Thu04092020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

  • PDF

சம்பவம்:1

திருச்சி அருகிலுள்ள ஒரே ஊரைச் சேர்ந்த லோகேஷ்வரியும், கார்த்திக்ராஜாவும் வெவ்வேறு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நீண்டநாள் காதலர்கள். காதல் முற்றியபோது லோகேஷ்வரி கர்ப்பமானார்.

  முதல் கர்ப்பத்தை கலைத்தது போல இரண்டாவது கர்ப்பம் ஐந்து மாதங்களை தாண்டிவிட்டதால் கலைக்க முடியாதென மருத்துவர்கள் மறுத்தனர். இதனால் தன்னை மணம் செய்யுமாறு ராஜாவை கர்ப்பமான காதலி வற்புறுத்தினாள். முதலில் தன் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என தட்டிக் கழித்த ராஜா பிறகு நச்சரிப்பினால்ஒத்துக்கொண்டான். காதலியுடன் ஒரு காட்டிற்கு பைக் சவாரி செய்து அங்கே இருவரும் தற்கொலை செய்யலாம் என கூற அந்த பேதைப் பெண்ணும் சம்மதித்தாள். எங்கே விஷம் என்று காதலி கேட்க அவளது துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெறித்து கொன்று சென்றுவிட்டான் ராஜா. பின்னர் போலீசால் கைது செய்யப்பட்ட பின் இந்தத் தகவல்கள் வெளியுலகிற்கு வந்தன.

சம்பவம்:2

டெல்லியில் சாக்ஷி என்னும் 26 வயது ஆசிரியை, தனது காதலனுடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து, அவளது தாய் கிரண் பலமுறை கண்டிக்கவே, தாய் கிரண் மீது கோபம் கொள்கிறாள். காதலர்கள் இருவரும் கிரணை படுக்கையறையில் கிடத்தி கையில் கிடைக்கும் ஆயுதங்களால் குத்திக் கொல்கிறார்கள். சாக்ஷி ஆத்திரம் தீர பலமுறை குத்துகிறாள். இறுதியில் அந்தத்தாய் மரணமடைகிறாள். ஆரம்பத்தில் கொள்ளையர்கள் வந்து கொன்றதாக சொன்ன சாக்ஷியின் வாக்கை நம்பிய போலீசார்கள் பின்னர் உண்மையை கண்டுபிடிக்கிறார்கள்.

 

000000


நடனத்திற்குப் பிறகு எனும் டால்ஸ்டாயின் சிறுகதையில் முந்தைய நாளின் இரவு விருந்தில் அழகான பெண்ணை சந்தித்து நடனமாடும் பணக்கார இளைஞன் ஒருவன் அதிகாலையில் வீடு திரும்புகிறான். ஏதோ ஒரு புதிய உற்சாகமும், தன்னம்பிக்கையும், நல்லெண்ணமும் கொண்ட உணர்வுக்கு ஆட்படுகிறான். நெடுநேரம் விழித்திருந்தாலும் அவனால் துயில் கொள்ளமுடியவில்லை. படுக்கையை விட்டு அகன்று அதிகாலை எழுப்பியிருக்கும் வீதியில் இதுவரை இல்லாத நல்லவனாக நடக்கிறான். சந்திக்கும் எல்லா மக்களையும் நேசிக்கிறான். முன்னை விட இப்போது ஏதோ அவன் மிகவும் நல்லவனாக ஆகிவிட்டதாக ஒரு உணர்ச்சி. அவனது கெட்ட எண்ணெங்களெல்லாம் முந்தைய இரவோடு அகன்றுவிட்டதாக ஒரு தோற்றம். இப்படி காதல் ஒருவனிடன் ஏற்படுத்தும் நல்ல ரசாயன மாற்றங்களையெல்லாம் டால்ஸ்டாய் அற்புதமாக சித்தரித்திருப்பார்.

