09292023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

அ.மார்க்ஸ், ரவிகுமார்.. அனேகமாக எல்லா பின்நவீனத்துவ வாதிகளும் பிழைப்புவாதிகளே! : மருதையன்

மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களைத் திட்டமிட்டுச் சீகுலைத்தது. தமது அணிசேர்க்கையினூடாக சந்தர்ப்பவாதக் கட்சிகள் இப் பிரச்சனையைக் கைவிட்டு அரசியல் வியாபாரப் பேரம் பேசின. இந்த நிலையில் மக்களை நம்பியிருந்த வாக்கு அரசியலுக்கு உட்படாத இடதுசாரிக் குழுக்களின் போராட்டங்கள் மட்டுமே சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புகளையும் மீறி நடைபெற்றன. இவற்றுள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பங்கு குறித்துக் காட்டத்தக்கது. இதன் மாநிலச் செயலாளர் மருதையனின் நீண்ட நேர்காணல் மூன்று பிரிவுகளக வகைப்படுத்தப் படுகிறது.
1. இந்திய கம்யூனிச இயக்கங்களின் வரலாறு.
2. தமிழ் நாட்டில் பின் நவீனத்துவம்.
3. இலங்கை இனப்படுகொலையின் போதான தமிழ் நாட்டுக் கட்சிகளின் போராட்டம்.
இம்மூன்று பகுதிகளில் இரண்டாவது பகுதி இங்கே தரப்பட்டுள்ளது…. இன்னும் வரும்…
 

***

இனியொரு: ஏனைய மாநிலங்களைப் போலல்லாது தமிழ் நாட்டில் மார்க்சியம் தவிர்ந்த பின்நவீனத்துவம் பொன்ற ஏனைய ஐரோப்பிய தத்துவங்கள் செல்வாக்குச் செலுத்துவதன் காரணம் என்ன?

பின்நவீனத்துவம் போன்ற கருத்துக்கள் 90 களில்தான் முன்வர ஆரம்பித்தின. எனினும் 80 களின் ஆரம்பங்களிலேயே ஞானி maruthaiyanஎஸ்.என்.நாகராஜன் போன்றோர் கிழை மார்க்சியம் போன்ற கருத்துக்களையும் பின்னர் எஸ்.வி.ஆர் இருத்தலியல்வாதம் போன்ற கருத்துகளையும் முன்வைத்தனர். இவை அனைத்தும் கட்சிக்கு அப்பாற்பட்டு மார்க்சியத்தை வளர்ப்பது என்ற பெயரிலேயே முன்வைக்கப்பட்டன.

இனியொரு : பின்நவீனத்துவம் கம்யூனிச எதிர்ப்பாக வளர்க்கப்பட்டது பற்றி..?

90 களில் நிறப்பிரிகைப் பத்திரிகை இன்றைய பின்னவீனத்துவ வாதிகளின் தோற்றத்திற்குப் பெரும் பாத்திரம் வகித்தது. குறிப்பாக அ.மார்க்ஸ் ரவிக்குமார் போன்றவர்கள் மக்கள் யுத்தக் குழு (PWG) சார்ந்த பண்பாட்டமைப்பில் இயங்கியவர்கள். 85 இல் அவ்வமைப்பில் ஏற்பட்ட பிளவிற்குப் பின் அதிலிருந்து வெளியேறினார்கள். இவ்வாறு வெளியேறியவர்கள் நிறப்பிரிகை பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அப்பத்திரிகையின் ஆரம்ப இதழ்களில் கம்யூனிசத்தின் குறைபாடுகள் குறித்த விமர்சனங்களில்தான் முதலில் ஈடுபட்டனர். அதாவது கம்யூனசத்தின் மீதான விமர்சனம், புரட்சியை வலுப்படுத்தலுக்கான முயற்சி என்றே ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று வெளியீடுகளுக்குள்ளாகவே, நேரடியான கம்யூனிச எதிர்ப்பு நிலையை முன்வைக்கிறார்கள். வழமை போலவே அவர்கள் ஸ்டாலின் எதிர்ப்பில் ஆரம்பிக்கிறார்கள். முதலில் ஆரம்பிக்கும் போது மார்க்சியத்தைச் செழுமைப்படுத்துவது என்ற கோஷத்துடனேயே ஆரம்பித்தார்கள். 90 களில் ரஷ்ய மற்றும் கிழக்கைரோப்பிய நாடுகளின் போலிக் கம்யூனிசத்தின் வீழ்ச்சியும், பெரஸ்ட்ரோய்கா, கிளாஸ்நாஸ்த் போன்றவையும் புதிய கம்யுனிச மாற்றங்கள் என இவர்களால் கொண்டாடப்பட்டன. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே, எல்லா மாக்ரோக்களுக்கும் எதிராக மைக்கிரோ, “பெருங் கதையாடலுக்கெதிராக சிறுகதையாடல், என பேசத்தொடங்கினார்கள்.

