01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

இலக்கிய வியாபாரம் செய்யும் காலச்சுவடும், விபச்சார அரசியல் செய்யும் சேரன் அன்ட் கோக்களும்

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சேரன் அன் கோவும், சிவத்தம்பியும் புலிக்கு பின் நின்று துதிபாடி அரோகரா போட்டத்தை, இன்று மறைக்க வேண்டிய அரசியல் அவலம். காலச்சுவடு கண்ணனுக்கு கல்லாப் பெட்டியை மேலும் நிரப்பும் இலக்கிய கவலை.

ஜீனியர்விகடன் பத்திரிகை விற்பனை அதிகரிக்க பிரபாகரன் இருப்பதாக காட்ட, படத்தில் ஒரு மோசடி செய்தனர். இதுபோல் காலச்சுவடு ஈழத்து மக்களின் பெயரில் பணம் சம்பாதிக்க, அகதிகளின் பெயரில் தாமே ஒரு புனைவை எழுதி வெளியிட்டுள்ளனர். இது இலங்கையரால் எழுதப்படவில்லை. அதற்கு சில எடுத்துக்காட்டை நாம் எடுத்துக் காட்டிவிட்டு மற்றைய பிழைப்புவாத மோசடிக்குள் செல்வோம்.

இந்தப் புனைவு வன்னியில் இல்லாத ஒன்றையும், வழக்கில் இல்லாத சொற்களும் கொண்டது. இந்தியாவில் உள்ளதை, வன்னியில் இருப்பதாக எமக்கு காட்ட முனைகின்றனர். வன்னியில் ஆறில்லை. காலனியில்லை. பட்டினங்கள் இல்லை. ஆனால் புனைவு அதன் பெயரால் எழுதப்பட்டுள்ளது. வன்னியில் காலனி, பட்டணம் என்ற சொல் புழக்கத்தில் கிடையாது. அது இல்லாத போது, எப்படி மொழி இருக்கும். ஜீனியர்விகடனை மிஞ்சி மொழியைச்  சார்ந்து, உருவாக்கிய இந்த புனைவு சார்  வாக்கியங்களில் "வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.", "சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல்", "காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும்", "ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின., "வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது" இல்லாத சொற்களைக் கொண்ட புனைவு இது.

அடுத்து இலங்கைத் தமிழர் நடைமுறையில் பயன்படுத்தாத "ஈழம்" என்ற சொல், இதை தெளிவாக துல்லியமாக அம்பலமாக்குகின்றது. இதை பல இடத்தில் பல கோணத்தில், கால்சுவட்டில் புனைந்தவர் இங்கு தாரளமாகவே பயன்படுத்தியுள்ளார் "ஈழத்தில்", "ஈழத்தமிழர்", "ஈழப்போராட்டம்" "ஈழப்போரின்" "ஈழப்போராட்டத்தின்" "ஈழ அரசியலுக்கு" "ஈழத்தமிழர்" "ஈழப் படத்தையும்" இப்படி பற்பல சொற்கள். இலங்கைத் தமிழ் மக்கள் தமிழீழம், தமிழ்மக்கள் என்றுதான் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில்தான் தமிழ்மக்களை, ஈழ என்ற சொல்லை சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். ஈழ மக்கள் என்று ஈழ அரசியல்… என்று, இலங்கைத் தமிழர் பயன்படுத்துவது கிடையாது. வன்னி நாசிச முகாமின் பெயரில் புனைந்தவர், இதில் அடி சறுக்கி நிற்கின்றார். இப்படிப் பல. மேற்கு கிழக்கு சொற்கள் ஊடாக, வன்னிமக்கள் தங்கள்  பிரதேசத்தை அடையாளம் காட்டுவதில்லை. கிளிநொச்சி வீழ்ந்தவுடன், ஆனையிறவு இராணுவம் இணைந்தது, என்பது தவறானது. ஆனையிறவு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக பளை வரை நீண்டு இருந்தது.