இந்த அனுபவம் டால்ஸ்டாய்க்கு மட்டுமல்ல இளவயதில் காதல் வயப்பட்ட எல்லோரும் இந்த அனுபவத்தில் மூழ்கி எழுந்திருப்பார்கள். தனது காதல் ஜோடிக்கு முன் தனது தீமைகளை மறைப்பதாக இருக்கட்டும், தனது நல்லெண்ணங்களை காட்டுவதாக இருக்கட்டும், குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு காட்டுவதாக இருக்கட்டும், சமூக உறவுகளில் உதவும் பண்பு திடீரென்று உருவவாதாக இருக்கட்டும், இவையெல்லாம் ஒருகாதல் வயப்பட்ட ஆண், பெண்ணின் மனதில்இயல்பாகத் தோன்றும். மனமே பரிசுத்தமாக மாறியது போலும், பண்பே அடியோடுமாறிப்போனது போலும், இதற்கு முன் இருந்த நானும் இப்போது இருக்கும் நானும் அடியோடு வேறுபடுவதும் போல இருந்தாலும் கொஞ்ச காலத்தில் அந்த காதல் வழக்கமானதும், அல்லது திருமணம் முடிந்ததும் இருவரதும் உண்மைப்பண்புகளை ஒருவரோருவர் தெரிந்து கொண்டு அவமானமும், சினமும் அடைவதும் அப்புறம் சில ஆண்டுகளில் இந்தப் பகை நிதானமடைந்து பிரிவதற்கு வழியில்லாத பார்ப்பனிய சமூகத்தின் தடையில் மற்றவர்களின் குறைகளை சகித்துக்கொண்டு வாழப்பழகுவதும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி ஓடுகிறது.

இருப்பினும் காதல் வயப்பட்ட தருணத்தில் ஏற்படும் அந்த நேச உணர்வுக்கு காரணம் என்ன?ஒருவர் மனித குலத்தை நேசிப்பதாக இருந்தால் அது கருத்து ரீதியாகவும், உயிரியல் ரீதீயாக நாம் எல்லோரும் ஒரே இனமென்பதாலும் ஏற்படுகிறது. சகமனிதனை நாம் நேசிப்பதற்கான உயிரியல் அடிப்படை ஆண் பெண் உறவிலும், குழந்தைக்கான பெற்றோராக இருப்பதிலும் ஏற்படுகிறது. இங்கே உடலும் உள்ளமும் சங்கமிக்கின்றன. ஒருவகையில் காதல் என்பது மனிதன் தன் இனத்தின் மீது கொண்டுள்ள நேசத்தின் தன்னுணர்வற்ற வெளிப்பாடு.

தான் நேசித்த பெண்ணுடலுடன் முதலில் ஆசையுடனும், பின்னர் வெறியுடனும் உறவு கொண்டு தனது காமத்தை தீர்த்துக் கொண்ட கார்த்திக் ராஜா, பின்னர் ஈவிரக்கமில்லாமல் அவளது துப்பட்டாவையே சுருக்கு கயிறாக மாற்றி இறுக்கி கொன்றிருக்கிறான். ஒரு காலத்தில் தான் நேசித்த உள்ளத்தையும் உடலையும் இப்படி துணி துவைப்பதுபோல பதட்டமின்றி கொன்றிருப்பது எதைக் காட்டுகிறது?


சாக்ஷி தனது காதலுடன் நெருக்கமாக பலமுறை இருந்ததை பார்த்து கண்டித்திருக்கும் தனது தாயை, வயிற்றில் வலியுடன் சுமந்து பெற்று ஆளாக்கி வளர்த்து தனது வாழ்வின்பெரும் பகுதியை மகளுக்காக தியாகம் செய்திருக்கும் அந்த பெண்மணியை, சமையல் கத்திகளால் ஆத்திரம் தீரக் குத்திக் கொன்றிருப்பது சாக்ஷியின் காதல் குறித்து நம்மை பரீசீலிக்கக் கோருகிறது.

