என்ன அருள் வந்து இறங்கியதோ தெரியவில்லை. திடீரெனத் "தமிழ்த் தேசியம்'' என்று கூச்சலிட்டுக் கொண்டு சாமியாடக் கிளம்பி விட்டது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி எனும் பெயரிலுள்ள மணியரசன் கும்பல்.
தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு, வெற்றுச் சவடால் அடித்து, திருச்சியில் கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று ஒரு மாநாட்டையும் அது நடத்தியுள்ளது.
நேற்றுவரை தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பாடு போட்ட இக்கும்பல், ஈழத் தமிழின அழிப்புப் போருக்குப் பிறகு, இப்போது தமிழ்த் தேசியம்தான் ஒரே தீர்வு என்று கூப்பாடு போட்டுக் கொண்டு தமிழர்களைப் புல்லரிக்க வைக்கிறது.
இந்தியா, தமிழனை நம்பத் தயாராக இல்லையாம்! நட்புக்க ரம் நீட்டிய ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என டெல்லி ஏகாதிபத்திய ஆட்சியாளர் கள் கணக்கு போடுகிறார்களாம்; ஆரிய திராவிட வரலாற்றுப் பகைதான் இதற்குக் காரண மாம். ஆரியப் பகையறுத்துத் தமிழினத்துக்கென ஒரு நாடு இல்லாததுதான் அதன் அடிப் படை ஊனமாம். நாடு இருந்திருந்தால், ஈழத் தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியுமாம். எனவேதான், தமிழ்த் தேசியக் குடியரசு அமைப்பதைத் தமிழர்கள் இலட்சியமாகக் கொள்ள வேண்டுமாம். அதற்கான திசைவழியைத் தீர்மானிக்கவே இந்த மாநாடாம். இப்படியொரு வரலாற்று ரீதியான கதையை அவிழ்த்து விட்டுள்ளார், மணியரசன்.
ஆரியம் என்பது பார்ப்பனியம்; பார்ப்பன சனாதன வருணாசிரம தர்மம்தான் இந்துமதம். இந்துத்துவம் என்பது அதன் நவீனகால அரசியல் சித்தாந்த பண்பாட்டு அவதாரம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் "காங்கிரசுக்குப் போடாதே ஓட்டு! தமிழினத்துக்கு வைக்காதே வேட்டு!'' என்று பிரச்சாரம் செய்து, ஆரிய பார்ப்பன இந்துவெறி பாரதிய ஜனதாவையும் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவையும் கொல்லைப்புறமாக ஆதரித்ததோடு, இவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்; இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படும் என்று விடுதலைப் புலிகளையும் நம்பவைத்து கழுத்தறுத்த இந்தத் துரோகக் கும்பல்தான், இப்போது ஆரியப் பகைமுடிக்க தமிழ்த் தேசக் குடியரசை நிறுவப் போவதாகப் பசப்புகிறது. இந்தக் கயமைத்த னத்தை மறைக்க ஒரு மாநாடு கூட்டி ஏய்க்கவும் கிளம்பியிருக்கிறது.
மணியரசன் கும்பலைப் பொருத்தவரை, ஆரியம் என்பது வேறு; இந்துத்துவம் பார்ப்பனியம் என்பது வேறு; இந்துமதம் என்பது வேறு. இந்துமதம் என்பது கடவுள் நம்பிக்கை; இதை இப்போதைக்கு அழிக்க முடியாது; அதற்கான அவசியமுமில்லை என்பதுதான் அக்கும்பலின் நிலைப்பாடு. ஆரியபார்ப் பன சாம்ராஜ்ஜியத்தின் இதயமான இந்துமதத்தை இந்துத்துவத்தை எதிர்த்து அழிக்க வேண்டிய அவசியத்தை ஏற்காத மணியரசன் கும்பல், ஆரியத்தை எதிர்க்கப் போகிறதாம்! என்னேவொரு பித்தலாட்டம்! வருணாசிரமத்தையும் பாரதீயத்தையும் தாங்கிப் பிடித்த பாரதியை முற்போக்குக் கவிஞராகத் துதிபாடிக் கொண்டும், இந்துத்துவ தேசிய நாயகன் ராமனை தமிழ்க் கடவுளாகச் சித்தரித்துக்கொண்டுமுள்ள பார்ப்பன பாசிச பாதந்தாங்கி மணியரசன் கும்பல், ஆரியப் பகை முடிக்கக் கிளம்பிவிட்டதாம்! நம்புங்கள்!