இந்த புனைவில் "செஞ்சோலை படுகொலை" பற்றி கூறப்படுகின்றது. "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்ற அந்த போலி அகதி இங்கு என்ன சொல்லுகின்றார். அவர்களோ அனாதையான செஞ்சோலை குழந்தைகள் தான் என்கின்றார். அதனால் தான் செஞ்சோலைப் படுகொலை என்கின்றார். இதைப் புலிகளும், இந்தியாவில் உள்ளவர்களும் தான், இப்படி பிணத்தை வைத்து ஒரு பொய்கு ஊடாக அரசியல் செய்கின்றளர். இதில் கொல்லப்பட்டவர்கள் செஞ்சோலை அனாதைக் குழந்தைகள் அல்ல. மாறாக இவர்களுக்கு தாய் தந்தை இருந்ததுடன், வன்னியல் பல பாடசாலைகளில் கல்விகற்ற வந்த உயர் தர மாணவர்கள். கட்டாய பயிற்சிக்கு புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள். இது வன்னி மக்களுக்கு நன்கு தெரிந்த விடையம். "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டும்." இது தெரியாமல் போனது. இதை விரிவாக பார்க்க இதை அழுத்தவும்.   (வீங்கி வெம்பிப் புழுக்கின்றது) இப்படி பல மூன்றாம் தரப்பாக நின்று, மொழியில் கூட புனைவு அம்பலமாகின்றது.

ஒரு இந்தியத் தமிழனால் மட்டும் தான், அன்னியமான மொழிசார் சொற்களுடன் எழுத முடியும். காலச்சுவட்டின் இலக்கிய வியாபாரத்துக்கு அப்பால், கட்டுரையின் அரசியல் நோக்கத்தை இனிப் பார்ப்போம்.

"அதீதமான புனைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈழப்போராட்டம் பற்றிய விளக்கத்தை நாம் புதிய முறையில் உண்மையின் வெளிச்சத்தில் காணவும் மதிப்பிடவும் வேணும். கண்ணன், இதற்கு உங்களுடையதும் காலச்சுவடுவினதும் பங்களிப்பும் ஆதரவும் தேவை." என்று புனைவர் அரசியல் உள்நோக்கோடு புனைகின்றார்.

"நாம் புதிய முறையில் உண்மையின் வெளிச்சத்தில் காணவும் மதிப்பிடவும்" முனையும் அரசியல் எது. அதன் நோக்கம் எது. வேறு ஒன்றுமல்ல, சேரன் சிவத்தம்பி போன்றவர்களின் மக்கள் விரோத அரசியலை, இன்று மீளவும் புதிய கோணத்தில் புதிதாக நிலை நிறுத்தவேண்டியுள்ளது. அதை "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்ற பெயரால், இதைக் காலச்சுவடு சொல்ல முனைகின்றனர்.

இதற்கமையவே "ஈழப்போரின் இறுதி நாட்கள்" என்று, ஏதோ புதிதாக உண்மைகளை தோண்டி எடுத்து சொல்வது போல், ஒரு நாடகத்தையே காலச்சுவட்டில் நடத்தியுள்ளனர். இதுவோ  வெளிவந்த உண்மைகள் மேலான, ஒரு புனைவு. கட்டுரையின் தரவுகள், புலிகளின் அழிவு அரசியல் உச்சத்தில் இருந்த காலத்தில் வெளிவந்தவைகளே தான். காலச்சுவட்டின் இந்த வன்னி புனைவாளர் சொல்ல, இதில் புதிதாக எதுவும் இருக்கவில்லை.

இதில் புலி மற்றும் அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எம்முடையது. இதை இங்கு காலச்சுவடு, புதிதாக சொல்வது போல் வன்னி புனைவாளர் ஊடாக சொல்ல முனைகின்றது. நாங்கள் சொன்னது மக்கள் விடுதலைக்கான அரசியல் நிலையில் இருந்துதான். காலச்சுவடு "புதிய முறையில் உண்மையின் வெளிச்சத்தில்" மக்கள் விரோதிகள் இந்த அரசியல் அடிப்படையிலான வெற்றிடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில், இதை புனைந்து புதிதாக ஏதோ சொல்வது போல் சொல் முனைகின்றனர். இதை "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்று கூறி, தங்கள் சொந்த புனைவுகள் மூலம் இதைச் செய்ய முனைகின்றனர்.

இது சார்ந்த உண்மைகள் இந்த வருட ஆரம்பத்தில், நாம் மட்டும் தனித்து பேசியவை. இதைக் கடந்த எதையும் புதிதாக இந்த புனைவு கூறிவிடவில்லை. உண்மைகளை அக்காலத்தில் நடைமுறை ரீதியாக நாம் மட்டும் எதிர் கொண்டதுடன், இதற்கு மாற்று அரசியல் வழியை நாம் மட்டும் முன்வைத்தவர்கள். இதையே காலச்சுவடு மறுத்தும், திரித்தும், ஒரு புதிய எதிர்ப்புரட்சி கும்பலுக்கு வழிகாட்ட முனைகின்றது.

இதை 1. காலம்கடந்து 2. இவர்கள் ஆதரித்த தரப்பு அழிந்த பின்பு, "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்று புதிதாக கூற முனைவது அபத்தம். நடந்த வரலாற்று மீதான புனைவுசார் அரசியல் திரிபு.

