06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 1

நண்பர்களே,

வினவின் விவாதங்களில் உங்களுக்கு அறிமுகமான நண்பர் வித்தகன் இங்கே மதங்களைப் பற்றி ஒரு குறுந்தொடர் எழுதுகிறார். இத்தொடரில் அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால்.

- முதல் பகுத்தறிவாளனும் முதல் மத குருவும்
- மனித இனத்தின் அடிப்படைக் கேள்விகள்
- உலக வரலாற்றில் மனித இனத்தின் (மிகச் சிறிய) பங்கு
- மனித இனத்தைப் பற்றிய மதவாதிகளின் தவறான பிரச்சாரங்களும் அதனால் நிகழ்ந்த வரலாற்றுக் குற்றங்களும்
- ஆப்பிரஹாம் வழி வந்த மதங்களும் பல தெய்வ வழிபாட்டு மதங்களுக்கு இணையான வரலாற்றுப் பிழைகளே
- மதம் ஏன் மனிதனுக்கு வேண்டும் (அல்லது ஏன் வேண்டாம்)?

முதலிய விசயங்களை விவாதிக்கிறார். ஓராண்டு நிறைவில் அடுத்த எழுத்தாளரை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறோம். வித்தகனை உற்சாகப்படுத்துங்கள், கேள்விகளால் விவாதியுங்கள். நன்றி!

நட்புடன்
வினவு

——————————————————————————————————————————————————————————–

குரங்கிலிருந்து பிறந்தவன்

ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு நான் அறிஞன் இல்லை. தத்துவ விசாரணை செய்யும் அளவுக்கு சிந்தனாவாதியும் இல்லை. கண்டது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது எல்லாவற்றின் கலவைதான் இந்தக் கட்டுரை. 
- 
வித்தகன்

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 1

காலம்: சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால்
இடம்: தமிழ்நாடு தேனி மாவட்டம் மலைப்பகுதி, ஆஸ்திரேலியக் கடற்கரை, மத்திய ஆப்பிரிக்கக் காடு, வட அமெரிக்கப் புல்வெளி, டைகரிஸ் நதி ஓரம் – எல்லா இடங்களிலும் பல முறை நடந்தது இது

கதாநாயகன் வேட்டை முடிந்து குகைக்குத் திரும்பும் போது மாலை வெளிச்சம் மங்க ஆரம்பித்து விட்டது. மூட்டி வைத்த தீயின் முன் அமர்ந்திருந்த சக மனிதர்கள் மான்களையும், மாடுகளையும், குதிரைகளையும், தோலுரித்துத் தீயிலிட்டுக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சிறு குரங்குகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வயது வந்த பெண்களும் ஆண்களும் அவர்கள் மார்புகளும் ஆண்குறிகளும் எல்லோர் முன்னாலும் காற்றில் ஆடிக்கொண்டு இருக்க அதற்காக வெட்கப் பட்டு மூடாமல் அருகருகே அமர்ந்திருந்தனர். சாப்பிட்ட பிறகு கலவி செய்வது மட்டும் தானே வேலையே! மூடி வைத்தால் யாருக்கு என்ன இருக்கென்று எப்படித் தெரியும்?

ஆனால் உண்பது, உடலுறவு கொள்வது என்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும் முன்னதாக அவர்களுக்கு வேண்டிய இன்னோரு சிறு தேவை, நடுநாயமாக உட்கார்ந்திருந்த அந்தப் பெருங்கிழவன் சொல்லும் கதை. இன்றும் எல்லோரும் அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள கிழவன் தன்னிடமிருந்த காட்டுப் புல்லாங்குழலை இடையிடையே ஊதியபடியே பேச ஆரம்பித்தான்.

காலம் காலமாகக்கேட்டு வரும் பழங் கதைதான். ஆனாலும் தீயில் வேகும் விலங்குகள் தயாராகும் வரை, கிழவன் தாடியைத் தடவியபடி வானில் ஒலித்த பேரிடி, மலையை மூழ்கடித்த பெரு வெள்ளம், பத்து தலை கொண்ட நாகப் பாம்பு, அதை வீழ்த்திய மாவீரன் – என்று சொல்லிக் கொண்டே போக கூட்டம் முதல் முறை கேட்பது போல் திறந்த வாய் மூடாமல் கேட்டது.

