ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில்இந்தவழக்கம்இன்றும்நடந்துகொண்டிருக்கிறது. 13 கோடிபெண்களுக்குக் "கந்து" அகற்றல்நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது.

வேலூர் லாங்கு பஜாரில், ஒரு ஞாயிற்றுக்கிழமை, தெருவோரம் விரிக்கப்பட்டு சிதறிக்கிடந்த பழைய புத்தகங்களின் நடுவே ஆப்பிரிக்க முகம் நிறைந்த மேலட்டை கண்ணில் பட்டது. Desert flower-the extraordinarylife of a desert nomad. புத்தகத்தை எடுத்து பின்அட்டையைப் பார்த்தேன். ஒரு விமர்சனத்தின் முதல் வரி.. He first job was for a Pirelli calender shoor பைரேலி காலண்டர்! ஃபாஷன் டிவியில் அம்மண மங்கையரை பைரேலி காலண்டருக்காகப் படம்பிடிக்கும் ஒளிபரப்புகள் நினைவுக்கு வந்தது.மாடலிங் மங்கை வாரிஸ் டேரி. சோமாலியாவில் ஒரு கிராமத்தில் பிறந்து, தந்தை பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் 13 வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து நகரத்தில் அத்தையுடன் போய்ச் சேரும் வரை உதவி செய்வதாக வந்து தன்னை அடைய விரும்பிய ஆண்களிடமிருந்து தப்பி, அத்தையுடன் லண்டன் சென்று, அவர்கள் மீண்டும் சோமாலியா திரும்பியபோது, போலி பாஸ்போர்ட்டில் லண்டனிலே தங்கி, பைரேலி காலாண்டர் காமிராமேன் கண்ணில் பட்டு மாடலிங் மங்கை ஆகி....இவை யாவும் பெரிய விஷயங்கள் அல்ல.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இத்தகையதொரு துன்பம். ஏக்கம், ஆண்களின் துரத்தல்கள், போலிஅன்பு எல்லாமும் இருக்கும். ஆனால்...வாரிஸ் அடைந்த துன்பம் வேறானது.பத்து வயதிலேயே அவருக்குக் கந்து அகற்றல் ((Cut off part of the Clitoris or female circumsicion) நடத்தப்பட்டது. அதாவது ஆண்குறியின் முன் தோல் அகற்றப்படுவதைப் போல, பெண்ணின் நரம்புகள் குவிந்த 'கிளிடோரிஸ்' எனப்படும் மகளிர்கந்து முனையை வெட்டி அகற்றும் வழக்கம் சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே இன்றும் சிறுமிகளுக்கு நடைபெறும் சடங்கு. நம்மூரில் காது குத்துதல் போல, சர்வசாதாரணமாக!ஆண் உறுப்பில் முன்தோல் அகற்றுதல்-சுன்னத்-ஒரு சுகாதாரம். 

யூதர்கள், முஸ்லீம்கள் மட்டுமன்றி, சுகாதாரம் கருதியும் விரைப் பின்போது பின்னுக்குத் தள்ளப்படாத நிலையிலும் எந்தவொரு ஆண் மகனும் முன்தோலை அறுவைச் சிகிச்சை மூலம் வலியின்றி அகற்றமுடியும்.

ஆனால் பெண்ணுக்கு எதற்காகச் செய்யப்படுகிறது?
சுகாதாரம் இதன் நோக்கம் அல்ல.

கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்கவே முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவள். அவ்வளவுதான். அவளுக்குக் கலவியில் உச்சம் (Orgasm)நிரந்தரமாக மறுக்கப்படுகிறது.காமசூத்திரத்தில் வாத்சாயனர் பெண்களையும் ஆண்களையும் நான்கு வகையாகப் பிரிக்கிறார். விரைவில் உச்சம் அடைபவர்கள், இயல்பான காலஅளவில் உச்சம் அடைபவர்கள், உச்சம் அடைவதற்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்வோர், உச்சம் அடையா பெண்கள் அல்லது விரைப்புகொள்ளா ஆண்கள். இவர்களில் விரைப்புகொள்ளா ஆண் கலவிக்குத் தகுதியற்றவன் என்று விலக்கிவிடுகிறார். ஆனால், உச்சம்கொள்ளா பெண் தன்னளவில் இன்பத்தை நுகர இயலாத போதும் ஒரு ஆணுக்குப் பயனுள்ளவள். அதனால் அவளைக் கணக்கில் சேர்த்துக் கொள்கிறார் வாத்சாயனர்.