ஆரிய-பார்ப்பனியத்துக்குப் பல்லக்குத் தூக்கும் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாசு முதலான ஓட்டுப் பொறுக்கிகள் ஒருபுறமிருக்கட்டும். இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு வெளியே, தமிழின விடுதலைக்குப் போராடுவதாகக் காட்டிக் கொள்ளும் "அய்யா' நெடுமாறன், இந்திய மேலாதிக்கத்தை விசுவாசத்தோடு ஆதரித்து நிற்கிறார். ஆர்.எஸ்.எஸ். அரைடவுசர் அண்ணாச்சி பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருது கொடுத்துத் துதிபாடுகிறார். "இலங்கையில் மடிவது இந்துக்களே. எனவே, இந்தியா உதவி செய்ய வேண்டும்'' என்று கோருகிறார். கடந்த 9.7.09 அன்று சென்னையில் ஆர்.எஸ்.எஸ்.இன் கிளை அமைப்பான விவேகானந்தா நல்லோர் வட்டத்தின் சார்பில் நடந்த விழாவில், தியாகி முத்துக்குமாரின் நினைவுப் படத்தைத் திறந்து வைக்கிறார். அவருக்குப் போட்டியாக, "புலிகளை ஆதரிப்பது கோட்சே என்றாலும், அவரை நான் ஆதரிப்பேன்'' என்று சூளுரைக்கிறார், திரைப்பட இயக்குநர் சீமான்.
இப்படி இவர்கள் வெளிப்படையாகவே ஆரியபார்ப்பன இந்துத்துவத்தையும் இந்திய மேலாதிக்கத்தையும் ஆதரித்து நின்ற போதிலும், புலித் துதிபாடிகள் என்பதால் இவர்களைப் பின்வாயால் கூட விமர்சிக்காமல் இணக்கமாக நடந்து கொள்ளும் மணியரசன் கும்பலுக்கு, ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்தப் போவதாகவும் தமிழ்த் தேசக் குடியரசைக் கட்டியமைக்கப் போவதாகவும் சவடால் அடிக்க ஏதாவது யோக்கியதை இருக்கிறதா? இந்த லட்சணத்தில் இப்பித்தலாட்டக் கும்பல் ஒரு மாநாடு நடத்தினால் எப்படியிருக்கும்?
···
"நான்காம் ஈழப்போரில், சிங்கள இராணுவத்துக்கு எதிராக பிரபாகரன் ஏன் முழுப்போர் நடத்தாமல், தற்காப்புத்தாக்குதலை நடத்துகிறார்? அவரது இந்த அணுகுமுறையில் பலவகையான அரசியல் மற்றும் படைத்துறை உத்திகள் பொதிந்துள்ளன. சிங்களப் படையினரைக் களைப்படையச் செய்வது; எதிரியை வன்னிக் காட்டுக்குள் இழுத்துச் சுற்றி வளைத்துத் தாக்குவது என்ற உத்தியுடன் இப்போது முழுப்படை வலிவையும் சமரில் புலிகள் இறக்கிவிடவில்லை... கவலைப்படத் தேவையில்லை. களநிலைமைகள் வலுவாக இருக்கின்றன... புலிகள் இப்போது முன்னேறிச் செல்லும் நிலையில் உள்ளனர்... புதிய புதிய போர் முறைகளில் புலிகள் சண்டையிடுகின்றனர்...'' என்றெல்லாம் தமிழர் கண்ணோட்டம் பத்திரிகையில் எழுதியும் பொதுக்கூட்டங்களில் பேசியும் வந்த மணியரசன் கும்பல், இப்போது ஈழத் தமிழின அழிப்புப் போருக்குப் பிறகு புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று ஏதோ மிகப் பெரிய ஆய்வு செய்து கண்டறிந்ததைப் போல நாக்கைச் சுழற்றிப் பேசுகிறது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து புலிகள் அடுத்தடுத்து பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும், அவற்றையெல்லாம் பரிசீலனை செய்யாமல் மூடி மறைத்து, ஏதோ மிகப் பெரிய தாக்குதலுக்காகப் புலிகள் பதுங்குவதாகவும், புதிய உத்திகளுடன் போரிடுவதாகவும் கதையளந்துவிட்டு, இப்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கதைக்கிறது.
