08052021வி
Last updateபு, 28 ஜூலை 2021 10am

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர் - சரத் பொன்சேக்கா!

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின்போது, போர் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வெளியிட்ட கருத்தினால், அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சங்கடத்தை எதிர்கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

 

  அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சரிடம், ஏராளமான தூதுவர்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் அந்தக் கருத்து தொடர்பாக விளக்கம் கோரியதாகவும், சரணடைய வந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை போர் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் என்பதே அந்த தூதுவர்களின் குற்றச்சாட்டாக இருந்ததாகவும், இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.


'ஒரு சரியான இராணுவச் சிப்பாயைப் போன்றே நான் போரை முன்னெடுத்தேன். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு நான் தீர்மானம் எடுக்கவில்லை. இறுதிக் கட்டத்தின் போதும், போரை நிறுத்துமாறு எனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. வெள்ளைக் கொடிகளுடன் வருபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தகவல்கள் வந்தன. போரை இராணுவத்தினரே முன்னெடுத்தனர். அவர்கள் உயிரைப் பணயமாக வைத்தே போரில் ஈடுபடுகின்றனர். எனவே, களத்தில் தீர்மானம் எடுப்பது களத்திலுள்ள இராணுவச் சிப்பாயே. கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளவர்கள் அல்ல. வெள்ளைக்கொடிகளை ஏந்திக்கொண்டு சரணடைய வருவதைப் போன்று வந்தவர்கள் இதற்கு முன்னர் செய்த பாரிய அழிவுகளினால் எமது இராணுவச் சிப்பாய்களே உயிரிழந்தனர். இதனூடாக அவர்கள் நல்ல பாடம் கற்றுக்கொண்டனர். எனவே அவர்கள், அவர்களது பொறுப்புக்களை நிறைவேற்றினர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைவரையும் அழித்தனர். போரை நாம் அவ்வாறே வெற்றிகொண்டோம்" என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, அவருக்கு மரியாதையளிக்கும் விதமாக ஜூலை 10ம் திகதி அம்பலாங்கொடயில் நடைபெற்ற விழாவொன்றில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.


இவ்வாறு, அம்பலாங்கொட மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற வைபவங்களின்போது ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரை சங்கடத்திற்குட்படுத்தும் வகையில் சரத் பொன்சேக்கா ஆற்றிய உரைகள், அவரது இராணுவத் தளபதி பதவி பறிபோவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததென அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சரொருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

 

http://www.lankanewsweb.com/Tamil/news/TM_2009_07_17_005.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்