 

புலிப்பாசிசத்துக்கு ஏற்ப வரலாற்றை திரித்தும் புணர்ந்தும் கூறுகின்றார். எமது சர்வதேசியத் தோழர்களுக்கு, தமிழ் பாசிசத்தை தமிழன் வரலாறாக தமது சொந்த அனுபவமாக காட்டி கூற முனைகின்றனர். இப்படி கூறும் புலிப் பாசிச வரலாற்றை வரலாறாக கூற, அதை எதிர்வினை செய்ய முடியாத நிலையில், எம் சர்வதேசியத் தோழர்களோ செயலற்று நிற்கின்றனர்.

 

தமிழ் மக்களை இன்றைய இந்த அவல நிலைக்கு கொண்டு வந்தது, வலது புலிப்பாசிசம் தான். தாமல்லாத அனைவரையும் கொன்றது. இப்படி எம் வரலாறு இருக்கின்றது. பாசிசத்துக்கு எதிரான வரலாற்றை குழி தோண்டி புதைத்து விட்டு, வரலாற்றை அவர்களே சொல்ல முற்படுகின்றனர். இந்த வரலாற்றின் தொடர்ச்சியுடன் பயணிக்காத எம் தோழர்களுக்கு, அவர்களின் தளத்தில் புகுந்து புதுக் கதை சொல்ல முனைகின்றனர். பாசிசம் பொதுவுடைமைக்குள் தங்கள் கருத்துக்காக எப்படி வேலை செய்யும் என்பதை, இங்கு நாம் இவர்கள் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

 

தோழர்கள் வென்று எடுத்தலையும், ஈழ சமூகமே பாசிசமாகிவிட்ட சூழலையும் கருத்தில் கொண்டு, நேர்மையாகத் தான் அணுக முற்படுகின்றனர். ஆனால் மூடிமறைத்த பாசிசத்தை எதிர் கொண்டு, அதை முறியடித்து எதிர்வினையாற்ற அவர்களால் முடிவதில்லை. உண்மையில் தோழர்கள் இதை செய்து இருந்தால், எமது இந்த விமர்சனம் அவசியமற்றது. 

 

தோழர்கள் பாசிசத்தின் பிரச்சாரத்தையும், அப்பாவி மக்களையும் பிரித்தறியும் அரசியல் அடிப்படை என்ன என்ற அரசியல் வரையறையைக் கொண்டிராத ஒரு அணுகுமுறையை பொதுவில் கையாளுகின்றனர். தமிழகச் சூழல் சர்ர்ந்த பொது அணுகுமுறைக்கு ஊடாகவே, எம்மைச் சுற்றிய புலி பாசிசத்தையும் அணுகுகின்றனர். உண்மையில் தோழர்கள் இந்த பாசிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை கற்றுக்கொள்வதில் கூட, ஒரு இடைவெளியை உருவாக்கியுள்ளனர்.  புலிப்பாசிசம் கட்டமைத்த தேசியமும், அதற்கு எதிரான இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய ஒடுக்குமுறையும், தனக்கு ஏற்ப தொடர்ச்சியான ஒரு பிரச்சாரத்தை தமிழகத்தில் கட்டமைத்து வந்தது. இந்த வீச்சுக்கு முன்னால், பொதுவுடமை இடைக்காலத்தில் செயலற்ற தன்மையில் இருந்தது. கடந்த காலத்தில் ஈழத்தில் என்ன நடந்தது என்பதையும், தோழர்களின் முந்தைய காலத்தை மீளக் கற்றுக்கொள்வதன் மூலம், வரலாற்றை சரியாக இனம் காணமுடியும்.        

 

கடந்தகாலத்தில் புலிப் பாசிசம் ஆடிய பாசிச ஆட்டத்தை, புதியஜனநாயகம் புதிய கலாச்சாரம் தெளிவாக அம்பலப்படுத்திப் போராடியது. நாம் நாட்டை விட்டு வெளியேறி செயலற்றுப் போன ஒரு இடைக்காலத்தில், எமக்கே அது துல்லியமாக வழிகாட்டியது. இப்படி தோழர்கள் வரலாறு இருக்க, இதையும் மீறி புலிப்பாசிசம் தோழர்களுக்கு தனது வரலாற்றை மட்டும் கற்றுக்கொடுக்க முனைகின்றது. தோழர்கள் எதிர்வினை செய்ய முடியாத சூழலுக்குள் முடங்கிவிடுகின்றனர். புதியஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களில், ஈழத் தமிழ் மக்கள் தொடர்பாக வெளியாகிய பழைய கட்டுரைகளை (எம்மிடம் இருப்பவை உங்கள் பார்வைக்கு இங்கு கொண்டு வருகின்றோம்.

 

(தற்போதைக்கு 1987, 1988, 1989, 1990, 1991 ஆண்டுகளில் வெளியாகிய கட்டுரைகள் இங்கு பார்க்க முடியும்) குறிப்பாக இவை மிக முக்கியமான கட்டுரைகள்

 

1. அதிர்ச்சி : போதை மருந்து கடத்தி இஸ்ரேலிடம் ராணுவ பயிற்சி!
 
2. புலிகளின் பாசிசம்  

 

3. விடுதலைப் புலிகளின் இழிசெயல்!

 

4. ஈழம் : விடுதலைக்கு எதிராக புலிகளின் பாசிப் போக்குகள்

 

5. ஈழம் : விமர்சனமும் விளக்கமும்

 

6. ஈழம் : துரோகத்தை நோக்கி…?!

 

7. ஈழம் : கொலைகளுக்கு யார் பொறுப்பு

 

8. டாக்டர் இராஜனி திரணகம கொலை

 

9. விட்டெறிந்த காசுக்கு விலைபோன புலிகள்

 

10. பிரபாகரனும் - தமிழ் இனவாதக் குழுக்களும்
 

விரைவில் முழுமையாக ஆவணப்பகுதியில் இவை அனைத்தும் கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். வரலாற்றை திரிப்பதற்கு எதிராக, இங்கும் வரலாற்றின் உண்மைகளை நாம் தரிசிக்க முடியும்.


பி.இரயாகரன்
25.08.2008

 

தொடரும்

(இதில் வினவு கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்ல, ஒரு பாசிட், என்பதை நுணுக்கமாக பார்ப்போம்;)