Language Selection

நாதன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் அதனூடாக அமைப்புருவப்படுத்த வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்ட வடிவத்தின் மூலமே ஒரு போராட்டத்தை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்ல முடியும் என்று கடந்த 30 வருடங்களுக்கு முன்னரே கதைக்கப்பட்டிருக்கின்றன.

 

ஆனாலும் தனியே ஆயுதக் கவர்ச்சியும், வெறும் இராணுத்தின் பிணங்களின் எண்ணிக்கையை வைத்தே போராட்டத்தின் வெற்றி கணிப்பிடப்பட்டு வந்துள்ளது. வெறும் இராணுவ வெற்றியை இரசித்து வந்தவர்கள் இன்று, தமிழீழத்தின் 80 வீதமான நிலத்தை விடுதலைப் புலிகள் ஆளுகை செய்த காலத்தில் - வீதிகளில் இறங்கிஇ "விடுதலைப் புலிகள் தான் எம் அரசியல் பிரதிநிதிகள்" என்று நாம் முழங்கியிருக்க வேண்டும்; "தமிழீழத் தனியரசுக்கான எமது போராட்டத்தை அங்கீகரியுங்கள்" என மேற்குலக அரசுகளை வற்புறுத்தியிருக்க வேண்டும்.

 

அதனை விடுத்து விட்டு, "நாம் என்ன செய்தோம்...?

 

விடுதலைப் புலிகளின் பெரும் இராணுவ வெற்றி ஒன்றிற்காக கடந்த இரண்டு வருடங்களாகக் காத்திருந்தோம்.

 

பெரும் போர் வெற்றியைப் படைத்து - தமிழீழத்தை எடுத்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து விடுதலைப் புலிகள் எமக்குத் தருவார்கள் என்று நாம் பார்த்திருந்தோம்.’’ என எழுதுகின்றார் வழுதி.

 

ஆக மக்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். இவர்கள் அரசியல் ரீதியாக அரசியல் மயப்படுத்தவில்லை. இன்று அரசியல் மயப்படுத்தப்படாமையினால் ஒரு கருத்து ரீதியாக மலடாகிய சமூகத்தைத் தான் இன்று உருவாக்க முடிந்தது. இவ்வாறான கருத்தை ஜி.ரி.வியில் உள்ள நிகழ்ச்சியாளர் குற்றம் கூறியதை முன்னர் எழுதியிருந்தோம்.


விடுதலைப்புலிகளின் அரசியல் வறுமையை மறுப்பது


தலைமையினை மீறிச் செய்திருக்க முடியும் என்ற பொய்யை உருவாக்குகின்றார்.


புலிகளின் தவறான கொள்கையை விமர்சிக்காது மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.


புலிகள் மாத்திரம் அல்ல புலியெதிர்ப்பு பகுதியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.


மக்கள் போராடவில்லை எனக் குற்றம் சாட்டுபவர்கள் அண்மைக்கால நிகழ்வுகளை இரைமீட்டுப்பார்ப்பது அவசியமாகும். வன்னி நிலப்பரப்பில் இருந்த மக்களை விடுதலை செய்யும் படி கோரி வடக்கில் அரச எடுபிடிகளால் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதாக பிரச்சாரப்படுத்தியதை அறிவீர்கள்.


அந்த ஊர்வலத்தில் அல்லது போராட்டத்தில் பங்குபற்றிய மக்கள் தன்னெழுச்சியாகவா அந்தப் போராட்டத்தை நடத்தி முடித்தார்கள்? இதே போல த.தே.கூ அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெறவில்லை எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

 

இவை இரண்டு போராட்டத்தில் ஒன்று வெற்றியாகவும் மற்றையது தோல்வியாகவும் காட்டப்பட்டது. ஆனால் இரண்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் தமிழ் மக்கள் தான். இந்த மக்கள் தமது சொந்தங்களை ஒரு இயந்திரம் கொல்ல சம்மதித்தார்கள் எனக் கொள்ள முடியுமா?


