Language Selection

நூல்கள் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 அந்தக் காட்சியை எரிச்சலும் வேடிக்கையுமாய்ப் பார்க்கும் மனிதர்களும் முன்னொரு காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள். குரங்கிலிருந்து ஆதிகால மனிதன் உருவெடுக்கும்போது பாலுறவுக்காகச் சண்டையிடும் வன்முறை அவனது உயிரியல் தேவையாக இருந்தது.

தான் வாழ தன் சமூகமும், கூட்டு உழைப்பும் அவசியம் என்பதை மனிதன் மெல்ல மெல்ல உணர்ந்தபோதுதான் இந்த வகையிலான வன்முறை மங்கத் துவங்கியது. ஆனால் மங்கிய அந்த வன்முறை வேகமாக வளருவதைக் கீழ்க்கண்ட சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

மயிலாடுதுறையின் மாணவி தேவி சக மாணவன் அருண்குமாரால் கொல்லப்பட்டாள்;இலங்கையிலிருந்து மதுரையில் படித்து வந்த மாணவி மயூரணி, பால பிரசன்னா என்ற மாணவனால் கொல்லப்பட்டாள்; குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஜீனிகுமாரி, ஜோன்ஸ் எனும் இளைஞன் வீசிய அமில வீச்சால் முகம் சிதைந்து மருத்துவமனையில் படுக்கையிலிருக்கிறாள்; அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி சித்ரா தன் வயதினை ஒத்த இரு மாணவர்களால் உயிரைத் துறந்திருக்கிறாள்; உ.பி. மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 25 வயது மதுமிதா, மந்திரி திரிபாதியின் கூலிப்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள்.

 

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

 

இந்தப் பெண்கள் காதலுக்காக, காதலிக்க மறுத்ததற்காக, காமத்திற்காக, காமவெறியர்களுக்காகச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதனின் மென்மையான உணர்வு என்று கூறப்படும் பாலுணர்வின் பெயரால்தான் இந்தப் பலிகள் தொடருகின்றன. எனில், மனிதன் மீண்டும் விலங்கு நிலைக்குத் திரும்புகிறானா?

இல்லை, வரலாறு ஒருபோதும் மீண்டும் திரும்ப முடியாது. விலங்கு நிலைக்குத் திரும்ப முடியாத மனிதன் முன்னேறும் தன் மனித நிலை குறித்துத் தெரியாமலும் திகைக்கிறான். அன்று இயற்கையின் பேரழிவுகளைக் கண்டு கலங்கிய மனித இனம் இன்று இயற்கையைப் புரிந்து கொண்டு கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுவிட்டதால் அத்தகைய அச்சம் இல்லை. ஆனால் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வான உறவுகளை உருவாக்கியிருக்கும் சமூகம் எனும் செயற்கை, வாழ்க்கை குறித்த பேரதிர்ச்சியைத் திறந்து விட்டிருக்கிறது.

இயற்கையை விட இந்தச் செயற்கையான சமூகமும் அதன் சந்தை விதிகளும்தோற்றுவித்திருக்கும் அச்சமும், பீதியும், குழப்பமும், விரக்தியும் மிக அதிகம். ஆதலால் அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகளில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருக்கும் மனிதன் தனது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக, இன்னமும் தனது ஆரம்பகால கண்டுபிடிப்புகளானமதம், கடவுள், வாஸ்து, இராசிபலன் இன்னபிற மாயைகளில் சரணடைகிறான். இந்த மாயைகளில் பாலுணர்வு குறித்த புதிரும் – கவர்ச்சியும் கனவும் நனவும் நிறைந்த குழப்பமும் உண்டு. மேலும் ஒரு இயற்கையான உயிரினத் தூண்டுதலாக இருப்பதால் அது ஒரு யதார்த்தமான பிரச்சினையாகவும் இருக்கிறது.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

ஆக, சமூக உறவுகளில் தனிமைப்பட்டு வரும் விளைவாக, மனிதன் தனது பாலுணர்விலும் அன்னியமாகி வருகிறான். இன்றைய ஆணுக்கும், பெண்ணுக்கும் பாலுணர்வு என்பது அவ்வப்போது மகிழ்ச்சியைத் தந்தாலும் எப்போதும் தொந்தரவாகவும், புதிராகவும், விடை கிடைக்காத இரகசியமாகவும் இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினை வர்க்கங்களால் பிளவுண்டிருக்கும் சமூகப் பிரச்சினை போல இன்னமும் தீர்க்கப்படவில்லை. அதுவரை மனித சமூகம் தன்னில் சிலரை, முக்கியமாக பெண்களைத் தீர்த்துக் கட்டி வருகிறது.

இந்தக் கொலைகளை வன்முறை குறித்த ஏனைய செய்திகளில் பத்தோடு பதினொன்றாய் நீங்கள் கருதலாம். நாள்தோறும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இவை சாதாரணமாகவும் தோன்றலாம். இக்கொலைகளில் சில மனச்சிதைவு காரணமாய் நடந்தாலும்,பல இயல்பாகத் திட்டமிட்டு, எந்தப் பதட்டமுமின்றியே நடக்கின்றன. மேலும் இத்தகைய மனப்போக்கு வன்முறையாளர்களின் நடவடிக்கையாக மட்டுமல்ல, அவற்றின் பார்வையாளர்களாகிய நம்மிடமும் எழத் தொடங்கியிருக்கிறது. சாதி மதக் கலவரங்களில் ஒரு சில கும்பல்கள்தான் ஈடுபடுகின்றன என்றாலும் அந்த ஈடுபாட்டுக்கு கலவரக்காரர்களின் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களின் அமைதியான அங்கீகாரம் உதவுவது போல,அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் ஆண்களிடம் பெரிய அளவு அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை.

அருண்குமார் சொன்னது போல மற்ற ஆண்களிடம் பேசுவதை மாணவி தேவி தவிர்த்திருக்கலாமே என்பதும், மாணவி மயூரணி குளித்து உடைமாற்றுவதைப் பார்த்த சோலைமலைத் தேவராக மாறி, வாசகன் ஒரு கணம் கற்பனை செய்வதும், லக்னோவின் உயர்குடியினரிடம் பழகி முன்னேற நினைத்த மதுமிதாவைப் போல நமக்கும் ஒருத்தி கிடைக்கமாட்டாளா என்று ஏங்குவதும் என ஆண்களின் எதிர்வினை பலரகமாக உள்ளது.

திருட விரும்பாதவன், கொள்ளையடிக்கத் துணிவற்றவன், லாட்டரிச் சீட்டு வாங்குவது போல,கற்பழித்துப் போலீசிடம் மாட்டாமல் ஏறத்தாழ அதையே சட்டபூர்வமாகச் செய்வது எப்படி என்று சிந்திக்க ஆரம்பிக்கின்றனர். அதிலும் பலவீனமும், தடுமாற்றமும் உள்ள நபர்கள் பாலியல் வன்முறைக்கு விரைவிலேயே தயாராகி விடுகிறார்கள்.

இப்படித்தான் பாலியல் உணர்வுக்கும், வக்கிரத்துக்கும் உள்ள எல்லைக்கோடு பிரித்தறிய முடியாதபடி மங்கி வருகிறது. ஆணின் இச்சையைத் தீர்ப்பதும், அதற்கென தன்னை அழகுபடுத்துவதன் மூலமே வாழ முடியும் என்றாகிப் போன பெண்கள்தான் இச்சமூகத் துயரத்தின் பலிகடாக்கள். பெண்டாளுவதே தம் தகுதியாகக் கருதிக் கொள்ளும் ஆண்கள் இந்த அவலத்தின் அம்புகளாகவும் போனார்கள். இன்றைய சமூக அமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்கம் நம்மை விரும்பியபடி பயன்படுகிற பலவீனமான அம்புகளாக நாம் ஏன் மாறினோம் என்பதை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

பாலியல் காமாலை: பத்திரிகைகள் பரப்பும் நோய்!

