இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடந்த பெரும் எட்டு நாடுகள் (ஜி 8) மாநாட்டில், "அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்கப் போவதில்லை'' என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
ஜி 8 மாநாடு இந்த முடிவை எடுப்பதற்கு அமெரிக்காதான் காரணம் என்பதோடு, இம்முடிவு இந்தியாவைக் குறிவைத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இப்பொழுது அம்பலமாகிவிட்டது.
இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டவும், மறுசுழற்சி செய்யவும் தனக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்பதோடு, அதற்கான தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்க வேண்டும் என வாதாடியது. இதற்குச் சில நிபந்தனைகளோடு சம்மதித்த அமெரிக்கா, அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் குழுமத்தோடு (என்.எஸ்.ஜி.) இந்தியா பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, செறிவூட்டும் மறுசுழற்சி செய்யும் உரிமைகளை இந்தியாவிற்கு அக்குழுமம் வழங்கக் கூடாது என நிர்பந்தம் கொடுத்தது. எனினும், அக்குழுமத்தின் தற்போதைய விதிகளுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் உருவாக்கப்படும் விதிகளுக்கும் இந்தியா கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், செறிவூட்டும் மறுசுழற்சி செய்யும் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்கியது, என்.எஸ்.ஜி. இந்த உரிமையினைப் பெற்றதைத் தனது ராஜதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பீற்றிக் கொண்டார், மன்மோகன் சிங். தற்பொழுது ஜி 8 நாடுகள் எடுத்துள்ள இம்முடிவு, இந்தியாவின் "வெற்றிக்கு' முட்டுக்கட்டைப் போட்டுவிட்டது.
"ஜி 8 நாடுகளின் முடிவு இந்தியாவைக் குறித்து எடுக்கப்படவில்லை; வட கொரியா போன்ற ரவுடி நாடுகளைக் குறிவைத்துதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது; ஜி 8 நாடுகளின் முடிவு, அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் குழுமத்தைக் கட்டுப்படுத்தாது'' என்றுதான் மன்மோகன் சிங் அரசு விளக்கமளித்து வருகிறதேயொழிய, அமெரிக்காவின் இந்தக் கொல்லைப்புறத் தாக்குதலுக்கு எதிராகத் தனது சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இசுரேல் ஆகிய நான்கு நாடுகள்தான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுநாள் வரை கையெழுத்திடவில்லை. இவற்றுள், இந்தியா தவிர்த்த மற்ற மூன்று நாடுகள் அணுசக்தி குறித்து மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கு சர்வதேசரீதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மட்டும்தான் அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் விலக்கு அளித்துள்ளன. எனவே, ஜி 8 நாடுகளின் முடிவு இந்தியாவைக் குறிவைத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது சொல்லாமலேயே விளங்கும்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் உரிமைகளை அளிப்பதைத் தடை செய்வது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்குவதற்காக, அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் குழுமம் கடந்த நவம்பர் 2008இல் கூடிப் பேசியிருப்பதோடு, ஒரு நகலறிக்கையையும் தயாரித்துள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஜி 8 நாடுகளின் மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. எனவே, ஜி 8 முடிவிற்கும், அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகளின் குழுமத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இந்தியா கூறிவருவது, மழுப்பலான வாதம்தான்.
பொக்ரானில் இரண்டாம் முறையாக அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டவுட@ னயே, இந்தியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி அமெரிக்காவைச் சமாதானப் படுத்துவதற்காக, இந்தியா இனி அணுகுண்டு சோதனைகளை நடத்தாது எனத் தன்னிச்சையாக ஐ.நா. மன்றத்திலேயே அறிவித்தார். அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தங்களையும், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் போட்டுக் கொள்வதற்காக, இந்தியாவின் சிவில் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கமிசனின் கண்காணிப்புக்குத் திறந்துவிட ஒப்புக் கொண்டார், மன்மோகன் சிங்.
மேலும்,அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடைகளை நீக்குவதற்காக, அக்குழுமத்தின் தற் போதைய விதிகளுக்கும், எதிர்கால விதிகளுக்கும் இந்தியா கட்டுப்படும் என எழுதியும் கொடுத்திருக்கிறார், மன்மோகன் சிங். இப்பொழுது, ஜி 8இல் இந்தியாவைக் குறிவைத்துப் புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், சதுரங்க ஆட்டத்தில் ராஜா எந்தத் திசையிலும் நகர முடியாதபடி "செக்'' வைக்கப்பட்டு முடக்கப்படுவது போல, இந்தியா சுயசார்பான அணுசக்தி கொள்கையைத் தொடர முடியாதபடி, பொறியொன்றில் சிக்க வைக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் ஆகிய ஏகாதிபத்திய சார்பான சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா வெளிப்படையாகக் கையெழுத்துப் போடுகிறதோ இல்லையோ, அந்த ஒப்பந்தங்களின் விதிகளை மீறி இனி இந்தியா நடந்து கொள்ள முடியாது என்ற இக்கட்டில் இந்தியாவை மாட்டி வைத்துவிட்டார், மன்மோகன் சிங். இது அபாண்டமான குற்றச்சாட்டு என மன் மோகன் சிங்கின் ரசிகர்கள் நம் மீது பாயலாம். ஆனால், ஜி 8இன் புதிய முடிவுக்குப் பிறகும், அமெரிக்காவோடு எந்தவிதத்திலும் முரண்பட்டுக் கொள்ளாமல், மன் மோகன் சிங் அமெரிக்க அரசோடு கூடிக்குலாவி வருவது, இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகதான் அமைகிறது. அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்திருந்தபொழுது, இந்திய அரசு அவரிடம் ஜி 8 முடிவு குறித்து எந்தவிதமான அதிருப்தியையும் தெரிவிக்கவில்லை. மாறாக, அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ள இரண்டு அணு உலைகளை எந்தெந்த இடங்களில் நிர்மாணிக்கப் போகிறது என்பதை கிளிண்டனைக் கூட்டிப் போய்க் காட்டியது.