தலித் அரசியலும் பின்நவீனத்துவமும் குறித்து..?

90 களில் இந்தியாவில் உருவான தலித் அமைப்புக்களுடன் அடையாள அரசியலை இணைத்தும், பின் நவீனத்துவம் தான் தலித்துக்களின் சித்தாந்தம் என்ற வகையிலும் தமது மார்க்சிய எதிர்ப்பு அரசியலை நகர்த்திச் சென்றனர். மண்டல் கமிசன் அறிக்கைக்கு எதிரான பார்ப்பனக் கட்சிகளின் போராட்டங்கள் இதற்கு கூடுதல் பின்புலமாக அமைந்தது.

பின்னவீனத்துவம் ஒரு சித்தாந்தம் என்ற வகையில் தனியாக வலிமை பெற்றது என்பதைக் காட்டிலும், அதை ஏறத்தாழ தலித் இயக்கங்களின் சித்தாந்தமாகவே ஆக்குவது, தலித்துகளுக்கு இதில் தான் விமோசம் இருக்கிறது என்பதாகச் சித்தரிப்பது போன்ற நடவடிக்கைகளூடாக தமிழ் நாட்டில் பின்நவீனத்துவம் மேலதிகச் செல்வாக்குப் பெற்றது போலக் காட்டப்பட்டது. தமிழ் நாடு தவிர்த்து ஆந்திராவிலும் இது குறித்தளவு செல்வாக்குப் பெற்றிருந்ததது.

இவர்களுக்கு முன்னாலேயே பிரபலமான புத்திஜீவிகள் என்று கருதப்படும் ஆஷிஸ் நந்தி, டி.என்.மதன் போன்றோர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். செக்குலரிசத்திற்கு எதிரான இவர்களது கருத்துக்கள் முக்கியமானவை. இந்து மதவெறி இங்கு கோலோச்சிய போது இதே பின்நவீனத்துவ அளவுகோல்களைப் பாவித்து, செக்குலரிசம் என்பது ஒரு மெட்டா நரேட்டிவ் என்றும் அது ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது இந்திய நிலைமைகளுக்கு பொருந்தாது என்றும் இந்திய மதசார்பின்மை என்று ஒன்று தனியாக உள்ளது என்றும் இவர்கள் சொன்னார்கள். மாற்றாக அவர்கள் காந்திய மதசார்பின்மையை முன்வைக்கிறார்கள். அதாவது எல்லா மதங்களிலிருந்தும் அரசு சமதூரத்தில் இருப்பது என்ற கொள்கையை அவர்கள் முன்வைக்கிறார்கள். இதைத் தான் நாம் போலி மதசார்பின்மை என்கிறோம். இவர்களுடைய கருத்துகள் மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் இற்குப் பயன்படக்கூடிய வகையிலேயே இருந்தன.

இதே வகையான ஒரு போக்கைத் தான் தமிழ் நாட்டில் பின்நவீனத்துவ வாதிகள் பிரதினிதித்துவப்படுத்தினார்கள். குறிப்பாக இங்கு தலித் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தினார்கள். கம்யூனிச அமைப்புக்களில் இருக்கக்கூடிய தலித் இளைஞர்களை அவ்வமைப்புக்களிலிருந்து வெளியேறக் கோரினார்கள்.
அவ்விளைஞர்களை அணுகி, கம்யூனிசம் என்பது அவர்களுக்கு விமோசனம் தராது, வர்க்கம் என்பது பெருங்கதையாடல், அது தலித்துக்களுக்கு உதவாது என்று ஆரம்பித்த இவர்களில் அணுகுமுறை நடைமுறையில் எங்கு சென்றதென்றால், தலித் உட்பிரிவுகள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாது என்று அவர்களுக்கிடையிலான மோதலாக மாறியது. பின் நவீனத்துவத்தின் அடையாள அரசியலும், மைக்ரோவும் கீழே கிழே சென்று இவ்வாறான பிளவுகளுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாகவே இறுதியில் இது செல்வாக்கிழந்தது. இதுதான் தமிழ் நாட்டுப் பின்நவீனத்துவ செல்வாக்கின் சுருக்கமான வரலாறு.

