Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது அகமதிநிஜாத் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து அங்கு நடந்து வரும் போராட்டங்கள், ஈரான் உள்நாட்டுப் போரில் விழுந்துவிடுமோ என்ற ஐயத்தை உலகெங்கும் தோற்றுவித்திருக்கிறது. அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் தோற்றுப் போய் விடுவார் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக, அவர் ஒரு கோடியே பத்து இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மிகப்பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

 

மேற்குலகாலும், ஈரானின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தாலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மிர் ஹுசைன் மௌசாவி, ""இத்தேர்தலில் மோசடிகள் நடந்திருப்பதாகவும், அகமதிநிஜாதின் வெற்றி திருடப்பட்ட வெற்றி'' என்றும் குற்றஞ்சுமத்தி, தனது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்.

 

தேர்தல் முடிவுகளை ஆதரித்தும், எதிர்த்தும் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறத் தொடங்கியவுடனேயே, ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி, ""மௌசாவியின் குற்றச்சாட்டுகள் குறித்து பரிசீலிக்கப்படும்; சில வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குகள் எண்ணப்படும்'' என அறிவித்தார். சாதாரண உள்நாட்டுப் பிரச்சினையாக முடிந்திருக்க வேண்டிய இவ்விசயத்தை, மேற்குலகப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஈரானில் ஏதோ ஜனநாயகப் படுகொலை நடந்துவிட்டதைப் போல ஊதிப் பெருக்கின. ஈரானில் எப்படியாவது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திவிட முயன்று வரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுகளுக்கு, இப்பிரச்சினை அவல் கிடைத்தது போலானது.

 

மேற்குலகின் ஆதரவும், ஈரானில் அரசியல் செல்வாக்கு கொண்ட மத குருமார்களில் ஒரு பிரிவினரின் ஆதரவும் தனக்குக் கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்ட மௌசாவி தேர்தல் முடிவுகளை ரத்து செய்துவிட்டு, புதிய தேர்தல் நடத்த வேண்டும் எனப் புதிதாகக் கோரத் தொடங்கினார். இதனிடையே, உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா காமேனி, ""தேர்தலில் முறைகேடுகள் நடக்கவில்லை'' என அறிவித்து, அகமதி நிஜாதின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இன்னொருபுறம், மௌசாவியின் ஆதரவாளர்கள் தலைநகர் டெஹ்ரானையும், டெஹ்ரான் பல்கலைக்கழகத்தையும் மையப்படுத்தி நடத்திவரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசின் துணை இராணுவப் படைகள் இறக்கிவிடப்பட்டன. மேற்குலக ஊடகங்கள் இந்த அடக்குமுறையைப் படம் பிடித்துக்காட்டி, உலகமக்களிடம் எதிர்த்தரப்புக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.

 

ஈரானின் அரசு கட்டமைப்பு முற்றிலும் வேறுபட்ட தன்மை கொண்டது. அந்நாட்டின் அதிபரும் நாடாளுமன்றமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மத குருமார்களின் கட்டுப்பாட்டை மீறி அதிபரும் நாடாளுமன்றமும் தன்னிச்சையாக நடந்து கொள்வதற்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பல்வேறு அமைப்புகள் அரசின் அங்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

 

மத குருமார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆயுட்காலத்துக்கும் நியமிக்கப்படும் உயர்மட்டத் தலைவர்தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபருக்கும் மேலானவர். அரசு, நிர்வாகம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் உயர்மட்டத் தலைவரின் முடிவுதான் இறுதியானது.

 

290 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றமும், 86 மதகுருமார்களை உறுப்பினர்களாகக் கொண்ட நிபுணர்களின் அவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நிபுணர்களின் சபைதான் உயர்மட்டத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் கொண்டது. நிபுணர்களின் அவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எட்டு ஆண்டுகளாகும்.

 

12 மதகுருமார்களை உறுப்பினர்களாகக் கொண்டது, காப்பாளர் அவை. இவ்வுறுப்பினர்களில் ஆறுபேர் உயர்மட்டத் தலைவராலும், ஆறு பேர் நீதிமன்றத்தாலும் நியமிக்கப்பட்டு, இந்த அவை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று இயங்குகிறது. இஸ்லாமியச் சட்டங்களுக்கு முரணாக நாடாளுமன்றத்தில் ஏதாவது சட்டமியற்றப்பட்டால், அவ்வகையான சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரம் கொண்டது, காப்பாளர் அவை.

