பசி, பட்டினி ஏதுமில்லாத செல்வச் செழிப்பு மிக்க நாடு என்றும், குடிசைகளே இல்லாத நாடு என்றும் அமெரிக்காவைச் சொல்வார்கள். இங்கிருக்கும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர் களைக் கேளுங்கள்; ""அந்த சொர்க்க பூமிக்கு வேலைக்குச் செல்வதுதான் தங்கள் வாழ்வின் லட்சியம்'' என்பார்கள்.
இந்தக் கனவு தேசத்தின் மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா. எண்ணிலடங்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கும் இம்மாகாணந்தான் தமிழ்நாட்டுக் கணிப்பொறியாளர்கள் பலருக்கும் புனிதத்தலம். அமெரிக்காவின் செல்வச் செழிப்புக்கு இம்மாகாணத்தையே சான்றாகக் கூறுவர். ஆனால் இன்று அமெரிக்காவை மட்டுமல்ல; உலக முதலாளித்துவத்தையே பிடித்தாட்டும் பொருளாதார நெருக்கடி, சொகுசான அமெரிக்கக் கனவைக் கலைத்துப் போட்ட பிறகு; அமெரிக்க மக்களின் அவல நிலைக்குச் சாட்சியமாக இருப்பதும் இதே கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரான சாக்ரமண்டோதான்.
சென்ற ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்த, பொருளாதார வீழ்ச்சியால் வேலை இழந்த அமெரிக்கர்கள் பலரால் வீட்டுக் கடன்களைக் கட்ட முடியவில்லை. வாங்கிய கடனுக்கு, வங்கியிடம் வீட்டைப் பறிகொடுத்த இவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர். வேலையும் இல்லை, வீடும் இல்லை, கண் மூடித் திறக்கும் நேரத்தில் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்ட இவர்களை அமெரிக்க ஊடகங்கள் "புது ஏழைகள்' என அழைக்கின்றன. பகல் முழுவதும் நகரில் ஏதாவது வேலை கிடைக்குமா எனத் தேடித்திரிந்தாலும் இரவில் தூங்க இடம் வேண்டுமே? பெரும் முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை ("பெயில் அவுட் பேக்கேஜ்') அள்ளிக் கொடுத்துக் காப்பாற்றும் அரசு, தங்களைக் காக்க நிச்சயம் வராது என்பதை உணர்ந்த அவர்கள், தாங்களாகவே தங்களுக்குத் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளத் துவங்கினர். தார்ப்பாய், பிளாஸ்டிக் உறைகள், அல்லது பழைய துணிகளை வைத்துக் கூடாரங்கள் கட்டி அவற்றில் வசிக்க ஆரம்பித்தனர்.
சாக்ரமண்டோ நகரில் அவ்வாறு உருவான கூடாரக் குடியிருப்பு ஒன்று, ரயில் பாதையை ஒட்டி குப்பை போடும் திடலில் உள்ளது. இதைத்தவிர அந்நகரில் ஓடும் சாக்ரமண்டோ ஆற்றின் கரையை ஒட்டி ஒப்ரா எனும் பேரில் உருவாகி இருக்கும் குடிசைப்பகுதி, நூற்றுக்கணக்கான கூடாரங்களைக் கொண்டுள்ளது. சுகாதாரமற்ற இக்குடியிருப்புகளில் குடிநீரோ, கழிப்பறை வசதிகளோ கிடையாது. மனநிலை சரியில்லாதவர்களும், சொந்த வீடு இல்லாதவர்களும் சுமார் 200 பேர்கள் வரை அப் பகுதிகளில் ஏற்கெனவே குடியிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கூடாரங்களில் வாழும் நிலை, வேலை இழந்தோருக்கு ஏற்பட்டிருக்கிறது.
தொலைக்காட்சிகள் இக்குடியிருப்புகளின் அவலத்தை படம் பிடித்து ஒளிபரப்பின. உடனே அம்மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் முன்னாள் ஹாலிவுட் கதாநாயகன் அர்னால்டு ஸ்வாஷ்நேக்கர், மக்களை அங்கிருந்து பெயர்த்தெடுத்து வந்து அரசு பொருட்காட்சிகள் நடைபெறும் சாக்ரமாண்டோ மாநாட்டு மையத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்தார். போலீசார் சாக்ரமண்டோவின் கூடாரக் குடியிருப்புகளைத் தடை செய்து, அங்குள்ளவர்கள் வெளியேறி விடவேண்டும் என்றும் மீறி அங்கே தங்கினால் கைது செய்வோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 4 வாரங்களில் இவர்களின் கூடாரங்கள் அகற்றப்பட்டு, தனியார்களுக்குச் சொந்தமான அப்பகுதி வேலியிடப்பட்டு, பிறர் நுழையத் தடை விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அர்னால்டு ஸ்வாஷ்நேக்கர், 5 கோடி ரூபாயை அவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் உருவாக்க ஒதுக்கினார். வீடற்றோருக்கு பொருளாதார இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என்று ஒபாமாவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பினார். ஒபாமாவோ "அமெரிக்காவில் எந்தக் குழந்தை வீடில்லாமல் இருந்தாலும் அது என் இதயத்தையே பிளக்கிறது' என வசனம் பேசினார். வீதிக்கு வந்துவிட்ட உழைக்கும் மக்களுக்கு வெறும் 5 கோடியை ஒதுக்கும் இதே அமெரிக்க அரசு, திவாலாகிப் போன வங்கி முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வாரி வழங்குகிறது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலாகாமல் தடுக்க துடித்தெழுந்து செயலாற்றுகிறது.
