Language Selection

ஆபிரிக்கா ஒரு இருண்டகண்டமென்று தனபாலன் வாத்தி படிப்பித்தபோது அந்தக்கண்டத்திலேயே தானும் வந்து இருண்டுகிடக்க வேண்டுமென்று நிமலன் நினைச்சுக்கூடப் பாத்திருக்கமாட்டான். ஆபிரிக்காவில்த்தான் இருக்கிறது என அறிந்தேயிராத ஸ்நேகலில் அவன் வந்து விழுந்து ஒரு வருசமும் சொச்ச மாதங்களுமாகிவிட்டது.

ஸ்நேகலை வெளிநாடு என்று இவன் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டான். வெளிநாடென்றால் சிங்கப்பூர்மாதிரி இருக்கோணும், ஓம் இவன் சிங்கப்பூரிலும் ஆறுமாசம் அடைபட்டுக்கிடைந்த கதையும் உள்ளது.

ஸ்நேகலில் வீடென்ற பெயரில் ஒரு மரக்கூட்டுக்கை நிமலனும் இன்னும் பதினாறு பேரும் அடைந்து கிடைந்தார்கள். உண்மையைச் சொன்னால் அடைந்து கிடைக்கவில்லை. தூர இடங்களுக்குப் போகமுடியாட்டிலும் பக்கங்களில பிறீயா திரிய முடிந்தது. ஸ்நேகலில் இருக்கத் தனக்கு விசா இருக்கா இல்லையா என்ற ஒரு அறுப்பும் நிமலனுக்குத் தெரியாது. அதெல்லாம் ஏஜென்சிக்காரனுக்குத் தான் தெரியும். இன்னும் சொல்லப்போனால் ஸ்நேகலில இருந்து தான் எங்கை போகப்போறன் என்ற அறுப்பும் அவனுக்குத் தெரியாது. அதெல்லாம் ஏஜென்சிக்காரனுக்குத்தான் தெரியும்.

எல்லாந்தெரிந்த அந்த ஏஜென்சிக்காரன் ஒரு தமிழனாக இருந்தான். தேவாண்ணை தேவாண்ணை என்று அவனைக்கூப்பிட்டாலும் அவனுக்கு இன்னும் மூன்று பெயரும் மூன்று பாஸ்போட்டும் இருக்கலாமாம் என்று பதினேழு பேர்கள் பேசிக்கொண்டார்கள். தேவாண்ணையும் நிமலன் வந்திறங்கிய நாள்முதல் ஸ்நேகலிலதான் இருந்தார். அவருக்கு ஸ்நேகலில் ஏஜன்சி இல்லாத இன்னொரு தொழிலும் இருந்தது. கிழமையில மூன்று நாள் மொத்தமா மீன்களைப்பெட்டியடிச்சு பிரான்ஸ் ஜேர்மன் சுவிஸ் நாடுகளுக்கு அவர் அனுப்பிக்கொண்டிருந்தார். ஆபிரிக்க மீன்களை, இலங்கையிலிருந்து சுடச்சுட வருகிறது எனச்சொல்லி அங்கு விற்கிறார்களாம் என்றதையும் தேவாண்ணையே சொன்னார். அது உண்மையாகத்தான் இருக்கும். ரேஸ்ற்றில ஒரு வித்தியாசத்தையும் காணமுடியாது. ஆனால் மீன்கள்தான் கொஞ்சம் பெரிசா கொழு கொழு என்றிருந்தது. அதிலும் அறக்குலா மீன்கள் அடைக்கப்பட்ட றெஜிபோம் பெட்டிகள் கிட்டத்தட்ட சவப்பெட்டிகள்மாதிரி இருந்தன. ஸ்நேகலுக்கு வந்த புதிசில் இப்படியொரு பெட்டியில்தான் தேவாண்ணை தன்னை பிரான்சுக்கு அனுப்பப்போகிறாரோ என்று நிமலன் யோசித்திருக்கிறான். ஸ்நேகலில் இருந்து ஆறோ எழு மணித்தியாலத்தில் ஐரோப்பாவின் ஏதாவதொரு ஏயார்போர்ட்டில் தேவாண்ணையின் ஆள் யாராவது தன்னை வெளியே எடுக்கலாம் என்ற அளவுக்கு அந்த யோசனை இருந்தது.

