Language Selection

புதிய ஜனநாயகம் 2009

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, வி.வி.மு.வின் ஆதரவாளர் இராசேந்திரன், கடந்த ஆண்டு 20.6.08 அன்று சி.பி.எம். குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.

சி.பி.எம். கட்சியின் பொறுக்கித்தனத்திற்கும், ரவுடித்தனத்திற்கும் எதிராய் இருக்கும் வி.வி.மு.வின் மீது ஆத்திரம் கொண்டு அவ்வமைப்பின் முன்னணியாளர் தோழர் ஏழுமலையைத் தீர்த்துக் கட்டும் நோக்கில் சி.பி.எம். குண்டர்களால் தொடுக்கப்பட்ட கொலைவெறித் தாக்குதலைத் தடுக்க முனைந்தபோதுதான் படுகொலையானார், இராசேந்திரன்.

 

இக்கொலை நடந்து ஓராண்டு கடந்த பின்னரும், எம்.இராசக்கண்ணு உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள், காரப்பட்டு தெருக்களில் தினவெடுத்துத் திரிகின்றனர். போலீசு இக்குண்டர்களை கைது செய்யாதது மட்டுமல்ல, இவர்களுடன் கூடிக் குலாவுகிறது. போலீசின் "புரோக்கராய்' செயல்படுகிறது சி.பி.எம். கட்சி என்பது அவ்வூரறிந்த உண்மை.

 

இந்நிலையில், சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்தை கொட்டத்தை அம்பலப்படுத்தியும், இக்கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாத்து வரும் திருவெண்ணெய் நல்லூர் போலீசைக் கண்டித்தும், படுகொலையான இராசேந்திரன் குடும்பத்திற்கு தமது அமைப்பின் சார்பில் திரட்டப்பட்ட நிதி ரூ. 50,000/த்தை வழங்கும் வகையிலும், கடந்த 6.7.09 அன்று இருவேல்பட்டு பள்ளிக்கூடம் முன்பு நிதியளிப்பு பொதுக்கூட்டத்தை நடத்தியது, விவசாயிகள் விடுதலை முன்னணி.

 

 வி.வி.மு. செயற்குழு உறுப்பினர் தோழர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில், தி.மு.க.வின் கலியன், அ.தி.மு.க.வின் ஆறுமுகம், ம.தி.மு.க.வின் சீத்தாபதி, வி.சி.கட்சியின் இளங்கோ, குடியர சுக் கட்சியின் குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சி.பி.எம்.போலீசின் கள்ளக்கூட்டுத்தனத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினர்.

 

 "சுயநலன், பிழைப்புவாதம், காரியவாதம் என்று சீரழிந்துப் போயுள்ள இன்றைய சமூக அமைப்பில், புரட்சிக்காக போராடும் தோழர்களைப் பாதுகாக்க தனது உயிரை தியாகம் செய்துள்ளார் இராசேந்திரன். இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நாம் வழங்கும் இந்த சிறு நிதி உதவிகூட அக்குடும்பத்திற்கு ஒரு ஊன்றுகோலாய் அமையும் என்பதற்கே'' எனப் பேசிய வி.வி.மு. மாவட்ட அமைப்பாளர் அம்பேத்கர், இராசேந்திரன் குடும்பத்தினரிடம் வி.வி.மு.வால் திரட்டப்பட்ட ரூ. 50,000/ த்தை வழங்கினார்.

 

"சி.பி.எம். கட்சி சமூக பாசிஸ்டாக பரிணமித்துள்ளது என்பதை நிரூபிக்க லால்காருக்கோ, சிங்கூருக்கோ, நந்திகிராமுக்கோ போகத் தேவையில்லை! நம் கண்ணுக்கெட்டும் தொலைவிலிருக்கிறது காரப்பட்டு! நிதி கொடுப்பதோடு நிறைவுப் பெற்று விடுவதில்லை நம் பணி; இப்பாசிஸ்டுகளை அண்ட விடாமல் அடித்து விரட்டுவதிலும் முன்னுதாரணம் படைக்கட்டும் காரப்பட்டு'' என இனி செய்ய வேண்டியதை விளக்கி, சிறப்புரையாற்றினார் ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் இரா.சீனிவாசன். ம.க.இ.க. மையக் கலைக் குழுவினர் தமது கலைநிகழ்ச்சியால் புரட்சிகர உணர்வூட்டினர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்பொதுக்கூட்டம், அடுத்த கட்ட போராட்டத்திற்கான முன்னறிவிப்பாய் அமைந்தது.

— பு.ஜ. செய்தியாளர்கள், திருவெண்ணெய்நல்லூர்.