 

இப்போது நான்கு வகை பெண்கள், மூன்றுவகை ஆண்கள். ஆக, 4x4x4ஸ்ர=64 வகை ஜோடிகள் அமைய வாய்ப்புகள் உள்ளன. யார் யாருடன் ஜோடியாகச் சேர்ந்தாலும் அவர்கள் இருவரும் இன்பம் காண வேண்டும். ஒரு ஆண் அல்லது பெண் தான் விரைந்து அல்லது தாமதமாக உச்சம் அடைந்தாலும், தன் இணையையும் எவ்வாறு உச்சம் கொள்ளச் செய்வது என்பதுதான் காமசூத்திரத்தின் அடிப்படை. இன்பம் என்பது இருவரின் உரிமை. இது இந்திய மரபு.ஆனால் இந்த இன்பத்தின் உரிமை, கந்து அகற்றல் மூலமாக முற்றிலும் இல்லாமல் செய்யப்படுகிறது வாரிஸ் தன்னைப் பேட்டி எடுக்கும் பெண்நிருபரிடம், இது பற்றி எழுதுவாயா என்று விளக்கியபோது, அந்த ஐரோப்பியப் பெண் அதிர்ந்துபோகிறார். பேட்டி Marie Claireஇதழில் வெளியான பின்னர், கந்து அகற்றும் நடைமுறை பெரிய அளவில் பேசப்படுகிறது. பெண் உறுப்பு சிதைப்புக்கு ((Female Genital Mutilation) ) எதிரான இயக்கத்தின் தூதுவர் கௌரவத்தை வாரிஸுக்கு வழங்குகிறது ஐக்கிய நாடுகள் சபை.

'என் அந்தரங்க ரகசியத்தைத் தெரிந்துகொண்டவர்கள், என்னைத் தெருவில் பார்க்கும்போது வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள். அதைப் பொருட்படுத்துவதில்லை என்று முடிவு செய்தேன். இந்தப் பேட்டி மூலமாக, இன்றும்கூட இது நடைமுறையில் இருக்கின்றது என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கைதான் இந்தப் பேட்டிக்குக் காரணம். இது எனக்காக மட்டுமல்ல, உலகில் இது போன்று கந்து அகற்றலுக்கு ஆளாகும் லட்சக்கணக்கான சிறுமிகளுக்காகவும்தான். என் இழப்பை சீர் செய்வது இயலாத ஒன்று. சேதப்படுத்தியாகிவிட்டது. ஆனால், மற்றச் சிறுமிகளைக் காப்பாற்ற என்னால் உதவக்கூடும்....

'இந்த வழக்கத்தால் உடல் ரீதியான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, எனக்கு மறுக்கப்பட்ட, கலவி இன்பத்தை நான் ஒருபோதும் அறியவே முடியாது. என்னை முழுமையற்றவளாக, ஊனமடைந்தவளாக உணர்கிறேன். இதை மாற்றுவதற்கு ஒன்றும் செய்வதற்கில்லை என்ற உணர்வு என்னை நம்பிக்கையில்லாமல் செய்கிறது. 'தனா'வைச் சந்தித்தபோது, காதலில் விழுந்தேன். கலவி இன்பத்தை அனுபவிக்க விரும்பினேன். ஆனால் இன்று என்னிடம், 'கலவியில் இன்பம் அடைந்தாயா?' என்று கேட்டால், பெண்ணுக்குரிய இயல்பான வழியில் கிடைக்கும் இன்பம் இல்லை என்று சொல்வேன். நான் நேசிக்கும் தனாவின் உடல் நெருக்கம் தரும் இன்பம் மட்டுமே நான் களிப்பது' என்கிறார் வாரிஸ் டேரி.

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. இது பழைய புள்ளிவிவரம். ஒருவேளை, இது குறைந்திருக்கலாம். பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் இதைச் செய்கிறார்கள்.இதிலும்கூட மூன்று வகை. முதலாவது, மகளிர் கந்து முனையை மட்டும் வெட்டி விடுதல். இரண்டாவது, கந்து முனை மற்றும் புழையின் (Vagina) இரு பக்கத்திலும் உள்ள இதழ்களையும்(labia minora) ) வெட்டுதல், மூன்றாவது, முனை அறுத்து, இதழ் அறுத்து, புழையின் மேல்பகுதியை நூலால் தைத்துவிடுதல்.