இந்தப் பித்தலாட்டத்தை மறைக்க, ஈழத் தமிழினத்தையும் புலிகளையும் அழிக்க 2005ஆம் ஆண்டில் நார்வேயில் 20 நாடுகள் கூடி பீக்கான் (becon)) திட்டம் என்ற பெயரில் சதி செய்ததாகவும், இதை புலிகள் நன்கறிந்திருந்தால், தற்காப்புச் சமர் புரிந்து கொண்டே பின்வாங்குவது என்ற உத்தியுடன் செயல்பட்டதாகவும், பீக்கான் திட்டத்தின் நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த விடாமல், மூன்றரை இலட்சம் மக்களை ஏழு மாதங்களாகப் பாதுகாத்து, பின்வாங்கிக் கொண்டே போரிட்டு, முக்கியத் தளபதிகள் தலைமறைவாகி விட்டதாகவும், புலிகள் வீழவில்லை; அவர்கள் மீண்டும் தமிழீழ விடுதலப் போரை முன்னெடுப்பார்கள் என்றும் செந்தமிழனார் தமிழர் கண்ணோட்டத்தில் கதையளக்கிறார். இந்த ரீல் சுற்றும் வேலைக்கு அதிமேதாவித்தனமாக களம், காலம், போர்உத்தி, சான்றாதாரம் என்றெல்லாம் "மேக்அப்' போட்டு மாநாட்டில் அரங்கேற்றினார். ஒப்பனை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஆட்டம்தான் சகிக்கவில்லை.
"புலிகளின் ஆட்சிப் பகுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை; பிச்சைக்காரர்கள் இல்லை. கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு புலிகள் அரசமைத்த பகுதியில் கோக்பெப்சி இல்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக பிரபாகரன் ஆட்சி இருந்ததால்தான் அமெரிக்கா நார்வே இந்தியா சீனா உள்ளிட்ட 20 நாடுகள் சதித்திட்டம் தீட்டி ஈழ விடுதலையை நசுக்கினர்'' என்று பரமார்த்த குருவின் சீடர்களையே விஞ்சும் வகையில் ஒரு புதுக்காரணத்தை அவிழ்த்து விட்டார் ம.செந்தமிழன்.
தாங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக, புலிகள் எங்கே யும் எழுதியதோ, பேசியதோ கிடையாது. எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டமும் நடத்தியது கிடையாது. அப்படியிருக்க, செந்தமிழன் கனவு ஏதும் கண்டாரோ? ஒருவேளை, கோக்கும் பெப்சியும் இல்லாததுதான் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான அடையாளமோ?
"தலைவர் பிரபாகரன் இந்தியாவை நோக்கி நட்புக் கரம் நீட்டினார். ஊடகங்கள் வழியாக விடுதலைப் புலிகளின் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்'' என்று சூன் மாத தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் இதழில் மணியரசன் எழுதியுள்ளார். அதே கட்டுரையில் இந்தியாவை, "தில்லி ஏகாதிபத்திய ஆட்சி' என்றும் குறிப்பிடுகிறார். இத்தகைய "ஏகாதிபத்திய' இந்தியா, "தமிழீழ அரசு அமைய உதவி செய்தால், இந்தியப் பெருங்கடலில் அது இந்தியாவின் காவல் அரணாக விளங்கும் என்றார் பிரபாகரன்'' (த.தே.த.க., சூன் 2009) என அக்கட்டுரையில் பிரபாகரனின் இந்திய விசுவாசத்தை விளக்கியுமுள்ளார்.