 

நாடாளுமன்றத்திற்கும் காப்பாளர் அவைக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை, பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக ஆலோசனை அவை நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வது நீதிமன்றத்தின் முக்கியமான பணியாகும். இராணுவம் ஒருபுறமிருக்க, மத குருமார்களின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட புரட்சிகர காவல் படையும், பாஸ்ஜி போராளிகள் படையும் அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. சுருக்கமாகச் சொன்னால், ஈரானில் நடைபெறும் ஷியா பிரிவு முசுலீம் மத குருமார்களின் சர்வாதிகார ஆட்சியை மூடி மறைக்கும் திரையாகவே நாடாளுமன்றமும், தேர்தலும் பயன்படுகின்றன.

 

முதலாளித்து நாடுகளில் அதிபரையோ, பிரதமரையோ தேர்ந்தெடுப்பதைத் திரைமறைவில் முதலாளிகள் தீர்மானிப்பதைப் போல, ஈரானில் யார் அதிபராவது என்பதை மத குருமார்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அந்நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முகமது அகமதிநிஜாத்திற்கு, உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா காமேனியும், அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புரட்சிகர காவல் படையும் ஆதரவளித்தன. அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மற்ற மூவரில் சீர்திருத்தவாதியாகக் கருதப்படும் மௌசாவிக்கு நிபுணர்களின் அவையின் தலைவரும், முன்னாள் அதிபருமான ஹஷேமி ரஃப்சஞ்சானியும், சீர்திருத்த மதகுருமார்களின் அமைப்பும் ஆதரவளித்தனர்.

 

தேர்தல் மோசடிகள் இல்லாத முதலாளித்துவ அதிகார அமைப்புகளுக்கான தேர்தல்களைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலே கூட, ஜுனியர் ஜார்ஜ் புஷ் முதன்முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, அத்தேர்தலில் ஏகப்பட்ட மோசடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இக்குற்றச்சாட்டுகள் முழுமையாக, முறையாக விசாரிக்கப்படாமலேயே அந்நாட்டு நீதிமன்றத்தால், ஜார்ஜ் புஷ்ஷின் தேர்வு உறுதி செய்யப்பட்டது.

 

ஈரான் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் அரசே அகமதிநிஜாத்துக்குச் சாதகமாக நடந்து கொண்டதற்குப் பல மறுக்க முடியாத ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அவர் பெற்றுள்ள வாக்குகள் அனைத்துமே மோசடியானவை என்று கூறிவிட முடியாது. இத்தேர்தலில் நான்கு கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. அகமதிநிஜாத் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில், மௌசாவியைத் தோற்கடித்துள்ளார். மௌசாவியின் ஆதரவாளர்கள்கூட 50 நகரங்களில் ஏறத்தாழ 30 இலட்சம் வாக்குகளில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றுதான் கூறுகிறார்கள். இந்த 30 இலட்சம் வாக்குகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட, அகமதிநிஜாத்தின் வெற்றி தீர்மானகரமான ஒன்றுதான்.

 

அதிபர் தேர்தலையடுத்து, ஈரானின் ஆளும் வர்க்கம் இரண்டாகப் பிளவுபட்டுக் கிடப்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. இப்பிளவிற்கு தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகளைக் காரணமாகக் கூறுவது, காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையைப் போன்றது. ஈரானின் ஆளும் கும்பல்களுக்குள் நெடுங்காலமாகவே நடந்து வந்த அதிகாரப் போட்டி, தேர்தலுக்குப் பின் பகிரங்கமாக வெடித்துவிட்டது என்பதே உண்மை. ஈரான் சமூக அமைப்பேயே இரு கூறாக வகுந்து போடும் அளவிற்கு, இப்பிளவு தீவிரமடைந்துள்ளது.

 

 ""சிறுவீத உற்பத்தியாளர்களுக்கு எளிதில் கிடைக்கும்படியான நுண்கடன் திட்டங்கள்; பெருவாரியான ஏழை மக்களுக்குப் பயன் தரும்படியான விரிவாக்கப்பட்ட சுகாதாரத் திட்டம்; தனியார் நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளை ஏழைகள் கூட வாங்கிக் கொள்ளும் வாய்ப்புகளை அளிக்கும் பங்குச் சந்தை கொள்கை'' போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களின் மூலம் கிராமப்புற ஏழைகள், சிறு முதலாளிகள், அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார், அகமதிநிஜாத்.

 

சீர்திருத்தம், தனிநபர் சுதந்திரம் போன்ற முதலாளித்துவ சொல்லாடல்களின் மூலம் புதுப் பணக்கார கும்பல், நகர்புறத்து நடுத்தர வர்க்கம், மாணவர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றுள்ளார், மௌசாவி.

