புகலி இணையத்தளம் (www.puhali.com ) மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூலம், அவ்விணையத்தை பாசிட்டுகள் படுகொலை செய்துள்ளனர். ஆளைப் போடு அல்லது கருத்தை முடக்கு என்பது, பாசிச சிந்தாந்தத்தின் அரசியல் மொழியாகும். "ஜனநாயகம், சுதந்திரம்" பேசுகின்றவர்கள், மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வதை விரும்புவதில்லை.

 

மக்களுக்கு தங்கள் பற்றி எந்த உண்மைகளும் தெரியக் கூடாது. மக்கள் அரசியல் மயப்படக் கூடாது. மக்கள் மந்தைகளாக, தமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும். இதுவே  மக்களை ஆளும் வர்க்கங்களின், அரசியல் இலக்கு மட்டுமின்றி, இலட்சியமுமாகும். தாங்கள் மக்களை மேய்ப்பவர்களாக, தங்கள் அதிகாரத்துடன் மக்களை ஒடுக்கி ஆளும் கனவுடன், அனைத்து சமூகக் கூறுகள் மீதும் பாசிசத்தை ஏவுகின்றனர்.

 

அண்மையில் மகாஜனா பழைய மாணவர்களின் இணையம் (www.mahajanan.com) மீதும் இதுபோன்று தாக்குதலை நடத்தினர். அதில் புலியெதிர்ப்பு பேசும் நெருப்பு கொம் இணையத்தின், இணைப்பைக் கொடுத்திருந்தனர். இப்படி பக்காக் கிரிமினல்கள் ஜனநாயகம் பேசிக்கொண்டே நடத்துகின்ற இது போன்ற படுகொலைகளோ, அரசியல் ரீதியானவை.

 

பாசிசம் தன்னை தற்காத்துக் கொள்ள, அது தேர்ந்தெடுத்த மிக இழிவான அரசியல் வழி. இது தான் அல்லாத இணையங்களை முடக்குவது தான். இதன் மூலம் மக்களுக்கு தங்கள் சொந்தப் பொய்களை, என்றென்றும் பிரச்சாரம் செய்வது தான். எந்த உண்மைகளும் மக்களுக்கு தெரியக் கூடாது என்பது, ஆளும் வர்க்கங்களின் சொந்த வக்கிர புத்தியாகும்.     

      

இலங்கையில் இன்று பேரினவாதப் பாசிசம் கட்டவிழ்த்து விட்டுள்ள ஊடகவியலுக்கு எதிரான தாக்குதலின் ஒரு அங்கம் தான், புகலி இணையம் மீதான தாக்குதலாகும். இலங்கையில் அரச பாசிசம் தன் போர்க்குற்றங்கள் முதல் தங்கள் குடும்ப அதிகாரத்தை நிறுவும் அனைத்து விதமான சர்வாதிகார முயற்சிக்கும், பாசிசம் மூலமே அது இன்று தன் பதிலடியைக் கொடுக்கின்றது. சட்டம், ஓழுங்கு அனைத்தையும், தனக்கு மறுக்கின்றது. மற்றவர்கள் மேல் அதை முறைகேடாக பயன்படுத்துகின்றது. இதை மீறி அரசை அம்பலப்படுத்தும் போது, படுகொலைகள் முதல் ஊடகவியல் மேல் பாசிச தாக்குதலை கூட நடத்துகின்றது. இதுவே இன்று இலங்கையில் பொதுவான நிலைமை.

 

அது புலத்தில் கூட தன் ஜனநாயக விரோத, சட்டவிரோத பாசிச தாக்குதலை நடத்த தன்னை தயார் செய்கின்றது. தனது கூலிக் குழுக்களை உருவாக்குகின்றது. புலிக்கு எதிராக  "ஜனநாயகம்" பேசிய கும்பலில் இருந்து, தனக்குரிய கூலிக் குழுக்களை ஏற்கனவே உருவாக்கிவிட்டது. அரச பாசிசத்தை ஆதரித்த படி, "ஜனநாயக" வேசம் போட்டபடி, இந்த கும்பல் மக்களை கடித்துக் குதற நாயாக அலைகின்றது. மக்களுக்கு சார்பான இணையங்களை முடக்குவது முதல் எல்லாவிதமான மக்கள் விரோத செயலிலும் இது ஏற்கனவே செயற்படத் தொடங்கிவிட்டது. புலிப் பாசிசத்துக்கு நிகராக, அரச பாசிசம் இன்று உலகம் தளுவிய ஒன்றாக மாறிவருகின்றது.

 

 

பி.இரயாகரன்

22.07.2009