10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

கருணா-பிள்ளையான்கள் கட்டமைக்கும் அதிகாரம்...

இதுள் முடக்கப்படும் புலம்பெயர் ஊடகச் சுதந்திரம்

நாம் இன்று பொய்யுரையையும், புகழ்பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

 

 

 

 

 

பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.எம்மினத்துள் ஊடுருவியுள்ள பாசிசக் கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாக மக்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இதற்கு நல்ல உதாரணம் கோத்தபாய இராஜபக்ஷ.இந்த மனிதன் கடந்த காலங்களில் படு கேவலமாகக் கருத்துச் சுதந்திரத்தின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகித்தவர்.இப்போதும் அதையே தொடர்பவர்.சுடர் ஒளி பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்து, படு கேவலாகச் சொல்லாடி இழிமைப் படுத்தியவர்.இவரது காலடியில் கிடக்கும் கருணாவினது ஏவல் நாய்கள் இப்போது அதிரடி-இலங்கை நெற் போன்ற ஊடகவியலாளர்களை மிகக் கேவலமாகக் கருத்தாடி ஒடுக்குவதற்கான முனைப்பில் சதிராட்டஞ் செய்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.இதைத் தோழர் இரயாகரன் இங்கே கண்டித்துஅம்பலப்படுத்துகிறார்.
 
இப்போது, மக்கள் நலன் மறுத்த முன்னாள் ஆயுதக்குழுக்கள் தமக்குள் பாதாளவுலக மாபியாக்களைத் தோற்றுவித்து முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தும்,தமக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பொதுமனிதரை-ஊடகங்களை ஒடுக்கவும் மீளவும் அதே வன்முறையில் தமிழ்ச் சமுதாயத்தையே உளவில் ஒடுக்குமுறைக்குள் தள்ளி,அவர்களது சிவில் நகர்வுகளை முடக்குவதற்கு முனைகிறார்கள்.புலிகள் அழிந்தாலும் அதன் எச்சம் கருணா-பிள்ளையான் எனத் தொடரத்தாம் செய்கிறது...
 
இத்தகைய அராஜகத்தனமான அரசியல் நடாத்தை, மகிந்தாவின் கழுத்துத் துண்டில் தொங்கியபடி அரசியல் நடாத்தும் கருணா-பிள்ளையான் குழுக்களால் நடந்தேறுகிறது.இவ்வகை அரசியலுக்கு முன்னோடிகளான புலிகள் இப்போது, இவர்களது வடிவில் பாசிச அரசியலை நடாத்துகிறது!மறுபுறமோ,தமிழர்களை "ஜனநாயக மயப்படுத்தும்"திரு.டக்ளஸ் மாத்தையாவோ யாழ்ப்பாணத்தில் சுவர்களுக்கு "ஜனநாயகத்தை"ப் பாடமெடுப்பதில் அங்கும் அராஜக அரசியலுக்கு முண்டுகொடுக்கிறார்.இது, எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது!இந்த இலட்சணத்தில்"நாமும் வாழ்ந்து,நமது மக்களையும் வாழ வைப்போம்"என்பதும்,"உரிமைக்குக் குரல் கொடுப்போம்,உறவுக்குக் கரங் கொடுப்போம்"என்பதும் புதிய இரக அராஜகக் கட்டுமானத்தின் அறைகூவலாக முடிகிறது.
 
இதையேதாம் "புதிய இலங்கையைக் கட்டுவதாக"க் கருணா பல்லிளித்துக் கூறி, எமக்கு முன் தூஷணமாகக் காறி உமிழ்கிறான்!இவனது குழுவோ மக்களது செல்வத்தை மகிந்தாவோடிணைந்து கொள்ளையடிப்பதில் இலங்கையிலிருந்து ஐரோப்பாவரை தொடர்புகளை வைத்துத் தமிழ்பேசும் மக்களை மொட்டையடிக்கிறது.தமிழ்பேசும் மக்களது அரசியல் உரிமைகளை இதற்காக மகிந்தாவுக்குப் பட்டயமெழுதிக் கொடுத்தும் உள்ளது.இது,பிரதேசரீதியான பிரிவினையைத் தூண்டவும் முனைந்து அமெரிக்க மேலாதிக்கத்தின் கனவையும் நிதர்சனமாக்கியது.இந்தக் கருணாவென்ற துரோகிக்குப் "புதிய இலங்கை-கிழக்குச் சுதந்திரம்" ஒரு கேடா?தூ...
 

