சமூகப் பிரக்ஞை மிக்க பல பாடல்களைச் சிங்கள இசை உலகிற்கு அளித்து சிறந்த பாடல் ஆசிரியராக அறியப்பட்ட சுனில் ஆரியரத்ன, மக்கள் மனதில் இடம் பிடித்த பல பாடல்களுக்கு இசையமைத்த ரோகன வீரசிங்க, அரச அடக்கு முறைகளினாலும் ஆயுத வன்முறைகளினாலும் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் புரட்சிக் குயில் என விதைந்துரைக்கப்பட்ட நந்தா மாலினியின் இனிய குரல் ஆகியன இணைந்து உருவாகிய இந்தப்பாடல் அதன் கருத்துருவாக்கம், இசை என்பவற்றிற்காக வரலாற்றில் இடம் பெற்றதுடன் சிங்கள இசை உலகின் அன்றைய செல்வழியைக் குறித்து நின்றது. இப்பாடல் 90களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது.

 

 

தமிழ் மக்களின் ஒரு விடுதலைக் கீதத்தைப் போல ஒடுக்கு முறையாளர்களுக்கு எதிராக இந்தப்பாடல் ஒலித்தது. ஒடுக்கு முறைக்கு உள்ளான எந்தக் குழுவினரும் தம்மை இந்தப்பாடலில் இனம் காணமுடியும். இன்று எதிரியை  வீழ்த்தி இறுமாந்திருக்கும் "அரசரைப்" போற்றிப்பாடும் யுகம் ஒன்றில் அந்தப்பாடல் மறக்கடிக்கப்பட்டு, தமது உண்மையான பாடல் எது என்பதை ஒடுக்கப்படும் மக்களுக்கும் மறக்க வைக்கப்படும் நாட்களில் இந்தப்பாடலை நினைவில் நிறுத்துவது பொருத்தமாகிறது. அரசனைப் போற்றிப்பாடினால் யானையின் பாரமளவு பொன்னும் மணியும் நிலங்களும் பரிசாக கிடைக்கும் யுகம் ஒன்றை மீட்டு வந்திருக்கும் இந்த நாட்களில் மக்களின் பாடல்களை மக்களே மறக்கத் தொடங்கும் அபாயத்தின் அறிகுறிகள் தெரிகின்றன.

 

 

பாடல் வரிகள்

துலாக்கிணறுகளில் ஊற்றெடுப்பது நீரல்ல இரத்தமே

பழுத்த பனம் பழங்களுக்குச் செந்நிறம் தருவதும் இரத்தமே

பழுத்த மிளகாய்களுக்கு நிறம் தருவதும் இரத்தமே

நெற்றித் திலகத்தில் சிவப்பாவதும் இரத்தமே

 

இரத்தம் சிந்தா பூமி ஒன்றில் சுவாசிக்க வழி விடு

நாம் விரும்பிய கோயில்களுக்கு நாம் செல்ல வழி விடு

நமது குழந்தைகளுடன் சிரித்து மகிழ்ந்திருக்க வழி விடு

சுதந்திரமாக நாம் பேசிட வழி விடு

 

வெல்வதற்கு உலகில் இன்னும் எத்தனையோ உண்டெனத் தெரிந்துகொள்

கிடைத்தற்கரிய ஓர் உலகைப் பெற்றிடும் ஓர் சரியான பாதையைத் தேடு

எங்கள் இளங்குருதியைப் பாலை வெளியில் எரிக்காதே

பச்சைப் பிணங்களினால் மயானமாக்கப்பட்ட

பூமியில் ஆட்சி அமைத்து எதைக் காணப்போகிறாய்?

 

தமிழாக்கம் : சந்துஸ்

Video Editing by : Indika Udugampola

 

நன்றி புகலி