கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில்  ஒரு டன் எடையுள்ள இரும்புத் தகடு சரிந்து விழுந்து, ரகுபதி என்ற உதிரித் தொழிலாளி கோரமாகக் கொல்லப்பட்டார். எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி உதிரித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள்,

பயிற்சித் தொழிலாளர்களைக் கட்டாயமாக வேலை செய்யுமாறு நிர்வாகம் நிர்பந்திப்பதால் ஏற்பட்ட கோரமான விபத்துகளில் ஒன்றுதான் இது. வழக்கம் போலவே, இப்படுகொலையை மூடி மறைக்க ஆலை நிர்வாகிகள் முயற்சித்தபோது, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடியதால், இழப்பீடு நிவாரணமும் மாண்டுபோன தொழிலாளி ரகுபதியின் மனைவிக்கு இந்நிறுவனத்தில் வேலைதரவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

 

இக்கொடிய விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, கடந்த ஜூலை முதல் நாளன்று இதே நிறுவனத்தில் மீண்டும் இரும்புத் தகடு சரிந்து விழுந்து, லாசர் என்ற உதிரித் தொழிலாளி கொல்லப்பட்டார். விபத்து நடந்த போது, அருகில் தொழிலாளிகள் யாருமில்லாததால், படுகாயமடைந்த தொழிலாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மாண்டதாகவும் நிர்வாகம் இப்படுகொலையை மூடிமறைத்தது. பின்னர், தொழிலாளர்கள் போராடியதால் மாண்டுபோன தொழிலாளியின் வாரிசு ஒருவருக்குத் தற்காலிக வேலை தருவதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

 

 உதிரித் தொழிலாளருக்கும் ஒப்பந்தத் தொழிலாளருக்கும் "விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல'' என்ற வேலையில் சேரும்போது தொழிலாளியிடம் எழுதி வாங்கிக் கொள்ளும் இந்த அரசுத்துறை நிறுவனம், எவ்வித உரிமையோ பாதுகாப்புச் சாதனங்களோ இல்லாமல் கொத்தடிமைகளாக வேலைசெய்து வரும் தொழிலாளர்களின் கடின உழைப்பால் கடந்த ஆண்டில் ரூ. 1500 கோடிகளுக்கு மேல் இலாபம் ஈட்டியுள்ளது. அரசுத்துறை நிறுவனமே இப்படித் தொழிலாளர்களை விபத்துகளுக்கு ஆளாக்கி வெறியோடு இலாபமீட்டும் போது, தனியார் ஆலைகளில் நிலவும் கொத்தடிமைத்தனங்களையும் விபத்துகளில் தொழிலாளர்கள் படுகொலையாவதையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

கடந்த ஜூலை 9 ஆம் தேதியன்று திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள திருச்சி டிஸ்லரீஸ் அண்டு கெமிக்கல்ஸ் ஆலையில் பாய்லர் வெடித்து, மூன்று தொழிலாளர்கள் 200 அடி தொலைவுக்கு உடல்கள் பிய்த்தெறியப்பட்டு கோரமாக மாண்டு போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். உரிமம் புதுப்பிக்கப்படாமல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இயக்கப்பட்ட இந்த ஆலையின் முதலாளிகள், இலாபவெறியோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி தொழிலாளர்களை ஆபத்தான வேலைகளில் நிர்பந்தமாக ஈடுபடுத்தியதாலேயே இக்கோரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் தொழிலாளர்கள் உரிமைகளற்ற அடிமைகளாக வதைக்கப்படுவதற்கும், பாதுகாப்புச் சாதனங்களின்றி விபத்துகளில் தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கும், முதலாளிகளின் இலாபவெறிக்கும் வகைமாதிரிக்குச் சில உதாரணங்கள்தான் இவை. இவற்றுக்கு எதிராக சங்கமாக அணிதிரளும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிப் பழிவாங்கும் முதலாளிகளின் கொட்டத்துக்கு அரசும் போலீசும் நீதித்துறையும் வெளிப்படையாகவே துணை நிற்கின்றன.

 

தொழிலாளர்கள் மீது தொடரும் இக்கொடிய முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு தொழிலாளர்களை அணிதிரட்டி வருகின்றனர். சேலத்தில் இயங்கிவரும் பு.ஜ.தொ.மு; இம்மாவட்டத்தில் ஜவுளித் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைத் தயாரிப்புக் கூடங்களில் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கப்படுவதற்கு எதிராகவும், பணிநிரந்தரம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளின்றி தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கு எதிராகவும் கடந்த ஜூலை மாதத்தில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு தொழிலாளர்களை அணிதிரட்டி அமைப்பாக்கியது. இதன் தொடர்ச்சியாக, 20.07.09 அன்று சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக, தொழிலாளர்களைத் திரட்டி முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலை நாட்டக் கோரியும் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் எரிமலையின் சீற்றத்தை முன்னறிவிப்பதாக அமைந்தது.

 

பு.ஜ.செய்தியாளர்கள்.