எந்தப் பெறுமானங்களுமின்றிய விடயங்களைக் கூட இவர்கள் பின் நவீனத்துவம் என்று கொண்டாடியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு பாடல் இருக்கிறது. ” போத்திகினும் படுத்துக்கலாம் படுத்துகினும் போத்திகலாம்” என்ற பாடலை அ.மார்க்ஸ் பின் நவீனத்துவப் பாடல் என்கிறார். யாரோ குடிபோதையில் எழுதிய வரிகள எல்லாம் பின் நவீனத்துவத்துள் அடங்கிவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு பின் நவீனத்துவம் எல்லாத் துறைகளிலும் நுழைந்து விட்டதாக வேறு பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

பின் நவீனத்துவம் என்பது ஏகாதிபத்தியத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு ஆளும் வர்க்கத் தத்துவம். இதன் சாராம்சம் வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்பாகும். பெருங்கதையாடலை எதிர்ப்பது என்ற பெயரில் துரோகத்தையும் பிழைப்பு வாதத்தையும், சுயநலத்தையும், குழு நலனை முன்னிருத்துவதையும் யாரோடும் சமரசம் செய்து கொள்வதையும் பொறுக்கித் தின்பதையும் ஒரு கலக நடவடிக்கை போலச் சித்தரித்ததுதான் இதன் சாதனை.

ரவிகுமார் போன்றோர் வெளிப்படையாக தம்மை மார்க்சிய எதிரிகளாகப் பிரகடனம் செய்து கொள்கிறார்கள். அ.மார்க்ஸ் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி தன்னை மார்க்சிய எதிரியல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் சந்தர்ப்பவாதி. அவர் இதுவா அதுவா என்று கேட்டால் அவர் இதுவும் அதுவும் என்பார். அதுதானே பின் நவீனத்துவத்தின் விடை. முதலாளித்துவம் இன்று வரலாறு காணாத நெருக்கடிகுள்ளாகிருக்கிறது. முதலாளித்துவம் முதலாளித்துவ நாடுகளிலிலேயே இன்று அம்பலப்படிருக்கிறது. மார்க்சியத்திற்கெதிரான சித்தாந்தங்கள் முடிபுக்கு வர, மீண்டும் மார்க்சியத்தின்பால் ஒரு ஈடுபாடு உருவாக, இவ்வாறான சூழலில் இவர்களின் சிலர் “மறுபடி மார்க்சியத்திற்கு” என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள். இது ஒருவகையான கவர்ச்சிகரமான மோசடி நடவடிக்கையாகும்.
இதனால் இவர்கள் பின்னவீனத்துவத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்றெல்லாம் இல்லை அப்பப்போ எதெது சந்தையில் விலை போகுமோ அதையெல்லாம அவர்கள அணிந்து கொள்வார்கள்.
இந்த பின்னவீனத்துவ வாதிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துப் பாருங்கள்,அ.மார்க்ஸ், ரவிகுமார்.. அநேகமாக எல்லோருமே பிழைப்புவாதிகாளாகத் தான் முடிபுற்றிருக்கிறார்கள்.

தமது சொந்த வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொண்டு எந்தவிதமான தியாகங்களோ இழப்புக்களோ இன்றி சமூக வாழ்வை நடத்துவதற்கு இந்தத் தத்துவம் இவர்களுக்குத் தோதாக அமைந்துவிடுகிறது. மறுபுறத்தில் பிழைப்பு வாதத்தையே ஒருகலகம் போல சித்தரிப்பது, எதிரிகளை அண்டிப் பிழைப்பது என்பவைதான் இவர்களின் சாராம்சம்.

