1958 முதலே ஷெல் நிறுவனம் நைஜர் வளைகுடா பகுதியின் எண்ணெய் வளங்களைச் சூறையாடத் துவங்கயது. அன்று முதல் இன்று வரை, அப்பகுதி மக்களான ஒகோனி இனத்தவருக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் முரண்பாடு ஏற்படத் தொடங்கியது. 1958இல் நைஜீரியா ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

இன்று, அப்பகுதியில் ஷெல் நிறுவனம் 90 எண்ணெய் வயல்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது.

1990களின் ஆரம்பம் முதலே மேலும் பல புதிய எண்ணெய் வயல்களைத் தேடி வேட்டையாடத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையினால் சுற்றுச்சூழல் மாசுபடத் துவங்கியது. இதனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரமான மீன்பிடி, விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஒகோனி மக்களது அதிருப்தி முற்றி அகிம்சைப் போராட்டங்கள் முளைத்தன.

shell_skull

போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஒகோனி மக்களைக் காக்கும் இயக்கம் (MOSOP)நிறுவப்பட்டது. பிரபல பத்திரிகையாளரும், சமூக நல ஆர்வலருமான கென்சாரோ-விவா, இவ்வியக்கத்தின் மூலம் ஷெல் நிறுவனத்தின் அட்டூழியங்களை உலகறியச் செய்தார்.

1993இல் இவ்வியக்கம் ஒருங்கிணைத்த அமைதிவழிப் போராட்டத்தில் 3,00,000ஒகோனி மக்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறாக இவ்வியக்கம் மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது! போராட்டத்தை தளரச் செய்வதற்காக, ஷெல் ஒகோனி மக்கள் மீது பல அடக்குமுறைகளை ஏவியது. மக்களை நைஜீரிய இராணுவ உதவியுடன் கைது செய்வது, சித்திரவதை செய்தல், நாடு கடத்துவது, கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்வது போன்ற அராஜகங்களை நிறைவேற்றியது.

போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியின் உச்சக்கட்டமாக MOSOP இயக்கத்தைச் சேர்ந்த 9 முன்னணியாளர்களை, விசாரணையின்றி தூக்கிலிட்டுக் கொன்றது! இதற்கு முகாந்திரமாக அவர்கள் மீது பல பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டன, சித்திரவதைகள் அரங்கேறின!

மேற்சொன்னவாறு, ஒகோனி மக்கள் மீதும், 9 முன்னணியாளர்கள் மீதும் நிகழ்த்திய கொடுமைகளுக்காக ஷெல் நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார்டியன் பத்திரிகைக்கு கூறியதாவது, “எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். 95இல் நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. நைஜீரிய அரசு கட்டவிழ்த்துவிட்ட இந்த அராஜகம் கண்டிக்கத்தக்கது. மக்களையும், முன்னணியாளர்களையும் காக்கும் பொருட்டு அரசிடம் எமது நிறுவனம் மேல் முறையீடு செய்தது.ஆனால் அது பலனளிக்காது போனது வருந்தத்தக்கது”.

கென்சாரோ-விவா என்கிற போராளி தான் தூக்கிலடப்படும் தருணத்தில், “அந்த நாள் நிச்சயம் வரும். ஒகோனி மக்களுக்கெதிரான குற்றங்களுக்காக அந்நிறுவனம் தண்டனை பெறும்,” என்றார். அந்த நாளும் வந்துவிட்டது. ஷெல் நிறுவனம் நைஜர் பகுதியில் நிகழ்த்திய குற்றங்களுப் பொறுப்பேற்க வேண்டிய நேரம் 12 ஆண்டுகள் கழித்து வந்துள்ளது.

Wiwa

ஷெல் நிறுவனம் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நியுயார்க் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. பல பன்னாட்டு நிறுவனங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இவ்வழக்கை மிகவும் கவனித்து வருகின்றனர். இவ்வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் பல பன்னாட்டு நிறுவனங்கள், பல நாடுகளில் அரங்கேற்றியுள்ள குற்றங்களுக்குப் பொறுப்பேற்று பதிலளித்து தண்டிக்கப்படும் நிலை உருவாகும்.

ஷெல் மீதான வழக்கு 11 மாதகாலம் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஷெல் தரப்பில் 11 சாட்சியங்களும், ஒகோனி மக்கள் தரப்பில் 20 சாட்சியங்களும் ஆஜராவர். மக்கள் தரப்புச் சாட்சிகளில் முக்கியமானவர், சாரோ-விவாவின் மகன்! சாரோ-விவா ஜூனியரைப் பொறுத்தவரை இவ்வழக்கு தனது தந்தைக்கு நடந்த அநீதிக்கும், மரணத்துக்கும், நீதி கோரும் வாதமாக அமைவது மட்டுமின்றி தான் இழந்த 12 வருட வாழ்க்கைக்கும் பதில் தருவதாக அமையும் என்கிறார்.