 
இன்றைய இலங்கையில், இத்தகைய ஆயுதக் குழுக்களது அராஜ அரசியலானது தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது.இவற்றுக்குத் தலைமை தாங்கும் டக்ளஸ்போன்ற அரசியல் மாபியாக்களோ இதை மறுத்தபடி தமிழ்பேசும் மக்களுக்கு ஜனநாயகம் சொல்லக் கருணாவென்ற முன்னாள் புலிப் பயங்கரவாதி-பாசிசவாதி"புதிய இலங்கையை கட்டியெழுப்புவது"என்ற தனது கொச்சை அரசியலுக்குப் புதிய விளக்கமாக இன்று தூஷணம் நமது காதுகளை எட்டுகிறது.தமக்கு எதிரானவர்களை-தமது அராஜகத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்களைக் கொச்சைத் தனமாக ஏசியும்-மிரட்டியும்,கொலைகள் புரிந்தும் அடக்கிய புலிகள், இன்று முழுமொத்தச் சமுதாயத்தையுமே அநாதைகளாக்கி அடிமைப்படுத்திச் சென்றதன்பின்,அவர்களது எச்சங்கள் மேலும் அதே கதையைத் தொடர்வது நமது காலத்தில் நமக்கு விடிவில்லை என்பதை மீளவும் உறுதிப்படுத்துகிறது.
 
எந்தக் காரணத்தையும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்குச் சொல்லமுடியாது.எந்தக் காரணத்தையும் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொல்வதற்குச் சொல்லமுடியாது!முன்னாள் ஆயுதக் குழுக்களது ஊடகங்களாகவிருந்த அதிரடி.கொம் மற்றும் இலங்கை நெற் போன்ற ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் தமக்கு ஏற்பட்ட அராஜக ஒடுக்குமுறைக்காக "இப்போது" குரல் கொடுக்கின்றன.
 
இத்தகைய ஊடகங்கள்,தாம்சார்ந்த ஆயுதக்குழுக்களாலும் மற்றும் புலிகளால் பாதிக்கப்பட்ட மாற்றுக் கருத்தாளர்கள்-படைப்பாளிகள் குறித்து எப்பவும் வாய் திறந்தவர்களில்லை.எனினும்,இன்று இவர்களது குரல்களுக்கெதிராகவும்,இவர்கள் முன்வைக்கும் முரண்பாடுகளுக்கெதிராகவும் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் அராஜகத்தைக் கட்டவிழ்வுக்கும் கருணாவினது கொலைவெறி அரசியலைக் குறித்து நாம் வன்மையான கண்டனங்களைப் பதிகின்றோம்!
 
அராஜகம்,ஒருபோதுமே ஏற்புடைய அரசியலாக முடியாது.புரையோடிப்போன இலங்கைப் பாசிச அரசினது பக்க விளைவுகளாக இவை மேலும் நிறுவனமயப்படுமானால், முழுமொத்த மக்களுக்மே இத்தகைய அரசுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அடிமையாவதில் முடியும்.
 
இலங்கையர்களதும்-மிகிந்தா குடும்பத்தினதும் உலகப் பார்வையானது மாற்றாந்தோட்டத்தில் மல்லிகைக்கு மணமிருப்பதாகக் கருதுவதில்லை.ஒற்றைத் தலைமையும்-அதைச் சுற்றித் துதித்திருப்பதும் ஆங்கிலேயனிடம் கைகட்டிக் காரியமாற்றிய மனங்களின் கால நீட்சிதான்.அந்தக்காலத்தில் தவமிருந்து பெற்ற அதிகாரத்துவத்தை மீளச் சுவைப்பதில் இத்தகைய அதிகாரவர்க்கமானது தம்மைத் தமிழரின் மீட்பர்களாகவும்-ஒன்றுபட்ட இலங்கையின் புத்திரர்களாகவும் காட்டிக் கொள்வதில் எந்தவியப்புமில்லை.
 