இப்படி குற்றம் செய்யாத காதலர்களெல்லாம் கூட காதலின் தன்மையில் இப்படியான மதிப்பீடுகளைத்தான் கொண்டிருப்பார்களோ என ஐயம் ஏற்படுகிறது. இன்றைய காதலின் கவர்ச்சி எது? தான் இதுவரை அனுபவித்திராத காமம் என்பதுதான் அந்த கவர்ச்சியைத் தரும் வல்லமையைக் கொண்டிருக்கிறதோ?


இன்றைய பாதுகாப்பற்ற பொருளாதாரச் சூழலில் நல்ல வேலையும், பணமும் கொண்டிருக்கும் இளைஞர்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இன்று பாலியல் வேட்கையை ஊரெங்கும் இரைத்திருக்கின்றன பண்பாட்டுக் கருவிகள். நேற்றுவரை வீட்க்குள் முடங்கியிருந்த பெண்கள் இன்று வேலை, கல்வி காரணமாக வெளியே நடமாடுவதால் புதிய மதிப்பீடுகளுக்கு அறிமுகமாகிறார்கள். திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைப்பெதெல்லாம் தவறல்ல என்றுநினைக்குமளவுக்கு பார்வை மாறியிருக்கிறது. மேலும் காதலிக்கும் ஆண்களெல்லாம் காதலிகள் தங்கள் உடலைத் தருவதன் மூலம்தான் காதலை உறுதி செய்ய முடியுமென நிர்ப்பந்திக்கிறார்கள். எப்படியும் இவரை திருமணம் செய்யத் தானே போகிறோம் என பெண்கள் குழிக்குள் விழுகிறார்கள்.

பழத்தை புசித்துவிட்டு தோலை எறிந்து விடுவது என்பதே இன்று காதலைப் பற்றி பல இளைஞர்களின் வக்கிரமான கருத்தாக இருக்கிறது. ஜாலிக்கு காதலிப்பது, செட்டிலாவதற்கு வீட்டில் பார்க்கும் பெண்ணை மணம் செய்வது என்பதே அவர்களது தந்திரமாக உள்ளது. லோகேஷ்வரியைக் காதலித்த ராஜா மணம் செய்வதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியதன் காரணம் என்ன? ஒன்று அவள் ஏழையாகவோ, தாழ்த்தப்பட்ட அல்லது ராஜாவின் சாதியை விட பிற்பட்ட சாதியாக இருந்திருக்கவேண்டும். உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன் முதலில் கருவைக் கலைத்து விட்டு இரண்டாவது கரு ஐந்துமாதம் கடந்துவிட்ட படியால் கலைக்கமுடியாது என்ற பிறகே கருவைச் சுமந்த தாயைகொல்வதற்கு முடிவு செய்திருக்கிறான்.

காதலின் மூலம் மற்ற மனிதர்களை தனது இனமாக உணரும் இயல்பை உணரும் அதேநேரத்தில் அது தனிப்பட்ட இரு மனிதர்களின் உறவாகவும் உள்ளது. இந்த தனி இயல்பின் ஊற்று மூலம் இன்னார் இன்னாரைத்தான் காதலிக்கிறார் என்பதிலிருந்து பிறக்கிறது. பொதுவில் இந்த இரு நபர்களின் காதலை பெற்றோர், உற்றோர், சாதியினர் ஊரார் அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலிருந்தே இந்த தனிமைத் தன்மை அழுத்தமாக காதலர்களின் மனதில் பதிந்து விடுகிறது. சமயத்தில் எதிர்ப்பு பலமாக வரும்பட்சத்தில் காதல் கைவிடப்படுவதும், இல்லையேல் பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியும் வருகிறது. தனி மனிதனது காதலுக்கும், சமூக கட்டுப்பாடுகளுக்கும் உள்ள முரண்பாடு இப்படி பல்வேறு அளவுகளில் ஏற்படுகிறது.