சாக்ரமாண்டோ நகரத்தில் மட்டுமல்ல, அனைத்து அமெரிக்க நகரங்களிலும் திடீரென முளைத்து வரும் கூடாரங்கள் அந்நாட்டு மக்களின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஃப்ரெஸ்னோ நகராட்சியின் அதிகாரிகள் தரும் தகவல்படி, அந்நகரக் கடைவீதிகளை ஒட்டி மூன்று மிகப்பெரிய கூடாரக் குடியிருப்புகளும் நெடுஞ்சாலைகளை ஒட்டியவாறு சிறிய கூடாரக் குடியிருப்புகளும் உருவாகியுள்ளன. அந்நகரில் வேலைநிழந்து, வீடிழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்ட மக்கள்தொகையோ இரண்டாயிரம். இக்குடியிருப்புகளில் வசிப்போர்கள் எவ்வித வசதியுமின்றி மன அழுத்தத்தில் வாழ்கின்றனர். பணம் ஏதும் அவர்களிடம் இல்லை. எனவே அவர்களிடம் விபச்சாரமும் போதைப்பொருள்களும் கூடவே வன்முறையும் பெருகி உள்ளன.
சியாட்டில், வாஷிங்டன் நகரங்களில் வேலை இழந்தோரும், வீடிழந்தோரும் சர்ச்சுகளின் பின்புறத்தில் கூடாரம் அடித்து வசிக்கின்றனர். டென்னசி நகரில் உள்ள நாஷ்வில்லேயில் கடைவீ திப் பகுதியை ஒட்டி சுமார் 30 கூடாரமுகாம்கள் பரவலாய் முளைத்துள்ளன. நெவேடா மாகாணத்தின் ரினோ நகரின் அதிகாரிகள், 160 குடியிருப்போர்கள் அடங்கிய குடியிருப்பை 2008இல் அகற்றினார்கள். அவர்களில் 60 பேருக்கு அந்நகரின் நடைபாதைகள்தான் இப்போது படுக்கைகளாய் உதவுகின்றன. நடைபாதைகள் அடைபடுவதால் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல இடமின்றி தங்கள் வியாபாரம் பெருமளவு சரிந்துவிட்டதென, உள்ளூர் கடைக்காரர்கள் சொல்கின்றனர்.
சில தன்னார்வ நிறுவனங்கள் இம்மக்களுக்கு சில அடிப்படை வசதிகளைச் செய்து தர முயல்கின்றன. சாக்ரமண்டோ முகாமில் உள்ளோருக்கு உணவையும், குளிக்க வசதியையும் ஒரு நிறுவனம் செய்து தருகிறது. இந்நிறுவனங்களிடம் இருப்பிடம் கேட்டும் உணவு கேட்டும் வரும் ஆதரவற்ற மக்களின் எண்ணிக்கை சில மாதங்களிலேயே இருமடங்காகி உள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி பலதரப்பட்ட மக்களை முகாம்களுக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது. சில மாதங்கள் முன்பு வரை வேலைபார்த்து வந்த லாரி டிரைவர்களும், எலெக்ட்ரிசியன்களும், போதை , மனநோயாளிகளோடும் அடிமைகளோடும் ஃப்ரெஸ்னோ முகாமில் ஒன்றாக வாழ நேர்ந்துள்ளது.
இவர்களுக்கு உறங்க இடம் கிடைத்தாலும் உணவுக்கு தட்டழிய வேண்டியுள்ளது. ரினோ நகரின் முகாமில் வசிக்கும் டாம்மி, இது பற்றிக் கூறுகையில் ""வேண்டாம் எனத் தெருவில் வீசி எறியப்படும் பண்டங்களைத்தான் நாங்கள் தின்கிறோம். சொல்லக் கூச்சமாகத்தான் உள்ளது. ஆனால் கொஞ்சக் காலத்துக்கு அதுதான் ஒரே வழி'' என்கிறார்.
