சமூக நோக்கமற்ற ஊடகங்களின் நோக்கம், மக்களை ஏய்த்துப் பிழைப்பதுதான். உண்மை என்பது, சமூக நோக்குடன் தொடர்புடையது. சமூக நோக்கமற்ற 'உண்மையை" பேசுவதாக கூறுவது மாபெரும் மோசடி. அதாவது தகவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு வியாபாரம்.

இந்தச் சூழல் சார்ந்து, அனைத்தும் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் காட்டமுனைகின்றனர். அதுவே வியாபாரத்தின் தந்திரம். இதற்காக அரசை எதிர்ப்பார்கள். இதற்கு சமூக நோக்கம் அவசியமில்லை என்பார்கள். தாங்கள் அரசை எதிர்ப்பதால், தங்களைத் தாங்கள் புரட்சியாளர்கள் என்கின்றார்கள். தாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் அரசை எதிர்ப்பதாக, வேறு கூச்சல் போடுவார்கள்.

 

இந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான், குளோபல் இணையத்தை நடத்தும் வியாபாரியான குருபரன். அண்மையில் ராஜபக்சவின் மகன் நாமல் தாக்கப்பட்டதாக வந்த செய்தியும், அதற்கு ஆதாரமாக வெளியிட்ட படத்தில் செய்த தில்லுமுல்லுகளையும் நாம் அம்பலப்படுத்தினோம். இதை வெளியிட்ட குளோபல் குருபரன், கொதித்தெழுந்து எம்மை அரசுக்கு உதவுபவராக சித்தரிக்கின்றார். 

 

புலிகளின் தில்லுமுல்லு செய்தியை அரசுக்கு எதிரானதாக கருதும் குளோபல், இந்த தில்லுமுல்லை எதிர்ப்பதால் அரசுக்கு உதவுபவராக எம்மைக் காட்டுகின்றார். இப்படி குளோபலில் உண்மைக்கு அளவுகோல், அது அரசுக்கு எதிராக இருந்தால் போதுமானது. அதாவது புலிப்பினாமியாக இருந்து, தமிழ் ஊடகத்தை வைத்து வியாபாரம் செய்வதுதான். இதைவிட வேறு எந்த அரசியல் அளவுகோலும் இவர்களிடம் கிடையாது.

 

இவர்களின் அரசியல் மற்றும் ஊடாக அளவுகோல் என்பது, புலிக்கண்ணாடி ஊடாக அரசை எதிர்த்தல் தான். புலிக் கண்ணாடி ஊடாக அரசை எதிர்க்கும் அரசியல் பித்தலாட்டங்களை அம்பலமாக்கும் போது, புலிப்பினாமியும் சேர்ந்து நாறிப் போகின்றது. உடனே புலிகள் கையாளும் அதே அஸ்திரத்தால், எம்மை தாக்குகின்றனர்.

 

"புலம் பெயர் நாடுகளில் உள்ள இலங்கையின் தூதுவராலயங்கள் மூலமாக வாரியிறைக்கப்படும் பணத்தைக் கொண்டு புற்றீசல் போலக் கிளம்பியிருக்கும் இணையத்தளங்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை இவ்வாறு புலிப்பினாமி எனக் குற்றஞ்சாட்டத் தவறவில்லை" என்கின்றார். அரசு பணத்தை வாரி இறைக்கின்றது, உண்மை. புலிப்பினாமி என்று குற்றஞ்சாட்டுகின்றது, அதுவும் உண்மை.

 

அதனால் நீங்கள் புலிப்பினாமியல்ல என்றாகிவிடுமா!? சொல்லுங்கள். இது இல்லையென்றால், அது எப்படி இருக்கும்!? அதையாவது சொல்லுங்கள். சரி நீங்கள் புலிக்கு மாற்றாக, மாற்று அரசியல் வைத்திருக்கின்றீர்களா!? அதையாவது நாம் தெரிந்து கொள்வோம், சொல்லுங்கள்.

 

சரி "நடுநிலை"  ஊடகவியல் நடத்துகின்றீர்களா!? சொல்லுங்கள். அல்லாது 1985 -1986 களில் எம்முடன் சேர்ந்து பேசிய மார்க்சியத்தையா முன்னெடுக்கின்றீர்கள்!? அதையாவது சொல்லுங்கள்?

 

அதைத்தானே அண்மைய உங்கள் தந்தையின் நினைவுக் குறிப்பில், "எதிர்ப்புரட்சியின் அனேகமான பிரதிநிதிகளையும் அந்த(அவர்) வீட்டில் நான் சந்தித்திருந்தேன்." என்று கூறி அதை துரோகமாக்கினீர்கள். நீங்கள் அதில் யாரை புரட்சியாளராக்கினீர்கள் "தங்களால் மட்டுமே விடுதலையை வென்றெடுக்க முடியும் என நம்பிய அந்த உண்மையான போராளி இன்று உயிருடன் இல்லை.  விடுதலையை உண்மையிலும் நேசித்த ஆயிரமாயிரம் உயிர்கள் இன்று எம்முடன் இல்லை." என்று கொலைகார புலியைச் சேர்ந்த விசுவை போற்றினீர்கள். அவன் தான் அமிர்தலிங்கத்தை சுட்ட கொலைகார குரூப்பிற்கு தலைமைதாங்கியவன். அதில் தான் அவன் செத்தான். அவன் செய்த சித்திரவதையை நான் அனுபவித்தவன். அவர்கள் ஏற்படுத்திய ரண காயங்களை மீண்டும் நகத்தால் விறாண்டி ரசித்த, ஒரு குரூர மனம் படைத்தவன் அவன். அவனை "உண்மையான போராளி" என்கின்றீர்கள். புலியை புரட்சியாளராக காட்டிய நீங்கள், "நண்பர் சிவராம்" என்று கொலைகாரன் சிவராமை நண்பனாக சொல்லி, ஊடகப் பிழைப்பை சிவராம் ஊடாக நடத்தியதையும், நடத்துவதையும் பார்க்கின்றோம்.