மக்கள் மேல் இருதரப்பும் யுத்தத்தை திணித்துக் கொண்டிருந்த போது, நாம் பேசியதைத் தாண்டி புதிதாக எதையும் இது புனையவில்லை. நாம் அன்று சொன்னதை எடுத்தும், காலத்தால் வரலாறாகிவிட்டதை கொண்டும், தமக்கு ஏற்ப ஒரு புனைவு. அதற்குள் புலிக்கு துதிபாடி, மனிதர்களை கொல்ல உதவிய பிழைப்புவாத "புத்திஜீவிகளான" சேரன் மற்றும் சிவத்தம்பியைக் காப்பாற்றவும், அதன் மூலம் ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை முன்நகர்த்தவும்,  அகதி முகாமையும் அகதியையும் "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்ற எதார்த்தையும் கூட பயன்படுத்துகின்றனர்.

ஈழத்து "புத்திஜீவிகளாக" சிவத்தம்பி, சேரன் போன்ற அரசியல் பொறுக்கிகளை காட்டி கட்டமைத்த தமிழ்நாட்டு இலக்கிய விம்பம் இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. மக்களின் படுகொலைகளைச் செய்த வலது பாசிச புலி அரசியலுக்கு இவர்கள் துணை நின்றதால், அவை நாறிக்கிடக்கின்றது. அதை நிமிர்த்த, இந்த "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்று கூறி புனைபவர் முனைகின்றார்.

இப்படி சேரன் அன்ட் கோ மற்றும் சிவத்தம்பி நிலை பற்றி "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்ற கூறி, புனைவு அகதி கூறுவதைப் பாருங்கள். "வன்னி யுத்தத்தில் இரண்டு தரப்புமே போர்க் குற்றவாளிகள். அதிலும் பிரபாகரன் தன்னை நம்பிய மக்களைக் கொன்று குவித்தார். படுகொலைக்குக் காரணமாக இருந்தார். சனங்களின் கொலைகளில் அரசியல் நடத்தப் பார்த்தார். சேரன் சொல்வதைப்போலப் பிணங்களை வைத்து அரசியல் செய்தார். இறுதியில் அவர் அநாதரவாகக் கொல்லப்பட்டார். எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதும் இந்த மக்கள் அவருக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். பேராசிரியர் சிவத்தம்பி சொல்வதைப்போல சிங்கள இனவாதத்தின் மீதும் அரசு மீதும் இருந்த வெறுப்பு பிரபாகரனைப் பல குறைபாடுகளின் மத்தியிலும் ஆதரிக்க மக்களைத் தூண்டியது. ஆனால், இதையெல்லாம் சரியான வகையில் பயன்படுத்த அவர் தவறியதுதான் இந்த மாபெரும் எதிர்விளைவுக்குக் காரணம்."

இதைத்தான் பாலசிங்கம் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று போற்றப்படுபவர் பிரபாகரன்." என்றார். இங்கு நகல் எது, போலி எது என்று தெரியாது போகின்றது. இந்த அகதியான காலச்சுவடு, இங்கு சேரனையும், சிவத்தம்பியையும் "புத்திஜீவியாக" காப்பாற்ற இக்கட்டுரை மூலம் முனைகின்றது.

ஈழத்து விமர்சன உலகில், சேரன் மற்றும் சிவத்தம்பி கூறியதாக கூறும் இக் கூறுகளை  எங்கும் காணமுடியாது. ஈழத்து மக்களுக்கு சொல்லாத தெரியாத இந்தக் கூற்று காலச்சுவட்டுக்கு தெரியவருகின்றது. என் அகதி முகாமில் உள்ள இந்த "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்று கூறும் அந்த அகதிக்கு கூடத் தெரியவருகின்றது. ஆச்சரியமாக இருக்கின்றது. உலகமறிய புலிகளின் படுகொலைக்கு அரசியல் ரீதியாகவும், தங்கள் மௌனங்கள் மூலமும் துணை நின்றவர்கள் இவர்கள். இலங்கையில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில், சிவசேகரமே தெளிவாக இதை கண்டித்து தொடர்ச்சியாக எழுதியவர்.