வாரிஸுக்கு நடைபெற்றது மூன்றாவது வகை.

இதனால் வாரிஸ் மன ரீதியாக, உடல் ரீதியாக அடைந்த துன்பங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்மாடலிங் சென்றபோது இன்னும் அதிகமான ஆண்களைச் சந்தித்தேன். ஆனால், இவர்களில் யார் மீதும் எனக்கு ஆர்வமில்லை. ஒரு ஆணுடன் கலவி கொள்ளும் எண்ணம் என் மனதில் தோன்றியதே இல்லை. என்றாலும், துரதிருஷ்டவசமாக, சில மோசமான அனுபவங்களுக்குப் பின்னர், அவர்கள் மனதில் அது தோன்றியது என்பதை அறிந்தேன். எனக்குக் கந்து அகற்றம் நடத்தப்படாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை எப்படியாக இருந்திருக்கும் என்று எப்போதும் நான் வியப்புற்றாலும், என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்ததில்லை. நான் மற்றப் பெண்களிலிருந்து வேறுபட்டவள், குறிப்பாக இங்கிலாந்துப் பெண்களிலிருந்து மாறுபட்டவள் என்பதுதான். லண்டன் வந்த பிறகுதான், எனக்கு என்ன செய்யப்பட்டதோ அது எல்லாப் பெண்களுக்கும் செய்யப்படுவதில்லை என்று மெல்லப் புரியத் தொடங்கியது. நான் மற்றப் பெண்களுடன் ஒன்றாகக் குளியலறையில் இருப்பேன். அவர்கள் வேகமாக, சிற்றோடை போல சிறுநீர் கழிப்பதைப் பார்த்து அசந்துபோனேன். எனக்கோ சிறுநீர் கழிக்கப் பத்து நிமிடங்கள் ஆனது. செய்ய முடியுமா? என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்றேன்.

ஆனாலும் அவரிடம் என் கந்து அகற்றம் பற்றிச் சொல்லவில்லை. அந்த விஷயத்தை எப்படி விவாதிக்கத் தொடங்குவது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது நான் சிறுமிதான். என் உடலோடு தொடர்புடைய பிரச்சினைகள் எல்லாவற்றுடனும் எனது அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்துகிடந்தது. பிரச்சினைக்குக் கந்து அகற்றம்தான் காரணம் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் எனக்கு நேர்ந்தது எல்லா சிறுமிகளுக்கும் நேர்ந்திருப்பதாக அது வரையிலும் நினைத்தேன். என் அம்மாவுக்கு என் வலி வழக்கத்துக்கு மாறானதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் அவள் அறிந்த பெண்கள் எல்லாரும் கந்து அகற்றத்துக்கு ஆளானவர்கள். எனக்கு . . .' குறையுடைய ஆங்கிலத்தில் எனது ரகசியத்தை விளக்க முற்படுவது மிகவும் அச்சமாக இருந்தது. 'என் பெண்குறி சிதைக்கப்பட்டுள்ளது.'என்னைப் பரிசோதித்து முடித்ததும் 'மருத்துவமனையில் சோமாலி பேசத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?' என்றார்.

 

ஒரு சோமாலியப் பெண் கீழே பணியாற்றுவதாக நர்ஸ் சொன்னாள். ஆனால் அவள் திரும்பி வந்தபோது சோமாலி ஆண்மகனைத்தான் அழைத்து வந்திருந்தாள்.டாக்டர் மாக்ரே சொன்னார். 'அவளது வழி அதிகமாக மூடப்பட்டுள்ளது என்பதை அவளுக்கு விளக்கிச்சொல். இதுவரை அவள் எப்படித் தாங்கிக்கொண்டாள் என்று தெரியவில்லை. கூடிய விரைவில் அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும்.'அப்போதே, சோமாலி மனிதன் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்பதைப் பார்க்க முடிந்தது. வாயை இறுக்கிக்கொண்டு டாக்டரைப் பார்த்தான். சோமாலி ஆணின் அணுகுமுறையிலும், எனக்கு ஆங்கிலம் புரியும் என்பதாலும், ஏதோ சரி இல்லை என்று உணர முடிந்தது. அவன் என்னிடம் சொன்னான்: 'உனக்கு மெய்யாகவே தேவை என்றால், அவர்கள் திறந்து விடுவார்கள்'. அவனை வெறித்துப் பார்த்தேன். 'ஆனால் இது உனது கலாசாரத்துக்கு எதிரானது என்பது உனக்குத் தெரியுமா? நீ இதைச் செய்கிறாய் என்பது உன் குடும்பத்துக்குத் தெரியுமா?'