தலித்தியத்தை இங்கு முதலில் பிரச்சாரம் செய்தவர்கள் மதுரை அரசரடி, இறையியல் மையத்தினர். தென்னிந்திய திருச்சபையின் இந்த நிறுவனம்தான் தென் தமிழ் நாட்டின் என்.ஜீ.ஓ தலைமயகமாக அமைந்தது. இந்த இறையியற் கல்லூரியானது திருமாவளவன் போன்றோரை வளர்ப்பதில் தீர்மானகரமான பாத்திரம் வகித்திருக்கிறது. பின் நவீனத்துவம் போன்ற சரக்குகளைக் கடைவிரிக்கும் கூட்டங்களிலும் என்.ஜீ.ஓ களின் கூட்டங்களிலும் ஆய்வரங்குகளிலும் பல பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் பங்குபற்றிருக்கிறார்கள்.
அ.மார்க்ஸ் போன்றவர்கள் மனித உரிமை பற்றிப் பேசுகிறார்கள். அது தொடர்பான சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக அ.மார்க்சைப் பொறுத்தவரை அவருடைய இடது ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு ஒரு அங்கீகாரம் தேடிக்கொள்வதே அடிப்படை நோக்கமாக இருக்கிறது. தவிர, என்.ஜீ.ஓ கள் இவ்வாறான உண்மையறியும் குழுக்களைப் பயன்படுத்த எப்போதும் தயாராகவே உள்ளன. இவ்வாறான குழுக்களில் மார்க்ஸ் மட்டும் செல்வதில்லை. என்.ஜீ.ஓ சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் எல்லாம் பங்காற்றுகின்றன. இவற்றிற்கெல்லாம யார் யார் பண உதவி தருகிறார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆனால் இவ்வமைப்புகள் பலவற்றை ஒழுங்கமைப்பதெல்லாம் பண உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் என்.ஜீ.ஓ கள்தான்.

புலம்பெயர் நாடுகளில் உருவாகியுள்ள தலித் அமைப்புக்கள் பற்றி?

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை, தீண்டாமை என்பவை யதார்த்தமாக இருக்கின்ற ஒரு ஒடுக்கு முறை. இவை இல்லையென்று யாரும் வாதிடமுடியாது. இந்தத் தீண்டாமை பற்றிய பிரச்சனை என்பது ஒரு நெடிய போராட்டத்தின் வழியிலேயே தீர்க்கப்படலாம்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ்ட்டுகள் அவர்களது பிரச்சனையைத் தீர்க்கவில்லை அல்லது தீர்மானகரமான தீர்வை முன்வைக்கவிலை என்பதே தலித் அமைப்புக்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

தவிர, தலித் பிரச்சனை என்பது தலித்துக்களுக்குத் தான் தெரியும் அவர்கள் மட்டுமே அதை உணர்ந்துகொள்ள முடியும் என்றும் தலித்தியம் பேசுவோர் முன் வைக்கிறார்கள். இவ்வாறான தீவிர அரசியலைப் பேசியே திருமாவளவன் போன்றோர் அரசியலுக்கு வருகிறார்கள். இப்போது அவர், காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க போன்ற எல்லோரோடும் கூட்டுக்குப் போய்விட்டார். ஒரு வகையில் தலித்துக்களை இன்னமும் விரைவாகவும் அழுத்தமாகவும் நிறுவன மயப்படுத்துவதற்குத் இது பயன்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல அவர்களிடையேயான பிளவுகளை அதிகப்படுத்தவும் பயன்பட்டிருக்கிறது.
இதே விடயத்தை ஐரோப்பாவை நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மறுபடி ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், அதன் அர்த்தங்கள் எனக்குப் புரியவில்லை.
ஆனால தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம் இவற்றின் எல்லைகளிலிருந்தே தலித் பிரச்சனை அணுகப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால் பெருங் கதையாடலுக்கு எதிராக என்ற அடிப்படையில் தான் இப்பிரச்சனை முன் வைக்கப்படுகிறது. இது தமிழ் நாட்டைப் போலவே அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு நாம் கூறுவதால் தலித் பிரச்சனையை நிராகரிப்பது என்பது பொருளல்ல. தீண்டாமை என்ற கொடுமையைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் இதற்குப் பொருளல்ல. ஆனால் அவர்கள் கூறுகின்ற வகையில் அதற்குத் தீர்வு கிடையாது என்பதே எமது நிலைப்பாடு.
சிங்களப் பேரின வாதத்தின் பின்னால் நிறுவனப் படுவதனூடாக தீண்டாமை ஒழியும் என்ற கருத்துக் கூட முன்வைக்கப்படுகிறது. மனிதப் படுகொலை நடத்தும் சிங்களப் பேரின வாத அரசு தலித் மக்கள் மீதான கொடுமையை ஒழிக்கும் என்பது கற்பனைகு எட்டாத மூட நம்பிக்கையாகும்.