ஆனால் "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்ற அந்த புனைவு அகதிக்கு, சேரன் மற்றும் சிவத்தம்பி கூறியதாக கூறும் இப்பகுதி, ஈழத்து தமிழ்மக்களுக்கு தெரியாமல் தெரிய வருகின்றது. இது எப்படி? அந்த புனைவு பேர்வழியே கூறுகின்றார் "எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை." என்று கூறும் இவர் "ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது." என்று கூறும் இவர்தான், சேரன் மற்றும் சிவத்தம்பி கூறியது மட்டும், அதுவும் அவருக்கு மட்டும் தெரியவருகின்றது. காலச்சுவட்டின் புளுடா, "ஈழம்" என்ற சொல்லில் தொடங்கி சேரன் மற்றும் சிவத்தம்பி என்று தொடருகின்றது.


இவர்களோ பேரினவாதத்துக்கு நிகராக தமிழ் மக்களை கொன்று குவித்த புலிப் பாசிட்டுகளை தொழுது, அதை தமிழ் சமூகத்துக்கு ஒரு தொழுநோயாக மாற்றிய பிழைப்புவாத "புத்திஜீவிகளே" இவர்கள். தமிழ் சமூகம் இந்த நிலைமைக்கு உள்ளாகிய அவலத்தை, புலிக்கு எதிரான விமர்சனம் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தி வழிகாட்டாமல் அதற்கு துணை போனவர்கள். இவர்கள் செய்தது புலியின் வலதுசாரி பாசிசத்தை தமிழ் தேசியத்தின் விடுதலைக்கானதாகவும், அதையே அரசியல் வழியாக காட்டியதும் தான். புத்திஜீவிகள் என்ற வகையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாது, துரோகமிழைத்த போர்க் குற்றவாளிகள் தான் இவர்கள்.

இந்தப் பரதேசிகளுக்கு ஊடாக "பிரபாகரன் தன்னை நம்பிய மக்களைக் கொன்று குவித்தார்" என்று கூறுவது, ஏதோ இந்த இறுதி யுத்தத்தில் மட்டும் இது நடந்ததாக புனைந்து கூற முனைவதாகும். 25 வருடமாக வலது புலி பாசிட்டுகள், மக்களை கொன்று வந்தவர்கள். அதன் உச்சம் தான், இன்று நடந்து முடிந்தது. "சனங்களின் கொலைகளில் அரசியல் நடத்தப் பார்த்தார்." என்கின்ற போது, இதை எழுதியவர் உண்மையான முகாம் அகதியல்ல, இலங்கையருமல்ல என்பதைக் காட்டுகின்றது. புலிகள் சனங்களின் கொலையில் அரசியல் நடத்தவில்லை என்பதையே "அரசியல் நடத்தப் பார்த்தார்." என்று கூறுவதன் மூலம்,  எதார்த்தத்தை மறுக்கும் அன்னியத்தன்மையில் நின்று, அதுவும் மூன்றாம் தரப்பாக மறுத்துக் கூற முனைகின்றார் புனைவாளர்.

இதன் மறுபக்கத்தில் ஏதோ இப்போது தான், மக்கள் மேலான படுகொலைகளை புலிகள் நடத்தியதாக கூறுவது அரசியல் ஆபாசம். 25 வருடமாக மக்களின் பிணத்தின் மேல் தான், பிரபாகரனினதும், புலியினதும் ஆன்மாவே இருந்தது. கடந்த 25 வருடமாக புலிகள் மக்களின் கொலைகளின் மேல்தான், அரசியலே நடத்தினர்.

"எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதும் இந்த மக்கள் அவருக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள்." என்று கூறுவது அருவருக்கத்தக்கது. புலிகளின் சர்வாதிகாரமும், பாசிசமும் தமிழ்மக்களுக்கு மேலானதே. இதை மறுத்து மக்கள் ஆதரவு வழங்கினர் என்பது, சேரன் சிவத்தம்பி போன்ற கழிசடை "புத்திஜீவிகள்" புலியிசத்தை தேசியமாக காட்டியதால், புலியை விட்டால் தமிழனுக்கு வேறு வழியில்லை என்று நம்பிய அப்பாவி மக்கள் தான் இருந்தனர். "சேரன் சொல்வதைப்போலப் பிணங்களை வைத்து அரசியல் செய்தார்." என்று, இன்று சேரன் சொல்லுகின்றார் என்றால், இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப பிழைக்கும் சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியல். புலியின் இந்த படுகொலைகளை உக்கிரமாக புலிகள் செய்து கொண்டிருந்த போது, புலி வாலைப்பிடித்து புலிக்கு வழிகாட்ட முனைந்தவர் இவர். மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து நிற்காமல் அதை குழிபறித்தவர்கள். புலி மக்களை பலியெடுக்க, பேரினவாதம் மூலம் பலிகொடுத்து கொண்டிருந்த போது, நாங்கள் மட்டும் மக்களை விடுவிக்கும் கோசத்தை அரசுக்கு எதிராகவும் புலிக்கு எதிராகவும் வைத்தோம். இதன் போது, இவர்கள் மக்களுடன் நின்றது கிடையாது. இதற்கு எதிராகவும், அப்படி சிந்தித்தவர்களை கூட திசை திருப்பி, புலியின் கொலை அரசியலுக்கு ஏற்ப "புலியின் சுயநிர்ணயத்தின்" பெயரில் ஆட்டம் போட வழிகாட்டியவர் தான் இந்தச் சேரன்.

