இந்த நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை உழவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைஎளிய மக்களுக்கு மரியாதை செய்திருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடங்கி முதலாளித்துவ அறிஞர்கள் வரை அனைவரும் ஒரே குரலில் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

முதலாளிகளுக்குச் சலுகைகள் அளித்து, அவர்கள் மூலம் அச்சலுகைகளில் சிறு பங்கு தொழிலாளர்களைச் சென்றடையச் செய்யும் உத்திக்குப் பதிலாக, இந்த பட்ஜெட் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திப் போடப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்படிச் சுற்றி வளைத்துப் பேசாமல், தனியார் முதலாளிகளின் ஊதுகுழலான இந்தியா டுடே ஏடு, இந்த பட்ஜெட்டை "சோசலிச பட்ஜெட்'' என வஞ்சகமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது.

 

முதலாளித்துவப் பத்திரிகைகளின் புகழாரங்களைக் கேட்கும்பொழுது "மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா மூக்கின் கீழ் இப்படியொரு பட்ஜெட்டா? உலக முதலாளித்துவ நெருக்கடி இவர்களுக்கெல்லாம் நல்ல புத்தியைக் கொடுத்துவிட்டதா?'' என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். புலி ஏன் திடீரெனப் புல்லைத் தேடி ஓடுகிறது என்ற கேள்வியை மனதில் வைத்துக் கொண்டு இந்த பட்ஜெட்டைக் கூறு போட்டுப் பார்த்தால், மன்மோகன் சிங் கும்பலின் திடீர் கரிசனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 

புள்ளிவிவர சித்து விளையாட்டுக்கள்

 

"தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 144 சதவீதம் அதிகரிப்பு; விவசாயக் கடன் 3,25,000 கோடி ரூபாயாக அதிகரிப்பு; வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாயில் 25 கிலோ கோதுமை அல்லது அரிசி மாதந்தோறும் வழங்கும் திட்டம்; தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 1,730 கோடி ரூபாயாக அதிகரிப்பு'' எனச் சில சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் காட்டிதான், இந்த பட்ஜெட்டை சோசலிச பட்ஜெட் என முதலாளித்துவக் கும்பல் தூக்கி நிறுத்துகிறது.

 

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 144 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பது வடிகட்டிய பொய். ப.சிதம்ப ரம் கடந்த ஆண்டு பட்ஜெட்டைத் தயாரித்து அளித்தபொழுது மிகக் குறைவான தொகையைத்தான் இத்திட்டத்திற்கு ஒதுக்கியிருந்தார். பிறகு, நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் 36,750 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையோ 39,100 கோடி ரூபாய்தான். சதவீதக் கணக்கில் பார்த்தால், வெறும் 6.4% தான் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரணாப் முகர்ஜியோ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையோடு ஒப்பிட்டு, 144 சதவீதம் அதிகரிப்பு எனத் தம்பட்டம் அடித்து வருகிறார்.

 

இத்திட்டத்தின் கீழ், இனி கிராமப்புற மக்களுக்கு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்றும் கூலியும் நூறு ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் டாம்பீகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 125 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மைய அரசு மீதித் தொகையை ஒதுக்குமா, இல்லை திட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டதாக காகிதக் கணக்குக் காட்டுமா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

 

மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் வாழும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நந்தா பண்டாரே (வலது ஓரமாக உச்சியில்), தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, தனது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்குக்கூட அனுப்ப முடியாத அளவிற்கு வறுமையில் உழன்று வருகிறார். (கோப்புப் படம்). ஏதோ இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதற்காகவே 3,25,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது போல ஒரு செப்படி வித்தையை உருவாக்கியிருக்கிறார், பிரணாப் முகர்ஜி. உண்மையில் இந்தக் கடனைத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் என்றுதான் பட்ஜெட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடியையே தர மறுத்து, அப்பாவி விவசாயிகளை அலையவிட்டு வரும் இவ்வங்கிகள், கடனைக் கேட்டவுடன் கொடுத்துவிடுமா?