 

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிக் குழுவிற்கும் மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவளிப்பதிலும்; யுரேனியத்தைச் செறிவூட்டும் தொழில்நுட்பத்தை ஈரான் பெறும் நோக்கத்திலும் அதிபர் அகமதிநிஜாத் பின்வாங்க மறுத்துவிட்டதோடு, அவர் இந்தப் பிரச்சினையில் அமெரிக்கா இங்கிலாந்து இசுரேல் கூட்டணிக்கு எதிராக நிற்கிறார்.

 

மௌசாவியும் அவரது ஆதரவாளர்களும் சர்வதேசரீதியில் ஈரான் தனிமைப்பட்டுக் கிடப்பதைத் தடுப்பதற்கு, மேற்குலக ஏகாதிபத்தியங்களோடு சமரசம் செய்து கொள்ள வேண்டும் என முன் மொழிகின்றனர். இதைத்தான் அவர்கள் சீர்திருத்தம் எனக் குறிப்பிடுகின்றனர். அகமதிநிஜாத்தை சர்வாதிகாரி எனத் தூற்றும் மௌசாவியின் ஆதரவாளர்கள், இதற்கு ஆதாரமாக தேர்தல் சமயத்தில் அவர் கைபேசிகளில் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்குத் தடை விதித்ததையும்; ஈரான் நாட்டுப் பெண்கள் எந்த மாதிரி உடையணிய வேண்டும் என்பதில் தொடங்கி ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதற்கு ஆதரவான இஸ்லாமியச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது முடிய பல ஆதாரங்களை முன் வைக்கிறார்கள்.

 

அகமதிநிஜாதின் மீதான சீர்திருத்தவாதிகளின் குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாதுதான். ஈரானின் பொருளாதாரம் சரிய சரிய, அவர் தனது ஓட்டு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள கவர்ச்சிவாத நடவடிக்கைகளிலும், மதப் பழமைவாத நடவடிக்கைகளைத் தூசு தட்டிக் கொண்டு வருவதிலும் தஞ்சமடைந்தார் என்பது உண்மைதான்.

 

அதேசமயம் சீர்திருத்தவாதிகளும் ஜனநாயகத்தின் காவலர்கள் இல்லை. அதிகாரப் போட்டியில் ஓரங்கட்டப்பட்ட மத குருமார்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்திற்குக் குரல் கொடுப்பதைக் கேலிக்கூத்து என்று குத்திக்காட்டாமல் இருக்க முடியுமா? ""நாங்கள் ஆட்சியைப் பிடித்தால்,ஈரான் மக்களின் மீது மதகுருமார்களின் சர்வாதிகாரத்தைத் திணிக்கும் அரசுக் கட்டøமப்புகளை ஒழித்துக் கட்டுவோம்'' என்று இந்த சீர்திருத்தவாதிகள் வாக்குறுதி கொடுக்கவில்லை; மாறாக, இசுலாமியப் புரட்சிக்கு நாங்கள் எதிராகச் செயல்பட மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து, உயர்மட்டத் தலைவர், புரட்சிகர காவல் படை ஆகிய அமைப்புகளின் நம்பிக்கைøயப் பெற முயன்றார்கள். சீர்திருத்தவாதிகளை ஆதரிக்கும் ஈரான் இளைஞர் பட்டாளத்தின் ஜனநாயகக் கோரிக்கை எல்லாம் ஜீன்ஸ் பேண்ட் அணிவதையும்,வலைதளத்தில் ஃப்ரஸ் பண்ணும் உரிமை பெறுவதையும் தாண்டிச் செல்லவில்லை.

 

அகமதிநிஜாத் தேர்தலில் "தில்லுமுல்லு' செய்ததைக் "கடமையுணர்வோடு' கண்டிக்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியங்கள்தான், 1953ஆம் ஆண்டு, ஈரான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது மொஸாடெக் அரசை,அந்த அரசு ஈரானின் எண்ணெய் வளத்தை நாட்டுடமையாக்க முயன்றதற்காகவும், ஈரானின் கொடுங்கோல் மன்னன் ஷாவின் அதிகாரங்களுக்கு வரம்பிட முயன்றதற்காகவும் அரண்மனைப் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்தன. அமெரிக்க அடிவருடி ஷாவின் கொடுங்கோலாட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, மத அடிப்படைவாதிகள் தேசியவாதிகள் தலைமையில் அமைந்த தேசிய அரசைத் தூக்கியெறிய, சதாம் உசேனைத் தூண்டிவிட்டு, ஈரான் மீது எட்டாண்டு கால போரைத் திணித்ததும் அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்.