அமெரிக்கா கேட்டுக்கொண்டபடி, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அவ்வுலைகளில் முதலீடு செய்துள்ள தனியார் முதலாளிகளுக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டுவிடாதபடி, அவர்களைக் காக்கும் முகமாக சட்டமொன்றை இயற்றி, கிளிண்டனின் மனதைக் குளிர வைத்தது, இந்திய அரசு. இச் சட்டம், இந்திய அணுசக்தித் துறையில் முதலீடு செய்யவுள்ள அமெரிக்க நிறுவனங்களின் இலாபத்தைக் காக்கும் நோக்கத்திற் காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இராணுவத் தளவாடங்களை அமெரிக்க அரசு எந்த நேரத்திலும் இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்ய உரிமைகள் அளிக்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட இந்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட பயன்பட்டாளர் கண்காணிப்பு ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தம், மற்ற ஒப்பந்தங்களைப் போல இரு நாட்டு அரசு அதிகாரிகளும் கூடிப் பேசி உருவாக்கப்பட்டதல்ல. இது ஒருவகையான அமெரிக்க நாட்டுச் சட்டம். இதை ஏற்றுக் கொண்டு நடப்பதாக மன்மோகன் சிங் தலையாட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து எந்த இராணுவத் தளவாடங்களை வாங்கினாலும், அவற்றை இந்த ஒப்பந்தத்தின் கீழ்தான் வாங்க வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா எந்த நோக்கத்தைக் கூறி அமெரிக்காவிடமிருந்து ஒரு இராணுவத் தளவாடத்தை வாங்குகிறதோ, அதைத் தவிர்த்து பிற நோக்கங்களுக்கு இந்தியா அந்த இராணுவத் தளவாடத்தைப் பயன்படுத்த முடியாது. இந்தியா இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிப்பதற்கு முன்பாக, அமெரிக்காவிடமிருந்து ஓட்டைப் போர்க் கப்பலொன்றை வாங்கியது. இந்தக் கப்பலைச் சமாதான நோக்கங்களுக்கு மட்டும்தான், அதுவும் குறிப்பாக அமெரிக்க இராணுவத்தால் தலையிட முடியாத சமயங்களில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டைக் கப்பலுக்கே இந்த நிபந்தனை என்றால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்படும் இராணுவத் தளவாடங்களுக்கு எப்படிப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
காட் ஒப்பந்தம் போல, 123 ஒப்பந்தம் போல, இந்திய நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்காமலேலே, இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்பதல் இல்லாமலேயே இந்தக் கண்காணிப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட மன்மோகன் சிங் கும்பல் முயன்று வருகிறது. மேலும், இராணுவத் தகவல்களை அமெரிக்காவிடம் பரிமாறிக் கொள்ளவும், இந்தியாவில் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவைப்படும் வசதிகளைச் செய்து தரவும் இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதோடு, அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடவும் இந்திய அரசு தயாராகி வருகிறது. அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ மேலாதிக்க நோக்கங்களுக்கு உதவும் வகையில், இந்தியா அமெரிக்காவின் அடியாளாக மாற்றப்பட்டு வருவதைத்தான் இந்த ஒப்பந்தங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்த அடிமைத்தனத்தை, அடியாள்தனத்தை, "இந்தியா வல்லரசாக அமெரிக்கா உதவுகிறது'' எனக் கூறி மூடி மறைக்க முயலுகிறது, மன்மோகன் சிங் கும்பல். அமெரிக்க மூலதனம், தொழில்நுட்பம், மேற்குலக சந்தை ஆகியவற்றுக்காக, இந்திய நாட்டின் அரைகுறை இறையாண்மையையும் அமெரிக்காவின் காலடியில் அடகு வைத்து வருகிறார், மன்மோகன் சிங். அவரின் இந்த எட்டப்பன் வேலையை இந்தியத் தரகு முதலாளிகளும் மேல்தட்டு வர்க்கமும் கைதட்டி வரவேற்கின்றன.
மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தாமல், இந்த அமெரிக்க அடிமைத்தனத்தை ஒழித்துவிட முடியாது. ஆனால், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கூச்சல் போடுவதோடு முடங்கிப் போய் விடுகின்றன.