ஆனாலும் செந்தமிழனார், விடுதலைப் புலிகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றதாகக் கூசாமல் புளுகுகிறார். ஒருவேளை செந்தமிழனார் பார்வையில் இந்திய மேலாதிக்கத்துக்கு விசுவாசமாகவும் அடியாளாகவும் இருப்பதுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பா? அல்லது, இப்படியெல்லாம் வலிந்து இட்டுக் கட்டி புலித் துதிபாடினால், கூட்டத்தினரிடம் கைத்தட்டல் பெறலாம் என அவர் கணக்குப் போட்டிருப்பாரோ? தெரியவில்லை.
தியாகு, கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் தமிழ்த் தேசியத்துக்காகவும் ஈழ விடுதலைக்காகவும் ஒன்றிணைந்து நிற்பதுபோல ஒரு தோற்றம் இருந்த நிலையில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; இது வெறும் நெல்லிக்காய் மூட்டைதான் என்பதைத் தனது உரையின் மூலம் அவிழ்த்துக் கொட்டினார், பெரியார் தி.க.வின் கொளத்தூர் மணி. "தமிழ்த் தேசம் அமைப்பதில் கருத்து வேறுபாடு இல்லை; ஆனால், எதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இன்று தமிழ்த்தேசம் பேசுபவர்கள் இந்துத்துவப் பண்பாட்டையே புகுத்துகின்றனர். வெறுமனே தமிழ்த் தேசம் பேசுபவர்களை நம்பிப் பயன் இல்லை. இந்துத்துவத்தையும் பார்ப்பனியத்தையும் ஒழிப்பதுதான் முதன்மையானது'' என்று இலக்கின்றி மாநாடு நடத்தும் மணியரசன் கும்பலை இடித்துரைத்தார். நடப்பது தமிழ்த் தேசிய ஆதரவு மாநாடுதானா என்று புரியாமல் பார்வையாளர்கள் குழம்பிப் போனார்கள்.
மணியரசனார் மாநாடு நடத்திய அதேநாளில், அதே திருச்சி நகரில், அகதி முகாம்களில் வதைபடும் ஈழத் தமிழ் இந்துக்களைப் பாதுகாக்கக் கோரி, இந்து முன்னணியின் ராம.கோபாலன் கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அந்த இந்துவெறி கும்பலை மாநாட்டுக்கு அழைத்திருந்தால் தமிழ்த்தேசியத்துக்கு வலுவான ஆதரவு கிடைத்திருக்கும். மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்கள்.
"தத்துவம் என்பது போர்வாள்; அது முனை மழுங்கினால் வாளை மாற்ற வேண்டும். தத்துவம் நமக்கு உதவவில்லை என்றால், அதை ஒதுக்கி வைக்க வேண்டும். மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அனைத்தும் நமது கடமைக்கு உதவாதபோது, அவற்றைத் தூக்கியெறிய வேண்டும்'' என்று இம்மாநாட்டில் மணியரசன் சாமியாடியதைப் பார்த்து பார்வையாளர்கள் பயந்து விட்டனர். "வரலாறு காணாத அளவுக்கு' ஏறத்தாழ 1000 பேர் மாநாட்டுக்குத் திரண்டு வந்ததால், அவருக்கு இப்படியொரு ஆவேசம் வந்துவிட்டது போலும்!
எந்தத் தத்துவமும் கோட்பாடும் வேண்டாம் என்றால், மணியரசனார் கூறும் திசைவழி என்ன? இதைத்தான் அண்ணாயிசம் என்றார், பாசிச எம்.ஜி.ஆர். தனது பிழைப்புவாதத்தை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, கேப்பிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாம் சேர்ந்த கலவைதான் அண்ணாயிசம் என்றும், அதுதான் வழிகாட்டும் தத்துவம் என்றும் விளக்கினார். மணியரசனாரோ, இப்படியெல்லாம் மூடி மறைக்கத் தேவையில்லை என்று ஒரே போடாகப் போடுகிறார். ஒருவேளை, இதுதான் மணியரசனிசமோ?
