ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை பார்த்தேன். அப்போதே சேமித்து விட்டு பிறகு அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.
மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது:
நடிகை அமலா “ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள்.
அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. நான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்”……….
உழவுக்கு மாடுகளை பயன் படுத்தக்கூடாது. இது அமலாவின் கோரிக்கை, விலங்குவதைகளை தடுத்து காக்க வேண்டு இது மேனகாகாந்தியுடைய கொள்கை, இன்னும் சிலர் வெறி நாய்க்கடியான ரேபீஸ்க்கு மருந்து ஆட்டின் மூளையிலிருந்து எடுப்பதால். அவற்றைகொல்லக்கூடாது.
இவ்வளவு அபிமானமா விலங்குகள் மீது. இந்த விலங்கின அன்பர்கள் மீது தவறா ? அமலாவுக்கு மாட்டின் மீது காதல் வந்து மாட்டை அடிக்கக்கூடாது , உழவுக்கு பயன் படுத்தக்கூடது என்கிறார். தெருவில் விலங்குகள் அடிபட்டுகிடக்கின்றன யாருக்குமே விலங்கின் மீது பாசம் இல்லையா என கதறி சட்டையை பிடிக்கிறார் மேனகா காந்தி. இன்னும் சிலர் விலங்குகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என ஊளையிடுகிறார்கள்.
அப்படி அமலா ஊளையிட்ட இடம் எது தெரியுமா ஆந்திராவில் கர்னூல்…. அமலாவுக்கு மாட்டை உழவுக்கு பயன் படுத்தக்கூடாது எனச்சொல்லத்தெரியும் ஆனால் அதே மாநிலத்தில் விதர்பாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் செத்ததை, செத்துக்கொண்டிருப்பதை பற்றித்தெரியுமா ? மாட்டை பற்றி தெருவில் அடிபடும் நாயைப்பற்றி பேசலாம் கேள்விகேட்க ஒரு நாயும் இல்லை இன்னொரு விசயம் அந்த நாய்க்கோ, ஏனைய விலங்குகளுக்கோ வாயும் இல்லை. ஆனால் வாயுள்ள இந்த மனிதனைப்பற்றி பேசுவார்களா இந்த நாய்கள்( நாயைத்தான் ரொம்ப மதிக்குறாங்களே ).
கண்டிப்பாய் பேசமாட்டார்கள் பேசுவதற்கான அடித்தளம் என்ன இருக்கிறது? விலங்குகளை பாவம் என்பவர்கள் மனிதர்களை என்ன சொல்கிறார்கள்? நாடு முழுக்க பரவி விரவிக்கிடக்கும் இந்த விலங்கினங்கள் மற்ற விலங்குகளை பற்றி கவலைப்படுகிறார்களே ஒழிய. மனிதர்கள்? அவர்களைப்பற்றி கவலைப்பட்டால் நேரடியாக அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவசாயம் நசிந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி எதனால் அம்முடிவை எடுத்தார்.
முதல் குற்றவாளியாய் அரசு அங்கு வந்து நிற்கிறது. வெள்ளிப்பட்டறை தொழிலாளி கடன் சுமைதாங்காது சயனைட் தின்று குடும்பத்தோடு மாண்டு போகிறார். இங்கு எதுதான் காரணம்? உலகமயம் எந்திரங்கள் மூலம் ஆபரண நகைகளை குவிக்கிறது. வேலை செய்த தொழிலாளிக்கு வேலைஇல்லை. முன்னர் செய்து வந்த வேலையும் இல்லை . இங்கு யார் குற்றவாளி . உலகமயம், அதை அனுமதித்த அரசு.
பூனைக்கு கால்வலிக்க மேனாகாவுக்கோ அதுதான் இதய வலி. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று தின்று ரத்தம் குடித்த பாஜக எம்.பி, RSS -ன் சகாவுக்கு நாயின் மேல்பாசமாம்!!!! இதை எப்படி நம்புவது ? கண்டிப்பாய் நம்பித்தான் ஆகவேண்டும். வருண்காந்தி முசுலீம்களை வெட்டுவேன் என கழிவறை வாயால் கொட்டியதை கையில் எடுத்து தொட்டுப்பாருங்கள். அஹிம்சையெல்லாம் என் மகனுக்கு தெரியாதென வாலாட்டியவராயிற்றே. தெரிந்தோ தெரியாமலோ காந்தியின் வாரிசாய் மிளிரும் ஆத்தாளும் மகனும் மனிதாபிமானத்தையே குத்தகை எடுத்துவிட்டிருக்கிறார்கள்.
