Language Selection

சயந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீங்கள் இப்ப ஒரு புலி எதிர்ப்பாளர் என்கிறார் அவர். அவர் மட்டுமில்லை. வேறு சிலரும் கேட்டிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். காரண காரியங்களை நான் கேட்டுக்கொள்ளவில்லை.

என்னால் அந்த பார்வைகளைப்புரிந்து கொள்ளமுடிகிறது. டெலோ நியூசிலும் தகவல்கள் டொட் கொம்மிலும் ஏன் தமிழரங்கத்திலும் எழுத்துக்கள் வருமாயின் அவ்வாறான ஒரு பார்வை உருவாகும்படிதான் எல்லா மட்டச்செயற்பாடுகளும் ( அந்த தளங்களினதும் உட்பட) உள்ளன. உண்மையில் புலிகள் குறித்த சில எதிர்மறைக் கருத்துக்களை புலிகள் அற்ற நிலையில் சொல்வது குறித்த குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது.

ஆழமாகப்பார்த்தால் அவை புலிகள் மீதான விமர்சனங்கள் அல்ல என்று தோன்றுகிறது. அவை கோபங்கள். தோல்வியைத்தந்து விட்டார்களே என்றோ அல்லது யுத்தத்தில் வெல்லவில்லையே என்றோ மாதிரியான கோபங்கள் அல்ல அவை. அவ்வாறான மோட்டுத்தனமான காரணங்களுக்காக கோபப்படுகின்ற இழிநிலை எனக்கு ஏற்பட்டுவிடவில்லை. எனது கோபம் அரசியல் ஆழங்களில் இறங்கி ஆராயாத கோபம். அது தனியே உணர்வுத்தளத்திலானது. இறுதிக்காலங்களில் புலிகள் தம் சொந்த மக்களோடு முரண்பட்டு இறுதிவரை தம்மை ஏந்திய மக்களின் மனங்களில் ஆறாத வலிகளை ஏற்படுத்தியதை ஜீரணிக்க முடியாத கோபம். பதின்மூன்று வருடங்களுக்கு முன்னே தன் மூத்தவனை முல்லைத்தீவிலும் தன் பேத்தியொருத்தியை நாச்சிக்குடாவிலும் விடுதலைக்காய் கொடுத்த மூதாட்டியொருத்தி “எங்கள் எல்லாருக்கும் துரோகம் செய்து போட்டாங்கள் மோனை” என்பதைக் கேட்கிறபோதேற்படுகிற தாங்க முடியா கோபம்..

பச்சைமட்டையடிப்பிரயோகம், இறுதிக்கட்ட வலுக்கட்டாய ஆட்பிடி, வெளியேறத்தடுத்தமை , துப்பாக்கிமிரட்டல்கள் என இப்பட்டியல்களை மிகுந்த மன மகிழ்ச்சியோடும் புளகாங்கிதத்தோடும் ஏளனத்தோடும் பட்டியல் இடுகின்றனர் சிலர்.

“உவையளுக்கு உது தேவைதான்” என்கின்ற திருப்தித்தன்மையோடு அவற்றை சொல்லுவோரும் உளர்.

ஆனால் மிகுந்த வலியோடும் நினைத்துப்பார்த்திரா துயரத்தோடும் “இவர்கள் இப்படிச்செய்தார்கள்” என்கின்ற வெட்கத்தோடும் தமக்குள் குமுறுகின்றனர் பலர். யோசித்துப்பார்த்தால் ஆழமான புலி விசுவாசத்தின் அடிப்படையிலேயே இந்தக் குமுறல் நிகழ்கிறது.

0 0 0

எனது கோபங்களை விட்டுத்தள்ளுங்கள். போகட்டும். ஆனால் வன்னி மக்களின் கோபங்களை ஒரேயடியாக “ஆமியோட சேர்ந்திட்டுதுகள்” என்ற லேபளில் புறக்கணித்து விடுவதைவிட அயோக்கியத்தனம் வேறு கிடையாது. அவர்களின் விமர்சனங்களில் அதிகம் கோபம் இருக்கலாம். கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் அமைப்பை நீட்டிப்பது என்ற செயற்பாடும் நாடுகடந்த அரசு என்ற கட்டமைப்புக்கான முன்முயல்வுகளும் தனியே புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்களுக்கானது அல்ல. இலங்கைக்கு வெளியே உகண்டாவிலோ அல்லது கனடாவிலோ தமிழரின் அரசியல் அபிலாசைகளை பூரணப்படுத்தும் ஒரு தீர்வினை எட்டும் கனவுகள் ஏதும் இந்நடவடிக்கைகள் ஊடாக இருப்பின் அந்த மக்களை மறந்துவிடலாம். ஆனால் அப்படியல்ல. தாயகம்நோக்கியே மீளவும் கதைகள் இருக்கிற நிலையில் அந்தக்குரல்கள் மிக முக்கியமானவை. அந்தக்குரல்களின் கேள்விகளைக் கடந்துவிட்டு போகமுடியாது.