இம்முகாம்களில் நாம் காணும் காட்சிகள் அமெரிக்காவிலா இப்படி என நம்மைச் சொல்ல வைக்கிறது, முப்பது வயதைத் தாண்டிய அந்தத் தந்தை, மார்க்கெட்டிங்கில் பட்டம் பெற்றவர். தாயோ தகவல் தொழில்நுட்பத் துறையில் கல்வி கற்றவர். இவர்களுக்கு எட்டு, ஐந்து, இரண்டு வயதுகளில் மூன்று குழந்தை கள். கடந்த 9 மாதங்களாக இந்தப் பெற்றோருக்கு வேலை இல்லை, வீட்டு வாடகை தர இயலாததால் குடியிருந்த வீட்டிலிருந்தும் துரத்தப்பட்டனர். கையில் காசில்லாததால் குழந்தைகளுக்கு உணவு ஊட்ட வழியின்றி அவர்கள் முகாம், முகாமாய் அலைந்து கொண்டுள்ளனர். வேலையிழந்து, வீடிழந்த இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் துயர வாழ்வுக்கு இவர்கள் ஒரு உதாரணம்.
இன்னொருபுறம், ஒரு குழந்தை பட்டினியாலும், குளிரில் நடுங்கியபடி உறங்க இடமும் இன்றி உள்ளது. அக்குழந்தையின் தாய் சில மாதங்களுக்கு முன் வேலையிலிருந்து நீக்கப்பட்டாள், மீண்டும் வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டை இழந்தாள். உள்ளூர் முகாம்கள் நிரம்பி விட்டதால் உறைய வைக்கும் கடும் குளிரில் தலைக்கு மேலே கூரையின்றி குழந்தை÷ யாடு உறங்க வேண்டிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். இவை எல்லாம் ஏதோ கற்பனைக் கதைகள் அல்ல, அமெரிக்க நகரங்களின் தற்காலிக முகாம்களில் இது போன்ற பல கதைகள் உள்ளன. பல பெண்களும் அவர்களின் குழந்தைகளும் ஒதுக்கப்பட்டவர்களாக, உறைபனிக்குளிரில் அமெரிக்க வீதி எங்கும் வீசியடிக்கப்பட்டுள்ளனர்.
இப்படிக் கூடாரங்களில் வாழ்பவர்களைப் போன்று, கார்களில் வாழும் இன்னொரு சமூகமும் அமெரிக்காவில் புதிதாக உருவாகியுள்ளது. நண்பர்கள், உறவினர்கள் தயவில் உறங்க இடம் கிட்டாதவர்கள், அதே சமயம் கூடாரங்களுக்குச் செல்ல மனமில்லாதவர்கள், தங்களுடைய கார்களில் வாழ்க்கை நடத்தத் துவங்கி விட்டனர். இரவு நேர வண்டிநிறுத்தங்களில் காரை நிறுத்தி, அதன் உள்ளேயே தூங்குகின்றனர். இவர்களில் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்துவிட்டதென்றால், இரவு தங்களது நிறுத்தத்தில் தங்குபவர்களுக்கு காலைக் கடன்களை முடிக்கவும், குளிக்கவும் ஏற்பாடு செய்வதாக அம்முதலாளிகள் விளம்பரம் செய்யுமளவிற்கு அவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, 15 லட்சம் அமெரிக்கக் குழந்தைகள் நிம்மதியான உறக்கத்தை இழந்துள்ளன. வீடிழந்த மக்களில் 34% பேருக்கு சிறு குழந்தைகள் உள்ளன. அக்குழந்தைகளில் 42 சதவீதம் பேர் 6 வயதுக்கும் கீழானவர்கள். எந்த உதவியுமின்றி, உறைபனிக்கும் கீழான குளிரில் பசியோடும் உறங்க நல்ல இடமில்லாமலும் இருக்கும் ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுக்களைக் கற்பனை செய்து பாருங்கள். வீடு இழந்தவர்கள் குறித்த தேசிய மைய அறிக்கையின்படி, உறங்க வீடில்லாத குழந்தைகளின் எண்ணிக்கையோ லூசியானாவில் 2,04,053 , கலிபோர்னியாவில் 2,92,624 , டெக்சாசில் 3,37,105. தொடரும் வேலையிழப்புகளும், வீட்டுக்கடன் பிரச்சினையும் இவ்வெண்ணிக்கையை மேலும் கூட்டக்கூடும்.
முதலாளித்துவம் மக்களுக்கு இழைக்கும் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராட அமெரிக்காவில் உழைப்பாளருக்கென ஒரு புரட்சிகரக் கட்சி இல்லை. இவர்களை ஒருங்கிணைக்க புரட்சிகர சக்திகள் எதுவும் இல்லாததால் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இன்று அமெரிக்க உழைப்பாளர்கள் உள்ளனர். ஆனால், மக்கள் இப்படியே கூடாரங்களுக்குள் முடங்கிப் போய்விட மாட்டார்கள்; திருப்பி அடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
· கதிர்