உலகில் வேறெங்குமில்லாதபடி மதம், சாதியின் பெயரால் மக்களை தனித்தனித் தீவுகளாக்கிய பார்ப்பனியம் கூடவே ஆண்களையும் – பெண்களையும் இருவேறு இனங்களைப் போலப் பிரித்தே வைத்திருக்கிறது. இரு நூறாண்டுகளாய் இத்தகைய கேவலமான பாரம்பரியத்தைக் கொண்டு வாழும் நாம் பாலுணர்வு குறித்த குழப்பமும், திகிலும் எழுவதற்கு மிகவும் தோதாக இருக்கிறோம். கூடவே இன்றைக்கு நமது சிந்தனையை வளர்க்கும் அனைத்துத் தகவல் ஊடகங்களும் பாலுணர்வுப் புகை போட்டு நம்மைச் சாமியாட வைக்கின்றன.

பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களும், அவற்றின் உள்ளூர் ஏஜெண்டுகளும் வெளியிடும் தகவல்களில் பாலுணர்வு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. குறிப்பாக எல்லாவகைச் செய்திகளும், தகவல்களும் ஏதோ ஒரு வகையில் பாலுணர்வு ரசனையைக் கொண்டு சுவையூட்டப் படுகின்றன. உதாரணமாக, இராக் மீதான அமெரிக்கப் போரில் சதாம் மகன் உதயைப் பற்றிய செய்திகளில் அவரது ஆடம்பர மாளிகை, நீச்சல் குளம், நீலப்படங்கள்,காதலிகளின் கதை ஆகியவை தவறாமல் பத்திரிகைகளில் இடம் பெற்றன. புதிய பரபரப்புக்கள் ஏதும் சிக்காத நேரங்களில் பத்திரிகைகளின் பரபரப்புத் தேவையைத் தணித்து வற்றாத பண வருவாயைத் தருவதாகப் பாலுணர்வுச் செய்திகள் இருக்கின்றன.

கேவலத்திற்குப் பெயர்பெற்ற இங்கிலாந்தின் சன் பத்திரிகையின் தரமும் வடிவமைப்பும் கொண்ட தினமலர் தமிழ் நாளிதழ்களின் விபச்சாரத் தரகு வேலைகளுக்கு ஒரு முன்னோடியாகும். சரிகா ஷாவின் கொலை குறித்த கவலை தோய்ந்த பத்திகளுக்கருகே,இணைய தளத்தில் ஒரு ஜோடியின் முதலிரவை நேரடியாகப் பார்க்கலாம் என்ற செய்தியையும்,முகவரியையும், தேதியையும் தினமலர் குறிப்பிட்டிருந்தது.

மக்கள் நாளிதழான தினத்தந்தியின் 2,3-ஆம் பக்கத்தில் கள்ளக்காதல் என்ற தலைப்பு நிரந்தரமாய் இடம்பெறும். முதலில், படிக்கப்படும் இச்செய்தி மக்களின் வாசிப்பு முறையையே மாற்றிவிட்டது. தேவி, ராணி போன்ற குடும்ப வாராந்திரப் பத்திரிக்கைகளில் பரிசு பெறும் குடும்பக் கதைகளின் கடிதங்கள் தவறாமல் இடம்பெறும். கள்ள உறவினால் சீரழிந்து போன குடும்பப் பெண்களின் விதவிதமான கதைகள், இவ்விதழ்களைப் படிக்கும் கீழ்த்தட்டு நடுத்தரப் பெண்களுக்கு மனப்பாடமாயிருக்கிறது. இதையே பாலியல் கல்வி என்ற பெயரில் அவள் விகடனும், குமுதம் சிநேகிதியும் சற்றுப் படித்த பெண்களிடம் கொண்டு செல்கின்றன.

வக்கிரங்களையே புதிய கோணங்களில் சொல்வதிலும், வடிவமைப்பதிலும் கைதேர்ந்த மதனின் பாணியில் உருவான ஜூனியர் விகடன், வார இதழ்களின் காமசூத்திரமாகும். சரசுவாகிய நான்எனும் தொடர் அதற்கு இலக்கணம். கள்ளச் சாராயம் விற்று இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எம்.எல்.ஏ. மந்திரியுடன் படுத்து, சாராயம் காய்ச்சி, எரிசாராயம் கடத்தி, போட்டியாளர்களைக் கொன்று பரிணாம வளர்ச்சியில் சாதனை படைத்த சரசுவின் கதை முடிந்தவுடன் சரசக்கா எங்கே என்று வாசகர்கள் தவித்த தவிப்பை வாசகர் கடிதங்கள் காட்டுகின்றன.

ஜூ.வி.யின் பலான பளபளப்புக்கிணையாகப் போட்டியிட இயலாத நக்கீரன் கண்டுபிடித்த ஒரு வழி நடிகையின் கதைகள்’. எல்லா நடிகைகளின் கதையும் ஒரே மாதிரியாக இருந்தாலும் வாசகருக்குச் சலிப்பதில்லை. எந்தெந்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எந்த நடிகையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களுடைய ரசனை எல்லாம் வாசகருக்கு மனப்பாடம்!

சுஜாதாவின் ஏன், எதற்கு, எப்படி யில் பலான செய்திகளும்’, படங்களும் யாரும் எதிர்பாராத கேள்விகளுக்கு விடையாய் வரும். பெண்களின் பின்புறம் பெரிதாக இருப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு அதை விளக்கும் வண்ணம் முக்கால் பக்கத்தில் நீச்சல் உடை பெண்ணின் பின்புறம் அடைத்திருக்கிறது. பிரமிடு பற்றிய கேள்விக்கு பிரா அணிந்த பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள். பெண்ணுடம்பு குறித்த வக்கிரமான பிம்பங்கள் அறிவியலின் பெயரால் நம்மிடம் செருகப்படுகின்றன.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

இந்தியா டுடேயின் கனவுலகத் தேவதை ஐஸ்வர்யா ராய் கட்டுரைக்கு கடிதம் எழுதிய ஒரு வாசகர், “”ஐஸ் ஒருவேளை ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தால் பாண்ட் ஐஸின் உதடுகளைக் கவ்வியிழுப்பார். பாலிவுட்டில் இமேஜ் சரிந்து போகுமே’’ என்று கவலைப்படுகிறார். மாறிவரும் செக்ஸ் உணர்வுகள், குடும்பப் பெண்களின் பாலியல் புரட்சி முதலான தலைப்புக்களில் இந்தியா டுடே, அவுட்லுக் இதழ்களில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஆய்வுக்கட்டுரை வரும். மேட்டுக்குடி மற்றும் மாதச் சம்பள பிரிவினரிடையே இயல்பான கள்ள உறவைக் கட்டியமைப்பது எப்படி எனும் நடைமுறைப் பாடங்கள் இவற்றில் கற்றுத் தரப்படுகின்றன.