எல்லாம் இன்று அம்பலமாகி நிற்கின்றது. இன்றைய காலத்துக்கு ஏற்ப சேரன், சிவத்தம்பியை பாதுகாக்க, புனையப்பட்ட புனைவு தான்,  "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற பதிவாகும். தரவுகள் எல்லோரும் அறிந்ததும், பொதுவானவையும் கூட.  இரண்டு பக்க போர் குற்றத்தையும், மக்கள் அரசியல் நலனையும் முன்னிறுத்தி போராடியது நாம். கட்டுரையின் பொது சாரம் எம்மால், இது நடந்துகொண்டிருந்த போது சொல்லப்பட்டவை. புதிதாக எதையும் இது சொல்ல முனையவில்லை. எதையும் புதிதாக சொல்லவுமில்லை.

இன்னமும் சொல்லப்படாத உண்மைகள் பல உண்டு. அதை நாம் இன்னமும் சொல்லவில்லை. வேறு யாரும் சொல்லவுமில்லை. ஆனால் அகதி முகாம் மக்கள், அதைச் சொல்லுகின்றனர். அதை சேரன் அன் கோவும், "உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே." என்ற "அகதி"யும் கூட சொல்ல முனையவில்லை.  அவற்றை நாம் தொகுக்க முனைகின்றோம்.

பலிகொடுப்பு, பலியெடுப்பு என்று இறுதி யுத்தத்தின் போது, மக்களை புலிகள் நடத்திய விதமும், மக்கள் அனுபவித்த துன்பங்களும் சொல்லிமாளாது அவை குவிந்து கிடக்கின்றது. மக்களுக்கு என்ன நடந்தது என்பதை, ஒரு நேர்மையான உண்மையான அகதி மட்டும் பேசுகின்றான்.  போலியான "அகதி"யால் அதைப் ஒரு நாளும் பேச முடியாது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்பது அதைப் பற்றி பேசவில்லை.

ஆண்கள் பெண்களையும் துப்பாக்கி முனையில் வைத்திருந்த புலிகள், அவர்கள் தப்பியோடா வண்ணம் தம் கண்முன் வரிசையாக இருத்தி, இயற்கைக் கடனைக் கூட ஆண் பெண் பேதமின்றி கழிக்க திணித்த வக்கிரத்தை சொல்வதா!

மக்கள் உண்ண உணவு எதுவும் இல்லாத போது, மக்களுக்கு அக்கம் பக்கமாக அருகில் இருந்து தாம் மட்டும் வயிறு புடைக்க அவிச்சுத் தின்றதை சொல்வதா! பச்சிளம்; குழந்தை ஒரு கவளம் சோற்றுக்கு ஏங்கி அழுது நிற்க, அவர்கள் கண் முன் தின்ற பாசிச திமிரைச் சொல்வதா!

அடித்தும் உதைத்தும் சுட்டும் போட்ட இரத்த உறவுகளின் பிணங்கள் மேலால், குழந்தைகளை இழுத்துச் சென்ற துயரக் கதைகளைச் சொல்வதா!

பிளாஸ்ரிக் பையில் தண்ணீரை ஏந்திவைத்து குடித்த கதையையும், பிளாஸ்ரிக் போத்தலில் தண்ணீர் சூடாக்கி தேனீர் போட்டு குடித்த கதையைச் சொல்வதா? எதைச் சொல்வது

எத்தனை எத்தனை அனுபவங்கள். துயரங்கள். இதைவிட்டு விட்டு "வன்னியுத்தத்தில் இரண்டு தரப்புமே போர்க் குற்றவாளிகள்" என்று, நாம் யுத்தம் நடந்த போது சொன்னதை, இன்று தங்கள் குறுகிய நோக்கத்துக்காக சொல்வதா மக்களின் அனுபவம். நடந்ததை திரிப்பதும் யுத்தக் குற்றம் தான். இதை பணம் பண்ண, புனைந்து கதைவிடுவதும் யுத்தக் குற்றம் தான்.

பி.இரயாகரன்

19.08.2009


பி.இரயாகரன் - சமர்