Language Selection

புதிய ஜனநாயகம் 2009

தமிழகத்தில் ஏறத்தாழ 3 லட்சத்து 90 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் இயங்கிவரும் நிலையில், 2011க்குள் மேலும் ஒரு லட்சம் சுயஉதவிக் குழுக்களைக் கட்டியமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, விவசாயிகளுக்கென 10,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார், நிதியமைச்சர் அன்பழகன்.

 

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் இலட்சக்கணக்கில் பல்கிப் பெருகி வருகின்றன. 1990களில் 500 சுயஉதவிக் குழுக்கள் மட்டுமே இருந்த நம் நாட்டில், நபார்டு வங்கியின் கணக்குப்படி 2006ஆம் ஆண்டின் இறுதிக்குள் 33.7 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாடு முழுவதுமுள்ள சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டிவிடும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

பெண்களின் தற்சார்பு நிலை, வறுமை ஒழிப்பு, அதிகாரப் பரவல் என்ற சொல்லடுக்குகளுடன் கட்டியமைக்கப்படும் சுயஉதவிக் குழுக்களின் மூலம் கிராமப்புறச் சந்தையை பன்னாட்டு ஏகபோக முதலாளிகளும் இந்நாட்டு தரகு முதலாளிகளும் கைப்பற்றி மேலாதிக்கம் செய்யும் சதி வேகமாக அரங்கேறி வருகிறது. உள்நாட்டு சிறு தொழில்களை நசுக்கி நகர்ப்புறச் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவரும் பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக முதலாளிகள், சிதறலாகவும் வட்டார அளவிலும் உள்ள கிராமப்புற சந்தையையும் கச்சாப் பொருட்களையும் கைப்பற்றிக் கொள்ளவும், நுகர்பொருள் கடன் திட்டங்களை கிராமப்புற அடித்தட்டு மக்களிடம் விற்று கொள்ளை லாபமீட்டவும்தான் அரசும் தன்னார்வ நிறுவனங்களும் சுயஉதவிக் குழுக்களை இலட்சக்கணக்கில் உருவாக்கி வருகின்றன. இந்த உண்மையை ஏகபோக முதலாளிகளின் பைபிளாகச் சித்தரிக்கப்படும் ""எண்ணிக்கையில் மிகுதியாக உள்ள அடித்தட்டு மக்களிடம் வர்த்தகம் செய்வது எப்படி?'' (Business at bottom of pyramid) என்ற, சி.பிரகலாத் என்பவர் எழுதிய நூல் தெளிவாக்கிக் காட்டுகிறது.

 

வங்கிகளுக்கும் சுயஉதவிக் குழுக்களுக்குமிடையே ""கொடுக்கல்வாங்கல்'' விவகாரங்களை முறைப்படுத்தி மேற்கொள்ளும் தன்னார்வக் குழுக்களும் அவற்றின் சார்பு நிறுவனங்களும் நுண்நிதி நிறுவனங்கள் என்றழைக்கப்படுகின்றன. இத்தகைய நுண்நிதி நிறுவனங்களையும் சுயஉதவிக் குழுக்களையும் சோதனை முறையில் கட்டியமைத்து ஆய்வுகளும் களப் பரிசோதனைகளும் செய்வதற்காக ஐ.நா. மன்றத்தின் துணை அமைப்புகளும், ஏகாதிபத்திய அரசுகளும், இந்திய அரசு நிறுவனங்களும், பெரும் அறக்கட்டளைகளும் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்தன. பல்வேறு வடிவங்களில் சுயஉதவிக் குழுக்களைக் கட்டியமைத்து பராமரிப்பது, கடன் கொடுத்து தொகை முறையாக திருப்பிச் செலுத்தப்படுகிறதா என்று சோதித்துப் பார்ப்பது, என்னென்ன முறைகளில் கிராமப்புறச் சந்தையை அடைவது என்பதைப் பரிசீலிப்பது ஆகியன இந்த ஆய்வுகளின் மையமான நோக்கமாக இருந்தது. வெறும் பத்து சதவீத மேட்டுக்குடி நடுத்தர வர்க்கத்தினரை மட்டுமே வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்த பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளுக்கு எஞ்சியுள்ள கிராமப்புற சிறு நகர ஏழைகளையும் தமது வாடிக்கையாளர்களாக மாற்றி சந்தையை விரிவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் வாய்ப்பையும் இந்த ஆய்வுகள் நிரூபித்துக் காட்டின. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உருவானதுதான் பிரகலாத் எழுதிய நூல்.