குமுதம் அட்டை டூ அட்டை காமக்கலையில் ஒரு அமுதசுரபி. சமீபத்திய இதழொன்றில் இணையத்தில் வக்கிரங்களை அரங்கேற்றிய டாக்டர் பிரகாஷ் வழக்கில் சாட்சியாக இருக்கும் சித்ராவின் பேட்டி ஒன்றைப் போட்டிருந்தார்கள். செய்திகளின் பரப்பளவை விட சித்ராவின் படம் பெரிது. யார் இந்த சித்ரா என்பதை நினைவுபடுத்த ஒரு ஃபிளாஷ்பேக் – அதில், சித்ரா டாக்டருடன் அறிமுகமாகி, பிக்னிக் சென்று, படுக்கையில் துணியில்லாமல் படமெடுக்கப்பட்டது எல்லாம் விலாவரியாக வருகிறது. தன்னை போலீசு துன்புறுத்துவதைத் தெரிவிக்க வந்த சித்ரா குமுதம் மீண்டும் ஒருமுறை தன்னைத் துகிலுரியும் என அறிந்திருந்தால் பேசவே மறுத்திருப்பார். வாசகர்களுக்கு சித்ராவின் கதை என்ற பெயரில் டாக்டரின் கதை கிளுகிளுப்புடன் நினைவுபடுத்தப்பட்டு விட்டது.

எந்த ஒரு பிரச்சினையின் தீவிரத்தையும் நகைச்சுவையின் பெயரால் சகஜமாக்குவது ஆனந்த விகடன் பாணி. பழுதடைந்த காரின் கீழே ஒரு பெண் படுத்திருக்கிறாள். அவள் மார்பு காரைத் தூக்கி நிறுத்தும் ஜாக்கி போல உணர்த்தப்படுகிறது. வசனம், “”அடுத்த முறை காருக்கு ஜாக்கி கொண்டு வரலேன்னா, உங்களை என்ன செய்யிறேன் பாருங்க!’’ ஒரு இதழில் ஷகிலாவின் படம் பார்க்கும் அனுபவத்தை நடிகர் கலாபவன் மணியின் மூலம் அபிநயங்களாக, அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். ஷகிலா படங்களைப் பார்ப்பது இனிமேலும் ஒரு கூச்சப்படவேண்டிய விசயமல்ல என்பதாக வாசகர்கள் உணருகிறார்கள்.

அதே உணர்வை அரி – கிரி அசெம்ளியின் ஷகிலா பேட்டியும் தருகிறது. ஷகிலா படத்தை ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்குகளில் பயந்து பதுங்கிப் பார்க்கும் அவலத்தை மாற்றி சன் டி.வி.யின் மலையாளச் சானல் வாரம்தோறும் திரையிடுகிறது. ஷகிலாவைக் கேள்விப்பட்டிராதவர்கள் கூட ரசிகர்களாகி அந்த ஒருநாள் நள்ளிரவுத் தருணங்களுக்காக வாரம் முழுவதும் காத்திருக்கிறார்கள்.

இதுபோக, இணையத்தளம், செல்போனின் எஸ்.எம்.எஸ். போன்ற அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகளும் பாலுணர்வின் மையங்களாகி விட்டன. இணையத்தில் எந்தத் தலைப்பு அதிகம் பார்க்கப்படுகிறது என்பதன் அளவுகோல் செக்ஸ். போருக்கு எதிரான உலக மக்களின் கருத்தை சர்வே செய்துவிட்டு செக்ஸ்க்கு அடுத்தபடியாக இராக் போர் பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கப்பட்டன என்று மதிப்பிடுகிறார்கள்.

எஸ்.எம்.எஸ்.இன் 90 சதவீதப் பயன்பாடு காதல், காமம், கள்ள உறவுக்கே பயன்படுகிறது. இலக்கிய ரசிகர்களுக்கு விரக தாபத்தை காவிய உணர்ச்சியாய்ச் சித்தரிக்கும் சாண்டில்யன்,ஜானகிராமன், பாலகுமாரன், சாரு நிவேதிதா போன்ற ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஷகிலாவைப் பார்த்து சட்டென்று உணர்வு கொள்ளும் பாமரர்களைப் போலன்றி சற்று தாமதமாக, கலைநயத்துடன் கிளர்ச்சியடைவது இந்த ரசிகர்களின் கலைத்தரம்!

இப்பஐ நம்மைச் சுற்றியிருக்கும் தகவல் உலகிலிருந்து செக்ஸ் குறித்த செய்திகள்,அந்தரங்கங்கள், கனவுகள், ஆசைகள், ஏக்கங்கள் நமது புலன்களினூடாக ஆயிரமாயிரம் வழிகளில் இறங்குகின்றது. இதற்கு நாம் ஆட்படுவதும், அடிபணிவதும் எவ்வாறு என்பதை உணர்த்தவே மேற்கண்ட உதாரணங்களைப் பார்த்தோம். இந்தச் சரணடைவுக்கான அடிப்படை பொதுவில் ஒரு தனி மனிதனின் பாலியல் உணர்வுக்கும் அதைக் கட்டுப்படுத்தும் சமூக நியதிகளுக்குமுள்ள முரண்பாட்டில் இருக்கிறது. இதைக் கேடாகப் பயன்படுத்தி ஊதிப் பெருக்குகின்றன பத்திரிகைகள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் அட்டையில் “”என் டீச்சர்தான், எனக்கு மட்டும்தான் – மாணவர்களின் காதல் சடுகுடு’’ என்று எதிர்பார்க்க முடியாத தலைப்பும். படமும் இன்று ஜூனியர் விகடனில் வருகிறது. பத்திரிக்கைகளில் மக்கள் மீதான பொறுப்புணர்வு, எவ்வளவுக்கு இலாபகரமாக இயங்க முடியும் என்பதிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது. மக்களை உணர்ச்சியுடன் ஒன்ற வைப்பதில்தான் அந்த இலாபம் பிறக்க முடியும் என்பதால், வேறு எந்தச் செய்திகளையும் விட பாலுணர்வுச் செய்திகள் பத்திரிக்கைகளுக்கு கை கொடுக்கின்றன.

சாதி, மதம், இனம், மொழி, வர்க்க வேறுபாடு குறித்த செய்திகளின் நியாயத்தை அந்தந்தப் பிரிவு மக்களின் நலனிலிருந்து சரி – தவறு என்று பிரித்துப் பார்க்க முடியும். ஆனால் எல்லாப் பிரிவு மக்களையும் கடந்து நிலவும் ஆணாதிக்கம் காரணமாக பாலுணர்ச்சிச் செய்திகள் மட்டும் சமூக அக்கறையின்றி உணர்ச்சி வசப்படுத்துகின்றன. பாலுணர்வு குறித்த வரலாற்று ரீதியான குழப்பமும், நுகர்வுக் கலாச்சாரத்தின் முதன்மை அங்கமாக செக்ஸை ஆக்கியிருக்கும் உலகமயமாக்கமும், ஏற்கெனவே கோணலாயிருக்கும் நமது பாலுணர்வு குறித்த அரைகுறை அறிவை மேலும் பலவீனமாக்கியிருக்கின்றன.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

பாலுணர்வுத் தொழில் – ஒரு வருவாய்ச் சுரங்கம் !