வயதுவந்த பிறகு, படிப்பு, தொழில் நிலையான பிறகே ஒருவர் காதலிப்பதற்கு உண்மையில் தனது சொந்தத் தகுதியில் தயாராகிறார். ஆனால் தமிழ் சினிமாவும், ஊடகங்களும் அதை வெறும் கவர்ச்சியாகவும், மற்ற கடமைகளை மறந்து இந்த உலகத்திலேயே காதல்தான் உன்னதமானது என்றும் தவறாக கற்பிக்கின்றன. இதனால் விடலைப்பருவத்தில் கற்றுத்தேர வேண்டிய வயதில் காதலித்து, காதலிக்க முடியாமல் போனதை எண்ணி எண்ணிச் சோர்ந்தோ, பலரது ஆளுமை சமூகத்திற்கு பலனளிக்காமல் வெம்பி வாடிப்போகிறது.

பிறப்பிலிருந்து, மரணம் வரை எல்லோரையும் சார்ந்து வாழவேண்டிய பெண் இத்தகைய விடலைக்காதலால் கணநேர மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் வாழ்க்கை முழுவதும் ஆயுள் கைதியாகவே காலம் தள்ளுகிறாள். விடலைப்பருவத்தில் காதலிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் பாலுறவு என்ற அவர்கள் இதுவரை அனுபவித்திராத புதிரை ருசிப்பதிலேயே ஆர்வம் கொள்கின்றனர். இதை அனுபவித்துவிட்டு அப்புறம் வளர்ந்து ஆளான பிறகு பெற்றோர் பார்க்கும் பெண்ணை வரதட்சணையுடன் மணம் செய்து வாழ்க்கையில் நிலைபெறுகின்றனர்.

பெண்ணுக்கோ தனது விடலைக்காதலையும் அதன் விளைவையும் மறைக்க முடியாமல்அவளது வாழ்வே கேள்விக்குறியாக மாறுகிறது. இதனால் தனக்கு விருப்பமில்லையென்றாலும் வீட்டில் பார்க்கும் ஏதோ ஒருவரை அவர் வயதானாவராக இருந்தாலும் கூட கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்றைய நுகர்வு கலாச்சார சூழலில் அழகும், காமமுமே காதலைத் தீர்மானிப்பதில் பாரிய பங்குவகிக்கின்றன. ரசனை, சமூக நோக்கு, தனிப்பட்ட பண்புகள், பொதுப் பண்புகள், அறிவு, பழகும் இயல்பு, எதிர்காலம் குறித்த கண்ணோட்டம், இவையெல்லாம் சேர்ந்துதான் காதல் துளிர்ப்பதற்கும், தளிர்ப்பதற்கும் தேவைப்படும் விசயங்கள். ஆனால் இவையெல்லாம் தெளிவில்லாத மாயமானைப்போல ஓடிக்கொண்டிருக்க, கைக்கெட்டும் காமமே காதலின் தகுதியாக மாறிவிடுகிறது.

நமது காதல் தகுதியானதா என்று பரிசீலிப்பதற்கு கவலைப்படாத காதலர்கள் காமத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மட்டும் அவசரப்படுகிறார்கள். இந்த அவசரப்படுதலில் ஆணை விடபெண்ணுக்கு அபாயங்கள் அதிகமென்றாலும் அவள் அதைப்பற்றையும் கவலைப்படுவதில்லை. ஆணுக்கோ தனது ஆண்மையை நிலைநாட்டி வெற்றிக்கொடி காட்டுவதற்கு, தனத நண்பர்களிடம் வெற்றிச்செய்தியை பகிர்வதற்கு ஒரு வாய்ப்பு. ஒரு பெண் அப்படி பகிர முடியாமல் இரகசியம்காக்கவே விரும்பினாலும் வயிற்றில் உருவாகும் கரு அதை உடைத்து விடுகிறது.

