10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

யார் இனித் தலைவர்

போரினி முடிந்ததோ
பாரததேவியின் பாதம் கழுவி
என்தேசத்து தேரது ஓடுமோ
உணவுப்பொட்டலம் போட்டிறங்கிய அமைதிப்புறா
கழுகாகிக் குதறிய காலம் மறப்போம்
போயஸ்தோட்டத்து அம்மாவுக்கு
வாழ்த்தனுப்பிய கரங்களால்
கண்ணிவெடியகற்றும் கருணைப்படைக்கு
;வாழ்த்துப்பா பாடுவோம்

பிராந்தியசண்டியரின் வாலில் தீமூட்டி
இனவாத இரணியனை எரிப்போம்
சுற்றிப்போட்ட முள்வேலியை
பிஞ்சுகளை அடைத்துப்போட்ட சிறைக்கம்பிகளை
பொசுக்கிமீட்கும் காத்துக்கிடப்போம்
தேசத்துமக்களை தேர்தலால் மீட்க
மாலைமரியாதை மங்களவாத்தியம்
கையுயர்த்திக்கும்பிடு கடிதப்போர்
மகிந்தமாத்தயா மனதைவென்று மண்ணைமீட்போம்
 
ஓ என்தேசத்து நகர்வைப் பார்
புலத்தென் மக்களே விழித்துப்பார்
மூச்சிறைக்க நுரைத்தள்ள நுகத்தடியில்
பூட்டுண்ட பழக்கதோசம்
ஆசனத்தடடில் அடுத்தவர் அமர்வுவரை
காத்திருக்கும் கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்
;தேசத்தைச் சொல்லிஇழுத்த வியர்வையில்
கொழுத்தோர் கதை கசிகிறதே தடடிக்கேள்
துயிலுமில்லத்து தேசவீரர் குருதியில்
கொட்டமடித்த கொடியோரை எட்டிஉதை
 
நிலத்து விடியலுக்கு
புலத்திலுன் புரிதலும் தேடுதலும்
மக்கள் பலத்தின்பாதைக்குள் சேர்க்கும்
இனத்துப்பகைவிட்டு எழுந்துபார்
உலக சாம்ராட்சியங்கள்
பிளந்து சிதறடித்த நகர்வுகள் தெளியும்
உழைக்கும் வர்க்கசிந்தனையும்
செயல்வீச்சும் ஒருங்கிணைவும்
நாளைவிடியலின் பாதையென விரியும்
 
மூன்று தசாப்தபோர் முடிவுற்ர வெற்ரிடத்தை
புரட்சிகர மக்கள்படை நிரப்பட்டும்…..
தலையெடுக்கும் எதிர்புரட்சி முனைப்புகள்
தகர்த்தெறிய இணையுங்கள்…………..
வாழ்நிலத்து மக்களிடம் விடுங்கள்
யார் இனித்தலைவரென தீர்ப்பெழுதும்…..


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்