Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கரம் கொடுப்போம்!"

-நல்ல வேளை உயிர் கொடுப்பதாகச் சொல்லவில்லை,அந்த வகையில் மக்கள் தப்பித்தார்கள்! லங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?

மேற்க்காணும் கேள்விக்கு விடை மிக எளிதானதும்,தர்க்கமானதாகும்.எங்கள் மக்களது உரிமைகளை நிலைப்படுத்துவதற்கு-தக்கவைப்பதற்கு இந்தியாவென்ற சகுனித் தேசம் ஒருபோதும் விட்டுவைக்காது என்பதாகும்.இதற்கான பல உதாரணங்களை நாம் சுட்ட முடியும்.எனினும், உதாரணங்களைத் தள்ளி வைத்துவிட்டு நமது இனத்துக்குள்ளேயே இருக்கும் அரசியற் கைக்கூலிகளை இனம் காணும்போது, இந்திய மேலாதிக்கத்தினதும்-மேற்குலக நலத்தினதும் முரண்கள் எங்ஙனம் நமது தேசத்துக்குள் முட்டிமோதுகின்றன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடியும்.இந்தவகையில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன.தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் கேந்திர அரசியலில் கடந்த முப்பதாண்டாகக் கட்டி வளர்க்கப்பட்ட நமது குழந்தைகளின் தியாகம் சிதறிடிக்கப்பட்டு,அச்சிறார்களது தலைமையின் அந்நியச் சேவகத்தின் விளைவாக முழுச்சிறார்களும் கிட்டமுட்ட அழிக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட நமது மண் இன்று அந்நியகர்களது அரசியல் வேட்டைக்குட்பட்டுக் கிடக்கிறது!-இது குறித்தும் நாம் விபரமாகச் சொன்னோம்.
 
எங்கள் குழந்தைகளால் அன்று நிர்மூலமாகப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவத்தின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் தென்னாசியப் பிராந்தியப் புவிசார் அரசியலின் உந்துதலும்,அதன்பொருளாதார நலன்களும் இருத்திருக்கிறது.இதன் தொடராக இன்றைய இலங்கையில் பேசப்படும் தமிழ்பேசும் மக்களது அரசியல் எதிர்காலமென்பது அம்மக்களது உரிமைகள் குறித்த-அவர்களது நோக்கு நிலையின்பாற்பட்டதல்ல என்பதை,தற்போது ஆளும் மகிந்த அரசினது பின்னால் நிற்கும் முன்னாள் ஆயுதக்குழுக்களது இன்னாள் ஓட்டுக் கட்சிவடிவமும்,அவர்களது சொந்த ஆதாயத்துக்கான நலன்கள் சார்ந்த கோரிக்கைகளும் தெட்டத் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன.
 
யாழ்-வன்னி மாநகராட்சிமன்றத் தேர்தல்களுக்கான அரசியல் நகர்வில், டக்ளஸ் தேவாநந்தாவினது வெற்றிலைச் சின்னத்துக்கான விளக்கமும்,கோகர்ணனின் மறுபக்கக் கருத்துகளும் இலங்கையினது இன்றை அரசியலைப் புரிவதற்கான இரு துருவங்களாக விரிகின்றபோது,"கலாநிதி"கீதபொன்கலனது"அரசியல் ஆய்வு"இடையினில் சட்டவாக்கத்துக்குள் முடங்கி, கடந்த ஐம்பதாண்டுகளுக்குமுன்னால் நடந்த"பேச்சுவார்த்தை-வட்டமேசை மாநாடு"எனும் பாராளுமன்ற அரசியல் சதுரங்கத்தைப் புதிப்பிப்பதில் காலத்தை திருப்ப முனைகிறது.
 
இதை, முழுமையாக விளங்கிக்கொள்வதற்கான அரசியல் கட்டுரையை மறுபக்கத்தில் மிக நேர்த்தியச் சொல்லும் கோகர்ணன் நமது இன்றைய அரசியலை மிகத் துல்லியமாகச் சொல்லி அதன் ஈனத்தனங்களைக் குறித்துக் குறிப்புணர்த்துகிறார்.மௌனித்துக்கிடக்கும் பலரது கபடத்தனங்களை அவர் அம்பலப்படுத்துகிறார் இங்கே.
 
