Language Selection

புதிய ஜனநாயகம் 2009

தனியார் ஆற்றிவரும் ""கல்விச் சேவை'' வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத வகையில் நர்சரி பள்ளிகள் தொடங்கி தனியார் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை கல்வி கட்டணங்களும், கட்டாய நன்கொடைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.

 

சென்னையிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ.பள்ளியில் 6ஆம் வகுப்புக்கு சென்ற ஆண்டு கட்டணம் ரூ.17,000/. அது, இந்த ஆண்டு ரூ.25,025/ஆக உயர்ந்திருக்கிறது என்பதிலிருந்தே இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். 6ஆம் வகுப்புக்கே இந்தக் கதியெனில், பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.

 

இதுவரை "தரமானக் கல்விக்காக' தனியார் கேட்டதைக் கொட்டியழுத பெற்றோர்கள், இன்று நிலைமை கைமீறிப் போனதையடுத்து, வேறுவழியேயின்றி கட்டண உயர்வுக்கெதிராக ஆங்காங்கே பள்ளிகளுக்கு முன் கூடிக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள்.

 

இன்று இந்த தனியாரின் பகற்கொள்ளை குறித்து எழுதாத பத்திரிகைகளில்லை; இதனை கவரேஜ் பண்ணாத தொலைக்காட்சிகளில்லை என்று கூறுமளவுக்கு எல்லாம் பட்டவர்த்தனமான பின்பும், ""புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்'' என வசனம் பேசுகிறது, அரசு! ""இதைப்பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது'' என்கிறார், மாநில ஆரம்பக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு."" கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்'' என்கிறார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல்.

 

வெற்றுச்சவடால்களையும், "திடீர் ரெய்டு' நாடகங்களையும் அரங்கேற்றி, மக்களின் எதிர்ப்புணர்வை மடைமாற்றி நீர்த்துபோகச் செய்ய முயலுகிறது அரசு. அரசுக்கு அறிக்கை அனுப்புவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லாத ஒரு பல்லில்லாத அமைப்பான ஆய்வு குழுவை அனுப்பி கல்வி வியாபாரிகளை "பயமுறுத்துகிறது.'

 

 "மாநிலம் முழுவதும் உள்ள 350க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இது போன்ற சுரண்டல்களால் மூன்றாயிரம் கோடி ரூபாய் வரை கறுப்புப் பணம் கைமாறுகிறது'' எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கிறார், இந்த ஆய்வுக் குழுவின் தலைவர்
பேரா. இராமசாமி. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட ஆய்வுக் கமிட்டி எதற்கு?

 

தனியார் சுயநிதி கல்வி வியாபாரிகள் என்றாலே சாராய வியாபாரி ஜேப்பியார், சாராய உடையார் மட்டும் தானா? டாடா, அம்பானி, ஸ்பிக் முத்தையா, மஹிந்திரா உள்ளிட்ட எண்ணற்ற தரகுப் பெருமுதலாளிகளும்; தி.மு.க.வின் ஜெகத் ரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, நீதிக்கட்சி ஏ.சி.எஸ். தே.மு.தி.க. விசயகாந்த், காங்கிரசு தங்கபாலு போன்ற "மக்களின் பிரதிநிதிகளும்' இந்த பிசினஸில் கால் நனைத்துள்ளனர். இவர்கள்தானே மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.

 

இந்த கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து, இத்தனியார் கொள்ளைக்கு எதிரான "நடவடிக்கை'யை எதிர்பார்க்க முடியுமா என்ன?

 

கடந்த 95ஆம் ஆண்டு, நாடாளுமன்ற மேலவையில், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான "தனியார் பல்கலை மசோதா' ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அவையின் இரு பக்கங்களிலிருந்தும் எந்த எதிர்ப்புமில்லை. ஆனாலும் 14 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட அம்மசோதா இன்றும் நிறைவேறாமல் மேலவையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், ""இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தனியார் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் வகையில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யப்போவதாய் பூச்சாண்டி காட்டியிருக்கிறார்'', மாநில உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.

 

இப்பொழுது "முழித்து'க் கொண்டுள்ள அமைச்சர், இதற்குமுன் கட்டணக் கொள்ளை நடந்தபோதெல்லாம், அதனைத் தடுக்காமல் எதைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்? மேலும், எத்தனைக் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் அதிலுள்ள ஓட்டைகள் வழியே தப்பி ஓடிவிடும் பெருச்சாளிகள் அல்லவா, கல்வி வியாபாரிகள்!

