Language Selection

சயந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2004 நவம்பர் 23, அமைதிபேச்சுக்காலம். புலிகள் மீளவும் யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டுமென்கின்ற ஆசைகள் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்த காலம். ஐந்து நாளில் வரப்போகின்ற மாவீரர் தின உரையில் தலைவர் யுத்தநிறுத்தத்தில் இருந்து விலகுகிறோம் என அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்த காலம்.

அன்று எழுதிய பதிவு இது. ஒரு புலம்பெயர்ந்தவனாக யுத்தத்தை தீர்மானிக்கும் சக்தியாக நானும் புலம்பெயர்ந்தவர்களும் இருக்க முடியாது என்பதில் அன்றும் சரி இன்றும்சரி நான் தெளிவுடன் இருந்ததை மீளவும் எனக்கு நினைவு படுத்துகிறது இப்பதிவு. இந்த நிலைப்பாட்டில் புலிகள் பெற்ற வெற்றி அல்லது தோல்வி எதுவும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதுவும் மகிழ்ச்சிதான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு yarl.net தந்த வலைப்பதிவு வசதியூடாக எழுதிய பதிவும் சில பின்னூட்டங்களும் இவை. யுத்த தோல்விக்குப்பிறகு காற்றடிக்கிற பக்கம் சாய்கின்ற கதை கதைப்பவர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன். ஏனெனில் அவர்கள் புதியவர்கள்.

குரல்தரவல்ல அதிகாரிகள்
2004 நவம்பர் 23

ஏலவே எழுத நினைத்திருந்த விடயம் இது. சேயோன் கூட அவ்வப்போது புறுபுறுத்துக் கொண்டிருந்தான் இது பற்றி.

புலம் பெயர் நாடுகளில் தங்களைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கிறவர்களுக்கு தங்களது புகழ் குறித்த உள்நோக்கம் இருக்கிறதா?

ஆம் என்கிறான் சேயோன். இப்போது நானும் கொஞ்சமாய் தலையாட்டுகிறேன் அதற்கு உதாரணங்களை பார்த்த பின்பு!

முதலில் புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்கள் அனைவருமே யுத்தத்தின் கோரத்தால் மன வலியோடு மண்ணை விட்டுப் போகவில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.

முக்கால் வாசிப் பேர் தமது தனிப்பட்ட வாழ்வின் தர மேம்பாட்டுக்காய் சென்றவர்கள். அதில் வெற்றியும் கண்டவர்கள். பின்னர் தமது உறவுகளை ஒவ்வொன்றாக அழைக்க அவர்களுக்கும் வெளிநாடுகளின் அதிகரித்த வாழ்க்கைத் தரத்தை மனதார ஏற்றுக்கொண்டு அடுத்தவர்களை அழைத்துக் கொண்டவர்கள். இதுவே உண்மை!

இவ்வாறு சென்றவர்களின் பொருளாதாரம் விடுதலைப் போரிற்கு மிக்க பக்க பலமாய் அமைந்ததென்பதையும் யாரும் மறுக்க முடியாது!

0 0 0

அண்மைக்காலமாக என் வயதொத்த பல வெளிநாட்டு இளைஞர்கள் என்னோடு பேசும் போதும் எங்காவது எழுதும் போதும் நடந்து கொள்கிற முறையைப் பார்க்கின்ற போது இதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

அவுஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் என்னோடு கொழும்பில் படித்த என் வயதொத்த இளைஞன் கனடாவில் இருந்து எனக்கு சொன்னார்!

‘உங்கை ஆராவது இயக்கத்துக்கு எதிரா கதைச்சாலோ எழுதினாலோ அவங்களிலை ஒரு நோட்டம் வை. எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும்.”

அவருக்கு நான் சொன்ன பதில்!

‘நீ எல்லாம் ஊரிலை இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் போது வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே கிடந்த ஆளெல்லோ.. ”

எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும் என்ற அந்த வார்த்தைகள் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?

தானும் ஒரு புலி என்று உணர்த்துகிறாரா?

