யுத்தம் தொடங்கிய பின் தமிழ்த் தேசிய இனத்தின் மீது காட்டு மிரான்டித் தனமான யுத்தத்தை இனவாதிகள் பிரகடனம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரம் ,மொழி, நிலம் என அனைத்து துறைகளிலும் வன்முறையானது கட்டவிழ்த்து விடப்படுகின்றது.
15 ஆயிரம் இராணுவத் துருப்புக்களை குவித்த இனவெறியர்கள் யாழ் - குடா நாட்டை கைப்பற்றும் நோக்கில் ஒரு முன்னேறிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினர். இந் நடவடிக்கை புலிகளுக்கு எதிரானது என பிரகடனம் செய்த படி , தமிழ் பேசும் மக்களின் மீது தொடர்ச்சியான , இடை வெளியேற்ற குண்டு வீச்சினால் ஒவ்வோர் அடி நிலமும் சல்ல டையாக்கப்பட்டது.
மக்களை பொது இடங்களில் கூடுமாறு அறிவித்த அரசானது அவ்விடங்களின் மீது ஈவிரக்கமற்ற , குறிதப்பாத குண்டுத்தாக்குதலை நடத்தியது. இவ்வாறு சிலநூறு மக்களைக் கொன்று குவித்துவிட்டு , அவர்களைப் புலிகளெனக் கூறியபடி தனது பாணியில் இராணுவத் தார்பார்ரை நடாத்தியது.
மக்கள் கொல்லப்பட்டதிற்கு எதிராக பல குரல்கள் எழுந்த போது மாட்சிமை தங்கிய ஜனநாயக வாதியாம் சந்திரிகா ஆதாரம் ஏதுமுண்டா? எனக் கேட்டு , யுத்தப் பிரகடனத்தை புலிகளுக்கு எதிரானது மட்டுமே என்று மீண்டும் பிரகடனம் செய்தார்.
தொடர்ச்சியாக மக்கள் மீதான தாக்குதல்கள் உலகெங்கினும் பரவி விடவே , சந்திரிகா அரசு அவற்றை புலிகளின் தலையில் குற்றம் சுமத்தும் வகையில் பொய் பிரசாரம் ஒன்றை மூட்டைக் கட்டி சர்வதேச தொலைக் காட்சிகள் மூலம் உலகின் முன் அவிழ்ந்து வைத்து நாடகமாடியது. புலிகள் தற்கொலை வாகனம் ஒன்று குண்டுடன் வெடித்ததில் 200 பேர் அளவில் மக்கள் கொல்லப்பட்டதாக ஒரு பொய் பிரசாரத்தை அரசினர் முன்னெடுத்தனர். குண்டுகளும் , வெடி மருந்துகளுமே வாழ்க்கையாகி போய்விட்ட எம்மக்களின் வாழ்வில் , இவைகள் எந்;த ஒரு கணமும் வாழ்வுடன் இணைந்தபடியே இருந்தும் வந்தள்ளது. இவ்வாறிருக்கும் பொழுதில் ஒரு தற்செயல் விபத்துக்கள் ஏற்படுவது சாத்தியமானதே. ஆனாலும் இதைத் தவிர்ப்பதும் மிக அவசியமானதே.
சிறிலங்கா அரசானது தனது கொலை வெறியாட்டத்தை மூடிமறைக்கும் சூழ்ச்சியின் அடிப்படையில் இதைப் பிரசாரத்துக்கு எடுத்தச் சென்றனர். ஆனால் உண்மையிலேயே ஒரு விபத்து , அரச மற்றும் ஏகாதிபத்திய பிரச்சார சாதனங்கள் முழங்கியது போன்ற ஒரு பெரிய மக்கள் அழிவை ஏற்படுத்திய விபத்தாக அது இருக்கவ்pல்லை. 500 க்கு மேற்பட்ட மக்களைக் கொன்று கொலை வெறியாட்டம் போட்ட இனவெறி சந்திரிகா அரசு, இவற்றிலிருந்து மக்களை திசை திருப்பிவிட பொய் பிரசார வடிவங்களைச் சார்ந்து இருப்பதுடன் , மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடுக்க அரசபடை குவிப்புக்களைச் செய்தவண்ணம் உள்ளது. 1978 களுக்குப் பிந்திய மிகப் பெரிய தாக்குதல் தோல்வி பெற்ற பின் கூட, மீண்டும் ‘ மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற வகையில் புதிய தாக்குதலை தொடுக்க உள்ளது.
தமிழ் தேசியத்தின் இருப்பை அச்சுறுத்தும் வகையில் , எல்லாத்துறைகளிலும் பொருளாதாரத் தடையை செய்துள்ள இனவெறி அரசு, பாரிய இராணுவ முன்னெடுப்புக்களின் மூலம் தமிழ்த் தேசியத்தை மண்டியிட வைக்கும் முயற்சியில் போலி முற்போக்கு அரசின் இனவெறியர்கள் தொடர்ந்தும் தமது கைவரிசைகளைத் தொடர்கின்றனர். இவர்களை முற்போக்கு அரசு என சில ஆலவட்டப் பேர்வழிகள் தூக்கிச் சுமக்க , மீண்டும் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டும் , குதறப்பட்டும் வருகின்றனர்.
புலிகள் இந்நிலையில் கூட மக்களின் ஜனநாயகத்தையோ, அவர்களின் சுயாதீனமான சுதந்திரமான அரசுக்கு எதிரான குரல்களை எழுப்பி விடுவதற்குக் கூட தடையாக இருந்து வருகின்றனர். இதன் மூலம் தேசிய விடுதலைப் போராட்டமானது சரியான திசை வழியில் வழிநடாத்தப்படாமல் , குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட தற்காப்பு யுத்த வடிவத்திற்கு மேல் முன்னேற முடியாமல் மீண்டும் மீண்டும் உறைந்து தேக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது. பரந்துபட்ட மக்களை அணிதிரட்டும் ஒரு முன்னணியைக் கூட உருவாக்கிவிட முடியாத நிலை என்பது , தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமான, அப்போராட்டத்தை குட்டிச் சவராக்கும் நிலையேயாகும்.