பாலுணர்வுச் செய்திகளை மக்களிடம் சுடச் சுடக் கொண்டு போய்க் காசாக்கும் பத்திரிக்கைகளின் மற்றுமொரு வருவாய் பாலுணர்வுப் பொருட்களின் விளம்பரங்கள். பாலுணர்வு முதலாளிகளும், பத்திரிக்கை முதலாளிகளும் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுகிறார்கள். ஜூனியர் விகடனின் ஒவ்வொரு இதழிலும் நாட்டுப்புற செக்ஸ் வைத்தியர்களான சேலம் சிவராஜ் மற்றும் ஈரோடு குருராஜ் சித்த வைத்தியசாலைகளின் விளம்பரங்களும், நவீன ஆணுறையான கோஹினூரின் மோகத்தீ பரவட்டும்! என்ற விளம்பரமும் தவறாமல் இடம்பெறும். அதற்கு நன்றிக் கடனாய் ஜூ.வி.யும் தீயைப் பரப்பி வருகிறது. பாலுணர்வு குறித்த நேரடியான விளம்பரங்கள் மட்டுமல்ல, அதன் மறைமுக அம்சங்களை நடை,உடை, பாவனை, அழகு, அழகிப்போட்டி என்பவை நவநாகரீகம் என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களின் விளம்பரங்களாய் வருகின்றன.

இத்தகைய தொழில்களை நடத்தும் முதலாளிகளுடன், சுற்றுலா, பாலுறவுச் சுற்றுலா, கேளிக்கைத் தலங்கள் முதலான தொழில்களும் அளப்பரிய வருவாயை அள்ளித் தருகின்றன. வேறு எந்தப் பொருளையும் – சேவையையும் விட இவை அதிகச் சிரமமின்றி விலை போகின்றன. எதிர்பாலினரைக் கவர்ந்தேயாக வேண்டும். அப்படிக் கவருவதற்கு இவையெல்லாம் தேவை என்பது இளைய சமுதாயத்தின் ஆளுமைப்பண்பாகவே மாறிவிட்டது.

கை நிறையச் சம்பளம் வாங்கும் இளைஞர்கள், திருமணப் பேச்செடுக்கும் பெற்றோரிடம் வலியுறுத்தும் முதன்மை விசயம் பெண் சிவப்பாக – அழகாக இருக்க வேண்டும்! தமிழனின் சராசரி நிறம் கருப்பு – மாநிறம் என்பது பல சுற்றுக்கள் முடிந்த பிறகே வேறு வழியின்றிப் புரிய வரும். கருப்பைச் சிவப்பாக்குவதாக ஒரு பொய்யைச் சொல்லியே ஃபேர் அண்ட் லவ்லி களிம்பு மட்டும் வருடத்திற்கு பல கோடி ரூபாய்க்கு விற்கிறது. இப்படி இல்லாத ஒரு அழகை ஆணும் பெண்ணும் கற்பனை செய்து ஏமாறுவது முதலாளிகளின் பலம்.

பாலுறவு குறித்த அறியாமையும், யதார்த்தமான பிரச்சினைகளையும் மர்மம் நிறைந்த சங்கதிகளாக்கி குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்கி, பாலுறவுப் பொருட்களைத் தள்ளுகிறார்கள். பாமரர்களுக்கு சிட்டுக்குருவி லேகியமும், தங்க பஸ்பமும், பணக்காரர்களுக்கு வயாக்ராவும் இப்படித்தான் சுலபமாக விலை போகின்றன. காந்தப் படுக்கையில் நீண்ட நேரம் உறவு கொள்ளலாம் என்று ஒரு பச்சைப் பொய்யைச் சொல்லி 2000 ரூபாய் மெத்தையை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த ஜப்பான் காந்தப் படுக்கை மோசடியில் சிக்கிய இந்தியர்களின் பணம் 330 கோடி ரூபாய் என்றால் எதைச் சொல்லி அழ?

படித்துப் பதவியிலிருக்கும் பணக்கார வர்க்கம் தனது பாலுறவு இன்பத்தை சில நிமிடங்கள் நீட்டிப்பதற்கு சில லட்சங்கள் செலவழிப்பதும், தனது கருப்புப் பண வருவாயை நீட்டிக்க கட்டுக் கட்டாய்ப் போடுவதும் வேறு வேறல்ல. லஞ்சம், மோசடி, சூது, தரகு என எப்படியும் பணம் சம்பாதிக்கலாம் என்று சிந்திக்கும் மனிதர்களின் அறிவுதான் விதவிதமான பாலியல் வக்கிரங்களை அனுபவிக்க உயிரியல் விரோதமாகச் சிந்திப்பதற்கும் பயன்படுகிறது. இத்தகைய மனிதர்களே நீதிபதிகளாக, போலீசு அதிகாரிகளாக, மந்திரிகளாக, நடிகர்களாக, பத்திரிக்கை முதலாளிகளாக இருக்கும் போது அந்தச் சமூகத்தின் இயக்கம் எவ்வளவு வக்கிரமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சமூகப் பிரச்சினைகளின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் போலி நிவாரணியாக முன் வைக்கப்படும் பாலுறவின் கற்பனைகள் கண்ணோட்டத்திலிருந்தே அவலங்கள் பிறக்கின்றன. பத்திரிக்கைகளின் பாலுணர்வுக் கதைகளை இதயத்தில் வைத்து வதங்குபவர்களை, பாலுறவுப் பொருட்கள் – சேவைகளின் விளம்பரங்கள் மேலும் வதைக்கின்றன. தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்கெனவே ரணமாயிருக்கும் மனத்தை மேலும் சிதைக்கிறது. பாலுறவுக்கென வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட,பாலுறவுக்கென உலகம் கருதும் தகுதிகள் தனக்குக் கிடைக்காமலேயே போய்விடுமோ என்ற அச்சம் பெரிதும் பிடித்தாட்டுகிறது. வாழ்க்கையில் எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்கு இத்தாழ்வு மனப்பான்மையில் கருவுற்று வன்முறை எண்ணத்தைச் சுலபமாகப் பிரசவிக்கிறது.

உடலையும், மனதையும் எல்லையற்ற நுகர்வியப் பண்பாட்டில் இழுத்துச் செல்லும் உலகமயமாக்கம், நமது ஆளுமையைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. அந்த ஆளுமை “”நாம்’’ எனும் சமூகத்தின் பலத்தில் வாழும் மனிதனை, “”நான்’’ எனும் தனிமனிதவாதத்தில் வாழும் பலவீனமான மனிதனாக மாற்றுகிறது. புதிர் நிறைந்ததாக மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நவீன பாலுணர்வுக் கண்ணோட்டம் ஒரு மனிதனை எப்படிச் சிதைக்கிறது என்பதை இங்கே சுருக்கமாகப் பரிசீலிப்போம்.

6

அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் !

கம்யூனிஸ்டுகள் பிரச்சினைகளை மேசையின் மேல் வைக்க வேண்டும்’’ என்பார் மாவோ. தோழர்கள் தங்கள் சுயபரிசீலனையின் போது வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்படிப் பேசாத வரை எந்தப் பிரச்சினையும் தீராது என்பதை விளக்கும் மாவோவின் கூற்று பலருக்கும் ஒரு சாதாரணமான விசயமாகத் தோன்றலாம். ஆனால் இன்றைய சமூக அமைப்பின் இயக்கம் காதும் காதும் வைத்தாற் போல இரகசியமாகவே செல்கிறது என்பதிலிருந்து வெளிப்படையாகப் பேசுவது சுலபமல்ல என்பது பலருக்குத் தெரிவதில்லை.