'உண்மையைச் சொல்வதென்றால், தெரியாது.'
'யாருடன் இருக்கிறாய்?'
'மாமா, அத்தையுடன்.''இதைச் செய்கிறாய் என்று அவர்களுக்குத் தெரியுமா?'
'தெரியாது.'

'நல்லது. நான் செய்யக்கூடிய முதல்வேலை அவர்களுடன் இது பற்றி விவாதிப்பதுதான்'. நான் தலையாட்டிக்கொண்டே சிந்தனை செய்தேன்: ஒரு ஆப்பிரிக்க ஆணின் ஒரேவிதமான எதிர்வினை இதுதான். உன் ஆலோசனைக்கு நன்றி சகோதரனே. இந்த விவகாரத்துக்கு அது ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கும்.

அறுவைச் சிகிச்சை செய்ய நாள் குறிக்க வேண்டும். என்னால் முடியாது என்று உணர்ந்தேன். ஏனெனில் அத்தை கண்டுபிடித்துவிடுவாள். நான் பிறகு அப்பாயின் மென்ட் வாங்கிக்கொள்கிறேன் என்றேன். ஓராண்டு கழிந்தது. நான் பேசவே இல்லை.மாமாவும் அத்தையும் சோமாலியாவுக்குத் திரும்பிச் சென்றபின்னர் டாக்டரிடம் பேசி, நாள் குறித்தேன். குறைந்தபட்சமாக இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். எனக்குச் செய்யப்பட்ட அந்தக் கொடுமையை நினைத்துப் பார்த்தேன். அறுவைச் சிகிச்சை அதே சித்திரவதையை மீண்டும் திரும்பச் செய்வதாக இருக்குமோ என்று நினைத்தேன். அதிகமாக நினைக்க நினைக்க, அந்தத் துன்பத்தை மீண்டும் அனுபவிக்கக்கூடாது என்று முடிவு ஏற்பட்டது. அந்த நாள் வந்தபோது, மருத்துவமனைக்குச் செல்லவில்லை. பேசவும் இல்லை.அந்த நேரத்தில் . எனது மாதவிடாய்த் தொல்லைகள் குறைந்திருக்கவில்லை.

ஆனால் இப்போது நான் வீட்டுக்கு வெளியே என் வாழ்வுக்காக சம்பாதித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாதத்தில் ஒரு வார வேலைநாட்களை இழக்கவும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது. நான் துயரப்பட்டேன். என் நண்பர்கள் நான் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டனர். என்ன பிரச்சினை என்று மர்லின் என்னைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். நான் அவளிடம், சோமாலியாவில் சிறுமியாக இருக்கும்போதே எனக்குக் கந்து அகற்றம் செய்யப்பட்டதைச் சொன்னேன்.

மர்லின் லண்டனில் வளர்ந்தவள். நான் என்ன சொல்கின்றேன் என்பதை அவளால் யூகிக்கவே முடியவில்லை. 'எனக்கு ஏன் காட்டக்கூடாது வாரிஸ்? நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை. இங்கே வெட்டினார்களா? இதையா? அதையா? என்ன செய்தார்கள்?'

கடைசியாக ஒரு நாள் நான் எனது உடையை அவிழ்த்துக் காட்டினேன். அவள் முகத்தில் தோன்றிய பாவத்தை என்னால் மறக்கவே முடியாது. கன்னத்தில் கண்ணீர் வழிய முகத்தைத் திருப்பிக்கொண்டாள். எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இது இந்த அளவுக்கு மோசமானதா? அவள் பேசிய முதல் வார்த்தை, 'வாரிஸ் எதையாகிலும் உணர்கிறாயா?'
'நீ என்ன பேசுகிறாய்?'

அவள் வெறுமனே தலையாட்டினாள். 'நீ சிறுமியாக இருந்தபோது எப்படி இருந்தாய் என்று நினைக்க முடிகிறதா? இதை அவர்கள் செய்வதற்கு முன்பு?'

