டாடா, பிர்லாக்களின் வரிசையில் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் குடும்பங்களில் மஃபத்லால் குடும்பமும் ஒன்று. இக்குடும்பத்தின் மருமகளான ஷீதல் மபத்லால் கடந்த ஜூன் முதல் வாரத்தில் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலண்டனில் இருந்து மும்பை திரும்பிய ஷீதல் மபத்லால், தன்னிடம் 20,000 ரூபா பெறுமான நகைகள் மட்டுமே இருப்பதாகவும், அவையும் தனது சோந்த பழைய நகைகள் என்பதால் சுங்க வரி எதுவும் கட்டத் தேவையில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். அவர் மீது சந்தேகங்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பெட்டியைத் திறந்து பார்த்தபொழுது அதிர்ந்தே போ விட்டார்கள். கிட்டத்தட்ட 55 இலட்சம் ரூபா பெறுமான பலவிதமான தங்க, வைர நகைகள் ஷீதல் மபத்லாலின் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குண்டான 18 இலட்ச ரூபா சுங்க வரியைக் கட்டாமல் நகைகளைக் கடத்திக் கொண்டு போவிட முயன்ற ஷீதல் மபத்லால் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
குளுகுளு அறைகளிலேயே வாழ்ந்து பழகிய, பஞ்சு மெத்தைகளிலேயே படுத்துப் பழகிய ஷீதல் மபத்லால், ஒரேயொரு இரவுப்பொழுதை சிறையில் ஓட்டை மின்விசிறிக்கு அடியில் கழிக்க நேர்ந்துவிட்ட அவலத்தை எண்ணி, மும்பை நகரின் மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் கண்ணீர் வடித்துள்ளனர். ஷீதல் மபத்லால் செய்த குற்றம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
இப்பயங்கரத்தைக் கேள்விப்பட்ட மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர், “நம்மைக் குறி வைக்கிறார்கள்; இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தமது சக நண்பர்களிடம் சோன்னதாக “அவுட்லுக்” ஆங்கில ஏடு குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள், ஒரு காலத்தில் மும்பை மாநகரைக் கலக்கி வந்த கடத்தல் மன்னன் மஸ்தானை, மேட்டுக்குடி கும்பல் தொழில் போட்டியில் வென்றுவிட்டது என்பதுதான். உதாரணத்திற்குச் சோல்ல வேண்டும் என்றால், புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனில் இருந்து திரும்பிய பொழுது ஒரு கோடி ரூபா பெறுமான பொருட்களைச் சுங்க வரி செலுத்தாமல் கடத்த முயற்சி செய்த பொழுது மாட்டிக்கொண்டு, பின்பு அதற்கு 36 இலட்ச ரூபா வரியும் அபராதமும் செலுத்திச் சிறைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்ட “கிரைம்” கதை உள்ளிட்ட பல சம்பவங்கள் இப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்துக்கு வருகின்றன.
இச்சம்பவங்களைக் கேள்விப்படும் பாமர மக்கள் வேண்டுமானால், ஷீதல் மபத்லாலையும் அமிதாப்பச்சனையும் குற்றவாளிகளாகக் கருதலாம். ஆனால், மேட்டுக்கடி கும்பலோ ஷீதல் மபத்லாலைக் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்த சட்டங்களைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.
‘‘உயர்தரமான சட்டை ஒன்றின் விலையே 20,000 ரூபாயாக இருக்கும் இந்தக் காலத்தில், ஒரு பெரிய முதலாளியின் மனைவியின் பெட்டியில் 50 இலட்ச ரூபா பெறுமான நகைகள் இருப்பது அதிசயமா?”
“அழகு நிலையத்துக்குக்கூட 50 இலட்ச ரூபா பெறுமான நகைகளை அணிந்து போ வரும் ஷீதல் போன்றவர்கள் இலண்டனில் இருந்து வெறும் கையுடனா திரும்ப முடியும்?”