ஒரு எதிரியானவன் தன்னினத்தை அழிக்கின்றது என்கின்ற போது பாராமுகமாக ஒரு வழியை மட்டும் ஆதரிக்கும் நிலை என்பது யதார்த்தமானது என புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். புலியெதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை மக்கள் உரிமை அல்ல முக்கியம்.


எதிரியை தொழுதுண்டு எதிரிபோடும் எலும்புத்துண்டுக்கு போட்டு போட்டுக்கொண்டு விசுவாசமாக செயற்படுவதே புலியெதிர்ப்புக்குழுக்களின் அன்றாட நடைமுறையாகும். இதனாலே பன்முக போட்டி ஆயுதக்குழுக்களை வைத்துக் கொள்வதன் மூலம் தாமே உண்மையான அடிமை என்று ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் மக்கள் மீது சவாரி செய்கின்றனர்.

  

அரச கட்டுப்பாட்டினுள் வாழும் மக்கள் அரச இயந்திரங்களின் அச்சுறுத்தலுக்கும், ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கும் பணிந்தே வாழவேண்டிய நிர்ப்பந்தம் என்பதை மக்கள் உணர்ந்த காரணத்தினால் தான் மக்கள் அரசகூலிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊர்வலத்தில் மக்கள் பங்குபற்றினார்கள்.


ஒரு ஒடுக்குமுறை இயந்திரத்திற்கு நடுவே மக்கள் தப்பி வாழ்வதைத் தான் பழக்கமாக கொண்டிருக்கின்றார்கள் என்பதையே இங்கு சுட்டிக் காட்டுகின்றேன். ஒடுக்குமுறையந்திரத்திற்கு அடிபணிந்து செல்லவேண்டிய புறஅழுத்தம் என்பது இலங்கையில் இருந்து கொண்டே இருந்தது. தமிழ் மக்கள் எடுத்துக் கொண்டால் அரச ஒடுக்குமுறை என்பது மற்றைய பிரச்சனைகளை பின்தள்ளியது இதுவே யதார்த்தமாக இருந்தது. இரண்டு ஒடுக்குமுறைக்கும் அப்பால் ஆயுதக்குழுக்களின் அழுத்தம் என்பது மக்களை மூச்சுவிடமுடியாத நிலையை தோற்றுவித்திருந்தது. இவர்களால் வெள்ளைவான் கடத்தல், முடிமூடியணிந்த தலையாட்டிகள், இருட்டடி, காணாமல் போதல், கொலை, கொலை அச்சுறுத்தல் இவைகள் இடம்பெற்றே வந்திருக்கின்றன.

  

மக்களை சுற்றிய அழுத்தம் பலமுனைகளில் இருக்கின்றபோது சிறு ஆறுதல் தரும் நிலையில் யார் இருக்கின்றார்களோ அந்த இடத்தை நோக்கிய தப்பித்துப் போதல் இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் மக்கள் போராடவில்லை என குற்றம் கூற எவருக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு மக்களை குற்றம் கூறுவது ஒரு அதிகாரப்பண்பு மட்டுமன்றி மக்கள் மீது தொடுக்கப்படும் ஒரு அராஜகம் தான். இதனை பாசீசம் என்கின்றோம். இந்தப் பாசீசத்தில் இருந்தும் மக்களுக்கு விடுதலை வேண்டியது அவசியமானதாகும்.

  

மாற்றுக்கருத்தாளர்கள்:

 

மாற்றுக்கருத்தாளர்கள் என்பவர்கள் கருத்தோட்டங்களை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் மக்கள் நலன் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்களின் பின்னால் மக்கள் அணிதிரள்வார்கள் என எண்ணிக் கொள்ளலாம் ஆனால் அவ்வாறான சாத்தியம் என்பது மிக அரிதானதாகும். 

