பி.இரயாகரன் - சமர்

புலிகள் தம் உயிரைக் பாதுகாக்க, வன்னியில் மக்களைப் பணயமாக்கி அவர்களைப் பலியிட்டனர். வெளிப்படையாக புலிகள் மக்கள் மேல் துப்பாக்கியை நீட்டினர். தம் பலியிட்டுக்கு அடங்க மறுத்தவர்களையும், தப்பியோடியவர்களையும் அடித்தார்கள் சுட்டார்கள் கொன்றார்கள். இதற்கென்று ஒரு லும்பன் கும்பலை, புலித்தலைமை பயன்படுத்தியது.

இன்று சிங்களப் பேரினவாதம் அதே வன்னி மக்களுக்குள் ஒரு பரந்த இனக் களையெடுப்பை நடத்துகின்றது. இதை புலிகளைக் கொண்டே செய்கின்றது என்பது, இங்கு மிக முக்கியமானது. புலிகள் மக்களை பணயம் வைத்து பேரினவாதம் மூலம் படுகொலை செய்த போது, மக்கள் தப்பியோடா வண்ணம் புலிகள் யாரை முன்நிறுத்தியதோ, அவர்களைக் கொண்டு இந்த இனக்களையெடுப்பை பேரினவாதம் இன்று நடத்துகின்றது.

 

வன்னி வதைமுகாமில் உள்ளவர்கள் புலிகளா என்பதை கண்டறியும் பொறுப்பு, அண்மையில் கைதான கொலைகாரப் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அதே புலி முகங்களை சந்திக்கின்றனர். அதே அவலத்தையும், அதே வேதனைகளையும் சந்திக்கின்றனர்.

 

அவர்கள் தம் பார்வையில் சந்தேகப்படுபவர்களை எல்லாம் இழுத்துச் செல்லுகின்றனர். அவர்களை சுடுமண்ணில் நிறுத்தி, சித்திரவதை செய்வதுடன் கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். இதற்கென்று சிறப்பு வதை முகாங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  

 

இப்படி பேரினவாதம் முன்னாள் புலிகளின் துணையுடன், மீண்டும் புலிகள் மூலம் மக்களை ஒடுக்கத் தொடங்கியுள்ளது. ஒரு பெண் இதைச் சொல்லி குமுறிய போது "தாம் குடிக்கும் குழாய் கிணறுக்குள் சயனைட்டைப் போட்டு எங்கள் அனைவரையும் கொன்று விட்டிட்டாங்கள் என்றால் நாங்கள் நிம்மதியாக செத்துப் போவோம்"  என்றார். அரசின் இனவழிப்புக்கும், இனக் கொடுமைக்கும் எதிராக, அப்பாவி மக்கள் இப்படிதான் நினைக்கின்றனர். இதுதான் அந்த மக்களின் வாழ்வு சார்ந்த எதார்த்தம். 

 

இனக் களையெடுப்பு மேலும் நுட்பமான இனவழிப்பாக மாறுகின்றது

 

அரசு,  புலி முத்திரை குத்தி தான் தெரிவு செய்யப்பட்ட 50000 மக்களை, கொன்று குவிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கமைய 50000 பேர் வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக செய்தியை கசியவிடுகின்றது. 50000 பேர் புலிகளுக்கு உதவியிருப்பதாக, இதற்கு முன் ஒரு செய்தியையும் கூட வெளியிட்டது.

 

பேரினவாதம் தங்கள் போர்க்குற்றங்களை மூடிமறைக்க, அதற்கு ஆதாரமான மனிதர்களை இல்லாதாக்க திட்டமிட்டு செயல்படுகின்றது. தம்மை அடையாளம் காட்டக்கூடிய அனைவருக்கும், புலி முத்திரை குத்தியும் இரகசியமாக கொன்று விடவும், சிறையில் தள்ளிவிடவும் முனைகின்றது.

 

இப்படி வன்னி வதைமுகாமில் நாலு விபரம் தெரிந்தவர்கள் முதல் கல்வி அறிவு பெற்றவர்கள் அனைவரையும் புலியாக முத்திரை குத்தி வருகின்றது. இப்படி 50000 பேரை புலியாக முத்திரை குத்தி இனக்களையெடுப்பபை நடத்தி வருகின்றது. இப்படி பலரை தனிமைப்படுத்தி சிறைவைக்கவும், படுகொலை செய்யவும் தொடங்கியுள்ளது. 

 

இதற்கமைய 50000 பேர் தப்பி விட்டார்கள் என்று கதை மூலம், மக்கள் உயிருடன் காணாமல் போதல் என்பதை, தப்பியோடிவிட்டதாக கணக்கு காட்டத் தொடங்கியுள்ளது.

 

புலிகளின் தப்பிப்பிழைத்த பல முக்கியமானவர்கள் அரச வதைமுகாமில் வைத்து கைதான பின், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. இலங்கையின் சட்டம் மற்றும் நிதி விசாரணைக்குள் அவர்கள் இல்லை. சட்டவிரோதமாக மகிந்தாவின் பாசிச குண்டர்களாக செயல்படும் அடியாட் கும்பல்கள் நடத்தும் வதைமுகாங்களில் வைத்து, சித்திரவதையூடாக படுகொலை செய்யப்படுகின்றனர்.

 

இப்படி ஆயிரக்கணக்கில் கைதானவர்கள் எங்கே எப்படி எந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர் என்ற விபரம், இந்த பாசிச அரசின் சட்டத்துக்கு கூட தெரியாத வண்ணம் கொல்லப்படுகின்றனர். அதாவது அவர்களை இனம்தெரியாத பாசிச வதைமுகாங்களில் அடைத்து வைத்து, படுகொலை செய்யப்படுகின்றனர்.

 

இப்படி மக்களுக்கு எதிரான சட்டவிரோதமான ஆட்சியை, பாசிச படுகொலை அரசியல் மூலம் பேரினவாதம் அரங்கேற்றுகின்றது. அப்பாவி மக்களை அகதிகளின் போர்வையில் அடைத்து வைத்துள்ள இந்த அரசு தான், இதில் ஒரு பகுதியை இனப்படுகொலையும் செய்கின்றது. இதற்கமைய 50000 பேரை இனச்சுத்திகரிப்பு செய்துவிடவும், மிகுதியானவர்களை இராணுவ மற்றும் கூலி கும்பலின் கண்காணிப்பின் கீழ் மீள குடியேற்றி, உலகுக்கு வேஷம் போட்டுக் காட்ட முனைகின்றது.

 

ஒரு இனம் இனமாகக் கூட தன்னை அடையாளப்படுத்த முடியாத வண்ணம், இனவழிப்பையும் இனச் சிதைவையும் பேரினவாத பாசிசம் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றது. இதுதான் இன்று இலங்கையில் நடக்கின்றது.  

 

பி.இரயாகரன்
07.08.2009