 

இந்நூலும் ஆய்வுகளும் அடையாளம் காட்டிய கிராமப்புறச் சந்தைகளைக் கைப்பற்ற அரசு வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் களத்தில் இறங்கின. உள்ளூர் கமிசன் மண்டிகள் மற்றும் கந்துவட்டிக் கும்பல்களின் பிடியிலுள்ள கிராமப்புறக் கடன் சந்தையோ 22,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்தையைக் கைப்பற்ற, கந்துவட்டிக் கும்பலை விட ஒப்பீட்டளவில் குறைவான வட்டிக்குக் கடன் கொடுத்து அரசு வங்கிகள் கிராமப்புற அளவுக்கு தமது சேவையை விரிவுபடுத்தின. தன்னார்வக் குழுக்களின் மூலமாகவோ அல்லது நேரடியாக சுயஉதவிக் குழுக்களைத் தொடர்பு கொண்டோ கடன் திட்டங்களை வங்கிகள் விற்கத் தொடங்கின. இத்தகைய கடன் திட்டங்களுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. நகர்ப்புற நடுத்தர மேட்டுக்குடியினருக்குத் தரப்படும் நுகர்பொருள் கடன் மற்றும் தொழிலதிபர்களுக்குத் தரப்படும் கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தைவிட கிராமப்புற கடன் திட்டங்களின் வட்டி விகிதம் 3 மடங்கு அதிகமாகும்.

 

நகர்ப்புற வட்டித் தொழிலை விட கிராமப்புற வட்டித் தொழில் கொழுத்த இலாபம் அளிப்பதால், அரசு வங்கிகள் அடுத்தடுத்து இத்தொழிலில் இறங்க ஆரம்பித்தன. நகர்ப்புறங்களைப் போல வங்கிக் கிளையோ, அலுவலர்களோ, கட்டிடங்களோ இல்லாமல் அரசு வங்கிகள் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவே கிராமப்புற கடன் சந்தையில் கால் பதித்து விரிவடையத் தொடங்கின. சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள கடன் பெறாத ஒருவர், கடன் பெற்றவர்களைக் கண்காணித்து கடனைக் கட்டுமாறு நிர்பந்திப்பதாலும், தன்னார்வக் குழுக்கள் மேற்பார்வையிட்டு முறைப்படுத்துவதாலும், போட்டுள்ள முதலீடு உத்திரவாதமாகத் திரும்பக் கிடைப்பதாலும், இலாபம் உறுதி செய்யப்படுவதாலும் அரசு வங்கிகள் மட்டுமின்றி, ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.எஃப்.டி.சி, ஆக்சிஸ், ஏ.பி.என். அமரோ, சிட்டி பேங்க், ஐ.என்.ஜி. வைஸ்யா முதலான தனியார் வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியோ இன்னும் ஒருபடி மேலே போய், சென்னையில் ""நுண்நிதி மையம்'' என்ற ஆய்வு நிறுவனத்தை உருவாக்கி, சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு வடிவங்களிலான கடன் திட்டங்களைத் தயாரித்து வருகிறது.

 

ஏகாதிபத்திய உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, பாதுகாப்பானதாகவும் இலாபகரமானதாகவும் உள்ள நுண்நிதி நிறுவனங்களில் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்கள் அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. அதற்கேற்ப சுயஉதவிக் குழுக்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசு வங்கிகளுடன் போட்டா போட்டியில் இறங்கியுள்ளன.

 

ஆந்திராவைத் தலைமையகமாகக் கொண்டு 18 மாநிலங்களில் 36 லட்சம் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் இயங்கி வரும் ""எஸ்.கே.எஸ்.'' என்ற நுண்நிதி நிறுவனத்தில் அமெரிக்காவின் சீயுக்யா, யுனிடஸ் மற்றும் பிற ஏகபோக நிதி மூலதனக் கும்பல்கள் 366 கோடி ரூபாயை முதலீடாகப் போட்டுள்ளன. ""கேர்'' என்ற நுண்நிதி நிறுவனத்தில் லெகாட்டம், அவிஸ்கார் குட்வெல் ஆகிய ஏகபோக கும்பல்கள் ரூ.150 கோடியை முதலீடாகப் போட்டுள்ளன. தமிழகத்தில் 150 கிளைகளுடன் 24 மாவட்டங்களில் செயல்படும் ""கிராம விடியல்'' எனும் நுண் நிதி நிறுவனம் ரூ. 50 கோடியை ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களிடமிருந்து பெறப் போவதாக அறிவித்துள்ளது. ஆந்திராவில் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நுண் கடன் திட்டங்களில் ரூ.5000 கோடி முதலீடு செய்ய உலக வங்கி திட்டமிட்டுள்ளது. இதுவரை உலகளவில் ஏறத்தாழ ரூ.8000 கோடி அளவுக்கு நுண்நிதித் திட்டங்களில் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2015ஆம் ஆண்டில் இது 80,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