 

பெருபான்மையான மக்கள் அல்லல்படும் மக்களுக்குப்பின்னால் இருந்திருக்கின்றனரேயன்றி புலிகளுக்குப் பின்னாலோ அல்லது புலியெதிர்ப்புக் கும்பல்களுக்குப் பின்னாலோ இருந்தது இல்லை. இதற்கு உதாரணமாக லண்டனில் நடைபெற்ற பிரமாண்டமான ஊர்வலம் என்பது ஒரு உதாரணமாகும். அன்றைய தினம் வன்னிக் கொலைக்களத்தில் இருந்த மக்களைக் காப்பாற்றவே அணிதிரண்டிருந்தார்கள். (அன்றைய நிலையில் வைக்கப்பட்ட கோசத்தினை முரண்பாடு இருந்தது ஒருபுறமிருக்க)

  

புலிகளை கருத்துரீதியாக எதிர்த்தவர்களின் கருத்தை மக்கள் இலகுவாக இனம் கண்டு கொள்கின்றார்கள். புலிகளை விமர்சித்தவர்களின் நியாயமான கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். புலியெதிர்ப்புக்குழுக்கள் அல்லது பிரமுகர்கள் புலம்பெயர் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யலாம் என்று என்று கற்பனை செய்யத் தேவையில்லை.


இவர்கள் சமூகத்தை விட்டு அன்னியப்பட்டே இருக்கின்றார்கள்.

  

இவர்கள் பிரமுகர்களால் சிறிலங்கா ஆட்சிவட்டத்தில் தமக்கான வாழ்வுவசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். தமக்கான ஒரு சந்தையை, தளத்தை, அந்தஸ்தை பெற்றுக் கொள்ளலாம்.


இவ்வாறான பிரமுகர்கள் வயோதிப இல்லங்களில் இருந்து கொண்டு அறிக்கை அரசியல் நடத்திக் கொள்ளலாம். முன்னைநாள் என்ற ஒரு அந்தஸ்து என்பது ஒரு விலைபொருளாக இருக்கின்றது. இந்த அந்தஸ்தின் மூலம் கருத்துருவாக்கத்தை சக வர்க்கத்து அரசியல் வாதிகள் மூலம் உருவாக்கிக் கொள்ளமுடியும்.


இவ்வாறான பிரமுகர்களின் கருத்து என்பதை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டதற்கு உதாரணமாக தமிழக அரசியலில் நடைபெற்ற நிகழ்வை இங்கு குறிப்பிட முடியும். தமிழக அரசியலில் தமிழக முதலமைச்சர் பதவிவிலக வேண்டும் என்று கோரிக்கை வந்த போது அமரரின் பாரியார் எழுதியதாக ஒரு கடிதத்தையும், ஈழத்தந்தையாரின் புதல்வரின் கடிதத்தையும் காட்டி ‘அவர்களே’ என்னை பதவிவிலகவேண்டாம் எனக்கூறுவதவாக ப+ச்சாண்டி காட்டப்பட்டது. இவ்வாறான ப+ச்சாண்டி காட்டும் அரசியலுக்கு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்பட்டுவாழும் பிரமுகர்களின் கருத்துக்கள் உதவக் கூடும். இவ்வாறாக பயன்படுத்துவதற்கும் இன்றைய ஆட்சிமுறை இடம் கொடுக்கின்றது. இதற்கு அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் மத்தியின் இவ்வாறான ஓட்டுக் கட்சிகளின் வாதம் என்பது எடுபடவே செய்யும்.

 

குற்றம் சாட்டும் அரசியல் பண்பு:


மக்கள் மீது எல்லாத் தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றார்கள். இந்தக் குற்றச் சாட்டிற்கு பதிலளிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. குற்றம் சாட்டிக் கொண்டே தேர்தல் வருகின்றமையால் மக்கள், ஜனநாயம், பன்முக கட்சி, அபிவிருத்தி என்று வாக்குவேட்டைக்கு புறப்பட்டு விட்டார்கள்.