தன்ரை பிசினசுக்கு எடுபிடி வேலைகள் செய்வதுபோக மற்றைய நேரங்களில் லைட்டாக உலாத்தச்சொல்லி தேவாண்ணையே ஓடர் போட்டிருந்தார். அப்பதானாம் பிரெஞ்சு பிடிபடும். “நாங்கள் சுவிசுக்குப்போய் அப்பிடியே அங்கையிருந்து கனடாக்கு போயிடுவம்” என்று சொன்ன நாலுபேரைத்தவிர மிச்சப்பேர் பிரெஞ்சைப்பிடிக்க மார்க்கெட் றோட்டு என்று அலைந்து கொண்டிருந்தார்கள். லொறிக்கும் பஸ்சுக்குமான குரொஸ்சில் பிறந்தமாதிரியான ஒரு வாகனம் அவர்களை ஏற்றி இறக்கியது.

“இந்தப்பிச்சைக்கார நாட்டுக்கை பிரஞ்சு எப்பிடி வந்தது” என்றான் நிமலன். பிரெஞ்சு கதைக்கிறவர்கள் வெள்ளைக்காரர்களா இருக்கவேணும் என்றும் பணக்காரர்களா இருக்கவேணும் என்றொரு பிக்சரை அவன் தனக்குள்ளே போட்டுவைச்சிருந்தான். அதுமட்டுமில்லாமல் தான் ஸ்நேகலுக்கு வந்த ரண்டோ மூன்று மாதத்தில வந்த ரூபன் ஒரு அறிவாளி என்றொரு பிக்சரையும் அவன் போட்டுவைச்சிருந்தபடியால இந்தக்கேள்வியை அவன் ரூபனிட்டைத்தான் கேட்டான். ரூபன் ஒருக்கா தொண்டையைச் செருமிக்கொண்டான். அது அவன்ரை பழக்கம். “காலனித்துவ.. ” என்று தொடங்கிய ரூபன் டக்கென்று இடையில நிற்பாட்டினான். ஏனென்றால் அவனும் ஒரு பிக்சரைப்போட்டு வைச்சிருந்தான் நிமலன் ஒரு மொக்கன் என்று. பிரான்சுக்கு றெஜிபோம் பெட்டியில போற கதையை நிமலன் அவனுக்கும் சொன்ன நாள் அவன் அதைப்போட்டான். ரூபன் அந்தக் குரூப்பில கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்தான். கிட்டத்தட்ட ஒரு ரைம் ரேபிள்போட்டு செய்யிறமாதிரி அவன்ரை நடவடிக்கைகள் இருந்தது. பேச்சும் மற்றாட்கள் மாதிரி படபடப்பா இல்லாமல் தெளிவாத்தான் வரும். அதிலும் அச்சு அசலான தமிழில் வரும். இப்ப கூட ஏதோ சப்பாத்தைப்பற்றிச் சொல்ல வெளிக்கிட்டு இடையில் நிறுத்தியதாகத்தான் நிமலன் நினைத்தான். பிரெஞ்சுக்கும் சப்பாத்துக்கும் என்ன தொடர்பென்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் பிரெஞ்சுக்கும் பதினைந்து கசையடிகளுக்கும் தொடர்பிருக்கிறதும் பிரெஞ்சுக்கும் கட்டுநாயக்கா எயார்போட் அற்றாக்குக்கும் தொடர்பிருக்கிறதும் அவனுக்கு நல்லாத்தெரிந்திருந்தது.

அந்தத்தொடர்புகளுக்கு கொஞ்சக்காலம் முதல் அவன் ஒரு பிரெஞ்சு சிற்றிசனாக சிங்கப்பூரில் தங்கவைக்கப்பட்டிருந்தான்.

0 0 0

நீர் கொழும்புக்குக் கிட்டவான ஒரு கடற்கரையில் இருந்து இத்தாலிக்கு எந்தப்பக்கமாகப் போறது என நேசன் யோசிச்சுக்கொண்டிருந்தபோது இரவாயிருந்தது. ஒரு ட்ரவலிங் பாக்கில மூன்று ஜீன்ஸ் மூன்று சேர்ட் இரண்டு சாரம் போட்டிருக்கிற பென்ரரோட இன்னும் பத்து, மொத்தமா பதினொரு பென்ரர், சித்தலெப்பை விக்ஸ் கொஞ்சம் பனடோல் கார்ட் ஒரு அல்பம், அல்பத்தில அம்மாவின் இரண்டு படங்களும் இருபத்தியிரண்டு அகிலாவின் படங்களுமாக அவன் குந்தியிருந்தான். இன்னும் நாற்பதுபேர் குந்தியிருக்காவிட்டாலும் சப்பாணிகட்டியும் காலை நீட்டியும் இருந்தனர். அவர்களின் ட்ரவலிங் பாக்கிலும் இதே மாதிரிச்சமாச்சாரங்கள் இருக்கலாம். ஆனால் அகிலாவின் படங்கள் இருக்கமுடியாது. பதிலுக்கு சாந்தி, தீபா மற்றும் இன்னோரன்ன பெயர்களையுடைய படங்கள் இருக்கலாம். ஆனால் அதிகமாக மெனிக்கே, சுமுது, லசந்தி மற்றும் இன்னோரன்ன பெயர்களுடைய படங்களே இருக்க சான்ஸ் என்பது இவனுக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது.