 


பாராளுமன்றத்துக்குள்ளும் அரசியல் சட்டவாக்கத்துள்ளும் பிரச்சனைகளை திணிக்கும் அன்றைய கட்சி அரசியலின் தொடர்ச்சியை டக்ளஸ் ஆரம்பித்திருக்கிறர்.அவரது அரசியலின் சட்டரீதியான நீட்சியை வற்புறுத்துவதில் கீதபொன்கலனது கட்டுரை தொடர்கிறது.இவை அனைத்தும் நமது மக்களது உரிமைகளுக்கு மேலாக அவர்களுக்குள் ஒட்டுரக அரசியலை முன்னெடுக்கும் திரவிடப்பாராம்பரியத்து அரசியலை வற்புறுத்தும் கட்சிகளது நலனுக்கான கோரிக்கைகளாகவே இவை பெரும்பாலும் குறுகிவிடுகின்றன.இன்றைய புதிய பொருளாதார நகர்வுகளில் ஏலவே, தமது இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட புதிய பணக்காரர்களான கட்சித்தலைவர்கள் தமது பொருளாதார நலன்மீதான கவனத்தைக்கொண்டே ஆளும் கட்சிகளோடு மிகவும் நட்பார்ந்து அரசியல் செய்கிறார்கள்.அதை மேம்போக்காக மறுப்பதற்கான அவர்களது கோரிக்கைகள் மிகக்கெடுதியான முறையில் இலங்கையின் தமிழ்க்குடிகளை ஏமாற்றமுனைகிறது இப்போது!
 
//அரசாங்கத்துடன் பகைமை பாராட்டி ஒரு எதிர்ப்பு அரசியலை நடத்துவதற்கு நாம் தயாரில்லை.//
 
வெற்றிலைச் சின்னமான மகிந்தாவின் ஆளுங்கூட்டணிக்கட்சியின் சின்னத்தில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "மாண்மிகு" அமைச்சர் இங்ஙனம் பதிலளிக்கிறார்.அதாவது, ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் பல்கட்சித் தேர்தல் முறை-எதிர்கட்சி நகர்வுகள் அரசாங்கத்தோடு பகமைபாராட்டுஞ் செயலாகக் கற்ப்பிக்கப்படும்போது,அந்தத் தேசத்தில் உண்மையில் ஜனநாயம் நிலைத்திருக்கமுடியுமா?
   
இத்தகைய நிலையில், அவரது கருத்தின்படி மாற்று அரசியல் கோரிக்கை-ஆளும் கட்சியினதும் அதன் இன்றைய அரசினதும் மக்கள்விரோத அரசியலைக் கேள்விக்குட்படுத்தி மக்களிடம் நேர்மையான அரசியலையும்,முதலாளித்துவ ஜனநாயக்துக்குட்பட்ட-அதுவுரைக்கும் செழுமைப்படுத்தபட்ட முதலாளித்துவ மனித விழுமியங்களையும் கோருவதற்கு ஆளுங்கட்சியிக்கு மாற்றான அரசியலை முன்வைப்பது எங்ஙனம் பகைமை-விரோதம் என்ற உட்பொருளைக்கொண்டியங்குகிறது?
 
இது,தமிழ்பேசும் மக்களது அரசியல் எதிர்காலங் குறித்துப் பேசும்வேளை"நாட்டின் ஒருமைபாட்டிற்குப் பங்கமற்ற அரசியல் தீர்வு"என்று குழையடிக்கும் அரசியல் சூழ்ச்சிவகைப்பட்டதாகவே விரிகிறது.இத்தகைய டக்ளஸ், தான் நடத்தும் அரசியலில் எதிர்கருத்துக்கு-பன்முகத்தெரிவுக்கு-பாதைகளுக்கு மறுப்புடைய ஆளும்கட்சி ஆதிகச் சூழலில்,இலங்கையில் நிலவிய குறை ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் மகிந்தாவுக்குப் பின்னாலுள்ள ஆளும்வர்க்கத்துப் பாசிசச் சூழலில் எங்ஙனம் ஜனநாயகம் நிலை பெறுவதாகச் சொல்கிறார்? ஏனெனில்,அவர் சொல்கிறார்:

//தம்மையும் காத்து தம் மக்களையும் காப்பவர்களே தமிழ் பேசும் மக்களுக்கான உண்மையான ஒர் அரசியல் தலைமையாக இருக்க முடியும். நாம் வீணைச் சின்னத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலும் எதிரும் புதிருமாக போட்டியிடுவது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. எதிர்காலத்தில் அரசுக்கும் எமக்கும் இடையில் பகைமை உணர்வு ஏற்படுமேயானால் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேசி தீர்ப்பதற்கான தளம் இல்லாது போவிடும். அபிவிருத்திக்கான தேர்தலாக இதைப் பார்ப்போமேயானால் அபிவிருத்தியை முன்னெடுப்பது யார் என்பதை சிந்திக்க வேண்டும். அல்லது அபிவிருத்திக்கான நிதி ஓதுக்கீடு செவது யார் என்பதை சிந்திக்க வேண்டும். அரசாங்கமே அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.//
 
இங்கே, அபிவிருத்தி-மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதெல்லாம் ஒரு அரசு என்ற செயற்பாட்டிலிருந்து ஒரு கட்சிக்குட்பட்ட நடாத்தையாகக் குறுக்கும் டக்ளஸ் உண்மையில் முதலாளித்துவ அரசியல் விஞ்ஞானத்தின் அரிச்சுவடியைக்கூடக் கடாசுபவராக இருக்கிறார்.கட்சிக்கும் அரசுக்குமான உறவில் அதன் அதிகாரவர்க்கத்தைக் கட்சிக்குள் குறுக்கிவிடுவதால் இலங்கையில் நிலவும் பாசிசத்தின் கடைக்கோடிச் சர்வதிகாரத்தைத் திட்டமிட்டு மறைத்து அதை நிலைப்படுத்துவதில் இலாபமடைய முனைகிறார்.
 
இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நட்புகளை வளர்த்து அதனோடு ஒன்றித்துப்போவதால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதன் தொடர்ச்சி, அடுத்த தேர்தலில் எதிர்கட்சியின் ஆட்சி வருமானால் அதனுடன் கூட்டுவைத்துக் கும்மாளம் அடித்து, மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில் கவனமுறும் அரசியல் நடாத்தையாக விரிகிறது.உலகத்தில் நிலவும் ஓட்டுக்கட்சிகளது உண்மையான நிலைகள் இதுவே.ஆனால்,
வெவ்வேறு தேசங்களின் வெவ்வேறு முரண்கள் முன்னிலை வகிப்பதில் கோரிக்கைகள் மாறுபடுமே தவிர உள்ளடக்கம் ஒன்றே!
 
இதே டக்ளஸ், பல் கட்சி அரசியலுக்கே குறுக்கே நிற்கும் மகிந்தா குடும்பத்தினதும்,கட்சியினதும் ஆதிக்கம் முழுமொத்த ஜனநாயகத்தையுமே குழிந்தோண்டிப் புதைக்கும் இன்றைய இலங்கைச் சூழலில், தமிழ்பேசும் மக்களுக்கு இன்னொரு பாடத்தையும் கற்பிக்கிறார்.இதைக் கவனமாகப் பாருங்கள்.அவர்கூறுகிறார்:
 
//சில சமூகவிரோத சக்திகளே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செது சட்டத்தின் முன் நிறுத்துவதோடு எமது தமிழ் சமூகத்தை ஐனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவையே இன்று எழுந்துள்ளது. //
 
 

 
இது எப்படியிருக்கிறதென்றால், ஊர் முழுக்கத் திருடுபவன் திருட்டைத் தடுப்பதுகுறித்துப் பிரசங்கஞ் செய்வதுபோன்றல்லவா இருக்கிறது?
 