 

நீதித்துறையை நாடி இத்தனியாரின் கொள்ளையை தடுத்துவிடலாம் என நினைத்தால், ஏமாற்றமே மிச்சம்! ""தனியார்மயம் அரசின் பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இது மட்டுமா? சமூக சீர்திருத்த நோக்கத்தோடு தமிழக அரசு வழங்கிவந்த கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, தமிழ் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு, ஆதரவற்ற மற்றும் இளம் கைம்பெண்களுக்கான இடஒதுக்கீடு
ஆகியவற்றிற்குக் குழிபறித்து, கல்வியைச் சமூக நோக்கத்தோடு பார்க்கக்கூடாது எனப்பாடம் சொல்லிக்கொடுத்ததும் இதே நீதிமன்றங்கள்தான்!

 

"14 வயது வரைக்கும் அனைவருக்கும் கட்டாயக்கல்வியை, இலவசக் கல்வியை வழங்க வேண்டும்'' எனச் சொல்கிற இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு, ""கல்வியை பொதுச் சேவை என்பதிலிருந்து, ஹோட்டல், சுற்றுலா போன்ற சேவைத்துறையாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு இத்தகைய சமூகப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்'' என்ற "காட்' ஒப்பந்தத்தின் கட்டளைப்படியே ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

 

 ""எந்த தொழில் ஆனாலும் தனியார் நுழைந்தால்தான் தரமாக இருக்கும்'' என அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஒத்தூதி வந்த நடுத்தர வர்க்கம், இப்பொழுது தனியார் கல்வி முதலாளிகளிடம் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கி கிடக்கிறது! தனியார் மயம் என்பது எத்தகைய அபாயகரமானது, எத்தகைய சமூக விரோதமானது என்பதை இவர்களுக்கு புரிய வைத்திருக்கிறது "கட்டணக் கொள்ளை'!

 

எனவே, அரசிடம் சட்டம் கொண்டு வா, கண்காணி, கட்டுப்படுத்து எனக் கோரிக்கை வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. எதைக் கொண்டு வந்தாலும் அதிலிருந்து தப்பிக்க இத்தனியார் பெருச்சாளிகளுக்கு சொல்லித்தரவும் வேண்டியதில்லை.

 

கல்வி தனியார்மயமாவதை தடுக்காமல் கட்டணக் கொள்ளயை ஒழிக்க முடியாது

 

கல்வி தனியார்மயமாக்கப்படுவதற்கெதிராக தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பிரச்சார இயக்கங்களை நடத்திவரும் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சென்னை மெமோரியல் அரங்கம் அருகிலும் சேலத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஜூன் 15ஆம் தேதியன்று போஸ் மைதானத்திலும் ""கல்வி தனியார்மயத்தைத் தடுத்து அரசுடமையாக்க''க் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

சென்னை ஆர்ப்பாட்டத்தில், ""தனியார் கட்டணக் கொள்ளையால் நேரடியாகப் பாதிக்கப்படாத இந்த மாணவர்கள் பிறருக்காக வெயிலில் நின்று கத்திக்கொண்டிருக்கின்றனர். இத்தனியாரின் கொள்ளையால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பெற்றோர்கள் எங்கே போனார்கள்? '' என்ற கேள்வியெழுப்பி மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து போராடவேண்டும் என வலியுறுத்திப் பேசினார், ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை முகமது ரபீக்.

 

பு.மா.இ.மு. கலைக்குழுவினர் கல்வி தந்தைகளாக அவதாரமெடுத்து நிற்கும் கொள்ளைகாரர்களைத் திரைகிழித்தும், ராபின் தொடங்கி விவேக் வரை பல மாணவர்களின் உயிரைப் பறித்த இக்கொலைகாரர்களை அம்பலப்படுத்தி நடித்த வீதி நாடகமும், ""திருத்த முடியுமா, ஜேப்பியாரைத் திருத்தமுடியுமா? தனியாரின் கொள்ளையைத் தடுக்கமுடியுமா?'' போன்ற பாடல்களும் தனியார்மயத்தின் கோரமுகத்தைக் கண்முன் நிறுத்தின.

 

சேலத்தில் பு.ஜ.தொ.மு. கலைக்குழுவினர் ""மருத்துவக்கல்வி ரூ. 75 லட்சம், பொறியியல் கல்வி ரூ. 50 லட்சம்!'' எனத் தள்ளுவண்டியில் கூவிக்கூவி வியாபாரம் செய்வது போல நடத்திய ""கல்விச்சந்தை'' எனும் வீதி நாடகமும், ""ஆனா ஆவன்னா, காசிருந்தா இனா ஈயன்னா'' என்ற நையாண்டிப் பாடலும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

 

"புரட்சிகர அமைப்புகளுடனும் கல்வியாளர்களுடனும், மாணவர்களும் பெற்றோர்களும் கைகோர்த்து களமிறங்கிப் போராடுவதைத் தவிர, இதற்கு வேறு தீர்வில்லை'' என்ற அறைகூவலோடும், விண்ணதிரும் முழக்கங்களோடும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் புதிய நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.

— பு.ஜ.செய்தியாளர்