தனக்கும் புலிகளுக்கும் இடையில் உயர் மட்டத் தொடர்பேதும் இருப்பது போல காட்டிக் கொள்ள ஆசைப் படுகிறாரா?

அவ்வாறாயின் அவர் தனது தனிப்புகழ் தொடர்பாக கவனமெடுக்கிறாரா?

நண்பன் சேயோன் அவருக்கு அருகிலேயே இருப்பவன். இப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் கனேடிய பொறுப்பாளர் என்றும் ஒட்டாவா பொறுப்பாளர் என்றும் தான் குறிப்பிடுகிறான்.

புலம் பெயர்ந்த பின்னர் எப்படி ஒரு இரவில் இவர்களால் புலிகளின் குரல் தர வல்ல அதிகாரிகள் ஆகிவிட முடிகிறது?

புலத்தில் சண்டை நடக்காது என்ற தைரியமா?

இன்னுமொருவரை மிக அண்மையில் அறிந்து கொண்டேன். அவரது கருத்துக்களை படித்தறிந்த பின்னர் அவரைச் சுவிஸ் பொறுப்பாளர் ஆக்கலாம் என்று சேயோன் சொல்லியிருக்கிறான்.

அந்த இளைஞருக்கு ஈழப் பிரச்சனையில் தனது தர்க்க ரீதியான வாதத் திறமையை முழுமையாக காட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் போலும். வெறும் கற்றுக்குட்டித் தனமான அவரது கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப் படக் கூடிய அளவிற்கு வளர்ச்சியற்றிருந்தன.

அவர் எழுதுகிறார்!

கருணா போன்ற ஒருவரை வளர்த்து விட்டது தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் தானாம். புலத் தமிழர்கள் இல்லையாம்

புலிகள் தவிர்ந்த மாற்று இயக்கங்களை செயற்பட தாயக தமிழர்கள் அனுமதித்திருக்கிறார்களாம். புலத் தமிழர்கள் அப்படி அனுமதிக்க மாட்டார்களாம்

சுவிஸில் துரோகிகள் எவரும் இல்லையாம் என்றவர் இன்னும் ஒரு படி மேலே போய் அப்படி யாராவது இருந்திருந்தால் அவர்களை உயிருடன் விட்டு வைத்திருக்க மாட்டோம் என்கிறார்.

எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. வடிவேலு பாணியில் சின்னப் புள்ளைத் தனமால்ல இருக்கு என்று சொல்ல வேண்டியது தான்.

உச்சக் கட்டம் இது தான்.

வேறொருவர், சுவிஸ் காரருக்கு எதிரான கருத்தொன்றை முன்வைக்க இவர் எழுதினார் பாருங்க ஒரு வரி!

‘இதை நான் சேர்க்க வேண்டிய இடத்திலை சேர்க்கிறன்.”

அந்த சேர்க்க வேண்டிய இடம் எது என்பது உங்களுக்கு தெரியும். அந்தக் கருத்தின் மூலம் தனக்கும் அந்த சேர்க்க வேண்டிய இடத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதை நபர் உணர்த்த விரும்புகிறாரா? அப்படி விரும்பின் அதற்கான காரணம் என்ன? இதற்கு சேயோன் சொல்கிற பதில்

புகழ்!

சுவிஸ் நண்பர் மேலும் தொடர்கிறார். தான் தாயகத்தில் இருந்திருந்தால் இன்று மாவீரர் ஆகி விட்டிருப்பாராம்.

இங்கே பூச்சுத்தத் தொடங்கும் போது தான் எனக்கு கோபம் வருகிறது. இந்த கோபம் எனக்கு சிறு வயதிலேயே வந்தது. காசியானந்தன் எழுதிய ஒரு பாடல் வரிகள் புலத்திலிருந்து பாடுவது போல இருக்கும். அதில் நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல்லை என்கிற ஒரு வரி வரும்.

அவர்களை யார் வர வேண்டாம் என்றது என்று அப்பவே யோசித்திருக்கிறேன். (உண்மையிலேயே காசியானந்தனின் கடவுச் சீட்டினை இந்திய அரசு பறிமுதல் செய்து வைத்திருப்பதாய் யாரோ சொன்னார்கள்.)