முகவர்களான (சிற்றரசர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்) அதிகார வர்க்கத்திற்கு இன்றைய ஆட்சியமைப்பு போடும் பிச்சையாகும். இந்த அதிகார வர்க்கம் என்பது இவ்வாறான அதிகாரப்பசியுடன் தன்பசியைத் தீர்த்துக் கொள்ளும். ஆனால் மக்களின் உரிமைகள் பற்றி இவர்களால் பேசவே முடியாது. மக்களின் உரிமையை அபிவிருத்தி, சில சலுகைகள் கொடுக்கும்.

 

இதில் நடக்கப்போவது என்னவெனில் சமூகத்தை பிரிப்பதே இவர்களின் தொழிலாக இருக்கப்போகின்றது. உதாரணத்திற்கு சில ஆசிரிய வெற்றிடம், அல்லது சில குடியிருப்பு அல்லது இதுபோன்ற சில சலுகைகளை உள்ளுர் ஆட்சியாளர்களைக் கொண்டு அறிவிப்பார்கள்.


அங்கு மக்களின் தேவை என்பது அறிவிக்கப்படுவதற்கு மேலாக இருக்கும். இங்கு ஒரு சமூகத்தவர்களிடையே போட்டியை உருவாக்கும். இதனிடையே ஒரு வருக்கொருவர் வெட்டியோடும் அரசியலை உருவாக்குவார்கள்.

 
இங்கு லஞ்சம், உறவினர்களை சிபாரிசு செய்வது, ஆதரவாளர்ளுக்கு ஒதுக்குவது போன்ற அழுகிப்போன பண்புகள் மென்மேலும் உருப்பெறும். இவ்வாறான எலும்புத்துண்டுகளை கௌவிக் கொள்வதற்கு வாய்ப்பாக பயன்படுபவர்களே அதிகாரவர்க்கமாகும்.


போட்டி மனப்பான்மை ஏற்பட்டு சமூகத்தை பிளப்பது


போராட்டத்தின் உணர்வலையை சிதைப்பது (உரிமைர்கு மாற்றாக சோற்றைக் காட்டி)


அதிகாரவர்க்கத்திற்கு தீணிபோட்டு வளர்ப்பது இதற்கு ஊதியமாக இவர்களுக்கு மாதாந்தப்படியும், லஞ்சமும் கிடைக்கும்.


இன்று தேர்தலில் பங்குபற்றுபவர்களே மக்களை குற்றம் கூறியவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டகாரணத்திற்காக வேட்டையாடப்பட்டவர்கள். மக்களை குற்றம் கூறியவர்கள் அந்த மக்களின் வாக்குக்களைப் பெறுவதன் மூலம் பாவமன்னிப்பை கொடுக்கப்போகின்றார்களா? இவ்வாறான குழுக்களின் பிரதியுபகாரம் என்பது மகிந்தவின் பாசீசத்தை மூடிமறைப்பதாகும்.

  

இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அனைத்து இனமக்களின் ஐக்கியத்தின்ஊடாக இனங்களின் ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான போராட்ட வடிவங்களாகும். இவ்வாறு சிதைந்த சித்தாந்தங்களைக் கொண்ட குழுக்களின், நபர்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. இவ்வாறான சக்திகளின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்பது கடந்த காலப்படிப்பினைகளை உள்வாங்குவதன் மூலமே வெற்றிகொள்ள முடியும்.

  

எதிர்நோக்கும் பிரச்சனை இங்கிருந்துதான் அணுக வேண்டும்...


ஒரு சமூகம் தன்னை மாற்றியமைக்கப் போராகின்றபோதும், தன்னை பாதுகாக்க முற்படுகின்ற வேளையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. தன்னை மாற்றியமைக்கப் போராடுகின்ற போது எற்படுகின்ற கருத்து பேதங்கள் ஏற்படுகின்றது.