 

விவசாயக் கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுப்பதையே கமுக்கமாக நிறுத்தி விட்டதாகப் புலம்புகிறார்கள் தமிழக விவசாயிகள். இந்த நிலையில், பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளைப் பொருத்தவரை இந்தக் கடன் அறிவிப்பு இன்னொரு காகிதத் திட்டம்தான்.

 

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஏற்கெனவே 35 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. விலையைக் குறைத்த பிரணாப் முகர்ஜி வழங்கப்படும் அளவையும் 25 கிலோவாகக் குறைத்துக் கணக்கை நேர் செய்து விட்டார்.

 

தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,730 கோடி ரூபாயில் எத்தனை ஏழைகள் பலனடைவார்கள் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது; எனினும், இத்திட்டத்தால், சிப்லா, காடிலோ ஹெல்த்கேர், எல்டர் பார்மா, கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் பார்மா உள்ளிட்ட சில பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் பலனிருக்கிறுது என "நாணயம் விகடன்'' இதழே உண்மையைப் புட்டு வைத்துள்ளது. கிராமப்புறங்களில் அடிக்கட்டுமான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பாரத் நிர்மாண் திட்டத்தைப் பொருத்தவரையிலும் இதுதான் உண்மை.

 

இந்தியாவெங்கும் சுமார் 44,000 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த 44,000 கிராமங்களில் வெறும் 1,000 கிராமங்களைத் தத்தெடுத்துக் கொண்டு அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக 100 கோடி ரூபாயை (!) ஒதுக்கிவிட்டு, தலித் மேம்பாடு என பீற்றிக் கொண்டு திரிகிறார், பிரணாப் முகர்ஜி. இப்படி பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு அற்பத்தனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை ஊதிப் பெருக்கி, சோசலிச பட்ஜெட் எனப் பொது மக்கள் காதில் பூச்சுற்றி வருகின்றன, முதலாளித்துவப் பத்திரிகைகள்.

 

பாவம் ஓரிடம், பழி ஓரிடம்!

 

இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையில் 4,00,996 கோடி ரூபாய் பற்றாக்குறையாகக் காட்டப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு அதிக அளவில் வாரி வழங்கியதாலும் உரம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு மானியங்களைக் கொட்டிக் கொடுப்பதாலும்தான், இந்தளவிற்குத் துண்டு விழுந்திருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் புலம்புகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி துண்டு விழுவது பெருத்துக் கொண்டே போனால், தேசத்தின் எதிர்காலம் என்னாவது என இவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

இக்குற்றச்சாட்டு மோசடித்தனமானது. மைய அரசு கடந்த ஆண்டு அதிகக் கடன் வாங்கியதால் ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வட்டித் தொகை செலவு 33,000 கோடி ரூபாய். மைய அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய கமிசன் பரிந்துரையின்படி சம்பளம் (44,000 கோடி ரூபாய்) வழங்க வேண்டிய சுமையும் மைய அரசின் மீது விழுந்திருக்கிறது. உலக முதலாளித்துவ நெருக்கடியைக் காட்டித் தரகு பெரு முதலாளிகளுக்குக் கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட பல்வேறு விதமான வரிச் சலுகைகளையும் நீக்க பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டதால், அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு 68,000 கோடி ரூபாய். இதுவும் போதாதென் று, இந்த பட்ஜெட்டிலும் தரகு முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் பங்குச் சந்தை சூதாடிகளுக்கும் பல்வேறு விதமான வரிச் சலுகைகள் காட்டப்பட்டுள்ளன. மைய அரசின் பற்றாக்குறை ஊதிப் போனதற்கு இப்படிப்பட்ட ஊதாரித்தனமான செலவுகளும் வரிச் சலுகைகளும்தான் காரணம்.