தாயகத்தில் இருந்திருந்தால் மாவீரர் ஆகி விட்டிருப்பேன் என்றால் இன்னமும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை என்று தான் நான் சொல்லுவேன்.

ஒன்றை உரத்துச் சொல்ல ஆசைப் படுகிறேன். தேசத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பதனிலும் பார்க்க நான் உட்பட எங்களுக்கு எமது தனி வாழ்வின் மேம்பாடு முன்னிலையில் நின்றதனால் நாம் வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அதுவே உண்மை.

வந்துட்டோமில்ல! அப்புறம் என்ன? அங்கையிருந்தால் போராளியாகி இருப்பேன்.. மாவீரர் ஆகியிருப்பேன் என்கிற கதைச் சுத்தல்கள்!

இந்தச் சமாதானத்திற்கான காலத்தை அரசு புலிகளை பலவீனப்படுத்த பயன் படுத்துகிறது. புலிகளை இறுக்கமான ஒரு சர்வதேச வலைக்குள் சிக்க வைத்த அதன் கைகளை கட்டி விட முயல்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

உண்மைதான்!

எனது பார்வை இதனை புலத் தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது தான்! அநேகம் பேர் புலிகள் மீண்டும் யுத்தத்தை தொடங்குவதே இத் தடைகளை தாண்டுவதற்கான சரியான வழி என்கிறார்கள். அதுவே சரியானதுமாய் இருக்கலாம்.

யுத்தத்தின் நேரடி பாதக விளைவுகள் எதனையும் அனுபவிக்காத (சாதக விளைவுகள் பல.. பலரை அந்தந்த நாட்டுப் பிரஜைகள் ஆக்கியது யுத்தம் தான்.) ஒரு தேசத்திலிருந்து கொண்டு எப்படி இவர்களால் யுத்தத்தை தொடங்கு என்று கேட்க முடியும்?

சிறு வயதுகளில் தந்தை தாயுடன் வெளிநாடுகளுக்குப் போய் இன்று இளம் வயதை அடைந்து விட்டவர்களும் யுத்தத்தை தொடங்கினால்த் தான் எங்களுக்கு என்று ஒரு தனி நாடு வரும் என்கிறார்கள். தனி நாடு வந்த பின்னர் விடுமுறைக்குச் சென்று வர எண்ணியுள்ளார்களோ என்னவோ?

யுத்தம் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றவர்கள் அந்த யுத்தத்தின் விளைவுகளை நேரடியாக சந்திக்கப் போகின்ற மக்கள் தான்.

மழை ஒழுகும் ஓலைக் குடிசை வாழ்வென்றால் என்ன என்று தெரியாதவர்கள், காதைக் கிழிக்கும் குண்டுகள் ஓசையை மறந்து விட்டவர்கள் அல்லது அப்பா அம்மா சொல்லிக் கேட்டவர்கள், பாம்புகளும் யானைகளும் நிறைந்த காடு சார்ந்த வாழ்க்கை முறையின் சிரமங்கள் தெரியாதவர்கள் யுத்தத்தை தொடங்கு என்று சொல்கின்ற போது அவர்களின் குற்ற உணர்ச்சி அவர்களை குத்திக் கிழிக்க வில்லையா?

சக்கரவர்த்தியின் (கனடா) ஒரு கவிதை எனக்கு மிகவும் கவர்ந்தது. அதன் மிகச்சரியான வடிவங்கள் என் நினைவில் இல்லை. இருப்பினும் அதன் சாராம்சம் இது தான்.

என் இதயம் யாருக்காக
இரத்தம் சிந்தி
கண்ணீர் வடிக்கிறதோ
அவர்கள் உங்களுக்காகவும்
வெடித்துக் கொள்கிறார்கள்
என்பது தான் என்
மிகப் பெரிய சோகம்.