கிழவன் சமர்த்தன். மழை வந்தால் அதற்கேற்றாற் போல் ஒரு கதை. அடுத்த ஊரிலிருப்பவர்கள் சண்டையிட வந்தால் வேறு கதை. குழந்தை இறந்தால் ஒரு கதை. பிள்ளை உருவாக்க முடியாதவனுக்கு விறைப்பு வர ஒரு கதை. சிரிக்கவும் அழவும் வேறு வேறு கதைகள். எல்லாமே அவனுக்கு அத்துப் படி. இந்தக் கதை சொல்வதற்குப் பரிசாக, வயதான காரணத்தால் வேட்டையாட முடியாத அவன் தின்ன சம பங்கு மான் கறியும், தினசரி அவன் புணர ஒரு பெண்ணும் தருவது ஊர் வழக்கம். அவனது எண்ணற்ற பிள்ளைகளில் ஒருவன் கிழவன் இறந்த பின் கதை சொல்ல இப்போதே தயாராகி வருகிறான்.

வேட்டையை முடித்து வந்த கதாநாயகனுக்குக் கதையில் மனம் ஈடுபடவில்லை. தனக்கு 20 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொடுத்துள்ள ஏழெட்டு பெண்மணிகளிடமோ அல்லது வேறு ஒரு பெண்ணிடமோ செல்லவும் மனம் நாடவில்லை. பசியும் எடுக்கவில்லை. காரணம் அவன் மனதை அரிக்கும் ஒரு கேள்விதான். அதை எல்லாம் தெரிந்த அந்தக் கிழவனிடமே கேட்பது என்று முடிவு செய்தான். தன் தோளில் இருந்த மானின் உடலை இறக்கி வைத்து விட்டு சத்தமாகக் கேட்டான்.

“கிழவா! எனக்கு ஒண்ணு தெரியணுமே..”

“இதென்னடாது வம்பாப் போச்சு! 20 பிள்ள பெத்தும் ஒனக்கு சந்தேகம் தீரலியா?”

கூட்டம் சிரித்தது. ஆனால் அவன் அதில் கவனம் சிதறாமல் கேள்வியைக் கேட்டான்.

“ஏன் வெளிச்சமா இருக்கு, அப்புறம் இருட்டு வருது, திரும்பவும் வெளிச்சம் வருது?”

கிழவன் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை. கூட்டமும் எதிர் பார்க்கவில்லையென்பது அவர்கள் சிரிப்பை நிறுத்தியதில் புரிந்தது. கூட்டம் கிழவன் பக்கம் பார்வையைத் திருப்பியதில் அவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதும் புரிந்தது.

“என்ன கேக்குற?”

“தூங்கி எந்திரிக்கும் போது வெளிச்சமா இருக்கு, அப்பறமா திரும்ப இருட்டுது, திரும்பத் தூங்கி எந்திரிச்சதும் வெளிச்சமா இருக்கே. அது ஏன்?”

கிழவன் தன் வாழ்நாளில் “தெரியாது” என்று சொன்னதே கிடையாது. அப்படிச் சொல்லி விட்டால் தனக்கென்று இருக்கும் சிறப்பான இடம் போய்விடும் என்று அவனுக்குத் தெரியும்.

“அடப் போடா… இதெல்லாம் ஒரு கேள்வியா…. சூரியன் தொடர்ந்து இருந்துக் கிட்டே இருந்தா நாமெல்லாம் எப்பத் தூங்குறது? அதான் சாமி நம்ம மேல ஒரு பெரிய போர்வையப் போட்டு போர்த்தி விடுறாரு. இருட்டு வருது. நீ வேணுங்கிற அளவு தூங்கினதும் போர்வைய எடுத்திடறாரு. வெளிச்சம் வந்திடுது”

“ஆனா இருட்டின பெறகு மேல பாத்தா ஏதோ சின்ன சின்ன புள்ளியா நெறய வருதே! அப்பறம் பெரிசா வட்டமா ஒண்ணும் வருதே!”

“அதெல்லாம் போர்வைல இருக்குற ஓட்டைடா. இது கூடப் புரியலயா?”

கூட்டம் சள சளவென்று ஆமோதிக்க கதாநாயகனுக்கு மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.

மெல்ல கூட்டத்திலிருந்து விலகி நடந்தான். மூட்டிய தீயின் வெளிச்சம் தீர்ந்து, காட்டின் இருள் துவங்கும் ஓரத்திற்கு வந்து தரையில் படுத்தான். வானத்தைப் பார்த்தான். தூரத்தில் கிழவன் சொல்லிக் கொண்டிருந்த கதைக்கும் அவன் கண்ணில் படும் காட்சிகளுக்கும் தொடர்பு இல்லையென்பது மெல்லத் தெரிந்தது.