 

வரிச் சலுகைகளை மட்டுமல்ல; மக்களின் பெயரால் வழங் கப்படும் மானியங்களைத் தின்று தீர்ப்பதும் இந்தக் கும்பல்தான். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை உரக் கம்பெனி மானியம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் உர மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 31,000 @காடி ரூபாய்தான். ஆனால், இந்த மானியம் 200809 ஆம் ஆண்டின் இறுதியில் 1,14,000 கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்த உயர்வைக் கண்டு அதிசயித்துப் போன அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரம், "இவ்வளவு உரம் பயன்படுத்தியும் விளைச்சல் ஏன் அதிகரிக்கவில்லை? இந்த உரம் விவசாயிகளின் கைக்கும் போகவில்லை. அதனால் உரத்துக்கான மானியமும் அவர்களுக்குப் போகவில்லை. இடையிலே யாரோ அனுபவிக்கிறார்கள்'' என்று உண்மையைப் போட்டு உடைத்தார். ஆனால், இந்த "யாரோ''வைக் கண்டுபிடிக்க மைய அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

 

விவசாயத்திற்குத் தேவைப்படும் இடுபொருட்களின் விலை யைக் குறைத்தாலே உணவு மானியம் கணிசமாகக் குறைந்துவிடும். இடுபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால், உர நிறுவனங்கள், பன்னாட்டு விதைக் கழகங்கள் ஆகியவற்றின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதாலேயே மைய அரசு இந்தப் பிரச்சினையில் செவிடனைப் போல நடந்து வருகிறது. ரேசன் கடையில் இருந்து உணவுப் பொருட்களைக் கடத்தும் கும்பல் மட்டுமல்ல, உணவுப் பொருட்களைச் சட்டபூர்வமாக ஏற்றுமதி செய்யும் வர்த்தக நிறுவனங்களும் தான் உணவு மானியத்தை அனுபவிக்கின்றன.

 

இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்றால், ஒவ்வொரு ஆண்டும் 1.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மைய அரசோ ஒவ்வொரு பட்ஜெட்டிலும் 30,000 கோடி ரூபாய்க்குக் கீழ்தான் நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதேசமயம், தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கும், பன்னாட்டு தொழில் கழகங்களுக்கும், பங்குச் சந்தை சூதாடிகளுக்கும், மேட்டுக்குடி கும்பலுக்கும் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் 4,00,000 கோடி ரூபாய்க்கு மேல் வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

 

 தாராளமயத்தின் பின், இந்திய மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தருவதற்குப் பதிலாக, அமெரிக்கா போல மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுமாறு மக்களை நிர்பந்திக்கும் திட்டங்கள்தான் அறிவிக்கப்படுகின்றன.  எனவே, தற்பொழுது மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் கணிசமான பங்கு தனியார் மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுக்கும், தனியார் மருத்துவமனை முதலாளிகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறது. தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ள உயிர் காக்கும் மருத்துவத் திட்டம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

 

வரிச் சலுகைகள் மற்றும் மானியங்கள் மூலம் தாம் அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கையைக் கொஞ்சம்கூடக் குறைத்துக் கொள்ள மறுக்கும் இக்கும்பல், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த அளவிற்கு பற்றாக்குறையைக் காட்டக்கூடாது என மைய அரசை எச்சரிக்கிறது. இதன் பொருள், சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் அற்பமான தொகையையும் வெட்ட வேண்டும் என்பதுதான்.

 

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: வரமா, சாபக்கேடா?

 

இந்த ஆண்டு பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கழித்துவிட்டுப் பார்த்தால், இந்தப் பட்ஜெட்டிற்கும், ப.சிதம்பரம் தயாரிப்பில் உருவான முந்தைய பட்ஜெட்டுகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என "உண்மை"யைப் போட்டு உடைத்திருக்கிறார், ஒரு பொருளாதார நிபுணர். ஆனால், அவர் சொன்னதில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும். இந்த நிதியைக் கழிக்காமல் பார்த்தால் கூட, இந்த பட்ஜெட்டை ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் என்று சொல்ல முடியாது.