 

கிராம அளவிலான சுயஉதவிக் குழுக்களுக்கு ஊறுகாய், ஊதுபத்தி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் முதலான நுண்தொழில்களுக்குத் தொடக்கத்தில் கடன் கொடுத்து வந்த இந்நிதி நிறுவனங்கள், அத்தகைய பொருட்களுக்கு சந்தை இல்லாமல் போனதால் இப்போது சுயஉதவிக் குழுக்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் கடன், அன்றாட நுகர்பொருள் கடன் என்று பல்வேறு கவர்ச்சிகரமான கடன் திட்டங்களுடன் களத்தில் இறங்கியுள்ளன. இக்கடன் திட்டங்களைத் தனிப்பட்ட ஒரு குழு உறுப்பினர் வாங்க முடியவில்லை என்றால், ஒட்டுமொத்த குழுவுக்கென்றே வடிவமைக்கப்பட்ட குரூப் பாலிசி திட்டங்களும் உள்ளன. இத்தகைய கடன் திட்டங்களை விளம்பரப்படுத்தி பரவலாக்குவதுதான் சுயஉதவிக் குழுக்களின் மையமான வேலையாக மாறியுள்ளது.

 

இன்னொருபுறம், ""ஸ்பந்தனா'' என்ற நுண்நிதி நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுயஉதவிக் குழுக்களில் பெரும்பாலோர் ஆடுமாடு வளர்ப்பவர்க ளாக இருப்பதால், அந்நுண்நிதி நிறுவனம் தனது சுயஉதவிக் குழுக்களிடம் ""கோத்ரெஜ்'' கம்பெனியின் தீவனங்களை வாங்க நிர்பந்தித்தது, கமிசன் அடிப்படை யில் விற்று கொள்ளை லாபமீட்டுகிறது. எஸ்.கே.எஸ். நுண்நிதி நிறுவனத்தின் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளோரில் பல்லாயிரக்கணக்கானோர் கிராமங்களில் மளிகை கடை வைத்துப் பிழைக்கின்றனர். எஸ்.கே.எஸ். நுண்நிதி நிறுவனம் இந்த மளிகைக் கடைகளை ""மெட்ரோ'' என்ற பன்னாட்டு ஏகபோக தொடர் பேரங்காடியுடன் பிணைத்து விட்டுள்ளது. இனி, இந்த மளிகைக் கடைகள் தங்களுக்குத் தேவையான பல சரக்குகளை மெட்ரோ நிறுவனத்திடம்தான் கொள்முதல் செய்ய முடியும். இதை ஏற்க மறுத்தால் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக நீடிப்பதே பிரச்சினையாகி விடும்.

 

இப்படி சுயஉதவிக் குழுக்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கிராமப்புற சந்தையைக் கைப்பற்றி வரும் உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோக முதலாளிகள், சுயஉதவிக் குழுக்களைத் தமது விற்பனைப் பிரதிநிதிகளாக மாற்றி விட்டனர். பன்னாட்டு ஏகபோக யுனிலீவர் நிறுவனம், சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு 14 கோடி மக்களிடம் தனது நுகர்பொருட்களை விற்பனை செய்து வருவதாக பெருமையுடன் அறிவிக்கிறது. நுண்நிதிக்கான கடன் அட்டை, பங்குகள், பரஸ்பர நிதிகள், பந்தய சூதாட்ட ஒப்பந்தங்கள், ஆயுள் மற்றும் பொதுக்காப்பீடு முதலான திட்டங்களை குஜராத்தின் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக அனில் அம்பானியின் ""ரிலையன்ஸ் மணி'' நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

 

சுயஉதவிக் குழுக்களை விற்பனைப் பிரதிநிதிகளாக மாற்றியதோடு, கிராமப்புற கச்சாப் பொருட்களை மலிவு விலையில் கொள்முதல் செய்து தரும் தரகர்களாகவும் ஏகபோக முதலாளிகள் மாற்றியமைத்து வருகின்றனர். டாபர் என்ற தரகுப் பெரு முதலாளித்துவ நிறுவனம், 2007ஆம் ஆண்டு முதலாக சுயஉதவிக் குழுக்களைப் பயன்படுத்தி, 610 கிராம கொள்முதல் மையங்களை உருவாக்கி, தமது நிறுவனத்துக்குத் தேவையான விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனமும் ஜெர்சி நிறுவனமும் சுயஉதவிக் குழுக்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பால் கொள்முதல் நிலையங்களை உருவாக்கி வருகின்றன. இவற்றின் மூலம் இந்நிறுவனங்கள் கொள்முதல் தொடங்கி விற்பனை வரை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துபவையாக வளர்ந்துள்ளன.