கருணா-பிள்ளையான்,டக்ளஸ்போன்ற இழி மானிதர்கள் உலகெங்கும் எவர் பெயராலும் -எதன் பெயராலும் அராஜகத்தையும்,அவலத்தையும் ஏற்படுத்தித் தமது வாழ்வாதாரங்களையும்,செல்வத்தையும் காத்துக் கொண்டு,மேலும் மக்களின் வரிப்பணத்தைச் சொந்தச் செல்வமாகக் குவித்து வருகிறது.இத்தகைய ஒரு தேவையானது மீளவும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைப்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளது.இவர்களே மகிந்தாவால் தத்தெடுக்கப்பட்டு,அவர் குடும்பத்துத் தாதாக்களாகத் தமிழ் மக்களுக்குள் புலிப்பாணிப் பாசிசத்தைத் தகவமைக்க இப்போது, அராஜகத்தைக் கட்டவிழ்து விடுகிறார்கள்.இஃது, வருந்தத் தக்கது மட்டுமல்ல தடுத்து நிறுத்துவதும் அவசியமானது!
 
எனவே,அராஜகக் கொலைகளுக்கு-உளவியற்றாக்குதலுக்கு-அச்சமூட்டலுக்கு எந்தக் காரணமும் கற்பிக்க முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும-அராஜகத் தாக்குதல்களை-அச்ச மூட்டல்களை; ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத்"திருத்திய"நேர்த்தியான-அவசியமான அரசியல் என்பாரானால்,அவர் கடைந்தெடுத்த "கொலைக் கிரிமனல்"என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
 
பாசிசத்துக்குரிய இறுமாப்பும்-அதிகார ஆதிக்கவாதமும்-ஆயுதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்தக் கருணாவகை ஆதிக்க உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இதற்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாகியுள்ளது.சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப்பூர்சுவா எண்ணங்களாலும்-ஆயுத ஆதிக்கத்தாலும் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு எந்தக் கொம்பனாலும் போட்டியிட முடியாது.இஃது, தமது எஜமானர்களுக்காக ஆயுதத்தையும்.அராஜகத்தையும் முன்நிறுத்தி, வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு தனிநபர் வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்.இன்று புலம் பெயர் தளத்தில் இதற்கெதிராகக் குரல் கொடுக்கும் இணையத் தளங்களுக்கு,அவைகளுக்கு எழுதும் பத்திரிகையாளர்களுக்கு நேரும் வன்கொடுமை இத்தகைய தெரிவின் தொடர்ச்சியே!
 
அதிரடி.கொம்,இலங்கை நெற் செய்தியாளருக்கு ஏற்படும் அச்சமூட்டல்-அதிகாரத்தனமிக்க பாசிச மொழியூடாகக் கூறப்படும் உளவியற் தாக்குதலானது நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.ஆனால், நமது மக்கள்? பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?
 
கடந்தகாலத்தில் அவர்கள் தமது உயிர்-உடமை அனைத்தையும் சிங்கள-புலிப்பாசிசக்கூத்துக்குத் தாரை வார்த்தவர்கள்.
 
அன்று,தமிழ் மொழிமீதான பற்றுறுதி தம் உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்த கல்லொழுங்கைய+டாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்தத் தமிழ் உணர்வு!தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தமிழ் உணர்வே.ஆனால், அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடியொளித்துவிட்டது.இத்தகைய அளப்பரிய தியாகஞ் செய்த மக்களது அழிவிலிருந்து அரசியல் செய்யும் கருணா-பிள்ளையான்களின் காடைத்தனம் முறியடிக்கப்பட்டாகவேண்டும்.இதை, இனிமேல் மௌனமாகவிருந்து அனுமதிக்க முடியாது.புலிகளுக்கு மண்டியிட்டு அழிவைக்கண்டவொரு இனம் நாம்.எனவே,கருணாவினது காலை ஒடிக்கும் எதிர்ப்பை வெகுஜனப்படுத்தி மக்களை விழிப்படைய வைப்பது அவசியம்.
 