 

இப்படிப்பட்ட நீங்கள் கூறுகின்றீர்கள் "மாற்றுக்கருத்தின் பெயராலும், மார்க்சியத்தின் பெயராலும்  அரசாங்கத்தின் உரிமை மீறல் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை புலிப்பினாமிகள் எனக் குற்றஞ்சாட்டும் இந்த ஊடகங்கள் தாம் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிப்பதைப் பற்றி அக்கறைப்படுவதில்லை" என்கின்றீர்கள். அரசாங்கத்தை நீங்கள் எதிர்த்தால், உங்களை நாங்கள் புலிப்பினாமி என்று கூறவில்லை. இப்படிக் கூறுவதே, புலிப்பினாமிய வியாபார அரசியல்.

 

நாங்கள் அரசை அரசியல் ரீதியாக விமர்சிக்கும் அளவுக்கு, நீங்கள் யாரும் விமர்சிப்பது கிடையாது. அதேநேரம் இதனால் நாங்கள் புலிப்பினாமியல்ல. அரசை விமர்சிக்கும் அளவுக்கு, புலியையும் நாம் விமர்சிக்கின்றோம். நீங்கள் அப்படியல்ல. நீங்கள் புலியாக நின்று அரசை விமர்சிக்கின்றீர்கள். தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசங்களையும் நாம் விமர்சிக்கின்றோம். நீங்கள் அப்படியல்ல. இவ்விரண்டையும் நீங்கள் செய்தால், நாங்கள் உங்களை அப்படி ஒருநாளும் கூற மாட்டோம்.

 

இப்படி உங்களை உங்கள் அரசியல் மற்றும் ஊடகம் மூலம் நிரூபியுங்கள்.

 

அதை விடுத்து

 

'மக்களுடைய உரிமைகளை மறுப்பதற்கு ஒடுக்குமுறையாளர்கள் எந்த வழிமுறையையும் பாவிப்பதற்குத் தயங்குவதில்லை என்பதை இலங்கையின் வரலாற்றை அறிந்தவர் அறிவர்.

1980களின் இறுதிப்பகுதியில் தமிழீழ மக்கள் வானொலி என்றொரு வானொலி ஒலிப்பரப்பாகி வந்தது. சற்று இடது சாரி;க் கண்ணோட்டத்துடன் ஒலிபரப்பாகி வந்த அந்த வானொலி போராட்டத்திற்கு ஆதரவானதாகத் தன்னைக்காட்டிக் கொண்டது. புலிகளின் ஒரு சில நடவடிக்கைகளை ஆதரித்தும் வந்தது. அன்றிருந்த இடதுசாரி;க் கண்ணோட்டம் கொண்டிருந்த பலர் புலிகளுடைய மாத்தயா தரப்பு ஒலிபரப்பும் வானொலி என்று நம்பும் அளவுக்கு அது இருந்தது. நீண்ட காலத்தின் பின்னர் தான் அது பலாலி இராணுவமுகாமிலிருந்து ஒலிபரப்பாகி வந்தது என்ற விடயம் அம்பலமானது.

இதேபோல் இன்றும் மக்களுடைய உரிமைகளுக்கு எதிரான சக்திகள் மார்க்சியம், மாற்றுக்கருத்து என்ற போர்வையில் தாம் தான் மக்களுடன் நிற்பவர்கள் எனும் தோரணையில் அதிதீவிரமாகப் பேசியும் எழுதியும் வருவதும் (உண்மையான மார்க்சிஸ்டுக்களையோ மாற்றுக்கருத்தாளர்களையோ இவ்விடத்தில் குறிக்கவில்லை.) அதேவேளையில் எவ்வித அடிப்படை உண்மைகளோ நிரூபிப்புகளோ ஆதாரங்களோ இன்றி அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை புலிப்பினாமி என்று முத்திரை குத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் தொடர்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது"

 

என்று கூறுவது, காதில் பூ வைப்பது.

 

கடந்த 20 வருடமாக நாங்கள் போராடுகின்றோம். நீங்கள் எங்கே, என்ன செய்து கொண்டிருந்தீர்கள். யாருடன் நின்றீர்கள். "எவ்வித அடிப்படை உண்மைகளோ நிரூபிப்புகளோ ஆதாரங்களோ இன்றி அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை புலிப்பினாமி என்று முத்திரை குத்தும்" என்பது, உங்கள் இணையத்தில் எது உள்ளதோ, அதுவே சாட்சி. தமிழ் மக்களை பேரினவாதம் மட்டும் குதறவில்லை. புலிப் பாசிட்டுகளும் தான் குதறினார்கள். நீங்கள் அதைப்பற்றி பேசாத வரை, நீங்கள் உங்கள் நோக்கத்துக்கு ஏற்ற புலிப்பினாமிகள் தான்.
    
பி.இரயாகரன்
15.07.2009