அடுத்த முக்கிய சாட்சி சாரோ-விவாவின் சகோதரர் ஓவென்ஸ் விவா. 1995இல் ஷெல் நிறுவனத் தலைவர் ப்ரயன் ஆண்டர்சன், ஒகோனி மக்களது போராட்டம் கைவிடப்பட்டால் சாரோ-விவாவை விடுவிப்பதாக இவரிடம் பேரம் பேசியுள்ளார். ‘ஷெல் நிறுவனத்தில் வேலை’ என்கிற கையூட்டைப் பெற்றுக் கொண்டு, 9 MOSOP முன்னணியாளர்களைக் காட்டிக் கொடுத்து, அவர்கள் தூக்குமரம் ஏறக் காரணமான 2 சாட்சியங்களும் மிக முக்கியமானவை.

காரலோலோ கோக்பரா என்பவரது சாட்சியும் மிக முக்கியமானது. 1993இல் ஷெல், எண்ணெய் போக்குவரத்துக்கான குழாய் போடும் பணியில் இவரது கிராமத்தை அழித்தது. அதில் இவரது பயிர்களும் சிதைந்து அழிந்தன. இதற்கு எதிராக அக்கிராமத்து மக்கள் போராடினர். அப்போராட்டத்தை ஒடுக்க வந்த, ஷெல் நிறுவனத்தின் ஏவல் நாயான நைஜீரிய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் கோக்பரா தனது ஒரு கையை இழந்தார். ஷெல் நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, சட்டரீதியான விளக்கங்களை இன்னும் அளிக்கவில்லை. மேலும் நிகழ்ந்த குற்றங்கள் அனைத்துக்கும் நைஜீரியா அரசுதான் பொறுப்பு எனவும், தமது வர்த்தக நடவடிக்கைகள் காரணமில்லை எனவும் இந்நிறுவனம் வழக்காடுகிறது.

ஷெல் நடத்திய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஒகோனி மக்களுக்கு பல மில்லியன் டாலர் நட்ட ஈடு வழங்க வேண்டியிருக்கும்! வழக்குத் தொடுத்த ஒகோனி மக்கள் நட்ட ஈட்டுத் தொகையாக எதையும் கோரவில்லை. இவ்வழக்கில் தாங்கள் வெற்றியடைந்தால், அத்தொகையை முடிவு செய்யும் பொறுப்பை நீதிமன்றத்திடமே விட்டுவிட்டனர். “இவ்வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய – சர்வதேசிய சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்ற செய்தியை அறிவிக்கும்!”, என்று ஆயில் சேஞ் இண்டர்நேசனல் இயக்குநர் ஸ்டீபன் க்ரெட்ஸ்மன் கூறியுள்ளார்.

நைஜர் பகுதியில் எண்ணெய் வளங்களைக் கொள்ளை கொள்ளும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட அனைத்து குற்றங்களிலும் ஷெல் நிறுவனத்தின் தடங்கள் பதிந்துள்ளதை நீதிமன்றம் உணரும். மேலும் பல வருட காலமாகத் தண்டனையிலிருந்து தப்பி இராணுவம் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஷெல் நிறுவனம், இன்று தன் மீதான குற்றங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

-நன்றி: தி இந்து (28.05.09)
தமிழாக்கம்: யாழினி

பின்குறிப்பு: 08.06.09 திங்களன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராயல் டச் ஷெல் நிறுவனம் தூக்கலிடப்பட்டு கொன்ற அந்த போராளிகளுக்காக 15.5 மில்லியன் டாலர் கொடுத்து வழக்கை முடித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம் நைஜீரியாவில் நடந்த இந்த படுகொலைகளுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் நல்லெண்ணம் காரணமாக இந்த தீர்வுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்களோ இந்த ரத்தப்பணம் கிடைத்ததே பெரிய வெற்றி என திருப்தி அடைந்துள்ளனர். ஆனால் உண்மையில் இத்தகைய பணத்தை வீசிஎறிந்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சுரண்டலையும், கொலைகளையும் தொடரலாம் என்பதுதான் இந்த வழக்கின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி நைஜீரிய இராணுவம், அரசைப் பயன்படுத்தி இந்நிறுவனம் செய்துள்ள அநீதிகளுக்கு இந்த உடன்படிக்கையின்படி எந்த தண்டனையுமில்லை என்பதே உண்மை

http://www.vinavu.com/2009/07/30/shell/