தனது போட்டி நிறுவனங்களை முடக்குவதற்கு பில்கேட்ஸ் செய்த வியாபாரச் சதிகள்,இராக்கைத் தாக்குவதற்கு முன்பாக ஐ.நா.வை வைத்து அமெரிக்கா நடத்திய அரசியல் சதிகள்,பி.எஸ்.என்.எல்.ஐ ஒழித்துத் தனியாரை வளர்ப்பதற்கு அருண்ஷோரி செய்த தரகுச் சதிகள்,திவாலாவதற்கு முன்பாக என்ரான் நிறுவனம் காட்டிய கணக்குச் சதிகள், தேர்தல் சீட்டுக்களுக்காக கொள்கையின் பெயரில் பேரம் பேசும் ஓட்டுக் கட்சிச் சதிகள், கிரிக்கெட்டின் பரபரப்பை அறுவடை செய்ய வீரர்களை விலைபேசும் சூதாட்டச் சதிகள்… இப்படித்தான் முழு உலகையும் சதி, வஞ்சகம், மோசடி, பொய், துரோகம் முதலான இரகசிய நடவடிக்கைகளை வைத்து முதலாளித்துவச் சமூகம் இயங்குகிறது. இதில் தேர்ச்சியடைபவர்களையே தொழில் மன்னன், அரசியல் இராஜதந்திரி, நிர்வாகப் புலி என்று அழைக்கிறார்கள். சமூகத்தின் சிறந்தரோல் மாடல்களாகப் பத்திரிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.

இவர்களைப் பற்றிய செய்திகளும் மக்களுக்கான நோக்கிலிருந்து மதிப்பிடப்படாமல், இரகசியக் கலைகளில் வல்லவர் யார் என்ற கருத்தே உருவாக்கப்படுகிறது. அதனால்தான் சந்திரசேகர்,அமர்சிங், சோ, ஆர். வெங்கட்ராமன், அம்பானி, சங்கராச்சாரி போன்ற அப்பட்டமான அரசியல் – தொழில் – ஆன்மீகத் தரகர்களெல்லாம் மரியாதைக்குரிய பெரிய மனிதர்களாக உலவ முடிகிறது. இதற்குப் பொருத்தமாக பத்திரிகைகளும் அரசியல் செய்திகளை கொள்கை,கோட்பாடு, மக்கள் நிலையிலிருந்து எழுதாமல் கிசுகிசு பாணியில் புனைகிறார்கள். இன்றைக்கு அரசியல் செய்திகளை அறிய கழுகு, சங்கர்லால், வம்பானந்தா போன்ற ஆய்வாளர்களின்ஆய்வுகளைத்தான் மக்கள் படிக்கின்றனர்.

இப்பஐ, சமூக இயக்கத்தில் சமூக விரோதமாக இருக்கும் இரகசியச் செயல்களிலிருந்தே அந்தரங்க விசயங்களை ரசனையுடன் நாடுவது ஒரு பண்பாகத் தோன்றுகிறது. இத்துடன் பாலுணர்வின் புதிர் சேரும்போது அதன் கவர்ச்சி இன்னும் பல மடங்கு பெருகுகிறது. அதனால்தான் முதலாளித்துவ அரசியல் உலகில் தமது எதிர்த்தரப்பினரை நிலைகுலைய வைக்க பாலுறவு இரகசியங்களை ஏவிவிடுவது ஒரு தந்திரமாக இருக்கிறது. கிளிண்டன் – மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தின் போது எதிர்க்கட்சியாக இருந்த குடியரசுக் கட்சியினர் அமெரிக்க சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் இந்தக் கள்ள உறவுப் பிரச்சினையை ஒரு மாபெரும் ஒழுக்கப் பிரச்சினை போல மாற்ற முயன்றனர். முதலில் சற்றுத் தடுமாறிய கிளிண்டனோ ஈராக் மீதான தாக்குதலைப் பயன்படுத்தி மோனிகா விவகாரத்தை மூடுவதற்கு முயன்றார். உலகமும் இராக்கை மறந்துவிட்டு வெள்ளை மாளிகையின் அந்தப்புர லீலைகளை இரசித்தது.

கிளிண்டன் ஒரு அமெரிக்க அதிபர் என்ற முறையில் உலக மக்களுக்கு எதிராகச் செய்த அத்துமீறல்களைப் பற்றிப் பேசாத தமிழ்ப் பத்திரிக்கைகளெல்லாம் அவர் மோனிகாவிற்குச் செய்த அத்துமீறல்களைப் பற்றி அட்டைப்படக் கட்டுரையில் இரசித்து எழுதின. மேலும் பிரபலமானவர்களின் பாலுறவுக் கதைகளுக்கு உலகு தழுவிய சந்தையிருப்பதால் டயானா,மைக்கேல் ஜாக்சன் போன்ற நட்சத்திரங்களின் தருணங்களுக்குப் பத்திரிக்கைகள் காத்திருக்கின்றன. இங்கேயும் இவை ஒரு மனிதனின் பாலுறவு ஒழுக்கம் குறித்துக் கூட விவாதிப்பதில்லை. டயானாவுடன் இன்பம் துய்த்த அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்ற ஆவலையே அதிகரிக்கின்றன. இப்படி அண்டை வீட்டின் அந்தரங்கத்திலிருந்து அரண்மனையின் அந்தப்புரம் வரை பாலுறவின் கதைகள், ஈடுபாட்டுடன் வாசிக்கப்படும் ரசனையின் முதல் இடத்தைப் பெறுகின்றன.

ஓட்டுக் கட்சிகளின் அரசியல் ஒழுக்கத்தையும், தலைவர்களின் பாலுறவு ஒழுக்கத்தையும் சம விகிதத்தில் கலந்து கவர்ச்சியான ஆபாசத்தில் அடுக்கு மொழியில் முழங்கும் தீப்பொறி ஆறுமுகம் (தற்போது அ.தி.மு.க.), வெற்றி கொண்டான், நன்னிலம் நடராசன் போன்ற பிரச்சார பீரங்கிகளே தி.மு.க.வின் பிரச்சார பலம். எல்லாக் கட்சியினரும் அணிதிரண்டு வரும் இப்பேச்சாளர்களின் தரத்திற்கும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட தி.மு.க.வின் அரசியல் தரத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. பெண்ணினமே கூனிக் குறுகும் வண்ணம் புரட்சித் தலைவியை வார்த்தைகளால் வருணித்த தீப்பொறியை அதே தலைவி அ.தி.மு.க.வில் அரவணைத்துக் கொண்டதும் இப்படித்தான். அரசியல் வேறுபாடு கடந்து இந்த ஆபாசப் பேச்சுக்களை மக்கள் ரசிப்பது தமிழக அரசியல் – ஒழுக்கத்தின் தரமாக இருக்கிறது.

அரசியலற்ற, சமூக நோக்கமற்ற கண்ணோட்டத்தை உருவாக்குவதில் பாலுறவுக் கண்ணோட்டம் பாரிய பங்கை ஆற்றுகிறது. இது பொது வாழ்க்கை குறித்த ஒரு தனிநபரின் கண்ணோட்டம் மட்டுமல்ல. குடும்பம், உறவினர், அண்டை அயலார், நண்பர்கள் ஆகியோருடன் உறவு கொள்ளும் ஒரு சொந்த வாழ்க்கைக் கண்ணோட்டமாகவும் வினையாற்றுகிறது. சக மனிதர்களுடன் எழும் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பாலியல் பிரச்சினைகளாகத் திரிப்பதற்கு இன்றைய சமூக அமைப்பு மட்டுமல்ல, வரலாற்று ரீதியாகவும் ஒரு காரணம் இருக்கிறது.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

வரலாற்றின் ஆரம்பத்தில் குழந்தைகளைப் பெற்றுத் தரும் பெண் மனிதர்களை உற்பத்தி செய்யும் ஒரு சொத்தாகக் கருதப்பட்டாள். இந்தச் சொத்தை அழித்தால் ஒரு குலம் அழியும்,கைப்பற்றும் குலம் வளரும் என்று தொடங்கியது வரலாறு. பின்னர் நிலவுடைமைக் காலத்தில் குறிப்பிட்ட ஆணின் சொத்தை அவனது ஆண் வாரிசுகளுக்கு மட்டும் மாற்றித்தரும் கற்புள்ளசொத்தாக பெண் மாற்றப்பட்டாள்.