 

விவசாயம் நசிவடைந்து கொண்டே போய்க் கொண்டிருப் பதைத் தடுக்கவும், விவசாயத்தை ஓரளவிற்கு இலாபம் ஈட்டித் தரும் தொழிலாக மாற்றியமைக்கவும், "அரசு வங்கிகள் விவசாயிகளுக்குத் தரும் கடனுக்கான வட்டியை 7 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையை நிர்ணயிக்க வேண்டும்; விவசாயத்திற்கு 16 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; மின்சாரப் பற்றாக்குறை நிலவும் காலங்களில் விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும்; விவசாய இடுபொருட்களின் விலையைக் குறைப்பதோடு, உர மானியம் விவசாயிகளுக்குக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்; சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு அரசு துணை போகக் கூடாது; வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; அவற்றிற்கு 60 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

 

கிராமப்புறத்தில் நிலவும் வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையும் ஒழிக்க வேண்டும் என்றால், விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டுப் பல்வேறு சீர்திருத்தங்களை விவசாயத்தில் புகுத்த வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட்டும் சரி, இதற்கு முந்தைய பட்ஜெட்டுகளும் கூட இந்தக் கோரிக்கைகளைக் காதில் போட்டுக் கொண்டதேயில்லை. மன்மோகன் சிங் கும்பல் விவசாயத்தில் புகுத்தும் சீர்திருத்தங்கள் அனைத்தும் ஏற்றுமதி பயிர் விவசாயம், குத்தகை விவசாயம், தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் போன்றவை பாரம்பரிய இந்திய விவசாயத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள் கிராமப்புறங்களில் வறுமையையும் வேலைவாய்ப்பின்மையையும் மேலும் தீவிரப்படுத்துவதைக் கண்டு அஞ்சி, அதைத் தணிப்பது என்ற பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அமல்படுத்திவருகிறது, ஆளும் கும்பல்.

 

 இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட ஊழல்கள், மோசடிகள் நடைபெறுவது ஒருபுறமிருக்க, இந்தத் திட்டம் விவசாயத்தின் மீது இன்னொரு சுமையாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கிவிட்டதாகப் புலம்புகிறார்கள், சிறு விவசாயிகள். இத்திட்டம் சிறு விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் இடையே செயற்கையான முரண்பாட்டை உருவாக்கித் திணித்து வருகிறது. இந்த எல்லாப் பிரச்சினைகளும் சேர்ந்து பணக்கார விவசாயிகள் மட்டும்தான் விவசாயம் செய்ய முடியும்; சிறுநடுத்தர விவசாயிகள் நிலத்தைத் தரிசாகப் போட வேண்டும் என்ற நிர்பந்தத்தைத் தீவிரமாக உருவாக்கி வருவதாக சிறு விவசாயிகள் கூறுகிறார்கள்.

 

 சிறு விவசாயிகள் நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு கூலியாட்களாக மாற வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகை விவசாயத்தில் இறங்க, இப்படி தரிசாகப் போடப்படும் நிலங்களை எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாகக் கைப்பற்றிக் கொண்டுவிட முடியும் அல்லவா? போலீசை ஏவிக் குண்டாந்தடியைக் கொண்டு செய்து வந்த வேலையை, இப்பொழுது தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்ற தேன் தடவிய நச்சுத் திட்டம் மூலம் செய்து வருகிறார்கள்.

 

சமூக நலத் திட்டங்களும் முதலாளிகளின் கல்லாப்பெட்டியும்

 

இந்த பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக இந்தியாவைச் சேர்ந்த ஜவுளி மற்றும் நுகர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. மேலும், நகர்ப்புறச் சந்தை தேக்கத்தை அடைந்துவிட்டதால், இந்நிறுவனங்கள் கிராமப்புற சந்தையைக் கைப்பற்றுவதில் மும்மரமாக இறங்கியுள்ளன. எனவே, இந்நிறுவனங்களுக்கு உள்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் கிராக்கியை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடுதான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கிராமப்புற அடிக்கட்டுமான வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரத் நிர்மாண் போன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கூலியும் வேலை நாட்களும் அதிகரிக்கப்பட்டிருப்பதன் பின்னே, ஜவுளி மற்று ம் நுகர்பொருட்களைத் தயாரிக்கும் முதலாளிகளின் நலன்தான் மறைந்துள்ளது.

