Language Selection

புதிய ஜனநாயகம் 2009

இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் சமூகக் கொடுமையாக சாதி இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் தமிழ்நாடு மட்டும், சாதிய ஒடுக்கு முறைக்கெதிராகப் போராடிய முன்னோடி மாநிலம் என்றும், சுயமரியாதை இயக்க பூமி இது என்றும் சொல்வதில் நமக்கெல்லாம் பெருமை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறை என்னவாக இருக்கிறது?

 

 "சமத்துவப் பெரியாரின்' ஆட்சியில் சாதிக்கொடுமை ஒழிந்திருக்கிறதா எனும் கேள்விக்கு மதுரையைச் சேர்ந்த ""எவிடென்ஸ்'' எனும் தன்னார்வ நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு விடையளிக்கிறது.

 

தென்மாவட்டங்களில் சுமார் 85 கிராமங்களில் அந்நிறுவனம் நடத்திய கள ஆய்வில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அன்னதானம் செய்வது அனுமதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் கோவில்களுக்குக் கால்நடைகளைத் தானம் செய்வது ஏற்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் 69 கோவில்களில் நுழைய முடியாது. 72 கோவில்களில் நுழைய முடிந்தாலும், கோவிலுக்குள் வழிபடக்கூடிய பொதுவான இடங்களில் அனுமதி இல்லை. 52 கோவில்களில் இவர்களுக்குப் பரிவட்டம் கட்ட அனுமதி இல்லை. 33 கோவில்களில் தேர் இழுக்க அனுமதி இல்லை. 64 கோவில்களில் பூசை வைக்கவோ, கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சி நடத்தவோ உரிமை இல்லை.

 

54 கோவில்களின் சப்பரமோ, தேரோ இம்மக்களின் தெருக்களிலோ காலனியிலோ வலம் வருவதில்லை. தென்மாவட்டங்களில் கோவில் கொடைகளில் ஆதிக்கச் சாதியினரின் சப்பரங்கள் சுற்றிவரும் பாதைகள் சேரி தவிர்த்த தெருக்களில் மட்டுமே துல்லியமாக தங்களின் ஆதிக்க எல்லையை மறு உறுதி செய்யும் வகையில்தான் உள்ளன.

 

அண்மைக்காலங்களில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்கும் ஒடுக்கப்பட்டோர் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்குவதும் படுகொலைகள் செய்வதும் தொடர்ச்சியாக நடக்கிறது. திருப்பித் தாக்கப்படும் சூழல் நிலவினால் ஆதிக்க சாதியினர், உத்தப்புரத்தில் செய்ததைப் போல கூண்டோடு ஊரை விட்டு வெளியேறி மிரட்டி, அரசு உதவியுடன் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்றனர்.

 

கடந்த ஓராண்டில் தமிழகம் எங்கும் பரவலாக ஒடுக்கப் பட்டோர் மீது இவ்வாறு வன்கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன. அருப்புக்கோட்டை கல்லூரணியில் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலம் நடத்த முயன்ற அருந்ததியினர் மீது சாதிவெறிக் கும்பல் கற்களை வீசித்தாக்கியது.

 

செஞ்சி சொரத்தூர் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரின் கோவில் வழிபாட்டுரிமை வன்னிய சாதிவெறியர்களால் மறுக்கப்பட்டு வந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதித்திமிரை அசைக்கவில்லை. சாமிக்குப் பொங்கல் வைத்த தாழ்த்தப்பட்டோர் மீது போலீசு தடியடி நடத்திப் பலரைக் கைது செய்தது.

 

சேலம் கவுண்டம்பட்டி திöμளபதி அம்மன் கோவிலில் நுழையும் உரிமையை தாழ்த்தப்பட்டோர் நீதிமன்றம் சென்று போராடி வாங்கியதும், அம்மனையே ஆதிக்க சாதியினர் ஒதுக்கி வைத்தனர்.

 

நெல்லை மாவட்டம் படர்ந்த புளி கிராமத்தில் மாரியம்மனை ஒடுக்கப்பட்டோர் வழிபட விடாமல் தேவர் சாதிவெறியினர் தடுத்து வந்தனர். நீதி மன்றத்தில் உரிமை வாங்கி வந்தாலும், தேவர்சாதியினர் கோவிலையே இழுத்துப் பூட்டி சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

 

நெல்லை மாவட்டம் செந்தட்டியில் கோவில் வழிபாட்டுப் பிரச்சினையை ஒட்டி, ஆதிக்க சாதித்திமிர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருவரை கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளது.

 

ஆதிக்கசாதி வெறியர்களைப் பொறுத்த மட்டில், கோவில்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தின் தூண்கள் என்றுதான் கருதுகின்றனர். பக்தி எல்லாம் இரண்டாம் பட்சம்தான். தாழ்த்தப்பட்டோர் கோவிலில் சம உரிமை கேட்டாலோ, சாமியையே சாதிவிலக்கம் செய்யும் அளவிற்கு பக்தியை விட சாதிவெறிதான் கோலோச்சுகிறது.

 

கோவிலில் மட்டுமல்ல, செத்த பிறகு தாழ்த்தப்பட்டோரின் பிணங்களை எரிக்கக் கூட பொது சுடுகாட்டில் சாதிவெறியர்கள் அனுமதிப்பதில்லை. திருச்சி மாவட்டம் திருமலையான் பட்டியில் அரசு நிதியில் கட்டப்பட்ட சுடுகாட்டில் ஆதிதிராவிடர்களின் பிணங்களை எரிக்க சாதி இந்துக்கள் அனுமதி மறுப்பதைக் கண்டுகொள்ளாத காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

 

செய்தியாகப் பதிவாகாத சாதிய வன்கொடுமைகளோ நாள்தோறும் நூற்றுக்கணக்கில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆனால் துணைமுதல்வர் ஸ்டாலினோ, புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 29 ஊர்களில் எழுப்பப்படும் என்று அறிவித்ததும், சாதியை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை இது என தி.மு.க.வின் செல்லப்பிராணி கி.வீரமணி தெளிவு படுத்துகிறார்.

 

கோவில்களில் வழிபாட்டு உரிமை வேண்டிய தாழ்த்தப்பட்டோர் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்தபோதெல்லாம் அதற்கெதிராகப் போராட முன்வராமல், காங்கிரீட் சமத்துவபுரம் சாதியை ஒழிக்கும் என நம்மை நம்பச் சொல்லுகிறது தி.மு.க. அரசு. தலித் விடுதலை எனும் இலட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்ட டஜன் கணக்கான இயக்கங்களும் இத்தகைய கொடுமைகளுக்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடுவதில்லை. மேலும் தாழ்த்தப்பட்டோர் மட்டும் தனியாகப் போராடி சமத்துவ உரிமைகளைப் பெற்றுவிடமுடியாது ஆதிக்கசாதிகளில் இருக்கும் ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் தாழ்த்தப்பட்டோரும் ஒருங்கிணைந்து போராடுவதைத் தவிர இதற்கு மாற்று வழியும் கிடையாது.

 

செங்கதிர்