புலியழியக் காத்திருந்து.
ராஜபக்ச புத்திரரை அடியொற்றி
களமிறங்கி நிற்கின்ற காலமிது
பொறிகொண்ட வாழ்வுணரா
போக்கிரியாய் புத்திஜீவிகள்
நெறிகெட்டு கொழும்பு சென்று
நின்றுரைக்கும் கதைகேளேன்
விழிவழியே வழிகின்ற கண்ணீரோ
ஆனந்தக் கழிப்பினிலே வந்ததுவாம்
வழிநெடுக வீழ்ந்தவரோ.. புலி
அத்தனையும் சுட்டவராம்
களிகொண்டு மக்கள் முகாமில்
கால்நடை பயில்கினமாம்
சிறையுண்ட பிள்ளையெலாம்..
சிறிலங்கா சிற்பிகளாய் வருவினமாம்
கறைகொண்ட காலம்போய்..கண்முன்னே
கற்பக தருவாய் நல்லாட்சி
குறையெலாம் நீங்கி நாட்டு மக்கள்
கூடியே வாழ்வினமாம்
ஆருடம் மெய்த்த ஆனந்தம்
யாரிடம் போய்க்கிடக்கார் பார்
வேருடன் இனம் அழிக்கும் மகிந்த
விரல் நகத்தை தடவுகிறார்
யாருடன் கூடுதல் என்றில்லை
பேயோ பிசாசோ .. தன்
தற்பெருமைபறை சாற்ற பறக்கின்றார்
மறுபுறத்தே குண்டறியாப் புலத்தான்
உயிர்ப்பித்து தமிழீழம்
தேர்தலிற்காய் தமிழ்தேசியம்
தேட்டங்கள் காப்பதற்காய்
சனமெழுந்து போராடா சதிக்குள் …
மூளைபிசகி முன்பின் நோக்கா மூடத்துள்
ஆளைஆள் காட்டிக்கொடுக்கும் கபடத்துள்
மாற்றுத் தெரிவற்று மௌனத்துள் மூழ்கிய
தேர்தல் திருவிழா
பேரழிவின் வடுக்கள் பிள்ளைகள் இழப்பு
வீட்டுக்கு வீடு மரணஓலம்
வெந்த இதயங்கள் நொந்துபோய்
சொந்தம் இழந்த சோகம் சொன்னது…
கந்தையாயினும் கட்டிவாழட்டும்
சொந்த நிலத்தில் குடியேற்ரென்றது..
மந்தைகளில்லை மனிதர்களென்றது…
மாற்றுத்தெரிவற்ர மண்ணின் வாழ்வில்
ஏறிமிதிக்கிறார் எகிறிப்பாய்கிறான்
சோற்ரைக்காட்டி சுதந்திரமென்கிறான்
வாக்கைப்போடு ஜன நாயகமென்கிறான்
பூட்டிப்போட்டு புனர் வாழ்வென்கிறான்
காட்டிக்கொடுப்பை தேச பற்றென்கிறான்
நாட்டைவிற்று அபி விருத்தியென்கிறான்
மாற்றுத்தெரிவற்று இனம்மௌனத்துள் உறைகிறது
உழைப்போன் கரமெழுக……
உலகப் பின்னலெலாம் உடைத்தெழுக….
இனத்தை கருவறுக்கும் இயக்குதளம் அறிக..
சனத்தை நம்பா சரித்திரங்கள் தோல்வியெனும்
கருத்தை உயர்த்திச் சொல்….நாளை
இனத்தின் இணைவில் விடியல் திறக்கும்
இயங்கு தளத்திற்கு நகர்க..