 

 கிராமப்புறங்களில் அடிக்கட்டுமான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பாரத் நிர்மாண் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 45 சதவீதம் அதிக நிதியும், கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்துக்காக 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள செயில், ஏ.சி.சி., அல்ட்ரா டெக், மெட்ராஸ் சிமெண்ட் போன்ற நிறுவனங்கள்தான் பலனடையப் போகின்றன.

 

அரசின் இந்த ஏஜெண்ட் வேலை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், முதலாளிகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, "இது கிராமப்புற மக்களின் நலன் சார்ந்த பட்ஜெட்'' என ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த ஒப்பாரியின் பின்னே, தரகு முதலாளிகளுக்கும், பங்குச் சந்தை சூதாடிகளுக்கும், மேட்டுக்குடி கும்பலுக்கும் வழங்கப்பட்ட ஊதாரித்தனமான சலுகைகள் அனைத்தும் மூடி மறைக்கப்படுகின்றன.

 

முதலாளித்துவ நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு வழங்கி வந்த பயணப்படி போன்ற சலுகைகள் மீது விதிக்கப்பட்டு வந்த வரி இந்த பட்ஜெட்டில் நீக்கப்பட்டுவிட்டதால், அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 6,553 கோடி ரூபாய் கூடுதல் இலாபமாகக் கிடைக்கும். இந்துஸ்தான் லீவர், ஐ.டி.சி., நெஸ்லே, இமாமி போன்ற நுகர்பொருள் தயாரிக்கும் நிறுவனங் களின் நலனை முன்னிட்டுத்தான் இந்த வரி நீக்கப்பட்டுள்ளது.

 

தனிநபர் வருமான வரி மீது விதிக்கப்பட்டு வந்த கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு ஏற்படும் வரி இழப்பு மட்டும் 10,000 கோடி ரூபாய். இந்த 10,000 கோடி ரூபாய், ஆண்டிற்கு 10 இலட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் மேட்டுக்குடி கனவான்களின் பாக்கெட்டுக்குப் போகும்.

 

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு விதமான சலுகைகள் நீக்கப்படாமல், 2010 ஆம் ஆண்டு வரை தொடரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் இலாபம் மட்டும் 20,366 கோடி ரூபாய்.

 

கே.ஜி.டி 6 எனப் பெயரிடப்பட்டுள்ள எண்ணெய் வயலில் இயற்கை எரிவாயுவை எடுக்க உரிமம் பெற்றுள்ள தனியார் முதலாளிக்கு (ரிலையன்ஸ்?) அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளால், அந்நிறுவனத்திற்கு அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் 40,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை கூடுதல் இலாபம் கிடைக்கும்.

 

நாடெங்கும் அடிக்கட்டுமான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக அரசுடன் கூட்டுக் சேர்ந்துள்ள தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கடன் வசதிகளைச் செய்து கொடுக்கும் பொறுப்பினை இந்திய அடிக்கட்டுமான நிதிக் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அரசுத் துறை நிறுவனமும், அரசு வங்கிகளும் இணைந்து 1 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இத்திட்டங்களில் முதலீடு செய்யத் தயாராக உள்ளன. உமி கொண்டு வந்தவன் அவல் தின்ற கதைக்கு ஒப்பானது, இச்சலுகை. மேலும்,

 

நாடெங்கும் உள்ள 41,000 பங்குச் சந்தை சூதாட்ட நிறுவனங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு; தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளும் தனியார் நிறுவனங் கள், அந்நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு வசதியாகப் பல்வேறு விதமான வரிச் சலுகைகள்; உணவுப் பொருட்களை வைத்துச் சூதாடும் ஆன்லைன் வர்த்தகச் சூதாடிகள் மீது விதிக்கப்பட்டிருந்த பரிவர்த்தனை வரிவிலக்கு என 4,00,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் வாரியிறைக்கப்பட்டுள்ளன.