 

இவை மட்டுமின்றி, ஒட்டு மொத்த கிராமப்புற விவசாயத்தையும் கைப்பற்றி ஆதிக்கம் செய்ய உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்கள் சுயஉதவிக் குழுக்களைக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ""மைராடா'' என்ற தன்னார்வ நிறுவனம், தனது கட்டுப்பாட்டில் உள்ள சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஐ.டி.சி. நிறுவனத்திற்கு ""ரோஸ்மெரி'' என்ற பணப்பயிரை ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையில் விளைவித்துத் தருகிறது. இதேபோல, அப்பாசி காட்டன், தென்னிந்திய மில் முதலாளிகளின் கூட்டமைப்பு ஆகியன சுயஉதவிக் குழுக்களின் மூலம் பருத்தியை ஒப்பந்த விவசாய அடிப்படையில் உற்பத்தி செய்யக் கிளம்பியுள்ளன.

 

சுருக்கமாகச் சொன்னால், நுண்கடன் நுண்தொழில் மூலம் கிராமப்புற ஏழ்மையை ஒழிக்க உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுயஉதவிக் குழுக்கள், இப்போது உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் விற்பனைப் பிரதிநிதிகளாகவும் தரகர்களாகவும் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்திற்கான கருவிகளாக அவை வடிவமைக்கப்பட்டு விட்டன. விவசாயம், உற்பத்தி, கொள்முதல் தொடங்கி கிராமப்புற சந்தை வரை ஏகபோக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி, கச்சாப் பொருட்களிலிருந்து ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே கைப்பற்றி சூறையாடுவதற்கான சாதனமாக அவை மாற்றப்பட்டு விட்டன.

 

இப்பகற்கொள்ளைக்கும் பேரழிவுக்கும் விசுவாச சேவை செய்து வரும் ஆட்சியாளர்கள், போட்டி போட்டுக் கொண்டு சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி வருவதோடு, கோடிக்கணக்கில் அவற்றுக்காக மானியங்களை ஒதுக்கி வருகின்றனர். மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வை மழுங்கடித்து, சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினராவதன் மூலம் நாம் எப்படி யாவது முன்னேறி விடலாம் என்ற குறுகிய சுயநல பிழைப்பு வாதச் சிந்தனையை ஊட்டி வளர்க்கின்றனர்.

 

போதாக்குறைக்கு இத்தகைய சுயஉதவிக் குழுக்கள் ஆளும் கட்சியின் ஓட்டு வங்கிகளாகவும் சீரழிக்கப்பட்டு விட்டன. சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களது குடும்பம் மற்றும் சாதிக்காரர்களிடம் பிரச்சாரம் செய்து ஓட்டுகளை உறுதிப்படுத்துவதற்காக பேரம் பேசும் இழிந்த நிலைக்கு சுயஉதவிக் குழுக்கள் பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்க ளின் உண்மையான நோக்கத்தையும் செயல்பாட்டையும் மூடி மறைக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் நேரத்தில் இக்குழுக்கள் ஆளும் கட்சியின் ஓட்டு வங்கிகளாக மாற்றப்படுவதை மட்டும் எதிர்த்து கூச்சலிடுகின்றன.

 

மறுகாலனியத் தாக்குதலால் பேரழிவை நோக்கி கிராமப் புறங்களும் விவசாயமும் தள்ளப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகம் முதல் கிராமப்புற சந்தை வரை ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கமும் சூறையாடலும் கேள்வி முறையின்றித் தொடர்கிறது. இப்பகற்கொள்ளையையும் ஆக்கிரமிப்பையும் மூடிமறைத்து வஞ்சக வலை விரிக்கும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான தன்னார்வ நிறுவனங்களையும் ஆட்சியாளர்களின் பசப்பல்களையும் அம்பலப்படுத்தி முறியடிப்பதும், மறுகாலனிய தாக்குதலுக்கு எதிராகப் போராடுவதும் உழைக்கும் மக்களின் இன்றைய உடனடிக் கடமையாக முன்நிற்கிறது.

· சுடர்