கார்த்திக்ராஜா காமத்திற்காக மட்டும் லோகேஷ்வரியை பயன்படுத்த விரும்பினான். லோகேஷ்வரியோ அவனை மணம்செய்து கொள்ளவே விரும்பினாள். இதுசுதந்திரத்தெரிவிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை, கறைபட்ட பெண்ணை யாரும் ஏற்கத்தயாராக இருக்கமாட்டார்கள் என்ற சமூக நிலைமையிலிருந்தே வந்திருக்கவேண்டும். அவன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக சப்பைகட்டு கட்டும் போது அவளோ அவனது போலித்தனத்தை,துரோகத்தை உணர மறுத்து வயிற்றில் இருக்கும் கருவை மட்டும் வைத்து தனது அவல நிலையை விளக்கியிருக்கிறாள். முறிந்திருக்கவேண்டிய காதல் ஒரு பெண்ணின் பாதுகாப்பற்ற அவலநிலையினால் அந்த அடிமை வாழ்வை பின்தொடர்ந்து ஓடவேண்டியிருக்கிறது. ஆனால் கார்த்திக்ராஜாவோ இந்த தொல்லையை ஓரேயடியாக முடித்து விட்டு தனது வாழ்க்கையை தொடரவிரும்பினான். இரக்கமின்றி முடித்து விட்டான். எந்த முகத்தையும், கன்னத்தையும்,கழுத்தையும் காமத்துடன் முத்தமிட்டானோ அந்தக் கழுத்தை கதறக் கதற இறுக்கி துடிப்பை அடக்கினான்.

மாநகரத்தில் வாழும் மேட்டுக்குடி பெண்களும், மேட்டுக்குடி பெண்களின் மதிப்பீடுகளை கொண்டு வாழநினைக்கும் நடுத்தர வர்க்க பெண்ணான சாக்ஷியின் கதைவேறு. தனது அழகு, உடை,ஆண்நண்பர்கள், பணக்காரர்களின் தொடர்பு, அதன்மூலம் உயர நினைக்கும் காரியவாதம் இவையெல்லாம் இவர்களது ஆளுமையில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த காரியவாத உயர்வுக்காக இவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களுக்கெல்லாம் காதல் என்பதுபணவசதியுடன் செட்டிலாவதற்கான ஒரு பெரிய படிக்கட்டு.

இவர்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களெல்லாம் பழைய மதிப்பீடுகளில் வந்தவர்கள். இதனால் இருதரப்பினருக்கம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வகையிலேயே உறவு இருக்கும். இந்த தலைமுறையின் வேறுபாட்டில் வரும் பிரச்சினைகளை பெற்றோரே சுமக்க நேரிடும். புதிய தலைமுறைப் பெண்களுக்கு வெளியில் எந்த அளவுக்க வெளிச்சம் கிடைக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் இருள் சூழ்கிறது. பெற்றோரோடு சண்டை, எதிர்ப்பு, ஆவேசம்!

தனது ஆண்நண்பர்களில் ஒருவனுடன் வீட்டிலேயே உறவு வைத்துக் கொள்வதைசகிக்கமுடியாமல் சாக்ஷியின் தாய் சண்டை போடுகிறாள். சாக்ஷியோ இந்த தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தியால் 24 குத்து குத்தி தாயை கொல்கிறாள். ஏதோ ஆத்திரத்தில் நடந்த சண்டையல்ல இது. ஆழ வேர்விட்டிருக்கும் வெறுப்பு, பகையுணர்ச்சி.