···

சமூக நலத் திட்டங்களுக்குக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதும், அதில் ஊழல்மோசடிகள் நடப்பதும் இரண்டாம்பட்ச விவகாரங்கள்தான். மைய அரசு போடும் ஒவ்வொரு பட்ஜெட்டும், பட்ஜெட்டுக்கு முன்னும் பின்னுமாக மைய அரசால் அறிவிக்கப்படும் ஒவ்வொரு பொருளாதாரக் கொள்கையும் நாடு மறுகாலனியாக்கப்படுவதைப் பல்வேறு வழிகளில் துரிதப்படுத்துகின்றன என்பதுதான் முதன்மையானது. இந்தக் கயமைத்தனத்தை மூடிமறைக்க, "இந்தியா வல்லரசாகிறது'', "21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு'', "நவீனமான, உலகமயமான விவசாயம்'' எனப் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான முழக்கங்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் தொழிலாளர்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தையும் ஏமாற்றி வருகிறது மன்மோகன் சிங் கும்பல்.

 

இந்தியாவின் பாரம்பரிய உணவுப்பொருள் விவசாயத்தை, சிறுநடுத்தர விவசாயிகளை ஒழித்துக் கட்டிவிட்டு, ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் உலகமயத்திற்கு ஏற்றவாறு, பெரும் முதலாளித்துவ பண்ணைகளை உருவாக்குவதுதான் ஆளும் கும்பலின் நோக்கம். விவசாய நிலங்களை விழுங்கி வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமல்ல, நவீன விவசாயம் என்ற பெயரில் புகுத்தப்படும் குத்தகை விவசாயம், ஏற்றுமதிப் பயிர் விவசாயம், தரிசு நில மேம்பாடு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பயிர்கள் — இவை அனைத்துமே இந்திய விவசாயிகளுக்கு எதிரானவைதான். மயக்க பிஸ்கட் கொடுத்து ரயில் பயணிகளைக் கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பல் போல, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற "சமூக நல'த் திட்டங்கள் மூலம், விவசாயிகளை மயக்கி, அவர்களை விவசாயத்தில் இருந்து அப்புறப்படுத்த முயலுகிறார், மன்மோகன் சிங்.

 

தனியார்மயம் தாராளமயத்தினால் நமது உணவுப் பொருள் விவசாயம் சிறுகச்சிறுக அழிக்கப்பட்டு வருவதன் பாரதூரமான விளைவுகளை, இப்பொழுது இந்திய மக்கள் அனைவரும் விலைவாசி உயர்வு என்பதன் வழியே அனுபவித்து வருகிறோம். எனவே, இந்தியப் பாரம்பரிய உணவுப் பொருள் விவசாயம் அழிக்கப்படுவது விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல, இந்திய மக்களின் பிரச்சினை. நமது நாடு சுயசார்புடன் இருப்பதா, இல்லை, ஏகாதிபத்தியங்களின் முழு அடிமையாவதா என்பது குறித்த பிரச்சினை.

 

போலி கம்யூனிஸ்டுகள்கூட இந்த வகையில் பட்ஜெட்டை அம்பலப்படுத்துவதில்லை. சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய், தரகு முதலாளிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வரிச் சலுகைகளை ரத்து செய் என்பதோடு முடங்கிப் போய்விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், மன்மோகன் சிங் விவசாயிகளுக்கு எதிராக என்ன செய்கிறாரோ, அதைத்தான் "மார்க்சிஸ்டுகள்' சிங்குரிலும் நந்திகிராமத்திலும் வளர்ச்சி என்ற பெயரில் செய்யத் துணிந்து, வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

 

எனவே, விவசாயத்தில் தரகு முதலாளிகள், பன்னாட்டு விவசாயக் கழகங்களின் நலனுக்கு ஏற்ப தனியார்மயத்தைப் புகுத்துவதை நிறுத்து; சிறுநடுத்தர விவசாயிகள், கூலி விவசாயிகள் நலனை முதன்மைப்படுத்தும் சீர்திருத்தங்களை அமலாக்கு என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நாடே கலகத்தில் இறங்க வேண்டிய தருணமிது.

 

· ரஹீம்