அப்புறம், ஒரு ஆணின், குடும்பத்தின், சாதியின், மதத்தின் கௌரவமாக, இனத்தூய்மையாக,கலப்பற்ற இரத்தமாக, பெண் மாறினாள். ஒரு பெண் கற்பழிக்கப்படும் போது இந்த இனத்தூய்மை அழிகிறது; தனது சாதி இரத்தத்தை எதிர்ச் சாதியில் நுழைக்க முடிகிறது; முடிவில், எதிர்ப்பிரிவு ஆண்களை நிலைகுலைய வைக்கவும் செய்கிறது.

அன்று தோற்றுப்போன இராஜபுத்திரர்களின் இனத் தூய்மையைக் காப்பாற்றவே அக்குலப் பெண்கள் கும்பலாகக் கொளுத்தப்பட்டார்கள். அதற்கும் முன்பு, ஒரு சலவைத் தொழிலாளி சீதையின் கற்பைக் கேள்விக்குள்ளாக்கினான் என்பதற்கு சீதையை உயிரோடு கொளுத்தினான் இராமன். ‘மேல்’ சாதிப் பெண்களுக்கும் ‘கீழ்’ சாதி ஆண்களுக்கும் கள்ள உறவில் பிறந்தவர்களை சூத்திரர்கள் என்று பார்ப்பனியம் ஒதுக்கியது. சில முசுலீம் இளைஞர்கள் இந்துப் பெண்களைக் காதலித்து மணம் செய்ததற்காகப் பல கலவரங்களை இந்துமதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இன்றும் கள்ளக் காதல் விவகாரங்களில் சமூகம் கேலி செய்யுமோ என்ற அச்சமும், அவமான உணர்வும்தான் ஒரு ஆணை கொலை செய்ய வைக்கிறது. பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலுணர்வு ஒழுக்கம் குறித்த அச்சம் ஒரு ஆணுக்கு கௌரவக் குறைவாகவும், பெண்ணுக்கு வாழ்க்கைப் பிரச்சினையாகவும் ஆகி விடுகிறது. ஒரு பிரச்சினையை சமூகத் தளத்தில் வைத்து யதார்த்தமாகச் சந்திக்கத் துணிவின்றி, தப்பித்துக் கொள்வதற்கு ஒரு சுலபமான ஆயுதமாகவும் இது இருக்கிறது. இதையே கண், காது, மூக்கு வைத்து பேசும்போது ஒரு சுவராசியமான பொழுதுபோக்காகவும் மாறி விடுகிறது. இதனால் இறுக்கமான சாதியச் சமூகமாக வாழும் நம் மக்களிடையே பாலுறவு குறித்த கிசுகிசுக்கள் – அவதூறுகளின் பாதிப்பு அதிகம் என்பது கூடுதலான சோகம்.

முக்கியமாக, பேசப்படும் ஒவ்வொரு அந்தரங்க விசயங்களிலும் ஒரு பெண்ணே அதிகமும் பாதிக்கப்படுவதால் பல பாலியல் வன்முறைகள் குற்றங்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை. உயர் பதவிகளில் திறமையினாலும், நேர்மையினாலும் பெயரெடுக்கும் பெண்களை ஒழுக்கமற்றவள் என்ற ஒரு சொல் முடக்கி விடுகிறது. மனைவி நடத்தை கெட்டவள் என்று வரும் மொட்டைக் கடுதாசி கூட ஒரு கணவனை நடைப் பிணமாக்கி விடுகிறது; மனைவிக்கோ வாழ்க்கையே முடிந்தது போல் ஆகிறது. பாலியல் பிரச்சினைகள், வன்முறைச் செய்திகளை வெளியிடவும், வெளியிடாமல் இருப்பதற்கும் போலீசுக்கும் – பத்திரிக்கை நிருபர்களுக்கும் பணம் தரப்படுகிறது.

மொத்தத்தில் பாலியல் செய்திகள், கதைகள், வன்முறைகள், கிசுகிசுக்கள், வதந்திகள் ஒரு மாபெரும் பொழுதுபோக்கு இரசனையை மக்களிடம் உருவாக்கியிருக்கின்றன. இந்த அபாயகரமான இரசனை இத்துடன் மட்டும் முடிவதில்லை. பல துறைகளையும் வேறு வேறு அளவுகளில் பிடித்தாட்டத்தான் செய்கிறது.

எல்லாத் துறைகளையும் இந்தக் கிசுகிசு ரசனை கவ்வியிருப்பதன் காரணம் நமது சமூகத்திலிருக்கும் ஜனநாயகமற்ற உறவுகள்தான். கணவனுக்கு மனைவி அடிமை,பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமை, ஆலமரத்தடிப் பஞ்சாயத்திற்குக் கிராமம் அடிமை, சாதிச் சங்கத்திற்குச் சாதிகள் அடிமை என்று ஒவ்வொரு துறையிலும் இந்த அடிமைத்தனம் பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது.

அடிமைகள் தரப்பில் மோதிப் பார்க்கத் துணிந்தவர்கள் ஜனநாயகத்திற்காக வெளிப்படையாகப் போராடுகிறார்கள். துணியாதவர்கள் ஆண்டைகளைப் பற்றிக் கிசுகிசுத்து மகிழ்கிறார்கள். ஆண்டைகளும் தங்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்காத இந்தக் கிசுகிசுக்களை அனுமதிக்கிறார்கள். அதையே ஜனநாயகமென்று காட்டிக் கொண்டு உண்மையான ஜனநாயகத்தைத் தடை செய்கிறார்கள். இறுதியில் சக மனிதனோடும், சமூகத்தோடும்,அரசியலோடும் எழும் பிரச்சினையை ஜனநாயகப்பூர்வமாகச் சந்திக்காமல் அற்ப விசயங்களை அந்தரங்கமாகப் பேசிக் களிக்கும் பண்பு இரத்தத்தோடு கலந்து விடுகிறது. இதுவே ஒரு தனிநபர் சக மனிதர்களை கிசுகிசுக்களால் அலட்சியம் செய்துவிட்டு சுமுக உறவையும் வைத்துக் கொள்ளும் ஒரு அருவருப்பான பண்பை புழக்கத்திற்கு விடுகிறது.

கவிஞர் மனுஷ்ய புத்திரன், “”சமீபத்திய இலக்கிய கிசுகிசுக்கள் ஏதும் உண்டா, அப்படி இருந்தால் தெரிவிக்கவும், ரகசியம் காக்கப்படும்,’’ என்று ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தை குமுதம் பத்திரிகை முன்பு வெளியிட்டிருந்தது. இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வாழ்க்கையின் போதாமை குறித்து கவலைப்படும் கவிமனத்தின் நாட்டமும், இரசனையும் எப்படி இருக்கிறது பாருங்கள்!

இப்படித்தான் தமிழ்நாட்டின் இலக்கியச் சிறு பத்திரிக்கைகள் அனைத்தும் எழுத்தாளர்களின் அரட்டை, வம்பு, குடி, அடி தடி, வண்டவாளங்கள், சேட்டைகள் போன்றவற்றை வைத்தே இயங்குகின்றன. சிறுபத்திரிகை வாசகர் விரும்பியும்- எதிர்பார்த்தும் படிப்பது இந்தக் கிசுகிசுக்களைத்தான்.