'முடிகிறது.''நான் அப்படியாகவே இருக்கிறேன். ஆனால் நீ அதேபோன்று இல்லை.'

இப்போது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. எல்லா பெண்களும் என்னைப் போலவே சிதைக்கப்பட்டவர்கள் அல்ல. இப்போது நிச்சயமாக அறிவேன்-நான் மாறுபட்டவள். 

'ஆக, இது உனக்கு நடக்கவில்லை. உனக்கும் உன் தாய்க்கும்?'

அவள் தலையை அசைத்து மறுத்தாள், அழத் தொடங்கினாள். 'இது கொடுமை வாரிஸ். இதை உனக்கு யாராவது செய்வார்கள் என்று நம்ப இயலவில்லை.'
'சரி, வா, என்னை மேலும் சோகத்தில் ஆழ்த்தாதே.'

'நான் வருத்தப்படுகிறேன். வருத்தமும் கோபமும் கொள்கிறேன். அழுகிறேன். ஏனென்றால், உலகில் ஒரு சிறுமிக்கு இதைச் செய்யக் கூடிய மக்கள் இருக்கிறார்கள் என்று என்னால் நம்பவே முடியவில்லை.'

சில கணங்கள் அமைதியாக இருந்தோம். இது போதும் என்று முடிவு செய்தேன். 'நான் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளப் போகிறேன். டாக்டரை நாளை அழைத்துப் பேசுவேன். குறைபட்சம் சிறுநீர் கழிப்பதிலாவது களிப்படையலாம். அதில் மட்டும்தான் நான் களிப்படைய முடியும். ஆனாலும் குறைந்தபட்சம் அதுவாகிலும்...'

'கவலைப்படாதே. நான் வருகின்றேன். நான் உன்னுடன் இருப்பேன்' என்றாள்.

அறுவைச் சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்து கண் திறந்ததும் என்னை இரண்டு கட்டில் உள்ள அறைக்குக் கொண்டுசென்றனர். அங்கே ஒரு பெண், குழந்தை பெற்றிருந்தாள். இந்தப் பெண் என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். 'நீங்க என்னத்துக்கு இங்க வந்தீங்க?'

நான் என்ன சொல்வது? ஒப்புக்கொள்வதா? 'நான் எனது புழையில் அறுவைச் சிகிச்சை செய்ய வந்தேன். அதன் வழி ரொம்பவும் குறுகலாக இருக்கிறது'. நான் யாரிடமும் உண்மையைச் சொல்லவில்லை. எனக்கு வயிற்றில் கட்டி என்று சொல்லி வைத்தேன்

டாக்டர் மாக்ரே சிகிச்சையை நன்றாகச் செய்திருந்தார். அவருக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன். அவர் சொன்னார். 'நீ மட்டுமல்ல. இதே பிரச்சினைக்காக நிறைய பெண்கள், சூடான், எகிப்து, சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள். அவர்களில் சிலர் கர்ப்பிணிகள். தைக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வது பயங்கரமானது. இறுக்கமான வாசல் வழியாக வெளியேவரும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும், அதிக ரத்தப்போக்கால் பெண் இறக்கலாம். ஆகவே குடும்பம் கணவன் அனுமதி இல்லாமல் அவர்கள் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு நான் உதவுவேன்.'

 

இரண்டு மூன்று வாரங்களில் நான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். மிகச் சரியான இயல்புநிலை அல்ல, ஆனாலும் ஏறக்குறைய கந்து அகற்றம் நடத்தப்படாத பெண்களைப்போன்ற இயல்பு நிலை. இப்போது வாரிஸ் புதிய பெண். கழிவறையில் நான் கீழே உட்கார்ந்து சிறுநீர் கழிக்கலாம். உஷ்ஷ்..அது எத்தகைய சுதந்திரம் என்பதை எந்த விதத்திலும் விவரிக்க இயலாது.

(இரா. சோபனா எழுதிய இக் கட்டுரையை ஊடறுவிற்கு அனுப்பித் தந்தவர் யசோதா இக்கட்டுரை வெளிவந்த பத்திரிகை அல்லது இணையத்தளத்திற்கும் நன்றி )

 http://udaru.blogdrive.com/archive/1016.html