இதில் பல சிந்தாந்தங்களை கொண்டவர்கள் பவனிவருவது இடம் பெறவே செய்கின்றது. இவ்வாறு பவனி வருபவர்கள் புரட்சியை, வாழ்க்கையை நேசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் புரட்சிக்கான பணியினை இடையறாது மேற்கொள்வார்கள். அடுத்த பகுதியினர் சீர்திருத்தவாதிகள், பிற்போக்குவாதிகள் எனப்படுவோர் மதவாதிகளாகவும், பழமைவாதிகளாகவும், தமது வளத்தை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முனைபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுடடைய வாழக்கையின் தந்துவம் மக்களின் நலன்அல்ல. தம்நலனும் தம் உறவுகளின் நலனுமே முக்கியமானதாகும். இங்கே உறவுகள் என்கின்றபோது இரத்த உறவுகள் என்றுமாத்திரம் கொள்வதற்கு இல்லை. ஒத்த சிந்தனை கொண்டவர்களின் பரஸ்பர நட்புபாராட்டும் சிந்தனைப் போக்காகும்.

  

இங்கு பாரிய மாற்றம் என்னவெனில் புரட்சியை நேசிப்பவர்கள் தோழமை என்பது முக்கியமானதாக இருக்கும். தனிமனித அந்தஸ்து என்பது முக்கியமற்றதாகவும்,
பொதுநலனைக் கொண்டதாகவும் இருக்கும். ஏன் பிரமுகர்தனம் என்பது கூட அற்றதாகவே இருக்கும். தன்சகமனிதனை நேசிக்கும் பண்பு என்பது மேலோங்கியிருக்கும். இவர்களை உண்மையான தேசபக்தர்கள், மக்களுக்காக சேவை செய்யும் சேவையாளர்கள், புரட்சியை விரும்பும் புரட்சியாளர்கள்.

 
அடுத்த பகுதியினர் இந்தச் சமூகத்தில் இருக்கின்ற வளங்களைக் கொண்டே தமது இருப்பை மென்மேலும் வளர்ப்பவர்களாக இருக்கின்றனர். இந்தச் சமூகத்தில் இருக்கின்ற நிறுவனங்களில் சேவைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களின் கடமை என்பது தேர்தல், கட்சி, சட்டவாக்கம் என்பனவற்றை பாதுகாக்கும் கடமையில் ஈடுபடுபவர்கள். இவர்கள் இருக்கின்ற சமூக அமைப்பை பாதுகாப்பவர்கள். இவ்வாறானவர்கள் அதிகாரிகளாகவும், பத்திரிகையாளர்களாகவும், புரட்சி சீர்திருத்தம் என்று பேசிக் கொண்டு சமூக அமைப்பை பாதுகாக்கும் கூலிகளாகவும் இருப்பர். இவர்கள் வௌ;வேறு வடிவங்களில் (பசுத்தோல் போர்த்த புலிபோல) இருப்பார்கள். இவர்களுடைய கருத்துக்களை நாம் நடைமுறை ரீதியாக அறிந்து கொள்வது எதிர்கால புரட்சிக்கான முன்நிபந்தனையாகும்.


புரட்சிகர பாதையை தேர்ந்தெடுக்காது சிதைந்துபோன சித்தாந்தங்களை தூக்கிப்பிடித்துக் கொண்டு இருப்பவர்கள். குறுக்குவழியில் தமது இலக்கை அடைய முற்பட்டவர்கள் தமது இலக்கை அடையமுடியாத நிலையில் தம்மை மறுபரிசீலனை செய்யாது மக்களை குற்றவாளிகள் ஆக்கின்றனர். தமது வர்க்கத்திற்கு விரோதமான புரட்சிகர கருத்துக்களை மறுதலிக்கின்றனர்.

 

By Nathan