ம.க.இ.க. முதலான புரட்சிகர அமைப்புக்களை விமர்சனம் செய்யும் பொழுதுபோக்கு வெட்டி அரசியல் குழுக்களும் இந்தப் பாணியில்தான் கிசுகிசுக்கின்றன. “”அந்தத் தோழர் மீது நடவடிக்கை எடுத்து விட்டார்களாமே, இந்தத் தோழர் இப்போது அமைப்பில் இல்லையாமே,அந்தத் தோழர் இன்ன சாதியாமே’’ என்று காதருகே உரைக்கும் இந்த வெட்டிக் குழுக்கள் புரட்சிகர அரசியலையும் – நடைமுறையையும் நேரடியாக எதிர்கொள்ளத் துணிவின்றி இந்த வழிமுறைகளைக் கையாளுகின்றன.

இக்குழுக்களின் சோம்பிக் கிடக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய அணிகளின் வேலைத்திட்டமே இந்தக் கிசுகிசு அரசியல்தான்!

எனவே அந்தரங்கச் செயல்களை ரசனையுடன் பேசும் இப்பண்பு சமூகத்தின் சகல அரங்குகளையும் ஆட்சி செலுத்துவதன் விளைவாக மனிதர்களுக்கிடையே உண்மையான உறவுகள் நசித்துப் போயுள்ளது. குறிப்பாக, நகரத்து மனிதர்கள் செயற்கையாகப் பழகுவதும்,உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், பிரச்சினைகள் வரும்போது உள்ளுக்குள்ளேயே புழுங்குவதும், திடீரென வன்முறையாளனாக மாறுவதும், முடிவில் வாழ்க்கையை தற்கொலை மூலம் முடிப்பது அல்லது நடைப்பிணமாக வாழ்வது என்றும் முடிவுக்கு வருகிறது.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள் !

ஏற்கெனவே பார்த்தது போல சுற்றியிருக்கும் உலகிலிருந்து பாலுறவுத் தகவல்கள் பல நூறு வழிகளில் ஒரு மனிதனின் சிந்தனையில் இறங்குகிறது. இறக்குமதியானவை வினையாற்றாமல் சும்மா இருப்பதில்லை. இவை இளைஞர்களின் விடலைப் பருவத்திலிருந்தே பாலுணர்வு குறித்த கற்பனைகளை மெல்ல மெல்லக் கிளப்பி விடுகின்றன. இளைய பிரிவினரின் கணிசமான நேரத்தை ஆக்கிரமித்திருக்கும் இக்கற்பனைகள் பாலுறவின் யதார்த்தமான சித்திரத்தை அழித்துவிட்டு அதீதப் புனைவுடன் மிகையான குழப்பமான சித்திரத்தை உருவாக்குகின்றன. இது அதிகரிப்பதற்கேற்ப அவர்கள் அந்நியப்படுவதும் ஆளுமை பலவீனமாவதும் நடந்தேறுகிறது.

எந்தச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் கறாராகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறார்களோ, பேசவும் – பழகவுமான வாய்ப்புகள் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே எதிர்பாலினைக் குறித்த கவர்ச்சியும், கற்பனையும் அதிகமிருக்கும். ஆனாலும் வீட்டிலிருந்தாலும், வேலைக்குச் சென்றாலும் இல்லறமே நல்லறமெனப் போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் ஆண்களின் உடம்பு குறித்து அதிகம் அலட்டுவதில்லை. மாறாக, வாழ்க்கையின் இன்ப – துன்பம், வசதி – வாய்ப்பு குறித்து கருணை காட்டும் ஆண்கள் மீதுதான் சற்று உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆணுக்கோ பெண்ணுடம்பு குறித்து மோகம் கொள்வதோ முதன்மையாக இருக்கிறது.

ஆணுலகு கற்பனை செய்யும் பெண்ணுடம்பின் பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சினிமா உருவாக்குகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதை ஒளிவட்டம் போட்டுக் கவனப்படுத்துகிறது. தொடைக்கு ரம்பா, இடுப்புக்கு சிம்ரன் – ஐஸ்வர்யா ராய், மார்பகத்துக்கு மந்த்ரா, கண்களுக்கு பானுப்பிரியா – சிலுக்கு, அப்புறம் மூக்கு, உதடு, கை – கால்கள் என்று ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் அத்தனை உறுப்புகளும் மிகையான கற்பனையால் கிளர்ச்சியூட்டும் விதத்தில் பதிந்து போகின்றன. பொது இடங்களில் சந்திக்கும் போதெல்லாம் ஆண்கள் வெறித்துப் பார்ப்பதும், அல்லது நாகரிகமான முறையில் பட்டும் படாமலும் பார்ப்பதும்,பெண்கள் ஜாக்கெட்டை இழுத்து விடுவதும், மாராப்பைச் சரி செய்வதும் இயல்பான சமூக நடைமுறைகளாகி விட்டன. ஆண்களுக்காக அடுப்புக் கரண்டியைப் பிடிப்பதில் அதிக நேரம் செலவழிக்கும் பெண்களின் கைகள், அதற்கடுத்து உடைகளைச் சரிசெய்வதிலேயே ஓய்ந்து போகின்றன.

ஆணைப் போலவே சிறுநீர், மலம், வியர்வை, ரத்தம், சளி அடங்கிய இயல்பான பெண்ணுடம்பு குளிர்பதனப் பெட்டியில் வாடாமல் வைக்கப்பட்டிருக்கும் ரோஜாவைப் போல மனதில் பதியன் செய்யப்படுகிறது. அடுத்து இந்த ரோஜாவை நுகருவதற்கு, உண்மையில் கசக்குவதற்கு மிகை யதார்த்தக் காட்சிகள் இளையோரின் அக உலகில் கட்டப்படுகின்றன. முத்தமும், உடலுறவும் வெண்திரையின் நிழலில் ஆவேசத்துடன் நிஜம் போல ஆடுகின்றன. பலியாடுகளைப் போல உறவு கொள்ளும் மலையாள  படங்களை விட படுநேர்த்தியாகக் கிளர்ச்சியூட்டும் ஹாலிவுட் படங்கள் நனவுலகிற்குப் புறம்பான கற்பனையைத் தூண்டி விடுகின்றன.

நாம் உணருவது போல அந்தப் படங்களில் இருவர் உண்மையில் உறவு கொள்வதில்லை;நடிக்கவே செய்கிறார்கள். அதன் பின்னே பலரது சோடனைத் திறமையும், தொழில்நுட்பமும் சேர்ந்திருக்கிறது. ரம்மியமான ஒளி, மென்மையை நுட்பமாக உணர்த்தும் ஒலி, நேர்த்தியான படத்தொகுப்பு, மறக்க முடியாத மூடுகள்’, விரகதாபத்தை மிகையாக வெளிப்படுத்தும் அபிநயங்கள் எல்லாம் சேர்ந்து பாலுறவின் உணர்ச்சியை யதார்த்தத்திலிருந்து பல அடி உயரத்திற்கு ஆவேசமான அலையாக எழுப்புகின்றன.