தலித் பிரச்சினை என்பதே சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மையினர் செலுத்தும் அநீதியான ஒடுக்குமுறை. ஆகவே தீண்டாமை ஒழிப்பு என்பது பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது. வர்க்க ரீதியான ஒடுக்கப்பட்ட மக்களின் இணைவு மட்டுமே தீண்டாமையை ஒழிப்பதற்கான அடிப்படையாக அமைய முடியும். இந்தியாவில் முஸ்லீம் மக்கள் மட்டும் தனித்து நின்று இந்து மதவெறியை அழிக்க முடியுமா? இதே போலத்தான் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் தலித் மக்களுடன் இணைந்தே தீண்டாமையை ஒழிக்க முடியும். இவ்வாறு தான் தமிழ் நாட்டில் நாம் வேலைசெய்த இடங்களில் தீண்டாமையை இவ்வாறுதான் ஒழித்திருக்கிறோம்.
.

இந்தியாவிலேயே இப்படித்தான் தலித் போராட்டங்களை முன்னெடுக்கமுடியும் எனும் போது இலங்கையில் மட்டும் இது எவ்வாறு வேறுபடும். இலங்கையில் தலித்துக்கள் பெரும்பான்மையா என்ன?

மாவோயிஸ்டுக்களின் அரசியல் மீது எமக்கு விமர்சனம் இருந்தாலும், பீகாரிலும், தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் இந்த அணுகுமுறையின் மூலம் தான் அவர்கள் தீண்டாமையை ஒழித்திருக்கிறார்கள். நாம் பல இடங்களில் கோயி நுழைவுப் போராட்டம், கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கான போராட்டம், சாலையில் நடமாடுவதற்கான போராட்டம் போன்ற பல போராட்டங்களை நாம் நடாத்தி வெற்றி கண்டிருக்கிறோம், இவ்வாறான எல்லாப் போராட்டங்களிலுமே ஏனைய சாதியினரைச் சேர்ந்த தோழர்களும் பங்குபற்றியிருக்கிறார்கள். இதனால் எமது போராட்டங்கள் எந்த ஒரு இடத்திலும் சாதிக் கலவரமாக மாற்றப்பட்டது கிடையாது.
இங்கு தமிழ் நாட்டில் நாம் நாடாத்திய போராட்டங்கள் வெற்றியடைய காரணம் இதுதான். தலித் மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இடங்களில் வேண்டுமானால் தலித் அமைப்புகள் கூறும் அரசியல் எடுபடலாம். ஆனால் பெரும்பாலான இடங்களில் தலித் மக்கள் சிறுபான்மையாகத்தானே வாழ்கிறார்கள். அங்கே தலித் மக்கள் தம் சொந்த அனுபவத்திலிருந்தே இதனை நிராகரிப்பார்கள்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றி இன்று இவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறையை எதிர்த்து முறியடித்திருப்பவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தினர்தான். இதை யாரும் மறுக்க இயலாது. தலித் மக்களைப் பொருத்தவரை சாதிக்கும் வர்க்கத்துக்கும் இடையில் சீனப்பெருஞ்சுவர் எதுவும் இல்லை. அவர்கள் வர்க்கரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்படுபவர்கள். ஒரு தலித் உள்ளூர் சாதி ஆதிக்க பண்ணையாரை எதிர்த்து நின்று கூலி உயர்வு கேட்கிறார் என்றால், அது வெறும் கூலிப்போராட்டம் அல்ல. அது ஒரே நேரத்தில் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டமாகவும் இருக்கிறது.