திரும்பவும் இத்தாலிக்கு எந்தப்பக்கமாகப் போறது என நேசன் நினைத்தான். நியாயமாகப்பார்த்தால் இந்தக்கேள்வியை யோசிக்கிறவனுக்கு இத்தாலி எந்தப்பக்கம் இருக்கிறதென்று தெரிந்திருக்கவேண்டும். ஆனால் ஆமிக்காரன் சித்திரவதை செய்யாத ஒரு நாடு இத்தாலி என்றதைத்தவிர அவனுக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. நியாயத்தைப்பேசினால் இலங்கை என்று டுக்குட்டி நாடு இந்தியாக்கு கீழே இருக்கிறது என்று தெரியவந்தபோதே அவன் பாடசாலைக்காலங்களை முடித்து, இல்லை இங்கையும் நியாயத்தைப்பேசினால் பாடசாலைக்காலங்களை முறித்து அவன் தச்சுவேலைக்கு எடுபிடியாகப்போய்க் கொண்டிருந்தான். அதைச் சொல்வதற்கும் இந்தியாவிலிருந்து தலைப்பாகையும் தாடியும் வைச்ச ஒருத்தன் வரவேண்டியிருந்தது.

சுழிபுரம் காந்திகடையின் மேல்மாடியில் நேசனின் கையிரண்டையும் பின்னால் கட்டிவிட்டு வெறும்மேலில் சிகரெட்டால் ஒன்பதாவது சூடு போட்டபோது தலைப்பாகைக்காரன் சொன்னான்.

“இன்டியாட கொட்டை மாதிரி இருக்கிற நாட்டில இருந்து கொண்டு கொழுப்பெடுத்தாடா திரியிறீங்க.. சொல்லு வெற்றி எங்கை?” இப்பிடி இரண்டு மூன்று நாளாக இந்த இந்தியாவின் கொட்டைக்கதையை காந்தனுக்கும் அவன் சொல்லியிருக்கிறான். சந்திரனுக்கும் சொல்லியிருக்கிறான் தலா ஏழு சிகரெட் சூடுகளோடு.

மூன்றாவது நாள் இலங்கை இந்தியாக்கு கீழைதான் இருக்கென்று நேசனுக்கு கொன்பேர்ம் ஆகிட்டுது. ஆனால் சீக்கியன் சொன்ன கொட்டைக்கதைதான் விளங்கவில்லை. ஏனென்றால் ஆமிப்பெரியவனுக்குப் பின்னால சுவரில இருந்த பெரிய இந்தியா மப்பில இலங்கை கொஞ்சம் கொஞ்சமா வீங்கிப்போன மாதிரி இருந்தது. அதைத்தான் சீக்கியன் கொழுப்பு என்றானோ..

நாலாவது நாள் நேசனை நாலைஞ்சு பேர் மிதித்தார்கள். சிகரெட் சூடுகள் ஆறாத முதுகில் பூட்ஸ்கால் பட விண் விண் என்று வலித்தது. “ஐயோ சேர் எனக்கு வெற்றியைத் தெரியா சேர்.. நோகுது சேர்.. விட்டுடுங்கோ சேர்.. ” என்று நேசன் கத்திக்கொண்டிருந்த போது, வெற்றி ஊத்தைச்சாறமொன்றுடனும் தலைப்பா ஒன்றுடனும் பின்னால் கரியரில மீன்பெட்டியொன்று கட்டிய சைக்கிளில் “பாரை சுறா சூரை திரளி மீன்.. மீன்…” என்று கத்திக்கொண்டு காந்திகடையைக் கடந்து கொண்டிருந்தான்.

http://sajeek.com/archives/404