 

மௌசாவியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதைக் கண்டித்து எழுதும் மேற்குலக ஊடகம், பக்கத்தில் ஈராக் மக்கள் அமெரிக்க இராணுவத்தால் நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்படுவதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆப்கான் மீது அமெரிக்கா கொத்துக் குண்டுகள் வீசுவதைக் கண்டு கொள்வதில்லை. ஈரான்ஈராக் போரின்பொழுது, ஈரான் மக்களின் மீது வீசப்பட்ட இரசாயனக் குண்டுகள் சதாம் உசேனுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டவை என்பது பற்றியும் கள்ள மௌனம் சாதிக்கின்றன, இந்த ஊடகங்கள்.

 

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உரிமை ஈரானுக்கு உண்டு என்பதை அங்கீகரிக்க மறுத்த பெருமையைக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஈரானிடம் அணுகுண்டு தயாரிக்கும் ஆற்றல் இல்லை என சர்வதேச அணுசக்தி கமிசன் சான்றளித்த பிறகும், அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஐ.நா. மன்றத்தின் மூலம் ஈரான் மீது சட்டவிரோதமான பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்தது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்திற்கு மன்மோகன் சிங் கும்பல் ஒத்துப் பாடியது தனிக்கதை. இப்படி ஈரானின் இறையாண்மையை எள்ளளவும் மதிக்காத மேற்குலக ஏகாதிபத்தியங்கள், இப்பொழுது ஈரானின் எதிர்த்தரப்பின் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனம்.

 

அமெரிக்காவைப் பொருத்தவரை ஈரானில் ஓர் அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி, அந்நாட்டில் தனக்குச் சாதகமான கைக்கூலி அரசை நிறுவிவிட வேண்டும் என்பதற்கு அப்பால்,அதற்கு வேறெந்த "ஜனநாயக' நோக்கமும் கிடையாது. ஜுனியர் ஜார்ஜ் புஷ் ஆட்சியிலிருந்தபொழுது ஈரான் மீது படையெடுக்கத் திட்டம் போட்டு, அந்நாட்டை ""தீமையின் அச்சு நாடு'' எனப் பழி சுமத்தினார், அவர். ஆனால் அமெரிக்கா, ஈராக் போரில் ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டதால், ஈரான் மீது போர் தொடுக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

 

அடுத்ததாக, ஈரானின் அணு ஆராய்ச்சி நிறுவனங்களின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தத் திட்டம் போடப்பட்டது. ஆனால், ஆப்கானில் அமைதியை நிலைநாட்ட ஈரானின் தயவு தேவையாக இருந்ததால், அத்திட்டமும் கைவிடப்பட்டது.

 

எனினும், சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் போல், ஈரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தும் சதித் திட்டத்தை தயாரித்து, அதற்காக 40 கோடி அமெரிக்க டாலர்களையும் ஒதுக்கிவிட்டுப் போனார், ஜார்ஜ் புஷ். முசுலீம்களுக்கு அமெரிக்கா எதிரியல்ல எனக் கூறிக் கொண்டு திரியும் ஒபாமாவின் ஆட்சியிலும்கூட 40 கோடி அமெரிக்க டாலர் சதித் திட்டம் கைவிடப்படவில்லை.

 

ஜார்ஜியா போன்ற முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் தனக்குச் சாதகமான தரப்பைத் தேர்தல்களின் மூலம் பதவிக்குக் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அதே உத்தியை ஈரானிலும் செயல்படுத்த முனைகிறது. அந்த அடிப்படையில்தான் மௌசாவியின் ஆதரவாளர்களுக்கு ஊடகங்கள் மூலம் விரிவான விளம்பரத்தைத் தேடிக் கொடுத்து, உலக மக்களின் முன் உண்மைகளைத் திரித்துப் போட முயன்று வருகிறது.

 

மௌசாவி தரப்பினர் கூறுவது போல, ஈரானின் பிரச்சினை, ""அகமதிநிஜாதின் சர்வாதிகாரமா? இல்லை, சீர்திருத்தமா?'' என்பதல்ல. மாறாக, ஈராக், சவூதி அரேபியா போல ஈரான் அமெரிக்காவின் தொங்குசதை நாடாக மாறுவதா? இல்லை, சுதந்திரமாக இருப்பதா? என்பதுதான் பிரச்சினையின் மையம்.அகமதிநிஜாத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள மக்கள், ஈரான் இறையாண்மையுள்ள நாடாக இருக்க வேண்டும் என்பதையும் மனதில் இருத்திதான் வாக்களித்துள்ளனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் ஈரான் மக்கள் தங்கள் சொந்த முயற்சிகளின் மூலமும், உலக மக்களின் ஒத்துழைப்போடும் ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுப்பார்கள்; அதற்கு மத குருமார்கள் தடையாக இருப்பதை உணரும்பொழுது, மத சர்வாதிகார ஆட்சியையும் தூக்கியெறிவார்கள்.

 

 · செல்வம்