சாதி ஒழிப்புக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் வர்க்கப்போராட்டம்தான் அறுதித் தீர்வு என்றாலும், ஒன்று மற்றதைத் தொடரும் என்று இதனை எந்திரகதியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு நாங்கள் கருதவும் இல்லை. ஆதிக்கசாதிகளைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை நிற்கிறார்கள் என்றால் நாங்கள் தலித் மக்களுடன் இணைந்து நின்று அவர்களை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். அவர்கள் மனம் மாறும் வரை தீண்டாமையை சகித்துக் கொள்ளுமாறு நாங்கள் எப்போதும் கூறியதில்லை. சொல்லப்போனால் தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் தலித் தலைவரை தேர்ந்தெடுக்க கூடாது என்று தேவர் சாதியினர் (ஏழைகள்தான்) வெறி கொண்டு நின்ற போது அதனை எதிர்த்திருக்கிறோம். “தலித் மக்கள் மீது சமூக ஒடுக்குமுறையை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறும் சாதியினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்திருக்கிறோம்.

உதாரணமாக உங்கள் அமைப்பின் ஒரு போராட்டத்தைக் கூறலாமே?

தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைய ராஜாவினுடைய ஊரான பண்ணைப் புரத்தில் நடந்த போராட்டதைக் குறிப்பிடலாம். அந்தப் பண்ணைப் புரத்திலுள்ள தேனீர்க்கடையில் தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தனிக் குவளையில் தான் தேனீர் வழங்கப்படும். இளையராஜா பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். அங்கு பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக உள்ளதால் அவர்களுக்குத் தனிக்குவளை கிடையாது.

இந்தத் தனிக்குவளை அகற்றுவதற்கான போராட்டத்தில் முக்கியமாகப் பங்கேற்றுக்கொண்ட தோழர்கள் பக்கதிலுள்ள கூடலூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் அதிகமாக அனைவருமே தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த வட்டாரத்தில் சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டும் சாதி அதுதான். தேவர் சாதி வெறிக்குப் பெயர் போன ஊரே கூடலூர்தான். அந்த தேனீர்க்கடையில் நடந்த தள்ளுமுள்ளு மோதல்களில் நமது தோழர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இளைய ராஜாவின் மனைவி மற்றும் யுவன் சங்கர்ராஜா ஆகியோர் கூப்பிடு தூரத்தில் காரில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர். அப்போது சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இளைய ராஜா அந்த ஊர்ப் பண்ணையாரின் நண்பராக மாறிவிட்டார் என்பது வேறு கதை.
இங்கு குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் பறையர் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் இந்தப்போராட்டத்தில் அன்றைக்கு பெரியளவில் பங்கேற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இந்தப் போராட்டம் முடிவடைந்து இந்தப் பிரச்சனை ஒரு பேசப்படுகிற சம்பவமாகிவிட்டது. இந்த நிலையில் இளைய ராஜாவின் நண்பரான பண்ணையார் இந்த ஊரில் தீண்டாமைக் கொடுமையெல்லாம் இல்லை தனிக்குவளை இல்லை என்று பறையர் சாதியினர் மத்தியில் கையெழுத்து வேட்டை நடத்த முனைந்தார். இந்த சூழ் நிலையில் அடக்குமுறைக்க்கு நாளாந்தம் உட்படுத்தப்படும், பண்ணையாரில் தங்கிவாழ்கின்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவருமே பண்ணையாரை எதிர்த்து நின்றனர். கையெழுத்துப் போடுவதற்கு யாருமே சம்மதிக்கவில்லை.
இவ்வாறு இம்மக்களை அவர்களது அடக்குமுறைக்கெதிராகப் போராட வெளிக்கொண்டு வந்ததென்பது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்.
வராலாறு முழுவது நிலப்பிரபுவை மறுத்தேயிராத இந்த சமூகம் முதல்தடைவையாகத் தெருவிற்குவந்து மறுப்புத் தெரிவித்தது என்பது தான் அங்கு நமக்குக் கிடைத்த பெரு வெற்றி.

தேசியம் கற்பிதம் என்பது பற்றி..?

இலங்கையில் அதைப் பேசுகிறார்கள் என்றால் வேடிக்கைதான். தேசியம் கற்பிதம் என்று ஒடுக்கப்படும் தமிழர்கள் மத்தியில் சொல்வது இருக்கட்டும். ஒடுக்கும் சிங்கள அரசிடம் இவர்கள் சமரசத்தைக் கோருகிறார்கள். ஏன் சிங்கள அரசிடம் சமரசம் செய்வதற்கு முன்னர் அவர்களுடைய சிங்கள தேசியமும் கற்பிதம் என்று பேசக்கூடாது?

http://inioru.com/?p=4464