ஆனால் யதார்த்தமான ஒரு பாலுறவில் இவையெல்லாம் சாத்தியமேபயில்லை! டபிள்யூ. டபிள்யூ. எஃப் (WWF) மாமிச மலைகளின் மல்யுத்தக் காட்சிகள் தொடங்குமுன், “”இது எங்கள் தொழில்முறை வீரர்களின் அதி உயர் பயிற்சியினால் நடத்தப்படும் சண்டைக் காட்சிகள். இதைப் பார்த்துச் சண்டை போடுவது உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்’’ என்று எச்சரிக்கை வெளியிடுகிறார்கள்; படுக்கைக் காட்சிகளுக்கு அப்படிப் போடுவதில்லை – அவ்வளவுதான்.

உண்மையில் வெண்திரை உருவாக்கியிருக்கும் பாலுறவுக் கற்பனை சக மனிதனை உயிரும் உணர்வும் உள்ள தன் உயிரின நீட்சியாக நேசிப்பதில்லை. ஒரு பண்டமாகத்தான் பார்க்கிறது;ஆவேசமான வடிகாலாகப் பயன்படுத்துகிறது; அலட்சியம் செய்கிறது. ஆதலால் இங்கே மகிழ்ச்சியில்லை. வெறியைத் தணிப்பது மட்டும்தான் நடக்கிறது.

இருப்பினும் பெண்ணுடம்பு, உறவு பற்றி இளைஞர்களின் கற்பனையில் உண்மையைப் போல உருவாகும் இக்கண்ணோட்டம் இத்துடன் நிற்பதில்லை. மேலும் பயணம் செய்கிறது. அந்தக் கற்பனையில் உருவான பிம்பங்களையும், காட்சிகளையும் சமூக யதார்த்தத்தில் உரசிப் பார்க்கும் களனையும், பாத்திரங்களையும் செய்திகள் என்ற பெயரில் பத்திரிக்கைகள் தருகின்றன.

வயதான கணவனிடம் வாடிப்போன மனைவி, ஆண்மையற்ற கணவனிடம் பெருமூச்சு விடும் மனைவி, வெளிநாட்டில் கணவன் – வாய்ப்பில்லாத மனைவி, கேபிள் டி.வி., விற்பனைப் பிரதிநிதிகள் மயக்கும் குடும்பப் பெண்கள், உடம்புச் சுகத்துக்கு ஏங்கும் மலையாளப் பெண்கள் – கிறித்தவக் கன்னியாஸ்திரீகள், உறவுக்கு ஒத்துழைக்கும் வேலைக்காரப் பெண்கள், மாணவனைக் காதலிக்கும் டீச்சர்கள், உறவை மறக்க முடியாமல் தவிக்கும் விதவைகள், வெளியூரில் தங்கி லீலை செய்யும் பெண்கள், சாமியார்களின் நிர்வாண பூசைக்குச் சமர்ப்பணமாகும் வீட்டுப் பெண்கள், மெரினா, முக்கொம்பு, மருதமலையில் அவசரமாகத் தழுவும் காதலர்கள்.. .. என பார்வையில் பழக்கத்தில் தென்படும் அத்தனைப் பெண்களும் பத்திரிக்கைச் செய்திகளின் உதவியால் இளைஞர்களின் அக உலகுக்குள் சென்று ஆசை காட்டுகிறார்கள்.

பருவமடைந்த பின் இயற்கையான உயிரினத் தூண்டலினால் அனைவரிடமும் ஏற்படும் பழக்கமான சுய இன்பம் இத்தகைய காட்சி, கதைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய பரிணாமம் அடைகிறது. காணும் பெண்களையெல்லாம் இரகசியமாக மோகிப்பது ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. முழுஉலகமும் – அந்தப் பெண்களும் சகஜமாய் இருக்கும்போது, தான் மட்டும் காமத்திற்கு ஆட்படுவது குறித்து குற்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த முரண்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கேற்ற சமூக நடவடிக்கைகள் இல்லாதபோது இளைஞர்கள் தனிமைப்படுவதில் போய் முடிகிறது. இதில் ஒரு பிரிவு இளைஞர்கள் இவையெல்லாம் சகஜம்தானே என்று சமரசம் செய்து கொண்டு தேர்ந்த காரியவாதியாக மாறுகிறார்கள். அப்படி மாற முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கும் பெரும்பான்மை இளைஞர்கள், தாம் தவறு செய்கிறோமே என்ற அச்சத்துடனும், வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடனும் வாழ்க்கையை மகிழ்ச்சியற்று நடத்துகின்றார்கள். கற்றும், உழைத்தும் தேர்ச்சியடைய வேண்டிய இளைஞர்களுடைய ஆளுமை வாடி வதங்குகிறது.

பாலுணர்வு குறித்த இந்தக் கற்பனைக் கண்ணோட்டம் ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிர் பாலினரைக் கவருவதையே முக்கியமான வாழ்க்கை வேலையாக மாற்றிவிட்டது. உடல், இடுப்பு,நகம், மார்பு, முகப்பரு, மஞ்சள் பல், வாய்நாற்றம், படியாத தலை, சுருளாத முடி, தேவையற்ற ரோமங்கள் என முடிவேயில்லாத உடல் பிரச்சினைகள். கூடவே உடை, அலங்காரம், செருப்பு,வாழ்க்கை முக்கியமான அங்கங்களாகி விடுகிறது. சமூகக் களத்தில் உருவாக வேண்டிய அழகு,நிலைக்கண்ணாடி முன் நெடு நேரம் நின்று ரசிக்கும் அவலமாகி விடுகிறது.

முடிவில் பாலுறவு குறித்த சமூக யதார்த்தத்திற்கும், அகநிலையில் உருவாகும் கற்பனைச் சித்திரத்திற்குமுள்ள முரண்பாடு காதல், திருமணம், தாம்பத்திய வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதிலிருந்து இதுதானா, இவ்வளவுதானா என்று அதிர்ச்சியுறும் அறிவு எது உண்மை,எது பொய் என்பதைப் புரிந்து கொள்வதற்குள் வாழ்க்கை எங்கோ போய்விடுகிறது; சில நேரங்களில் முடிந்தும் போகிறது.

விழுப்புரமருகே லாரி ஓட்டுநராக இருக்கும் ஒரு இளைஞன் ஆந்திராவின் விபச்சாரி ஒருத்தியிடம் ஒரு புதிய அனுபவம் அடைகிறான். அவள் தான் கற்பழிக்கப்படுவது போலத் தயாரிக்கப்பட்ட ஒரு நீலப்படத்தைக் காண்பித்து மகிழ்ச்சியளிக்கிறாள். ஊர் திரும்பிய அவன் பின்னர் தனது உறவுப் பெண்ணொருத்தியைக் காதலித்து மணக்கிறான். முதலிரவில், அந்த ஆந்திர அனுபவத்தை அரங்கேற்ற முயல்கிறான். அவள் மீது பாய்ந்து உடைகளைக் கிழிக்கிறான். மணமகள் வீறிட்டலறுகிறாள். அவமானத்தில் கூனிக் குறுகியவன் மண்ணெண்ணெயைத் தன் மேல் ஊற்றிக் கொண்டு, “கற்பழிப்புக்கு உடன்படாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக அவளை மிரட்டுகிறான். தவறுதலாகத் தீப்பிடித்து எரிகிறான். மருத்துவமனை வாக்குமூலத்தில், “”என் மனைவி நல்லவள், நான்தான் விளையாட்டாய் இப்படிச் செய்து விட்டேன்’’ என்று பேசிவிட்டு ஓரிரு நாட்கள் கழித்து செத்தும் போனான்.

-புதிய கலாச்சாரம், ஜூன்’ 2003

http://www.vinavu.com/2009/08/10/sex/