0 0 0

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு பெரிய இசை நிகழ்வு நடந்தது. சிங்கள அரசின் “திட்டமிட்ட” நிகழ்வுதான் அது. தமிழ்நாட்டு இசையமைப்பாளர் தேவி சிறிபிரசாத் வேறும் பல பாடகர்கள் பாடகிகள் வந்து மாம்பழமாம் மாம்பழம் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் என்று பாடிக்கொண்டிருந்தார்கள். சுமார் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருப்பார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்தான். மேடையிலும் ஆட்டம். பார்வையாளர் மத்தியிலும் ஆட்டம். கொண்டாட்டம்.

அப்படியா என்ன கொழுப்பு அவர்களுக்கு என்று நீங்கள் கேட்கமுதல் கொஞ்சம் பொறுங்கள். இந்நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்த புலம்பெயர்ந்த தமிழர்கள் பேயறைந்தவர்கள் போல் ஆனார்கள். உண்மையில் மூன்று லட்சம் மக்கள் பக்கத்தில் வவுனியாக்காடுகளில் அடைபட்டுக்கிடக்கிறார்கள். பக்கத்தில் சாவகச்சேரி முகாம்களில் ஐயாயிரம் பேர் சாப்பாட்டுக்கும் மலசலத்திற்கும் வரிசையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் இந்தமாதிரியான குத்தாட்டம் ஒருமாதிரியாகவே எனக்கு இருந்தது. சிங்கள அரசு மிகத்திட்டமிட்ட முறையில் இயல்புநிலைத் தோற்றத்தைக்காட்ட இவற்றை ஏற்பாடு செய்கிறது என்பதும் புரிகிறது.

ஆனால் இங்கே புலம்பெயர்ந்த தேசங்களில் வீடுகளில் சன் என்றும் கலைஞர் என்றும் நடக்கும் இருபத்துநான்கு மணிநேர கேளிக்கை விளையாட்டுக்களை நிறுத்தியவர் யார்..? கோடைகாலம் தொடங்கக் காத்திருந்து நிகழ்த்தும் பிறந்தநாள் சாமத்திய சடங்கு நிகழ்ச்சிகளை நிறுத்தியது யார்? பெருமெடுப்பில் நடத்தும் கோவில் திருவிழாக்களை நிறுத்தியது யார்? ஆகக்குறைந்தது கிரிக்கெட் மட்டையால் தலையிலடித்துக் கொல்வதையும் சுத்தியலால் தலையிலடித்துக் கொல்வதையும் நிறுத்தியது யார் ?

ஒரு இளம் உளவியலாளரோடு பேசினேன். யுத்தத்தில் சிக்கிய சமூகமொன்றுக்கு இத்தகைய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நீண்டகால அடிப்படையில் தேவைதான் என்கிறார் அவர். தொடர்ச்சியான யுத்த அழுத்தம் அவர்களுக்குள் ஏற்படுத்திய உளத்தாக்கங்களிலிருந்து விடுபட சரியானதும் விஞ்ஞானபூர்வமானதுமான செயற்பாடுகள் அங்கில்லாத நிலையில் இப்படியான நிகழ்வுகள்தான் அவற்றை ஓரளவு சரிக்கட்ட வேண்டியிருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் / குழந்தைகள். (யுத்த சூழலிலிருந்து விலகி பத்து வருடங்கள் ஆகி விட்ட போதும் இன்றைக்கும் சட்டென வரும் விமான ஒலிகள் எனக்குள் சின்ன திடுக்கிடும் உணர்வைத் தருகின்றன. )

எங்காவது முகாமிலோ வேறு எங்கேயோ இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளில் சிறுவர்கள் குதூகலித்து ஆடக்கூடும். கொண்டாடக்கூடும். அந்த நிகழ்வுகளில் இருக்கிற அரசியலைப்புரிந்து கொள்கிற அதே நேரம் அந்தச் சின்னஞ்சிறுசுகள் மீது வன்மப் பார்வைகளை வீசாதீர்கள். அவர்கள் ஆடிவிட்டுப்போகட்டும்.

http://sajeek.com/archives/419