பையனுக்கு இந்து மனிதாபிமானம், ஆத்தாளுக்கு இந்து மனிதாபிமானம்+விலங்குகளின் மீது பாசம். இவர்கள் மட்டுமல்ல ஏறக்குறைய விலங்குகளின் காதலர்கள் பலரும் மனிதர்களின் வாழ்வினைப் பார்ப்பாதில்லை என்பதை விட பார்க்க மறுக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காது எப்படி மக்களை சார்ந்து வாழும் விலங்குகளை பற்றி சிந்திக்கமுடிகிறது?. ஏனெனில் அவர்களைப்பொறுத்தவரை வறுமையில் உழலும் விவசாயி, தொழிலாளி, வேலையில்லா இளைஞன் ,உழைக்கும் மனிதன், என யாருமே இன்னும் விலங்குகளுக்கு ஒப்பாகவில்லை.
வெடித்துப்போன வயல்வெளிகள், ஒட்டிப்போன மார்பகங்கள், சுருங்கிப்போன தசைகள் என எல்லாவற்றையும் தாண்டி அந்த மாடு எலும்பாய் இருக்கிறதே? அது தெரிகிறதா. தனக்கு சோறில்லைஎன்றால் கூட இருக்கும் காசுக்கு மாட்டுக்கு தீவனம் வாங்கிப்போடுவான் விவசாயி. தன் உழவுக்கு பல்லாண்டாய் உழைத்து செத்துப்போன மாடுகளுக்காக கண்ணீர்விட்டு கதறியழும் விவசாயிக்கு கண்டிப்பாய் விலங்கினநேசத்தினைப்பற்றி தெரியாது.
வளர்ப்புபிராணிகளை தன் வீட்டின் பிள்ளையாக கருதி வளர்க்கும் உழைக்கும் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் “ஏய்!!! விலங்கினை வதைக்காதே” விலங்கினை வதைப்பது இருக்கட்டும் எங்களை வதைக்கும் இந்த தனியார்மயத்துக்கும், தாராளமயத்துக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்? பிராணிகளுக்கு துடிக்கும் வாய்கள் மக்கள் பிணமாவதினை பேச மறுக்கிறது.
ரேபீஸ் தடுப்பு மருந்து ஆட்டுமூளையிலிருந்து எடுக்கப்படுவதை எதிர்க்கும் யோக்கிய சிகாமணிகள், வெறி நாயைக்கொல்லக்கூடாது அவற்றை பத்திரமாக அரசே பராமரிக்க வேண்டும் என கதறுபவர்கள்தான் உலகெங்கும் வறுமையால் மக்கள், குறிப்பாக ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பாசிச பேயாட்டம் போட்டு மக்களை வதை முகாமில் சிறையிலிட்டு கொன்று குவிக்கும் போது கூடநாயைப்பற்றியே பேசச்சொல்கிறார்கள்.
விலங்குகளைபற்றி பேசவே வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் மனிதாபிமானம் வேசம் போடும் இந்த பிணந்தின்னிகள் உண்மையாகத்தான் பாசம் வைத்திருக்கிறார்களா அந்த விலங்குகள் மீது? இல்லை என்பதுதான் உண்மை. ஆடுகளை வனப்பகுதியில் மேயவிட்டால் குற்றம் என அறிவித்தது அரசு. அதன் விளைவு வெள்ளாடு வளர்ப்பு முற்றிலுமாக அழிந்துபோனது. ஒரே சட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆடுகளின் வாழ்வினைப்பறித்தது யார் ? விவசாயத்தை நொடித்து மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பியது யார் ? புதிய வகை உற்பத்தி எனக்கூறி பிராய்லர்களை திட்டமிட்டு உருவாக்கி நாட்டுக்கோழியினத்தை முற்றிலும் உடைத்தெறிந்தது யார்?
உழைக்கும் மக்களா? இந்த அரசு, உலகமயம் ,தாராளமயத்தின் விளைவா? பேசித்தான் பாருங்களேன் கொஞ்சம் இதைப்பற்றியும், ஏன் உங்கள் வாய்கள் பேசமறுக்கின்றன? பேச மறுக்கிறது என்பதனை இன்னொருவிதமாக சொல்லலாம். எப்படி பேசும்? மக்களை கொன்று அவர்களின் வாழ்வுக்கான உரிமையை பிடுங்கி மொத்தமாய் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ள வர்க்கம் எப்படி பேசும் மக்களுக்காக?
இப்படி ஒரு தெரு நாயை காப்பாற்றப்போவதாய் பல வெறி நாய்கள் வந்துவிட்டன. அவைகளால் மனிதனுக்குமட்டுமல்ல….பாவம் அந்த நாய்க்கும்தான் ஆபத்து. ஒருபக்கம் மக்களை தின்பது மறுபக்கம் விலங்குகளுக்காக ஒப்பாரி வைப்பது? என அதிக நாள் இந்த டபுள் ரோல் நீடிக்காது. மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் ஆளும் வர்க்கம் தகர்க்கப்படும் போது இந்த நாய்கள் பேய்களாகியிருக்கும்.
http://kalagam.wordpress.com/2009/07/23/பிணந்திண்ணிகளின்-மனிதாப/