இலங்கை பூராகவும் பாதாள உலகப் பயங்கரவாதிகளை உற்பத்திபண்ணி,அவர்களது தயவில் மகிந்தா குடும்பம் தமது எதிரிகளை வேட்டையாடித் தமது கட்சியின் ஆதிக்கத்தை நிலைப்படுத்திவரும்போது,அத்தகைய பாதாளவுலகப் பேர்வளிகள் மக்களையும்,கிராமங்களையும் மொட்டையடிப்பதில் அரசே உடந்தையாக இருக்கும்போது,இதையே வடக்கிலும்,கிழக்கிலும் அரச கைக்கூலிக் கட்சிகள்-குழுக்கள் "டக்ளஸ்-கருணா-பிள்ளையான் என்றதுமான மற்றும் முன்னாள் ஆயுதக்குழுக்கள்"செய்யும் மக்கள் விரோதக் கொலை-கொள்ளைத் தார்ப்பாரில் முழுமொத்தத் தமிழினத்தையுமே குற்றமாக்கி, அதை மறைப்பதில் தமிழ்ச் சமூகத்தை "ஜனநாயக" மயப்படுத்துவது அவசியமெனச் சொல்கிறார்கள். தங்களை ஜனநாயகக் காவலர்களாகக் காட்டுவதால்,தமது அரசியலையும் தம் எஜமானர்களையும் காப்பதை மறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு மக்கள் விரைவாக உணர்த்துவார்கள்.
 
முழு இலங்கையையும் பாசிசத்துக்குள் வீழ்த்திய மகிந்தா அரசுக்கு இங்ஙனம் ஜனநாயகவேடம் கட்டும் டக்ளஸ், நயவஞ்சகமாகத் திரவிட அரசியலின் தாரக மந்திரத்தையும் பயன்படுத்தித் தான் சுத்த மக்கள் விரோதி என்பதைத் சொல்கிறார் .கடைந்தெடுத்த மக்கள் விரோதியின் கூற்று இங்ஙனம் வருகிறது:
 
//உரிமைக்குக் குரல் கொடுப்போம்,உறவுக்குக் கரங் கொடுப்போம்//
 
இங்கே ஓட்டுக்கட்சிச் சீரழிவானது,திரவிடப்பாரம்பரியத்தின் மக்கள்விரோதக் குரலைச் சொல்கிறது.இது, நமது மக்களது உரிமைகளையே தனது அரசியலில் குழிதோண்டிப் புதைத்துப் புதியவகை சதியை, தமிழ் மக்களை ஜனநாயக மயப்படுத்துவதுதென்ற போர்வையில் மறைத்துக்கொள்வதில் டக்ளஸ்-கருணாபோன்றவர்கள் திராவிடக்கட்சிகளையே விஞ்சி விடுகிறார்கள் என்பதன் உண்மை விளங்கப் போதுமானது!இதற்கு எதிராகப் போரிடுபவர்களை அவர்கள் தமது ஆயுதக் குழுக்களால் இதுவரை கொன்றும் வேட்டையாடுகின்றனர்.ஏனெனில்,இவர்களிடம் இன்னும் ஆயுதம் தரித்திருக்கும் அடியாட்கள் உண்டு.இந்த நிலையில் இவர்கள் தமிழ்ச் சமூகத்தை"ஜனநாயக மயப் படுத்துவது"அவசியமென்று சாத்தான் வேதம் ஓதுவதாகச் சொல்வதில், மகிந்தாவுக்கு ஜனநாயக வேடம் கட்டுகின்றனர்.இது கருணாவை வென்ற அரசியல்!
 
இவர்களது மிகக் கேவலமான அரசியலை,தினக்குரல் பத்திரிகையின் மறுபக்கத்தில் கோகர்ணன் மிக நிதானமாக இனங்காட்டுகிறார். இதை,இங்கே படியுங்கள்.இல்லை பதிவில் இணைத்திருக்கும் மின்பத்திரிகைத் துண்டை அழுத்திப்படிக்கவும்.
 
சதிகாரர்கள் வடிவமைக்கும் அரசியல், தமிழ்பேசும் மக்களை ஆயுதத்தால் மொட்டையடித்த புலிகளது கடந்தகாலத்து வரலாற்றின் புதிய வரவாக நமது மக்களைக் கட்டிப் போடுகிறது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
19.07.09