மார்க்சியம் வேண்டாம்; பொதுவுடமைக் கோட்பாடும் வேண்டாம் என்றால், எதற்காக மணியரசனார் தமது கட்சியின் பெயரில் பொதுவுடமை என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும்? மணியரசனாரின் புரவலர்கள்கூட பொதுவுடமையை எதிர்ப்பவர்களாயிற்றே! தாங்களும் ஏதோ தத்துவத்தை கோட்பாட்டை வழி காட்டியாகக் கொண்டுள்ளவர்கள் போலக் காட்டிக் கொள்ள, அந்தக் காலத்தில் கவுரவத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட இந்தச் சொல்லையும் கட்சியின் பெயரிலிருந்து கடாசி எறிந்து விட்டால், மணியரசனிசம் முழுமை பெற்றுவிடும்.
திருச்சி பு.ஜ. செய்தியாளர்கள் உதவியுடன் பாலன்.
பில்டிங் ஸ்ட்ராங்குதான்... பேஸ்மெண்ட்டுதான் வீக்கு!
· சென்றமுறை திருச்சியில் பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றிய கூட்டத்துக்கு சேகுவேரா படம் போட்ட டிசர்ட், பனியன் அணிந்து வந்த ஈழ ஆதரவாளர்கள், தற்போது த.தே.பொ.க. மாநாட்டுக்கு வரும்போது அவற்றைக் கிழித்தெறிந்து விட்டார்கள்! காரணம், "சோசலிச' கியூபா ஈழத்தை ஆதரிக்கவில்லையாம். ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் சீனாவுடன் சேர்ந்து வாக்களித்ததால் இந்த முடிவாம்! தற்போது இவர்கள் பிரபாகரன், முத்துக்குமார் படம் போட்ட டிசர்ட், பனியன் அணிந்து கொண்டு வந்தனர்.
·புத்தகக் கடைகள் ஏராளமாக இருந்தபோதிலும், அங்கு புத்தகம் வாங்கியோரைவிட, பிரபாகரனின் விதவிதமான படங்களை வாங்குவதிலும், செல்போனில் படத்தை டவுன் லாடு செய்வதிலும்தான் மாநாட்டுக்கு வந்தவர்கள் ஆர்வம் காட்டினர்.
· மதிய உணவு இடைவேளை கூட அறிவிக்காமல் தொடர்ச்சியாக நிகழ்ச்சியை நடத்தினர். ஈழம் பற்றிய நாட கம், கலை நிகழ்ச்சிகள் அந்த நேரத்தில் நடைபெற்றது. "புனிதமான' சினிமா உலகின் திரைப்பட உதவி இயக்குனர்கள் வீர வசனத்தோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவர்கள் "சங்கே முழங்கு'' மற்றும் பிற "தமிழின உணர்வூட்டும்' பழைய சினிமாப் பாடல்களுக்கு நடனம் ஆடினர்.
· "ஈழ மக்களின் துயரத்தை விட மதிய உணவு நமக்கு முக்கியமானதா?'' என்று கேள்வி எழுப்பி, முனைவர் செயராமன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மறுபுறம் பந்தி தனியாக நடந்து கொண்டிருந்தது.
· அமரந்தா பேசும்போது, இல்லையில்லை, காகிதத்தை வைத்துப் படிக்கும்போது கூட்டம் கொட்டாவி விட்டது. இதைச் சகிக்க முடியாமல், இடையே குறுக்கிட்ட கி.வெங்கட்ராமன், அமரந்தா பேச்சின் ஆழத்தையும் அவசியத்தையும் விளக்கி தனியே ஒரு வகுப்பெடுத்தார். அதன் பிறகு அமரந்தா படிக்க, கொட்டாவி விடாமலேயே கூட்டம் மெதுவாக கரையத் தொடங்கியது.
· "தமிழ்த் தேசியத்தின் திசைவழி'' என்ற சிறுநூலை விளம்பரப்படுத்தி அனைவரையும் வாங்குமாறு கோரினர். வாங்கியவர்கள் திக்கும் தெரியாமல் திசையும் புரியாமல் பத்திரமாகப் பையில் வைத்துக் கொண்டனர்.