கடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும்!? மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!?

 

இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை. இதைச் செய்யமுனையாத அனைத்தும், தன்னுடன் எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறை உள்ளடக்கியபடி தான் முன்நகர முனைகின்றது. இது இன்று வெளிப்படையான உண்மை.

 

புலி, புலியெதிர்ப்பு மட்டும் ஒரு எதிர்ப்புரட்சிக் கூறாக, கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்மத்தியில் செயல்படவில்லை. மாறாக இதற்கு வெளியில்; இதற்கு மாறாக எந்த மாற்று அரசியலையும் முன்வைத்து செயற்படாது, அங்குமிங்கும் செயல்;பட்ட கூறுகளும் கூட எதிர்ப்புரட்சி அரசியலையே விதைத்தனர். அவர்கள் இன்றைய சூழலில் தம்மை மூடிமறைத்துக்கொண்டு, தனித்துவமான இன்னுமொரு எதிர்ப்புரட்சி சக்தியாகவே உருவாக்க முனைகின்றனர்.

 

கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக தங்கள் மக்கள் விரோத அரசியலால் தோற்று அம்பலப்பட்டுப் போனவர்கள் புலிகள், புலியெதிர்ப்பு மட்டுமல்ல. இதற்கு வெளியில் பாட்டாளி வர்க்க அரசியலை நிராகரித்தபடி, அதை உச்சரித்தபடியும், எந்த மாற்று மக்கள் அரசியலையும் முன்வைக்காது அங்குமிங்கும் நின்றவர்களும் தான் தோற்றுப் போனவர்கள். எமது வழிதான் சரியானது என்பது, தெளிவாக அரசியல் ரீதியாக உணரப்படுகின்றது.

 

இந்த நிலையில் எம்முடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், இயல்பாக தம்முள் பாட்டாளி வர்க்கத்தை மறுக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுடன்தான், தம்மை முன்னிறுத்த முனைகின்றனர்.

 

அரசியல் ரீதியாக கடந்து போன எம் அழிவு அரசியல் வரலாற்றில், மக்கள் விரோத சக்தியாக செயல்பட்டவர்கள், இன்று களத்தில் புலிகளின் அழிவுடன் திடீரென புதிதாக அரங்கில் நுழைகின்றனர். மறுபடியும் மக்களை அரசியல் இருட்டில் நிறுத்தி, அவர்களை விட்டில் பூச்சிகளாக பலியிட முனைகின்றனர். கடந்த எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை, புதிதாக சொல்ல முனைகின்றனர். முன்பு நாம் சொன்னதை எந்த வகையில் தவறு என்று சொல்லாமல், அவர்கள் புதிதாக சொல்ல முனைவது அரசியல் ரீதியாகவே எதிர்ப்புரட்சி அரசியல்  கூற்றைக்கொண்டது.

 

கடந்த தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை மறைக்க, மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையில் நடைமுறையுடன் சொல்லப்பட்டதை இருட்டடிப்பு செய்வது, இன்று அவர்களுக்கு அவசியமாக உள்ளது. இன்று எம்மை நிராகரிப்பதன் மூலம் அல்லது எம்முடன் இணைந்து பயணிக்காது புதிதாக ஏதோ ஒன்றுடன் செயற்பட முனைவதன் மூலம், நேர்மையற்ற அரசியல் கூறு அதன் அரசியல் உள்ளடக்கமாக உள்ளது.

 

கடந்த எம் வரலாற்றுப் போக்கு என்ன?

