இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது.
அவ்வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், ஈழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் ராஜபக்சேவின் இனவெறி அரசு, தமிழர்களை முகாம்களில் அடைத்து வதைத்துக் கொன்று கொண்டிருக்கிறது.
ஈழ இன அழிப்புப் போரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வவுனியாக் காட்டுப் பகுதியில் முட்கம்பி வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களில் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம்களுக்கு பொன்னம்பலம், ஆனந்த குமாரசாமி, தமிழ்த்துரோகி கதிர்காமர் போன்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இம்முகாம்களைப் பார்வையிட ஐ.நா. பணியாளர்களையோ, ஊடகங்களையோ, மனித உரிமை அமைப்புகளையோ அரசு அனுமதிப்பதில்லை அகதிகள் முகாமில் பணியாற்றித் திரும்பிய மருத்துவர்கள், செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள், முகாமை பார்வையிட்ட இலங்கை அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் வாக்குமூலங்களே அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் அவலநிலையைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.
கடந்த சில வாரங்களில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோருக்கு அம்மை நோய் தாக்கியிருப்பதாகவும், இலட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் செய்வதற்கு அங்கு மொத்தமே 50 மருத்துவர்கள் தான் உள்ளனர் என்றும், 300 தாதியர்கள் தேவைப்படுகின்ற இடத்தில் மொத்தமே 5 முதல் 10 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், அரசு மருத்துவர் சங்கச் செய்தித் தொடர்பாளரான மருத்துவர் உபுல் குணசேகரா தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை வசதிகள் இல்லை.
ஐ.நா.வின் ஆயுத மோதல் மற்றும் குழந்தைகள் பிரிவு, பி.பி.சி.யின் சிங்கள வானொலிச் சேவையில் "அரசு சிறார்களுக்கு சிறப்பு ஊட்டத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்'' என்று எச்சரித்துள்ளது. முகாம்களில் அடை பட்டுள்ள 5 ஆயிரம் சிறுவர்கள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 90 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்டச் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இருக்கும் மாணிக் ஃபார்ம் முகாமில் 70 பேருக்கு ஒரு கழிப்பறைதான் உள்ளது. சர்வதேச நெறிமுறைப்படி அது 20 பேருக்கு ஒன்று என இருக்க வேண்டும். தண்ணீர் மூலம் பரவும் தொற்றுநோயான வயிற்றுப் போக்கு பல உயிர்களைப் பறித்துள்ளது.
மாணிக் ஃபார்ம் முகாமைச் சேர்ந்த வயதான தமிழர் ஒருவர் "இளைஞர்களும் நடுத்தர வயதை எட்டியவர்களும் இங்கு நடத்தப்படும் விதமும், கேட்கச் சகிக்காத வசவுகளும் போர்முனையிலேயே பட்டினி கிடந்தாவது செத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார். இதற்கு முன் வனாந்திரமாக இருந்த இடத்தில் தகரங்களைக் கொண்டு உருவாக்க ப்பட்ட முகாம்களில் வெயிலின் உக்கிரம் அதிகமிருப்பதால், கிடைக்கும் இடைவெளிகளில் எல்லோரும் தூங்குகிறார்கள். சிறுகுழந்தைகளை உறங்க வைத்திருக்கும் பெற்றோர்கள் "சிங்கள ராணுவத்தினர் எவரேனும் பிள்ளைகளைத் தூக்கிச் சென்று விடுவரோ' எனும் பீதியில் தூக்கம் வராது இரவெல்லாம் விழித்திருக்கும் கொடுமை தாங்கமுடியாத ஒன்று. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் அப்பகுதியின் களிமண் தரையில் கால் வைக்கக் கூட முடியாது. கூடவே எக்கச்சக்கமாக பூச்சிகள் கிளம்பி வரும். அது இன்னும் கொடுமையானது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 60 வயது முதியவர் போரில் காணாமல் போன தனது மகளின் குடும்பத்தைத் தேடி முகாம்கள் தோறும் அலைகிறார். வவுனியாவில் இருக்கும் பெரியகாட்டு முகாமில் இராணுவத்தினர் பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என்பதால், அவரால் அந்த முகாமிற்குள் சென்று தேடமுடியாது தவிக்கிறார்.