சில பின்னூட்டங்கள்

புலம்பெயர்ந்தவிடங்களில் த.வி.புலிகள் பேச்சுவார்தையில் தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக ‘என்ன இவங்கள்’ எண்டு நிறைய புலம் பெயர்ந்த ஆதரவாளர்கள் துணுக்குற்றதைக் கண்டிருக்கிறென். ஏன்? அங்கிருக்கிற மக்களிடம் கேட்டால் சொல்லுவார்க்ள தமக்கு என்ன வேணுமென்று. இவ்வளவுகால யுத்தத்தில் நேரடையாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். வெளிநாட்டுக்காரர்களால் அங்கே அடிக்கடி போய்வர முடிகிறது – யுத்த நிறுத்தம் விடுமுறையைக் கழிக்க உதவியிருககிறது. ஆனா அங்க உள்ளாக்கள் என்ன செய்யிறதென்று -இடைக்கால நிறுத்தத்தை நம்புவதா வேணாமா என்று- முடிவற்றுப் போவதாக சொல்கிறார்கள். கனடாவில் so called புலி ஆதரவாளர்களின் நடப்பு இதுதான்.
நீங்கள் வி.பு.ஆதரவாளர் என்று நனைக்கிறேன். சிக்கரவர்த்தியின் எழுத்துக்கள் இங்கே புலிஎதிர்பர்பாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அவரென்னவோ தூதேசத்தில் இருந்து தம் குழந்தைகளை கவனமாக வளர்த்தபடி ‘போர்ப்பரணி பாடும்’ பாட்டுக்காரர்களைத்தான் வைதபடி இருப்பதாகப் படுகிறது!

இன்னுமொன்று இங்கே நீங்கள் சக்கரவர்த்தியை பிறரை மேற்கோள் காட்டினால் நீங்களும் ஒரு புலிஎதிர்ப்புவாதி என்றுதான் பார்க்கப்படுவீர்கள். நீங்கள் எழுதிய இந்தப் பக்கத்தில் உண்மையான ஆதங்கம் இருக்கிறது.
நன்றி.
-பொடிச்சி

புலி எதிர்ப்பு, அல்லது புலிகளை எதிர்நிலையில் விமர்சித்தல் என்பது தம்மை வித்தியாசமாக அடையாளங்காட்டிக்கொள்வதற்காக சில புத்திஜீவிகளால் மேற்கொள்ளப்படுகிறது. (பொடிச்சியின் பரம வைரி….?)

புலி ஆதரவு என்பது “தல” படத்துக்கு முதல்நாள் டிக்கட் வாங்கிவிடத்துடிக்கும் இளைஞர் பட்டாளத்தின் மனநிலைக்குச் சமமாகவே பெரும்பாலும் இருக்கிறது.

புலிகளுக்கு சார்பான பெருமடுப்புப் பரப்பரைக்கு கேள்விகளற்று அடிமையாபவர்கள் ஏராளம்.

இந்த இரண்டு ஈரெதிர் போக்குகளையும் இந்த இடத்தில் மேலதிக தகவலுக்காகத்தான் சொன்னேன்.

“அவர்களுக்கு” எதிரான விமர்சனம் “எதிரிக்கு” சார்பானதாய் இருந்துவிடும் என்ற கருத்து தமிழ் தேசிய வாதிகள் பலராலும் அடிக்கடி சொல்லப்படுகிறது.

அதில் உண்மை இல்லாமலில்லை.

அதற்காக ப்[உலிகளின் செயற்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதற்கும் இல்லை.
மக்கள் விடுதலை இயக்கம் என்ற அளவில் அவ்வமைப்புக்கு ஏராளம் பொறுப்புக்கள் உண்டு.
அவற்றை என்றைக்கும் தட்டிக்கழித்துவிடமுடியாது.

தேசியம் என்ற சிறுவட்டத்தைத்தாண்டி மனிதர் நிலையில் சிந்திப்பவர்கள் புலிகளை மிகக்கடுமையாக அண்டிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

அக்கண்டிப்புக்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது புலிகளின் பொறுப்புணர்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்.
-மு.மயூரன்

http://sajeek.com/archives/422