 

1."தேசியத்தின்" பெயரில் புலிப் பாசிசம்

 

2."ஜனநாயகத்தின்" பெயரில் புலியெதிர்ப்பு

 

3.மக்களின் ஜனநாயகத்தையும், தேசியத்தையும் முன்னிறுத்தி, பாட்டாளி வர்க்க அரசியலை முன்னெடுத்த நாம்

 

இதற்கு வெளியில் யாரும் தனித்துவமாக மக்களுடன் நின்றது கிடையாது. பாட்டாளி வர்க்க அரசியலை முன்னிறுத்தி, எமக்கு வெளியில் யாரும் நடைமுறையுடன் இணைந்து சுயமாக போராடியது கிடையாது. உடனுக்குடன் அனைத்து பிற்போக்கு கூறுகளையும், மக்கள் விரோத அரசியலையும் அம்பலப்;படுத்திப் போராடுவதுதான், அரசியல் நடைமுறையாக இருந்தது. இந்த நடைமுறையை முன்னிறுத்தி, கடந்தகாலம் அனைத்தையும் உரசிப்பார்க்க முடியும். இந்த அரசியல் நடைமுறையை நாங்கள் மட்டும்தான், கடந்த வரலாற்றில் தொடர்ச்சியாக  செய்தோம். இதற்கு வெளியில் அரசியல் உண்மை, நேர்மை, மக்கள் அரசியலை உரசிப்பார்க்க, இதைவிட வேறு ஒரு அரசியல் வழி எதுவும் கிடையாது. புரட்சிகர அரசியலை தீர்மானித்த ஒரே நடைமுறை, இதுமட்டும் தான். இதை கடந்த காலத்தில் செய்யாத யாரும், அதை ஏற்றுக் கொள்ளாத யாரும், இன்று தங்கள் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுகளுடன் தான் பயணிக்கின்றனர்.

 

இப்படி அன்று எம்முடன், எம் நடைமுறையில் நிற்காத எவரும், புலிப் பாசிசம், புலியெதிர்ப்பு பாசிசத்துடன் தான் சேர்ந்து பயணித்தனர். இதில் ஏதோ ஒன்றுடன் சேர்ந்து நிற்க,  "தேசியத்தை" அல்லது "ஜனநாயகத்தை" தமக்கேற்ப பயன்படுத்தினர். இவ்விரண்டையும் மக்கள் நலனுடன் ஓரே நேரத்தில் முன்னெடுத்து, இதை சொல்லி செயல்பட்ட புலி மற்றும் புலியெதிர்ப்பு எதிர்ப்புரட்சி கூறை எதிர்த்து தனித்துவமாக மக்கள் அரசியலை முன்னிறுத்திய, எந்த அரசியல் போக்கும் எமக்கு வெளியில் வரலாற்றில் இருக்கவில்லை.

 

தம்மை தனித்;துவமானதாக காட்டிக்கொண்ட அனைத்து எதிர்ப்புரட்சி கூறுகளையும் மறுத்து, தனித்துவமான நடைமுறையில் யாரும் செயல்படவில்லை. கடந்தகாலத்தில் எம்மை சுற்றிய வரலாற்றுப் போக்கு இது.

 

இதை இன்று பலர் மூடிமறைக்க முனைகின்றனர். எமது தனித்துவமான, மக்களுக்கான எமது போராட்டத்தை மறுதலித்த படி, புற்றில் இருந்து கிளம்பும் புற்றீசல்கள் போல் பலர் புதுசாக கிளம்புகின்றனர்.

 

கடந்த 20 வருடத்தில் எதிர்புரட்சியுடன் எதோ ஒரு வகையில் கூடி பயணித்தவர்கள், மௌனம் சாதித்தவர்கள், சுயவிமர்சனமின்றி இன்று திடீர் திடீரென மீள முளைக்கின்றனர். இப்படி வெளிப்படையற்ற தன்மையுடன், எந்த சுயவிமர்சனமுமின்றி, தங்களை மூடிமறைத்துக் கொண்டு மக்கள் பற்றி பேசத்தொடங்குகின்றனர்.