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் முகாமில் நோயினால் சிறுவர்கள் பலியாகிக் கொண்டுள்ளனர். நோயாளிகளுக்குத் தேவையான அளவு மருத்துவர்களில்லை. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களை ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ பரிசோதனை செய்யும்போதும் இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களும் அவ்விடத்தில் உள்ளனர். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களைப் பரிசோதித்த இராணுவ மருத்துவர்கள், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் தேவை இல்லை என முகாமுக்கு திருப்பி அனுப்பினர். முகாமில் அச்சிறுவர்கள் பிணமாயினர்.
வந்தனா சந்திரசேகர் எனும் 28 வயதுப் பெண், 9 மாதக் கர்ப்பிணி. ஏற்கெனவே இவருக்கு 5 பிள்ளைகள். இவர் தண்ணீருக்காக 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கிறார். நீண்ட நேரம் காத்திருந்த பின்னர், ஒவ்வொரு குடும்பமும் தலா 10 லிட்டர் தண்ணீரைக் குடிக்க, குளிக்க, உடுப்புக் கழுவப் பெற்றுக்கொள்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் அங்கு நடைபெற்ற தாக்குதலால் கால் ஊனமாகி குடும்பத்துடன் ராமேஸ்வரம் அரிச்சமுனைக்குத் தப்பிவந்துள்ளார். தொற்றுநோய்கள் பரவி முகாம்களில் தமிழர்கள் அதிகமான எண்ணிக்கையில் இறந்து வருவதாகவும் வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்றவற்றால் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் ஆண்களும் பெண்களும் இறந்துள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கல்மனம் கொண்டோரையும் உருகிட வைக்கும் மனிதக்கொ டுமைகளை அரங்கேற்றிவரும் இந்த வதைமுகாம்களுக்கு சிங்கள இனவெறியன் ராஜபக்சே வைத்துள்ள பெயரோ "நலன் புரி கிராமங்கள்'.
இந்த நலன்புரி கிராமங்களைப் பற்றி, பிரிட்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிக்கை "மூன்று லட்சம் மக்கள் இலங்கை அரசின் சாவு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஆண்கள் சித்திரவதைக்கு உட்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகிறார்கள். சிறுவர்கள் மனரீதியாக பாதிப்புக்கு உட்படுகிறார்கள். உணவு, மருந்து தண்ணீர் இல்லாமல் மக்கள் ஈக்களைப் போல செத்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களும் சரி, முதியவர்களும் சரி உணவுக்காக சுடும் வெயிலில் காத்திருக்க, இறந்தவர்களின் உடல்களோ வெளியில் போடப்பட்டு அழுகவிடப்பட்டுள்ளன'' என்று எழுதியுள்ளது.
வவுனியாவில் உள்ள முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 1400 பேர் இறப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மூளைக் காய்ச்சலால் மட்டும் 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த வீதத்தில் இறப்பு தொடருமானால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் முகாம்களில் மக்களே இல்லாத நிலை ஏற்படும் என்றும் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி 200 பேர் செத்துக் கொண்டிருக்கின்றனர்.
வதைமுகாம்களின் நிலைமையைப் பற்றிப் பேசும்போது பத்மினி சிதம்பரநாதன் எனும் தமிழ் எம்.பி. இலங்கை நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கூட "இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களைக் கூட சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை'' எனக் கண்டித்துள்ளது. "முட்கம்பி வேலிக்குள் 3 லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பது அப்பட்டமான உரிமை மீறல். எமது நாட்டுப் பிரஜைகளான 3 லட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் அடைத்து வைத்துள்ளீர்கள்?'' என்றும், "உடனடியாக அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுங்கள்'' என்றும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பேசியிருக்கிறார்.
இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா கூட "அகதி முகாம்களைப் பார்வையிட்டபோது அதிர்ச்சியடைந்தேன். காலைக்கடன்களைக் கழிப்பதற்குக் கூட மக்கள் மணிக்கணக்கில் கியூவில் நிற்கிறார்கள். 5 பேர் மட்டும் இருக்கக் கூடிய கூடாரத்தில் 30க்கும் அதிகம் பேர் உள்ளனர். கூடாரத்தில் எழுந்து நின்றால், இடுப்பு எலும்பே முறிந்துவிடும்; இந்த மக்களுக்கு நாம் மிகப் பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தென்னாசியாவிலேயே பெரிய பத்திரிக்கை என்றும் பாரம்பரியம் மிக்க நம்பத்தகுந்த பத்திரிக்கை என்றும் நடுத்தர வர்க்கத்தாலும் அறிவுஜீவிகளாலும் போற்றப்படும் "இந்து'' நாளேட்டின் ஆசிரியர் என்.ராம் மட்டும் இந்த அகதி முகாம்களை "இந்தியாவில் இருக்கும் முகாம்களை விட மேம்பட்டிருக்கிறது'' என்றும், "சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை. தண்ணீருக்கும் பிரச்சினை இல்லை'' என்றும் சொல்லியிருக்கிறார். முட்கம்பி வேலிகளில் மின்சாரத்தைப் பாய்ச்சி மக்களைக் கொல்லாத ராஜபக்சேவின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறார், இந்த மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு. அங்கு உற்றார் உறவினர்களையும் சொந்த ஊரையும் விட்டு ஏதிலிகளாகக் கொடும் வலிகளோடு வந்த தமிழர்களை "வீடுவாசலை விட்டுவிட்டு ஓடிவந்தபோதுகூட, தாங்கள் சேமித்து வைத்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள்'' என்றும் வக்கிரத்தோடு சொல்லியிருக்கிறார்.
"இந்து''ராமின் தனிப்பட்ட குரல் அல்ல இது. இந்திய மேலாதிக்கம், இலங்கை அரசின் செயல்பாட்டுக்கு ராமின் மூலம் தரும் பாராட்டுப் பத்திரம்தான் இது. யாருமே நுழைய முடியாத அம்முகாம்களுக்கு ஹெலிகாப்டரில் "இந்து'' ராம் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ராஜபக்சே நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைத்து, கொலைக்கரங்கள் வழங்கிய "லங்கா ரத்னா'' எனும் பதக்கத்துடன் சிங்கள இனவெறிக்கும், இந்திய மேலாதிக்கத்தின் நலனுக்கும் ஊதுகுழலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, "பாரம்பரியம்' மிக்க "இந்து'' பத்திரிக்கை.
இலங்கை மீதான மேலாதிக்கப் போட்டாபோட்டியின் காரணமாகவும், சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடாமல் இழுப்பதற்காகவும், மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் மிரட்டிப் பணியவைக்கும் நோக்கத்துடன் அகதிமுகாம் அவலங்களை அம்பலப்படுத்துகின்றன. இந்திய மேலாதிக்கவாதிகளோ, ராஜபக்சே கும்பலுக்கு நற்சான்றிதழ் அளித்து தாஜா செய்து தம் பக்கம் இழுக்க, அகதிமுகாம் அவலங்களை மூடிமறைக்கின்றனர். போர்க்குற்றவாளியான ராஜபக்சே மட்டுமல்ல; இக்குற்றங்களுக்குப் பக்கபலமாகப் பிரச்சாரம் செய்துவரும் இந்திய மேலாதிக்கத்தின் ஊதுகுழலான "இந்து'' ராம் போன்ற கோயபல்சுகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
சுந்தர்