யார்மீதும் சவாரிசெய்த புலிவகை அரசியலானது இன்று கருணா-பிள்ளையான் ஈறாக எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது-மிரட்டுகிறது,அடிமைப்படுத்த முனைகிறது!இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள்(கருணாவுக்கு-பிள்ளையானுக்கு,டக்ளஸ்சுக்கு வால் பிடிக்கும் புலம் பெயர் குழுக்கள-தனிமனிதர்கள்) தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோட தமது எமானர்களுக்காக வாலாட்டுகிறார்கள்.இத்தகைய மனித்துவமற்ற அராஜகக் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தம்மை"ஜனநாயகத்தின் பெயரால்"அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தமது அரசியலை-பரப்புரைகளை முன்னிலைப் படுத்திவிடுகிறது.இதற்காக "அம்மான்"ஆட்டுக்குட்டியென ஆயிரத்தெட்டு இணைய ஊடகங்கள் புற்றீசல்போல் முளைக்கின்றன.
 
இதுதான் இன்றைய அவலமான சமூக உளவியல்!
 
ஒவ்வொருவரும் தமது அராஜகத்தை நியாயப்படுத்த தமிழ் மக்கள்-பிரதேசம் எனப் பல்வேறு நாமத்துக்கூடாகப் பரப்புரைகளைச் செய்து தமிழ்பேசும் சமுதாயத்தின் இருப்பையே அசைக்கின்றார்கள்.இவர்கள்அனைவரும்,தத்தமது எஜமானர்கள் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் "ஜனநாயம்,சுதந்திரம்,சுயநிர்ணயவுரிமை"யென்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.இதுள், அதிரடியோ அல்லது இலங்கை நெற்றோ விதிவிலக்கல்ல!ஆனால்,ஊடகங்கள் மீது தொடக்கப்படும் அராஜகம் உண்மைகளைப் புதைப்பதற்கு எடுக்கப்படும் அரசியல் அராஜகம் என்பதால் அதை எதிர்கொள்ளும் அதிரடி-இலங்கைநெற்றுக்காக நாம் குரல் கொடுக்கின்றோம்.இஃது, அவர்களது அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்து அல்ல.மாறாக,கருத்துச் சுதந்திரத்தை நிலைப்படுத்துவதற்கானது.
 
புலிகளாலும்-மகிந்தா குடும்பத்தாலும் பாசிசம் தன்னை வலுவாகத் தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது.இதுவே,இலங்கையிலிருந்து தொலைபேசியூடாகச் சவிச்சர்லாந்தில் இருக்கும் ஊடகவியலாளரை மிரட்டுகிறது-தூஷணத்தால் கொலை மிரட்டல் செய்கிறது!தமது சொந்த இலாபங்களுக்காகத் தமது மக்களையே கொல்லும் ஒரு மனிதக்கூட்டம் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறதென்றால்,அது,இலங்கையில்தாம்.
 
இந்த இலங்கையைத்தான் மகிந்தாவும்,அவர் பின்னால் நாயாக வால் ஆட்டும் கருணா-பிள்ளையான்,டக்ளஸ் வகையறாக்கள் புதிய இலங்கை என்கிறார்கள்.இத்தகைய இலங்கை ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களது இலங்கை இல்லை என்பதைத் தமது அராஜகத்துக்கூடாக மகிந்தா குடும்பமும் அக்குடும்பத்தின் ஏவல் நாய்களும் சதா உறுதிப்படுத்தி வருகிறார்கள்.இவர்களை முறியடிக்க இலங்கைவாழ் மக்கள் வீதிக்கு இறங்கியே ஆகவேண்டும்.இதைத் தூண்டாத புரட்சிகர அரசியல் கட்சிகள் பாசிசத்துக்குத் துணைபோனவைகளே.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
25.07.09

 

 

 

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்