 

இதில் உள்ள எதிர்ப்புரட்சி அம்சம் என்னவென்றால், 20 வருடத்துக்கு மேலாக மக்கள் அரசியலை முன்னிறுத்திய எமது புரட்சிகரமான அரசியல் போராட்டத்தை மறுதலிப்பதுதான். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை முன்னிறுத்தி எமது தனித்துவமாக அரசியல் இருப்பை மறுக்கின்றனர். இவை எதுவும் தெரியாத மாதிரி தம்மை மூடிமறைத்துக் கொண்டு, கடந்தகாலம் பற்றிய எந்த அரசியல் மதிப்பீட்டையும் முன்வைக்காது, தங்கள் சொந்த சந்தர்ப்பவாதத்துடன் அரசியல் பேசுகின்றனர். எம்முடனான அவர்களின் அரசியல் முரண்பாடுகள் என்ன? அதில் இருந்து நீங்கள் எப்படி வேறுபடுகின்றீர்கள்? உங்கள் மாற்று அரசியல் தான் என்ன? இவர்கள் இப்படி எதையும் முன்வைப்பது கிடையாது.

 

மொத்தத்தில் விமர்சனம், சுயவிமர்சனமற்ற ஒன்றின் ஊடாக, புதிய எதிர்ப்புரட்சி அரசியலை நுழைக்க முனைகின்றனர்.

 

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான எம்மையும் எமது அரசியலையும் அங்கீகரிக்காத, எம்முடன் உள்ள அரசியல் முரண்பாட்டை தெளிவுபடுத்தாத, கடந்தகால எதிர்ப்புரட்சிகர கூறுகளை அதன் நடைமுறைகளை விமர்சிக்காத அனைத்தும், இன்று மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம்;. புலிகள் இன்று தம்மை விமர்சனம், சுயவிமர்சனம் செய்யாது எப்படி தங்கள் கடந்தகால பாசிச வரலாற்றை மூடிமறைத்துக் கொண்டு வேஷம் போடமுனைகின்றனரோ, அதே பாணியில் புற்றீசல் போல் திடீரென பலர் அரசியலில் நுழைகின்றனர்.

 

வெளிப்படையற்ற, நேர்மையற்ற வழிகளில் அரசியல் பேசத் தொடங்குகின்றனர். கடந்த காலத்தின் மக்களுக்கான அரசியல் போக்குகளை அங்கீகரிக்காது, மற்றைய எதிர்ப்புரட்சி போக்குகள் மீது விமர்சனம் சுயவிமர்சனமின்றி, அதனுடன் சேர்ந்து நின்ற கூறுகளுடன் இணைந்து, புதிய எதிர்ப்புரட்சி கூறுகளை மீளவும் உருவாக்க முனைகின்றனர்.

 

ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், சமூக கூறுகளின் வர்க்க அரசியலை முன்னிறுத்தி, அதை தங்கள் அரசியலாக கொண்டு சமகால அரசியல் அரங்கில் நுழையவில்லை. அதை வெறுமனே உச்சரித்தபடி, அதைக் காட்டி ஏமாற்ற முனைகின்றனர். இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மக்களின் விடுதலைக்கு, பாட்டாளி வர்க்க அரசியலே அடிப்படையானது. இந்த அடிப்படையில் தான் இன ஒடுக்குமுறைக்கு தீர்வு காணமுடியும்;. சுயநிர்ணயம், ஜனநாயகம் என அனைத்தும், இதற்கு உட்பட்டுத்தான் தீர்க்கப்படமுடியும். பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைக்காத, மார்க்சிய லெனிய மாவோ சிந்தனைகளை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளாத அரசியல் போக்கு, மீண்டும் ஒரு எதிர்ப்புரட்சியாக எம் முன் நுழைய முனைகின்றது.

 

வெளிப்படையற்ற அரசியல் மூலம், தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஜக்கியத்தை முன்னிறுத்தாத அரசியல் போக்கு மீளவும் மௌ;ள முளைவிடுகின்றது. இதை முறியடித்து போராட அணிதிரள்வதும், இந்தப் போக்கை அரசியல் ரீதியாக இனம் காண்பதன் ஊடாக, இதற்கு எதிராக போராடுமாறு அறைகூவுகின்றோம்.                     

 

பி.இரயாகரன்

01.08.2009