எல்லாக் காதலர்களும் கொலை செய்வதில்லை என்றாலும் வன்முறை பல்வேறு அளவுகளில் வெளிப்படத்தான் செய்கிறது. காதலினால் கருவுற்ற பெண்கள் தனது காதலன் தன்னை மணம் செய்ய மறுக்கிறான் என்று சொல்லி அன்றாடம் காவல் நிலையத்தில் அழுதபடி கொடுக்கும் புகார்கள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.
காதலியின் உடலை செல்பேசியில் படம்பிடித்து நண்பர்களுக்கு படைக்கும் வக்கிரங்களும் ஊடகங்களை நிறைக்கின்றன. தனது இளவல்கள் செய்யும் மைனர் பொறுக்கித்தனங்களுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்வதற்கு பல பணக்காரர்கள் தயாராகத்தான் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக தனது உடலை படுக்கையாக விரிக்கும் பெண்களை வைத்துத்தான் கதாநாயகர்கள் தமது ஓய்வை போக்குகின்றனர். அலுவலகத்தில் மேலதிகாரிகளும் தமது பெண் பணியாளர்களை காமத்திற்காக சின்னவீடாகவோ, இரண்டாம்தாரமாகவோ பயன்படுத்தவேசெய்கின்றனர். மாநகர மேட்டுக்குடிபெண்களோ பணம், ஆடம்பரத்திற்காக இதை விரும்பியே செய்கின்றனர்.

காதல் என்பது உணர்ச்சியில் ஒன்றேயானாலும், சமூகப்பிரிவுகளுக்கேற்ப வேறுபடவே செய்கிறது. ஆனால் எல்லாப் பிரிவுகளையும் தாண்டி அவசர அவசரமாக காமத்தை அனுபவிப்பது என்பது மட்டும் எல்லாக் காதலர்களின் தேசிய நடவடிக்கையாக மாறிவருகிறது. இதில் ஏழைகளாக இருக்கும்பெண்களின் அவலம் இருக்கும் வறிய நிலையிலிருந்து தேறுவதற்கு வழியில்லாமல் முடக்கிவிடுகிறது. சிலருக்கு வாழ்க்கையே முடிந்துவிடுகிறது. மேட்டுக்குடி பெண்களுக்கோ இந்தஅவசரக் காமல் வளமான வாழ்க்கைக்கான வாசலை திறந்து விடுவதாக உள்ளது. உள்ளேநுழைந்து பட்டுத்தெரிந்த பின்னரே அதன் கொடூரம் உரைக்க ஆரம்பிக்கிறது. அதற்குள் வாழ்க்கை வெகுதொலைவு கடந்து விடுகிறது. ஆனால் எல்லா ஆண்களும் இப்படி வலிந்து வரும் காமத்தை அனுபவிப்பதை இளமையின் இலட்சியமாக விரும்புகின்றனர். காமம் முடிந்த பின் உறவை தூக்கி எறிய நினைக்கும் இவர்களெல்லாம் எதிர்கால மனைவிகளை எப்படி நடத்துவார்கள் என்பதும் இத்தகையோர்தான் நாட்டின் எல்லா மட்டங்களிலும் வேலை செய்கிறார்கள் என்பதும் இந்த நாட்டின் சமூகத் தரத்தை காட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஆகவே காதலை சட்டென ஏற்றுக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையையும், சமூகத்தையும் பொறுப்புடன் கற்றுத்தேர்ந்து சமூகத்தில் உங்களுக்குரிய இடத்தை உறுதி செய்த பிறகே ஒரு முறைக்கு நூறு முறை ஆலோசித்து உங்கள் வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள். இதே விதி பெண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகம். இந்தக் காலத்தில் காதல் ஏற்படுவது ஒன்றும் முற்போக்கல்ல, அதன் சமூகத்தரமே நம் கவலைக்குரியது. அன்றாடம் கொல்லப்படும்காதல்பெண்களின் கதைகள் நமது தரம் மிகவும் இழிவாக இருப்பதையே எடுத்துச் சொல்கிறது.

புதிய கலாச்சாரம், ஆகஸ்ட்டு‘ 2009

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

Last Updated on Tuesday, 18 August 2009 05:47