இயல்பாகவே அவனுக்குள் கேள்விகள் தோன்றுவது உண்டு.

சில சமயம் ஏன் மேலிருந்து தண்ணீர் கொட்டுகிறது?
ஏன் ஆறுகள் திடீரென பொங்குகின்றன?
தூரத்து மலையிலிருந்து ஏன் நெருப்புக் குழம்பாக வடிகிறது?
தலை முடி ஏன் வெளுக்கிறது? தோல் ஏன் சுருங்குகிறது?
உடனிருப்பவர்கள் ஏன் திடீரென கண்மூடிப் படுக்கிறார்கள்? அதன் பின் எழவே மாட்டேனென்கிறார்கள்?

சாவு என்றால் என்ன? செத்த பிறகு அவர்கள் போகும் அதே இடத்திற்குத்தானா நான் கொல்லும் மானும் மாடும் போகின்றன?

கதாநாயகனுக்கு தலை வலித்தது.

அதையெல்லாம் விடு. இன்றைய கேள்வியை மட்டும் யோசி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

மேலே தெரியும் இருட்டு கருப்புப் போர்வையா? இவ்வளவு பெரிய போர்வை எங்கிருந்து வருகிறது? போர்வைக்கு வெளியில் என்ன இருக்கிறது?

சாமி என்பவர்தான் போர்த்தி விடுகிறாரா? சாமி என்பவர் யார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு வேண்டாத வேலை?

இந்த ஊரையும் மக்களையும் உருவாக்கி அவர் என்ன சாதிக்கிறார்?அவரது ஊர் என்ன? அவரை உருவாக்கியது இன்னும் ஒரு சாமியா? அந்த சாமி ஏன் இந்த சாமியைப் படைத்தார்?

இப்படிப் போயிக் கொண்டே இருந்தால் எதுதான் ஆரம்பப் புள்ளி? அந்த ஆரம்பப் புள்ளி ஏன் தோன்றியது?

இதை எல்லாம் கிழவனிடம் கேட்டுப் பயனில்லை.

கடவுள் என்பவரைப் பற்றி எதுவும் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்பவர்கள் கெட்டவர்கள் என்று கிழவன் சொல்லியிருக்கிறான். நல்லவனாக வாழ்ந்து கடவுளை வணங்குபவனுக்குதான் நல்ல மான் கறியும், தினசரி புணரப் புதுப் புதுப் பெண்களும் கிடைக்கும் – கிழவனுக்குக் கிடைப்பது போல. கடவுளை மதிக்காத கெட்டவர்களை புலி தின்னும். புதை குழி விழுங்கும். செத்தபின் கூட அவர்களுக்கு தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் கேள்விகள்.

கெட்டவன் நடந்து கொள்வது தவறென்றால் அவன் ஏன் கடவுளால் படைக்கப் படுகிறான்?
கெட்டதே நடக்காமல் கடவுளால் தடுக்க முடியாதா?
முடியாதென்றால் அவர் எல்லாம் வல்லவர் இல்லையே!

கெட்டதைத் தடுக்க முடிந்தும் தடுக்காமல் இருக்கிறாரா?
அப்போது அவரும் கெட்டவர் ஆகி விடுகிறாரே!

அவரால் தடுக்க முடியும், தடுக்க விருப்பமும் உள்ளது என்றால் ஏன் கெட்டது நடக்கிறது?
அல்லது கெட்டதை அவரால் தடுக்கவும் முடியாது, அவருக்கு அதைத் தடுக்கும் விருப்பமும் இல்லை என்றால் அவர் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

கதாநாயகனுக்கு தலைவலி அதிகமாகி விட்டது.

கதாநாயகனுக்குத் தெரியாத இன்னும் ஒரு உண்மை. இதே கேள்விகள் இந்தப் பூமிப் பந்தில் பல இடங்களில் பல நாயகர்களுக்கு எழுந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிழவனும் இருந்தான்.

தொடரும்

நன்றி: எபிகியூரஸ், கார்ல் சாகன், ரிச்சர்ட் டாகின்ஸ், பி.டி. ஸ்ரீநிவாச அய்யங்கார், பில் ப்ரைசன், ஈ.வே.ராமசாமி.

 

http://www.vinavu.com/2009/07/24/vithagan/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்