‘‘உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி வரும் இவ்வேளையில், இந்தியச் சட்டங்கள் இன்னும் பழமையானதாக, பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. சட்டம் எங்களைக் காந்திய வழியில் வாழச் சொல்கிறதா?” ‘‘தாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் நபர் மபத்லாலின் மனைவி என்று தெரிந்தவுடனேயே அதிகாரிகள் அவரை விடுவித்திருக்க வேண்டும்; மாறாக, ஷீதலைக் கடத்தல் பேர்வழி போல நடத்தி அவமதித்துவிட்டார்கள். அபராதத் தொகையை வாங்கிக்கொண்டு ஷீதலை வழியனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். ஷீதல் போன்றவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை யெனும்பொழுது, பிறகு யார்தான் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும்?” இவையனைத்தும் மும்பையைச் சேர்ந்த மேட்டுக்குடி கும்பலின் வாயிலிருந்து பொங்கி வழிந்திருக்கும் விமர்சனங்கள். அவர்களைப் பொருத்தவரை ஷீதல் தவறு செய்யவில்லை. சட்டம்தான் தவறு செய்துவிட்டது.
இக்கும்பல் அலட்டிக் கொள்வது போல சுங்கத் துறைச் சட்டங்கள் ஒன்றும் அவ்வளவு கடுமையானதாக இல்லை. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது. இதன்படி இங்கிலாந்திலோ அல்லது இந்தியாவிலோ வரி செலுத்தினால் போதும். அங்குமிங்குமாக இரண்டு முறை சுங்கத் தீர்வைக் கட்ட வேண்டிய தேவையில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் ஷீதல் இங்கிலாந்தில் வரி கட்டாமல் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். இந்தியாவில் தனது குடும்பத்திற்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு வரி கட்டாமல் தப்பிவிடலாம் எனக் கணக்குப் போட்டிருந்தார். “ஷாப்பிங்” செய்வதற்காக அடிக்கடி இலண்டனுக்குப் பறந்து போவரும் ஷீதலின் இந்தக் கணக்கு, அவருக்குப் பலமுறை சுங்கத் துறை அதிகாரிகளை ‘ஏமாற்றி’விட்டுப் ஆடம்பரப் பொருட்களைக் கடத்திவரப் பயன்பட்டிருக்கிறது. இந்த முறை அவரது கணக்குத் தப்பிப் போனதற்கு, மபத்லால் குடும்பத்திற்குள் நடந்து வரும் சோத்துத் தகராறுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்படும் ஆடம்பரப் பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாக்கும் குறைவானதாக இருந்தால், கடத்தலில் ஈடுபட்ட நபரைச் சிறையில் அடைக்க வேண்டியதில்லை; பிணையில் விட்டுவிடலாம் என உச்சநீதி மன்றமும் தாராள மனத்தோடு ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இத்தீர்ப்பைக் காட்டித்தான் ஷீதல் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே பிணையில் வெளியே வந்துவிட்டார்.
உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கொஞ்சமாகக் கடத்தி வராதீர்கள் என அறிவுறுத்துகிறது என்று கூறலாம். அயல்நாடுகளில் இருந்து ஆடம்பரப் பொருட்களைக் கடத்தி வரும் மேட்டுக்குடி குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சலுகையைப் போன்று, ஏதாவதொரு சலுகை பல்வேறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டோ அல்லது போலீசின் பொ வழக்குகளில் சிக்கிக் கொண்டோ பிணையில்கூட வெளியே வரமுடியாமல் சிறைக்குள்ளிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விசாரணைக் கைதிகளுக்கும் காட்டப்பட்டிருந்தால், அவர்களுள் பலருக்குச் சட்ட விரோதமான சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.
பணத்திலும் செல்வாக்கிலும் புரளும் மேட்டுக்குடி கும்பல், த
ங்களின் ஆடம்பர வக்கிர வாழ்விற்கு இடையூறாக எந்தவொரு சட்டமும் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறார்கள். அப்படி ஏதாவதொரு சட்டமிருந்தால், அதனை மீறுவதற்குத் தங்களுக்குத் தார்மீக உரிமையும் நியாயமும் இருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சட்டத்தை மீறிப் போராடினால், அவர்களைத் தயங்காமல் சமூக விரோதிகளாக, தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் அரசாங்கம், மேட்டுக்குடி கும்பல் சட்டத்தை மீறும்பொழுதோ, சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் எனப் புது பல்லவி பாடுகிறது.
-புதிய ஜனநாயகம், ஜூலை-2009